— அழகு குணசீலன் —
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் கனகரெட்ணம் வெற்றி பெற்றதுதான் தாமதம். தமிழ்த்தேசியம் வளர்த்துவிட்ட அடையாள அரசியலுக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 75 ஆண்டுகால அகிம்சை, ஆயுத அரசியல் பிறவிப் பயன் கிடைத்த பெருமிதம்.
தமிழண்டா…. தமிழண்டா…. என்று தர்மனில் ஆர்முடுகலில் தொடங்கி தமிழன் உலகை ஆளப்போகிறான் (ள்) என்று கமலா ஹரிஷில் அமர்முடுகலில் போய் ஓய்ந்திருக்கிறது. சிங்கப்பூர் சின்ன முதலாளிக்கும் அமெரிக்க பெரிய முதலாளிக்கும் பாலம் கட்டும் அனுமார் அரசியல். TAMILS FOR OBAMA, TAMILS FOR KAMALA என்று தொடங்கி TAMILS FOR ELISABETH என்று மகாராணிக்கு செத்தவீடும் கொண்டாடிய “தமிழண்டா….” இவர்கள்.
தர்மன் கனகரெட்ணம் வெற்றி பெற்ற செய்தி வெளிவந்தபோது தமிழ் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பதிவுகளில் சில கவனத்திற்குரியவை.
* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.
* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இந்திய/ இலங்கை வம்சாவழி தர்மன் கனகரெட்ணம் வெற்றி.
* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இந்திய/ இலங்கை வம்சாவழி தமிழன் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.
* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வம்சாவழி யாழ்ப்பாண தமிழன் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.
இந்த செய்தியிடல் பாணி மக்களுக்கு சொல்லுகின்ற செய்தி என்ன..?
வாக்கியங்களும், வார்த்தைகளும் நீள்கின்றன. ஆனால் எங்கள் அடையாள அரசியல் ஒருமனிதனை “யாழ்ப்பாணத் தமிழனாக” குறுக்கி அடையாளம் காண்பதில் மகிழ்ச்சிப்பெருமிதம் கொள்கிறது. எந்த அரசியல் பிரக்ஞையும் இல்லாமல் “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்ற கோஷம். இதுவே தமிழர் அரசியலில் இருக்கின்ற வெறுமை – வரட்சி. இதுவே தமிழ்த்தேசிய அரசியல் மக்களை கொண்டு விட்டுள்ள அரசியல் விளிம்பு. மானிடத்தை மறுத்த இந்த குறுகிய அரசியல் தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் ஒரு குறியீடு.
தமிழை முதலிட்டு தமிழையே இலாபமாகப்பெறும் அரசியல்.
தர்மன் கனகரெட்ணம் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும், மேற்குலகிலும் , சர்வதேசத்திலும் நன்கறியப்பட்டவர். பொருளாதார -நிதி நிர்வாக நிபுணர். சர்வதேசநாணயநிதி, உலக பொருளாதார பேரவை போன்றவற்றில் முக்கிய புள்ளி. சிங்கப்பூரின் உதவிப்பிரதமராக, நிதி அமைச்சராக, மத்திய வங்கியின் நாணயசபையின் ஆளுனராக பதவிகளை வகித்த அவரின் அத்தனை தகுதிகளையும் மறைத்து வெறுமனே “தமிழன்” என்பதே ஒரு தகுதியாக காட்டப்படுகிறது. சிங்கப்பூர் மக்கள் 70.4 வீதம் வாக்குகளை அளித்து அவரை தமிழன் என்பதற்காக தெரிவுசெய்தார்களா….? இல்லை அவரின் ஒட்டுமொத்த அரசியல் செயற்பாட்டிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் வாக்களித்தார்களா? இதை ஈழத்தமிழர் அரசியல் வறுமை அன்றி வேறு எவ்வாறு அழைப்பது.
