இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா?

இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா?

 — கருணாகரன் —

“இலங்கை அரசியல் இனவாதத்திலிருந்தும் இன அடையாளத்திலிருந்தும் மீளாதா? இனப்பிரச்சினைக்கு முடிவு வராதா? தீர்வு கிடைக்காதா? இனவெறிக் கூச்சல்கள் அடங்காதா…” என்று புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்த ஒரு இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கேட்டார்.

அவருடைய கண்களில் பெரிய ஏக்கம் நிறைந்திருந்தது. அவர் காண விரும்புவது வேறொரு இலங்கையை. வேறொரு அரசியற் களத்தையும் அரசியல் பண்பாட்டையும். இன சமத்துவமும் பல்லினத்தன்மைக்குரிய இடமும் ஐக்கியமும் அமைதியும் தேசத்தின் மீதான அக்கறையும் கொண்ட சூழலை அவர் விரும்புகிறார் என்பதை அவருடன் தொடர்ந்த உரையாடலின்போது உணர்ந்தேன்.

“உலகம் எப்படி மாறிக் கொண்டுள்ளது. யாரென்றே தெரியாத மனிதர்களுடன் நெருக்கமாகி உறவாகிறோம். நமக்கு முற்றிலும் புதிய தேசங்களில் யாரென்றே தெரியாத நிலையில் போய் வேரூன்றி வாழ்கின்றோம். எந்த உத்தரவாதத்தில் அங்கெல்லாம் போகிறோம்! அங்கே சக மனிதருக்கான இடமும் வாழ்வதற்கான உத்தரவாதமும் கிடைக்கும் என்பதால்தானே! அது ஏன் எங்களுடைய நாட்டில் (நாம் பிறந்த மண்ணில்) மட்டும் இல்லாமல் போகிறது? இந்த அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறார்களே. அங்கே  போய் எதைப் பார்க்கிறார்கள்? எதைப்படிக்கிறார்கள்? அங்கெல்லாம் இன, மத, சாதி(?) நிற, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இதைப் பார்க்கும்போது தங்களை நினைத்து இவர்கள் வெட்கப்படுவதில்லையா? ஏன் நம்முடைய பிரமர், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் எனத் தலைவர்கள் நாடு நாடாகச் சுற்றுப் பயணம் போய் வருகிறார்களே! அந்த நாடுகளைப் பார்த்து கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? அங்கே பேதங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் இடமிருப்பதில்லை. சட்டமும் அரசாட்சியும் ஒன்றாகவே இருக்கின்றன என்பதையாவது புரிந்து கொள்ளமுடியாமல் ஏனிருக்கிறார்கள்? இனவாதத்தையும் மதவாதத்தையும் மனதுக்குள்ளும் தலைக்குள்ளும் வைத்துக் கொண்டு எப்படி ஜனநாயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்? எப்படி உலகத்துடன் கைகுலுக்குகிறார்கள்? இது என்ன காட்டு மிராண்டி யுகமா? அல்லது நம்மை மட்டுமல்லாமல் உலகத்தையும் ஏமாற்றுகிறார்களா…” என்று சற்று உரத்த தொனியில் ஆக்ரோஷமாகக் கேட்டார்.

       அவருடைய கேள்வி நியாயமானது. இதே கேள்விகள் என்னிடத்திலும் எழுந்திருக்கின்றன. இன்னும் பலரிடத்திலும் இவைபோலப் பல கேள்விகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்விகளை நாம், நம் நம்முடைய அரசியல்வாதிகளிடமும் தலைவர்களிடமும் கேட்க வேண்டும். நம்முடைய ஊடகங்களிடமும் ஊடகவியலாளர்களிடத்திலும் கேட்க வேண்டும். மாற்றாளர்கள் விலக்கு.

