(மௌன உடைவுகள் – 42)
—- அழகு குணசீலன் —-
கிழக்கிலங்கையின் சமூகங்களுக்கு இடையிலான உறவு நகரும் திசை கவலையளிப்பதாக இருக்கிறது. இது பற்றி பேசுவதற்கு கல்விச்சமூகம் தயங்குகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் மீது “முத்திரை” குத்தப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். சூழலின் கைதியாக தங்களுக்கு தாங்களே விலங்கிட்டுக்கொள்கிறார்கள். இன்னும் மறுபகுதியினர் கலங்கிய குளத்தில் “வலை” வீச நினைக்கிறார்கள். சொந்த இனம், மதங்களைக்கடந்து மனிதத்தை தேட இவர்களின் மனசு குறுகியது. ஆனால் தங்களுக்கு தாங்களே முகப்புத்தகத்தில் சால்வை போடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
தமிழகத்தில் சட்ட சபையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டு கோயில் ஒன்றில் இருந்து கோயில் யானை ஒன்று தனக்கு கட்டப்பட்டிருந்த கால் விலங்கை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது. சட்ட சபையில் பலரும் “கோயில் யானைக்கு மதம் பிடித்து அது சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி விட்டது” என்று பேசினார்கள். அப்போது அமைதியாக எழுந்த கலைஞர் கருணாநிதி “இல்லை…. இல்லை….கோயில் யானைக்கு மதத்தை பிடிக்கவில்லை ஆதலால் கோயிலை விட்டு ஓடியிருக்கிறது” என்று வழமையான அவரது பாணியில் பதிலளித்திருந்தார்.
கிழக்கின் இன்றைய சமூக உறவில் ஏற்பட்டு வரும் பிளவுக்கு மதங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன. சகல சமூகங்களிலும் ஒரு பிரிவினர் மதம் பிடித்து வெறிகொண்டு அலைகிறார்கள். இவர்கள் பௌத்த பிக்குகள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்துசாமிகள், இஸ்ஸாமிய இமாம்கள். ஆனால் கல்விச்சமூகத்தினரோ இந்தச் சமயமும், சண்டையும் தமக்கு பிடிக்கவில்லை, நமக்கு ஏன் வீண்வம்பு? என்று சமூகக்கடமையை மறந்து தூரவிலகி வாளாவிருக்கிறார்கள்.
ஆனால் இராமன் யார்? இராவணன் யார்? என்றால் இல்லாத இந்த இருவருக்காகவும் உரிமைகோரி புராண, இதிகாசங்களையும், வேதங்களையும் தூசி தட்டி வெளியே எடுத்து இராமன் சார்பாகவும், இராவணன் சார்பாகவும் , தமிழன்சார்பாகவும், சிங்களவன் சார்பாகவும், முஸ்லீம்கள் சார்பாகவும் உரிமை கோரி மர்ம நாவல் எழுதுகிறார்கள். வரலாற்று சட்டத்தரணிகளாக ஆஜராகிறார்கள். ஆனால் சாதாரண மக்களுக்கோ இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூட வந்த குரங்கு ஆண்டால் என்ன ? என்ற நிலை. இன உறவுக்காக ஏங்கும் இந்த சாதாரண மக்கள் “எறிகின்றவன் கையில் பொல் இல்லாதவர்களாக” பெருமூச்சு விடும் நிலை மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் இதுவரை “பூனைக்கு மணி கட்டியவர்கள்” மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இவர்கள் யார் என்று திரும்பி பார்த்தோமாயின் அவர்கள் மதத்தலைவர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று காட்டிக்கொள்கின்ற வர்த்தகர்கள், தர்மகர்த்தாக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள்….., சமாதான நீதிவான்கள் என்று பட்டியல் இடலாம்.மொத்தத்தில் மதங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்த சாமிகளால் இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை.
அகிம்சை அரசியலிலும் சரி, ஆயுத புரட்சிகர அரசியலிலும் சரி முதலாளித்துவம் எவ்வாறு மார்க்சியத்திற்கு எதிராக தன்னை எப்போதும் அடையாளப்படுத்துகின்றதோ அவ்வாறே மதங்கள் “சமூகநீதி” பற்றி அதிகம் பேசினாலும் நடைமுறையில் முதலாளித்துவ அரசியலோடு கைகோர்த்து சமூகநீதியற்ற அரசியலுக்கு பங்களிப்பு செய்கின்றன. இதற்கு காரணம் மக்கள் மத்தியில் மதங்கள் பற்றிய ஏற்படுகின்ற விழிப்புணர்வு மதங்களை கேள்விக்குட்படுத்திவிடும், அதில் ஏற்படும் சரிவு தங்களின் அதிகார இருப்பை சாய்த்து விடும் என்பதைத்தவிர வேறில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களும் தங்களை கல்விச்சமூகமாக போர்த்துக்கொண்டே வீதிவலம் வருகின்றனர்.