இந்த கூட்டம் தான் புலம்பெயர்ந்த நாடுகளின் அரசியலில் உள்ளவர்களை தமிழண்டா….தமிழண்டா…. என்று கொண்டாடுகிறது. மேற்குலக மக்கள் இவர்களுக்கு கட்சிக் கொள்கைக்காக வாக்களிக்கிறார்களா ? அல்லது தமிழன் என்ற இன அடையாளத்திற்காக வாக்களிக்கிறார்களா? ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த அடையாளத்திற்காகவே ஊர்பார்த்து, மதம்பார்த்து, சாதிபார்த்து, சம்பந்தம் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இது அம்பலமாகும் போது மேற்குலக மக்கள் இவர்களை நிராகரிக்கிறார்கள்.
நிராகரித்தும் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்தில், இலங்கையின் சமகால அரசியல் பல விடயங்கள் பற்றி பேசுகிறது. அரசியல் அமைப்பு மாற்றம், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, இனப்பிரச்சினைக்கு தீர்வு, ஊழல்ஒழிப்பு, நீதி, நிர்வாகத்துறையின் சுதந்திரமான செயற்பாடு, மனித உரிமைகள் மேம்பாடு, ஜனநாயக அரசியல், இன, மத நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு, சீர்திருத்தங்கள்… இப்படி பல விடயங்கள் பேசப்படுகின்றன.
இலங்கைத் தலைவர்கள் காலத்துக்கு காலம், தேர்தலுக்கு தேர்தல் இலங்கையை “சிங்கப்பூராக்குவோம்” என்று கூறுவதற்கும் தயங்கியதில்லை. ஜே.ஆர்.ஜயவர்த்தன சுதந்திர வர்த்தக வலையம் அமைத்தார். பிரேமதாசா மேம்பாலங்கள் அமைத்தார். சிறிசேனா சிங்கப்பூர் நல்லாட்சி என்றார். ராஜபக்சாக்கள் தாமரைக்கோபுரம், போர்ட் சிற்றி என்றார்கள். இப்போது இலங்கை சிங்கப்பூர் தானே இல்லையா?
சிங்கப்பூரின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பபை, அணுகுமுறையை, செயற்பாட்டை நோக்குவதே ஜதார்த்தத்தை உணர்த்தும். தமிழண்டா….என்பதைவிடவும் ஒரு சிறுபான்மை சமூகத்தில் இருந்து தர்மன் கனகரெட்ணம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு சிங்கப்பூர் சமூக, பொருளாதார, அரசியல் சூழல் வழங்கிய வாய்ப்புக்கள் எவை என்பதை ஆராய்வது முக்கியம். இன்னொரு வகையில் கூறுவதானால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் இதை சாத்தியப்படாமல் தடுக்கின்ற காரணிகள் எவை என்பதை ஆராய்ந்து அறிவதே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சுமார் 6 மில்லியன் மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் 77 வீதமானோர் சீனர்கள். 14 வீதம் மலாயர், 8வீதம் இந்தியர். மதரீதியாக பார்த்தால் 31 வீதம் பௌத்தர்கள், 20 வீதம் மதமற்றவர்கள், 19 வீதம் கிறிஸ்த்தவர்கள்,16 வீதம் இஸ்லாமியர்கள், 5வீதம் இந்துக்கள். சில ஊடகங்கள் தர்மன் கனகரெட்ணம் சிங்கப்பூரின் முதலாவது தமிழ் ஜனாதிபதி என்று காட்ட முற்படுகின்றன. இதில் உண்மை இல்லை . இதற்கு முன்னர் செல்லப்பன் ராமநாதன் – இவர் எஸ்.ஆர். நாதன் என்று அழைக்கப்பட்டவர் அடுத்தடுத்து (1999, 2005) இருதடவைகள் 1999முதல் 2011 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
ஒரு வித்தியாசம் நாதன் எதிர் வேட்பாளர் இல்லாததால் தேர்தலின்றி – போட்டியின்றி தெரிவானவர். இதன்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழர் தர்மன் கனகரெட்ணம் என்பதே சரியானது. தற்போதைய ஜனாதிபதி கலிமா யாகூப் கூட 2017 இல் போட்டியின்றி- தேர்தல் இன்றியே தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரே சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதி.