மாற்றாளர்கள் விலக்கு என்பது ஏனென்றால் அவர்கள் இனவாதத்துக்கும் இங்கே நிலவுகின்ற அரசியற் போக்குக்கும் எதிராக – மாறாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, அதன்படியே அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். ஆனால், அவர்களுடைய கருத்தையும் நிலைப்பாட்டையும் பெருந்திரள் சமூகமும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தரப்புகளும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆகவே அவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். ஆனால், ஏனைய பெருந்திரளாளர்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டும். பொறுப்புச்சொல்லவும் பொறுப்பு ஏற்கவும் வேண்டும். அவர்கள் அனைவரும் ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள். இனவாதம் அழியக் கூடாது என்று செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தவறு, பிழை, குற்றம் என்றெல்லாம் தெரிந்து கொண்டே அதை எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமற் செய்து கொண்டிருப்பவர்கள். மக்களிலும் பெரும்பாலானோர் அப்படித்தான் செயற்படுகிறார்கள். தவறான – பொருத்தமற்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அரசியற் தலைவர்கள் என்று நன்றாகத் தெரிந்து கொண்டே அதற்கு ஆதரவளிப்பவர்கள். கட்சி அபிமானம், தலைமை மீதான பிடிமானம், இனமானம் போன்ற காரணங்கள் இவர்களுடைய அறிவுக் கண்ணைக் குருடாக்கி விடுகின்றன.

ஆனால், அந்த இளைஞர் கேட்கும் கேள்விகளும் அவருடைய மனதிலே எழுகின்ற கோபமும் நியாயமானது. அந்த நியாயத்துக்கு இங்கே உரிய இடமில்லை. இந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது. இதிலே துயரமான வேடிக்கை என்னவென்றால் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துக் கொண்டு, மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்றவர்களையே மக்களும் தமது அரசியல் தலைவர்களாகவும் அரசியற் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்வதுதான். இனவாதம், மதவாதம் மட்டுமல்ல, ஊழல் முறைகேட்டைச்செய்கின்றவர்களையும் மக்கள்தான் ஆதரித்து வெற்றியடையச் செய்கிறார்கள். இதையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், கேள்விக்குட்படுத்தத் தயாரில்லாமல் இருக்கின்ற ஊடகக்கார்களும் ஊடகங்களும் இதில் சேர்த்தி.

இதுதான் இலங்கையின் துயரமும் அவலமும்.

         இதற்கு அடிப்படையாகச் சில விடயங்கள் உண்டு. ஒன்று, சிங்கள அரசியற் தலைவர்கள் மதத்துக்குக்கும் மதவாதிகளுக்கும் கட்டுப்பட்டிருப்பதாகும். இலங்கையில் மொழியும் மதமும் இரண்டறக் கலந்தது என்பர். சைவமும் தமிழும். சிங்களமும் பௌத்தமும். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அளவுக்கு பிணைந்திருப்பவை. இதனால் தெரிவு செய்யப்படும் அரசியற் தலைவர்கள் மதபீடங்களுக்குச் சென்று ஆசி பெறுவதும் வழிபடுவதும் முதற்பணியாகிறது. அதற்குப் பிறகுதான் ஆட்சி பரிபாலனமும் அரசியற் பணியும் மக்கள் தொண்டும். இதொரு வழமையாகி விட்டது. மன்னர் காலத்துப் பாரம்பரியத்தை இந்த ஜனநாயக யுகத்திலும் அப்படியே பின்பற்றுகிறார்கள். இதனால் மதபீடங்களையும் மதக் கட்டுமானங்களையும் இவர்களால் கடந்து செல்ல முடிவதில்லை. இதனால்தான் இலங்கையின் அரசியலமைப்பும் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று சொன்னால் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இலங்கையில் பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்கள் தனியே சிங்களர் மட்டுமே. ஆகவே சிங்கள பௌத்தவாதமாக இது திரட்சியடைந்துள்ளது. இதற்கு அரசு தலைமை தாங்குவதால் ஏனைய மதத்தையும் மொழியையும் பேசும் மக்களின் நிலை கேள்விக்குள்ளாகிறது.

சிங்கள பௌத்தத்தைப் போல மிகப் பிற்போக்குத்தனமான மதக் கட்டுப் பெட்டித்தனங்கள் இல்லை என்றாலும் முஸ்லிம்கள், பள்ளிவாயல்களையும் அவற்றின் சம்மேளத்தையும் கடந்து  நிற்றமுடியாதவர்கள். அப்படித்தான் தமிழ்க்கட்சிகளும் மலையகக் கட்சிகளும். ஆனால் அவை மதத்துக்குள் கட்டுப்பட்டிருக்காமல் வேறொரு நிலையில் கட்டுப்பட்டுள்ளன.  