சமகால முதலாளித்துவ உலகமயமாக்க சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் தொழிலாளர் நலன்பற்றி முதலாளித்துவம் அதிகம் பேசுகின்றது. அப்போதுதான் அது தப்பிப்பிழைக்க முடியும். அதற்கான கட்டாயத்தை – அழுத்தத்தை அதற்கு வழங்கியது மார்க்சியம்.
அதுபோன்று சமூகநீதி பற்றி பேசவேண்டிய கட்டாயத்தையும், அழுத்தத்தையும் மடாலயங்களுக்கும், சாமிகளுக்கும் வழங்கியிருப்பதும் மார்க்சிய புரட்சிகர சிந்தனைகளே. அதை அவர்கள் பேசாவிட்டால் அவர்கள் தாமாகவே காணாமல் போய்விடுவார்கள்.
இதனால்தான் இனங்களுக்கு இடையிலான “காயத்தை” ஆற்றுவதற்கான நிரந்தர வழியைத்தேடாது அப்படியே வைத்து மந்திரம், செபம், ஓதல் , பூசை , பலி என்று மக்களை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
யுத்தகாலத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் இவர்களின் சமாதான அணுகுமுறைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. யுத்தகாலத்தில் தாம் சார்ந்த சமூகம் சாய்ந்து சகல ஆயுத வன்முறைகளையும் தமது இருப்புக்காகவும், விருப்புக்காகவும் நியாயப்படுத்தியவர்கள். இவர்கள் நடுநிலையாளர்கள் என்ற தகுதியை இழந்தவர்கள். இவர்களை இன்னும் நம்புவதற்கு மக்கள் தயாரில்லை .
காலத்திற்கு காலம் தமிழ் ஆயர்கள் அமைப்பு, P2P , அரசியல் கட்சிகளை திருத்தும் மக்கள் அமைப்பு, சர்வமத அமைப்பு , இந்து சம்மேளனம் என்று கூறிக்கொண்டு படம்காட்டும் இந்த சாமிகள் பலவீனமானவர்கள். அதிகாரம் அற்றவர்கள். அங்கீகாரம் அற்றவர்கள். அரசியல் பலம் அற்றவர்கள். அனுபவம், துறைசார் நிபுணத்துவம் அற்றவர்கள். இவர்கள் பூசைக்கு மட்டுமே பொருத்தமானவர்கள்.இவர்களிடம் ஒரு நீதியான சமாதானத்தை எதிர்பார்க்கமுடியாது. இது வரலாறு.
எனவேதான் இவர்களும் ஆயுத அரசியல் வன்முறைகளுக்கு ஒத்து ஊதி , ஒத்து ஓடி தகர்த்த கிழக்கின் சமூக உறவைக் மீளக்கட்டி எழுப்ப புதியவர்களும், புதிய நிறுவனங்களும், புதிய அணுகுமுறைகளும் இன்றைய தேவையாகவுள்ளது. இதற்கு கிழக்கின் பல்கலைக்கழகங்களின் சமூகமும், கல்விச்சமூகமும் பெரும் பங்களிப்பை செய்ய முடியும். உடைந்த உறவுகளை புதிய முயற்சிகளின் ஊடாக கட்டி எழுப்ப முடியும் என்று நம்பப்படுகிறது. ஒரு நிபந்தனை மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் இந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது.
இது போன்ற விடுதலைப்போராட்ட அரசியலை நெறிப்படுத்தும் பணியை ஆரம்பத்தில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் செய்திருந்தது. எனினும் ஆயுத அரசியல் இதனை நீடிக்க விடவில்லை. எனினும் உயிரைப் பணயம் வைத்து மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு இயன்றவரை செயலாற்றியது. இன்று வரை அந்த அமைப்பினரால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம் ஒரு தரப்பினரால் இருட்டடிப்புசெய்யப்பட்ட பதிவுகள் இவை. இறுதியில் விஜிதரன், செல்வி, ……., சிவரமணி வரிசையில் ஆயுத அராஜகத்தை எதிர்த்து நின்ற ரரஜினியும் சுட்டுவீழ்த்தப்பட்டார். “முறிந்தபனையை ” எமக்கு பாடமாக விட்டுச்சென்றார்.அந்த கடந்தகாலத்தில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டாமா…..?
இதனால் கிழக்கில் இன, மத , அரசியல் வாதிகளுக்கு எதிராக செயலாற்ற கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களும், திருகோணமலை வளாகமும் முன்வரவேண்டும் . இதன் மூலமே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற மதவாதிகளிடமும் , அரசியல்வாதிகளிடமும் சிக்கி இருக்கின்ற கிழக்கின் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை சீராக்கமுடியும்.