இங்கு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவரல்ல. அதேவேளை ஜனாதிபதி அதிகாரம் எதுவும் அற்ற வெறும் ரப்பர் முத்திரை என்றும் கூறமுடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அதிகார நிலை என்று கூறலாம். ஏனெனில் ஜனாதிபதிக்கு சில விடயங்களை தீர்மானிப்பதற்கு வீட்டோ அதிகாரம் உண்டு. அரசியல் நியமனங்களைச் செய்வதற்கான அதிகாரமும் உண்டு. ஜனாதிபதி வேட்பாளர் அரசில் அதி உயர்பதவி ஒன்றை அல்லது ஒரு தேசிய நிறுவனத்தில் தலைவர்பதவியை வகித்திருக்கவேண்டும். இது ஜனாதிபதி வேட்பாளருக்கான முக்கிய தகுதி.
சிங்கப்பூரின் முக்கிய நான்கு மொழிகளும் மலாய், சீன, தமிழ், ஆங்கில மொழிகள் நிர்வாகமொழிகளாக உள்ளன. உள்ளன என்றால் வெறும் காகிதத்தில் அல்ல நடைமுறையில். மொழிகளுக்கு இடையே சம அந்தஸ்த்து பேணப்படுகிறது. இதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது. அதன் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இங்கு 80 வீதமான மக்கள் அரச குடியிருப்புக்களில் வசிக்கின்றனர். அவை குறிப்பிட்ட இனம், மதம், மொழிக்கான தனித்துவமானவை அல்ல. சமூக பன்முகத்தன்மையை பேணும் வகையில் குடியிருப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையிலும் வேற்றுமை பேணப்படுகிறது. சமூகங்களுக்கு இடையிலான அங்கீகாரம், புரிந்துணர்வு, சகவாழ்வு , ஒருங்கிணைந்த வாழ்வு இயங்குநிலையில் இருக்கிறது. எவரும் குறிப்பிட்ட மதத்தவராக இருப்பதற்கும்,அதை அனுட்டிப்பதற்கும் பூரண சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் பல்கலாச்சாரமும், திறமையின் அடிப்படையிலான கல்வி, தொழில்வாய்ப்பும் மிகவும் முக்கியமான சமூகப்பண்புகள். ஊழலும், இலஞ்சமும் மிகமிக குறைவான ஒரு தேசம். குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. பகிரங்கமாக பொதுவெளியில் பிச்சை எடுப்பது குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டம் மூவாயிரம், இருவருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அரசு, நீதி, நிர்வாகத்துறைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இவை இலங்கையில் சாத்தியமா…? இந்த அடிப்படைகள் இல்லாமல் சிங்கப்பூராக்குவது என்பது வெறும் கட்டிடக்காடாக்குவது என்று இலங்கைத்தலைவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூர் ஒரு நடுநிலையான நாடு. சர்வதேச அமெரிக்க, ரஷ்ய, பிராந்திய சீன, இந்திய அதிகார சதுரங்கங்களுக்குள் சிக்காமல் இருப்பதை கொள்கையாகக்கொண்டுள்ளது. சிறிய ஒரு சுப்பர்மாநகர நாடு என்ற வகையில் சர்வதேச முக்கியத்துவத்துவம் பொருளாதாரம் சார்ந்ததாகவும், பிராந்திய முக்கியத்துவம் வெளியுறவுக் கொள்கை சார்ந்ததாகவும் உள்ளது. இதனால்தான் தகுதியின் அடிப்படையில் துறைசார் நிபணர்களான,ஆளுமைமிக்கவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
தற்போது 99 எம்.பி. களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 88 பேர் தொகுதிவாரியாக மக்களால் நேரடி ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்படுவர். வாக்குரிமைக்கான வயது 21. 11 பேர் நியமன எம்.பி.கள் . ஆகக்கூடியது12 பேரை ஜனாதிபதி நியமிக்கமுடியும். கட்சிகளின் மொத்தவாக்கு, பிரதிநிதித்துவம் அற்ற சமூகங்களில் இருந்து இவர்கள் நியமிக்கப்படுகின்றனர். நியமன எம்.பி.கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் என்பதனால் பாராளுமன்ற வாக்கெடுப்புக்களில் வாக்களிக்கின்ற உரிமை கிடையாது. கருத்துரிமை உண்டு.