என்பதால்தான் இந்தக் கட்சிகள் எல்லாமே இனக் கட்சிகளாகச் சுருங்கிக் கிடக்கின்றன. இதைப்பற்றி விவாதிக்கும்போது அரசும் சிங்களத் தரப்பும் இனவாதத்தைப் பிரயோகிப்பதனால் தாமும் தவிர்க்க முடியாமல் இனரீதியாகவே திரட்சியடைய வேண்டியுள்ளது. அவர்கள் (சிங்கள மக்கள்) சிங்களத் தேசியவாதத்தை மேலுயர்த்தும்போது தவிர்க்க முடியாமல் நாமும் தமிழ்த்தேசிய வாதத்தையே நிலை நிறுத்த வேண்டியுள்ளது. அப்படித்தான் முஸ்லிம் தேசியவாதமும் மலையகத் தேசியவாதமும் என்று சொல்லப்படுகிறது.

        மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிபோலவே தோன்றும். அதற்கான பகுதி அளவு நியாயங்களும் உண்டு. ஆனால், இது தவறு. ஏனென்றால் இந்த எதிர்த்தேசியவாதம் என்பது தேசியத் தன்மையோடு உருவாகவும் இல்லை. அப்படிக் கடைப்பிடிக்கப்படவும் இல்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதில் தமிழினவாதம். சிங்கள + தமிழ் இனவாதத்துக்குப் பதில் முஸ்லிம் இனவாதம். அவ்வளவுதான். இதில் சிங்கள இனவாதம் சற்றுக் கூர்மையாக உள்ளது. காரணம், அது அரசு, அதன் வளங்கள், படைத்துறை, பெரும்பான்மை என்ற அதிகார எல்லைகளை உச்சமாகக் கொண்டிருப்பதால் கூரானதாக உள்ளது. அடுத்தபடியாக தமிழினவாதம் இருந்தது. இப்பொழுது தமிழ்த்தரப்பின் பலம் குறைவடைந்துள்ளதால் அதனுடைய எல்லைகள் மட்டுப்பட்டுள்ளன. முஸ்லிம் இனவாதம் அதற்கும் கீழே உள்ளது.

இனவாதத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் பலரும் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் இரண்டையும் ஒன்றாகப் போட்டுத் தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனவாதத்தில் ஜனநாயகத்துக்கான இடமே இருக்காது. தேசியவாதத்தில் (அதுவும் ஒரு கற்பிதம்தான் என்றபோதும்) அதற்குள் ஒப்பீட்டளவில் ஒரு சுதந்திர வெளி உண்டு. ஜனநாயகம் அதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதனால் அது உள்ளும் புறத்தும் திறந்தே காணப்படும். அதனுடைய பலமே அதுதான். எந்தத் தயக்கமும் தடுமாற்றமும் அதற்குக் கிடையாது. அது மற்ற இனங்களைக் கண்டு அஞ்சாது. தன்னுடைய வெளிப்படைத்தன்மையிலும் ஜனநாயகவேரின் பலத்திலும் அது நிமிர்ந்து நிற்கும்.

ஆனால், இனவாதம் அப்படியானதல்ல. அது எப்போதும் பிறரைச் சந்தேகிக்கும். பிறரைக் குறித்து அச்சமடைந்து கொண்டேயிருக்கும். இதனால் பிறரை எப்போதும் எதிரியாகவும் எதிர்த்தரப்பாகவுமே கருதிச் செயற்படும். எதையும் முரண்நிலை நின்றே நோக்கும். அதனுடைய குணமே அதுதான். அதற்குச் சமாதானத்தின் மீது ஈடுபாடோ நம்பிக்கையோ திருப்தியோ ஏற்படாது. எப்பபொழுதும் அது எதிர்த்தரப்பைக் குற்றம் சாட்டிக்கொண்டேயிருக்கும். அதில் திருப்தி காண்பதே அதன் முழுமையான ஈடுபாடு. அதுவே தன்னுடைய பலம் எனக் கருதிக் கொண்டிருக்கும். இதனால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் பற்றிய ஆய்வோ அறிதலோ அதற்குக்கிடையாது. அதை அது பொருட்படுத்திக் கொண்டிருப்பதும் இல்லை. அதற்கு எதிர்த்தரப்பின் மீது குற்றம் சுமத்திக் கொண்டும் எதிர்த்தரப்பை எதிர்த்துக் கொண்டுமிருக்க வேண்டும். அதுவே தன்னுடைய பணி எனக் கருதிக் கொண்டிருக்கிறது. இனவாதம், நிறவாதம், மனவாதம் அனைத்தினதும் பொதுக்குணம் இதுவாகும்.