இன்று முப்பது வயதை எட்டி இருக்கின்ற கிழக்கின் தமிழ், முஸ்லீம், சிங்கள இளம் சந்ததியினர் 1990 களில் இடம்பெற்ற பாரிய தமிழ் – முஸ்லீம் வன்முறைகளை நேரடியாக அனுபவித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அந்த கசப்பான வரலாற்று நஞ்சு ஊட்டப்படுகிறது. இது 1983 கறுப்பு யூலை பற்றி இன்றைய இளைஞர்களுக்கு ஊட்டப்படுவதற்கு சமமானது. இதன் அர்த்தம் வரலாறு மறைக்கப்படவேண்டும் என்பதல்ல .
சிங்களவர் தமிழர்களைக்கொன்றார்கள் , தமிழர்கள் முஸ்லீம்களைக் கொன்றார்கள், முஸ்லீம்கள் தமிழர்களைக்கொன்றார்கள், தமிழர்கள் சிங்களவர்களைக் கொன்றார்கள் என்ற வெறும் “கொலைப்பட்டியலுக்கு” அப்பால் சமூகவிஞ்ஞான அரசியல் ஆய்வுக்கான ஆய்வுப் பொருளாக இந்த வரலாறு அமையவேண்டும். இதை பல்கலைக்கழகங்களும் , கல்விச்சமூகமுமே செய்யமுடியும். இன்றைய இளையதலைமுறை இவை ஏன் நடந்தன? எதிர்காலத்தில் இவை நடைபெறாது தடுப்பது எப்படி? அதற்காக செய்யவேண்டியவை எவை? போன்ற கேள்விகளுக்கு பதில்தேடவேண்டும். வாழைப்பழத்தை உரித்து கொடுப்பதுபோல் கொலைப்பட்டியலை ஊட்டாது, இன்றைய தலைமுறையினரின் தேடலுக்கு வழிவகுக்கவேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிக, மிக நெருக்கமானதாக இருந்தது. இந்த உறவில் சாதாரண விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள்… போன்றோரின் பங்கு முக்கியமானது. பாடசாலையில், சந்தையில், கடலில், வயலில், வீதியில், கடையில், துறையடியில் , கோவிலடியில், பள்ளியடியில் எல்லாம் உயிராய் இருந்த உறவை யார் அழித்தார்கள் என்பது எங்கள் இருபகுதியினருக்கும் தெரியும். இன்றைய இளம் சந்ததியினருக்கு இந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது .இப்போது அந்த உறவை மீள உயிர்ப்பிக்கும் கட்டாயம் இரு சமூகங்களுக்கும் உண்டு. ஏனெனில் அதுதான் கிழக்கின் வாழ்வியல். ஒன்றில்லாமல் ஒன்றில்லை.
கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கும் , கல்விச்சமூகத்திற்கும் அதற்கான வசதிகள் உண்டு. அனுபவமும், துறைசார் நிபுணத்துவமும் உண்டு. உலகின் பல நாடுகளில் இன, மத முரண்பாடுகளை தீர்ப்பதில் – இனங்களுக்கு இடையேயான வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை வெறும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காது கையாளுவதில் கல்விச்சமூகம் வெற்றி கண்டுள்ளது. நாளாந்தம் குண்டு வெடித்துக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல்- பாலஸ்தீனத்தில் இருதரப்பு அடிப்படை வாதத்திற்கும் எதிராக இரு தரப்பு கல்விச்சமூகங்களும் களத்தில் நிற்கின்றன. இந்த சமாதான முயற்சிகளுக்கு சர்வதேசம் ஆதரவளிக்கின்றது.
பல்கலைக்கழகங்கள் கள ஆய்வுகளை மட்டும் அன்றி , கலை கலாச்சார வடிவங்கள் ஊடாகவும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். சமகால சமூக முரண்பாடுகளை அடையாளப்படுத்தி கலை கலாச்சார வடிவங்கள் ஊடாக விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்யமுடியும். ரோம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்த கதையாக இன்னும் எத்தனை காலத்திற்கு இராமனையும், இராவணனையும் கூத்தாடப்போகிறோம். கண்முன்னே ஆயிரம் கருப்பொருள்கள் இருக்கையில்…..!
வாழ்ந்தாலும் சரி…. மடிந்தாலும் சரி… சிங்கள, முஸ்லீம், தமிழ் சமூகங்கள் இணைந்ததே கிழக்கின் வாழ்வியல். இது கிழக்கின் தத்துவவியலாளர் சுவாமி விபுலாநந்தர் காட்டிய நெறியும் வழியும்.
அந்த நெறியில்…. வழியில்…. பயணிக்க வேண்டிய பொறுப்பு கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கும் கல்விச்சமூகத்திற்கும் உண்டு.
இல்லையேல்…..
கிழக்கில் சுவாமி விபுலாநந்தர் தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கு திறந்து விட்ட கல்விக்கண்ணின் பலன் என்ன ….?
————————-
(