ஜனாதிபதி அரச தலைவராக செயல்படுவார். பிரதமர் அரசாங்கத்தின் – அமைச்சரவையின் தலைவராக செயற்படுவார். ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது எந்த ஒரு கட்சியையும் சாராதவராக இருக்கவேண்டும்.
கட்சி அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் துறக்கவேண்டும்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 1965 இல் இருந்து PAP மக்களின் செயல் கட்சியை ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது. இது ஒரு ஒற்றை கட்சி ஆட்சியாக விமர்சிக்கப்படுகிறது. பல சிறிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட்டபோதும் , பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ள போதும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. சிங்கப்பூர் அரசு அதி பலமான அரசாங்கத்தையும், மிகவும் பலவீனமான எதிர்க்கடசியையும் கொண்டது. இது சிங்கப்பூர் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தும் ஒன்றாகும்.
கட்சிகளின் பெயர்களில் எந்த இன, மத,மொழி சமூக அடையாளங்கள் இல்லை. மக்கள், லிபரல், தொழிலாளர், முற்போக்கு என அரசியல் வார்த்தைகளே உண்டு.இது சிங்கப்பூரின் சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு சாதகமான ஒன்றாக அமைகின்றது.
ஸ்திரமான ஆட்சி, வெளிநாட்டுக் கடன்கள் அற்ற ஒரு அரசு, வரவு செலவுத்திட்டம் எப்போதும் மிகையானது. அரச செலவுகளை விடவும் அரச வருமானம் அதிகமானது. இதுவே சிங்கப்பூரின் இராட்சத பொருளாதார பலம். பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. மின்னியல் பொருட்கள், இயந்திரங்கள் ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச நிதிச்சந்தை, உல்லாசப்பிரயாணம், சரக்கு கப்பல் போக்குவரத்து என்பன சிங்கப்பூர் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
இத்தனை அரசியல், பொருளாதார உறுதியை கொண்டுள்ள போதும் சமூக ஏற்றத்தாழ்வு, வெளிநாட்டு தொழிலாளர் உரிமைகள், மரணதண்டனை, பெயரளவிலான பல்கட்சி ஜனநாயகம் என்பன குறித்து சர்வதேச மட்டத்தில் சிங்கப்பூர் பெரும் விமர்சனங்களைப் சந்தித்து வருகின்றது. சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தி மக்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்கப்படாத கொள்கை சமூக நீதியற்றது என்று விமர்சிக்கப்படுகிறது. இது பொதுவாக முலாளித்துவ பொருளாதாரம் சார்ந்த குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இன்னும் ஒரு விடயம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும். கருத்துக்கணிப்பு ஒன்றில் அடுத்த பிரதமராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பான்மையான மக்கள் தாங்கள் தர்மன் கனகரட்ணத்தை விரும்புவதாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போதைய பிரதமர் சீன மக்கள் பெரும்பான்மையாக உள்ள சிங்கப்பூரில் அது முறையல்ல. சீனர் ஒருவரே பிரதமராகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் இந்த கருத்து பெரும் கண்டனத்தை பெற்றது. ஆனால் தர்மன் கனகரெட்ணம் அதை பொருட்படுத்தாது ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார். இது சிங்கப்பூரில் அரசியல் மட்டத்தில் இனவாதம் முளைவிடத்தொடங்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது. எதிர்காலமே இந்தப் போக்கை நிர்ணயிக்கும்.
இந்த நிலையில்…..!
சிங்கப்பூர் அரசியலை “தமிழண்டா…..”அடையாள அரசியல் ஆக்குவதும், சிங்கப்பூரின் புறம் காலுக்கும் ஒப்பிடமுடியாத இலங்கை சமூக, பொருளாதார வங்குரோத்து அரசியலை வைத்துக்கொண்டு “சிங்கப்பூராக்குவோம்” என்பதும் அம்மணமான வாய்ச்சொல் அரசியலே.