   இதையெல்லாம் தெரிந்து கொண்டே பலரும் தெரியாததைப்போல தவறிழைக்கிறார்கள். எனவேதான் இவர்கள் வரலாற்றின் குற்றவாளிகள். குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறோம்.

இலங்கையின் தொடரப்படுகின்ற இனவாதமே இலங்கையைச் சீரழித்தது என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதற்குக் காரணமானவர்களையும் தெரியும். ஊழல்வாதிகள், இனவாதிகள், சமாதானத்துக்கும் தீர்வுக்கும் எதிரானவர்கள் என்றும் தெரியும். இதற்கெல்லாம் காரணமான கட்சிகள் எவை என்றும் தெரியும். ஆனாலும் மக்கள் இன்னும் இனியும் அவர்களைச் சார்ந்தும் அந்தக் கட்சிகளை ஆதித்துக் கொண்டுமே இருக்கிறார்கள். அடுத்து வரப்போகின்ற தேர்தல்களிலும் இப்படியான சக்திகள்தான் வெற்றியடையக் கூடிய நிலை உண்டு.

அப்படியென்றால் எங்கே தவறுண்டு? எதற்காக மக்கள் இப்படித் தவறிழைக்கிறார்கள்?

இலங்கை மக்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, ஊடகங்களும் சரி அனைத்துத் தரப்புமே தற்காலத்தில் – நவீன யுகத்தில் வாழவில்லை. அவர்கள் இந்த யுகத்தின் பிரதிநிதிகள் கிடையாது. தற்காலத்தில் உயிரோடிருந்தாலும் அவர்கள் வாழ்வது பல நூறாண்டுகளுக்கு முன்பான காலத்திலேயே. அந்தப் பழைய யுகத்தின் பிரதிநிதிகளாகவே அவர்கள் செயற்படுகிறார்கள். அந்த யுகத்தின் பிரதிநிதியாகவே சிந்திக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் இந்த யுகத்தின் மனிதர்களாக முடியவில்லை.

கோட்டும் சூட்டும் போட்டு (ரை) கழுத்துப்பட்டியும் கட்டிவிட்டால் அவர்கள் இந்த யுகத்தின் பிரதிநிதிகள் ஆகி விடுவார்கள் என்றில்லை.

என்பதால்தான் இலங்கையர்களாகிய நாங்கள் இந்த உலகத்தில் மிகப் பின்தங்கியவர்களாக உள்ளோம். இலங்கையை விட்டு எங்காவது தப்பியோடினால் நல்லது என்று எண்ணுகின்றவர்களாக இருக்கிறோம். ஆனால் அங்கே சென்றதும் இங்குள்ள அரசியற் கட்சிகளுக்கு முண்டு கொடுக்கும் ஆட்களாகவும் மாறி விடுகிறோம். அடிப்படையில் நாமும் இனவாதிகளாக இருப்பதே இதற்குக் காரணம். நம்மை அறியாமலே நமக்குள் இனவாதம் செயற்படுகிறது. என்பதால்தான் நம்மால் பிறரை நம்பவும் மதிக்கவும் அவர்களோடு இணைந்து செயற்படவும் முடியாதிருக்கிறது.

ஆகவே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இதே ஐ.தே.கவும் இதே சு.கவும் இதே ஜே.வி.பியும் இதே பெரமுனவும் இதே தமிழரசுக் கட்சியும் இதே முஸ்லிம் காங்கிரசும் இதே மலையகக் கட்சிகளும் இதே அரசியலை இதே வழிமுறையில் தயக்கமின்றித் தொடரப் போகின்றன. வாழ்த்துகள்.