(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
‘13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – இந்தியாவின் வகிபாகமும்’ பற்றிய கலந்துரையாடலொன்று 2023 ஜூலை 15, சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகிச் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் அதிகாரப்பகிர்வு இயக்கத்தினதும், யாழ்ப்பாணம் செல்வநாயகம் அறக்கட்டளை ஆய்வு நிறுவனத்தினதும் கூட்டு அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ்ச் சமூக்தினரிடையே இன்றுள்ள மூத்த கல்விமான்களில் முக்கியமானவருமான பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடல் கூட்டத்திற்கான அழைப்பு அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் அதிகாரப்பகிர்வு இயக்கத்தின் நெம்புகோலான அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவருமான கலாநிதி கா.விக்னேஸ்வரன் அவர்களால், தமிழர் விடுதலைக் கூட்டணி – தமிழ் மக்கள் கூட்டணி – ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – இலங்கைத் தமிழரசுக்கட்சி – ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – தமிழீழ விடுதலை இயக்கம் – தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி – சமத்துவக்கட்சி – ஈழவர் ஜனநாயக முன்னணி – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழர் மகாசபை உட்பட பன்னிரெண்டு பதிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான சம்மதமும் இக்கட்சித் தலைவர்களாhல் தெரிவிக்கப்பட்டும் இருந்தன.
‘இருதேசம் ; ஒரு நாடு’ பேசும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) இவ் அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இக்கலந்துரையாடலில் தவிர்க்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் இக்கட்சியை இக்கலந்துரையாடலுக்கு அழைக்காமல்விட்டமை சரியானதே. இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்திருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியும் – தமிழீழ விடுதலை இயக்கமும் வேறு சாக்குப்போக்குகள் சொல்லி ஏனோ தெரியவில்லை இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வதைப் புறக்கணித்திருந்தன.
இக்கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பெற்றதன் நோக்கம் – கூட்டப்பெற்ற காலம் என்பவற்றை வைத்துப் பார்க்கும்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியும் தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திச் சிந்திக்காமல் தத்தம் கட்சி நலன்கள் சார்ந்த அல்லது அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் சில தனிநபர்களின் நலன்கள் சார்ந்த நிகழ்ச்சிநிரலுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றன என்பதைத் தமிழ்மக்கள் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரு கட்சிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் சேர்த்து இம்மூன்று கட்சிகளும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் முதற்கட்டமாகத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைக்கப்பெற்ற பன்னிரெண்டு பதிவு செய்யப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளில் பத்துக்கட்சிகள் கலந்துகொண்டு (கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள்) 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான – முறையான அமுலாக்கலின் முக்கியத்துவத்திற்கு முன்னுரிமைகொடுத்து ஒரேகுரலில் தமது நிலைபாடுகளைத் தெரிவித்திருந்தமை அரசியல் அரங்கிலே உள்நாட்;டிலும் வெளிநாடுகளிலும் (புலம்பெயர் தேசங்களிலும்) இந்தியாவிலும் இராஜதந்திர வட்டாரங்களில்கூட நேர்மறையான தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20.07.2023 அன்று டில்லிக்குப் புறபப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் (15.07.2023) பத்துத் தமிழ் அரசியல்கட்சிகள் ஒரே மேடையில் ஒரே கருத்தை – நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தமை உண்மையிலேயே காலமறிந்ததொரு அரசியல் செயற்பாடு மட்டுமல்ல, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் சக்திகளுக்கு ஓர் ‘ஊக்கி’யுமாகும். அதாவது, ‘பச்சைவிளக்கு’ச் சமிக்ஞையாகும்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி சில தமிழ்க்கட்;சிகளுடன் அதாவது அவர் டில்லிக்குப் புறப்படுவதற்குமுன் பேச்சுவார்த்தைகள் நடத்தியமையும் அதேபோல் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதுவர் சில தமிழ்க்கட்சிகளை அழைத்துப் பேசியமையும் அதிகாரப் பகிர்வு விடயத்தையொட்டிய இரு முக்கிய அரசியல் நிகழ்வுகளாகும்.
ஆனால், இந்த இரு நிகழ்வுகளின்போதும் தமிழரசுக்கட்சி அரசியல் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மூத்த அரசியல்வாதியான அனுபவம்மிக்க இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எரிச்சலூட்டும் வகையில் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. இரா.சம்பந்தனின் அரசியல் பக்குவத்தை அது வெளிப்படுத்தவில்லை. அதேபோல், அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் அரசியல் பொறுப்பற்ற தன்மையாகும்.
தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களைப் பொறுத்தவரை படிப்பது தேவாரம் ; இடிப்பது சிவன் கோயில்” போன்றுதான் எப்போதுமே நடந்துகொள்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கின்ற உபாயமும், ஆடிக்கறக்கிற மாட்டை ஆடியும் பாடிக்கறக்கிற மாட்டைப் பாடியும் கறக்கும் அணுகுமுறையும் தமிழரசுக்கட்சியின் அரசியல் வரலாற்றில் இல்லாமற்போனமைதான் தமிழர்களின் பின்னடைவுகளுக்குப் பிரதான காரணமாகும்.
தமிழரசுக்கட்சி இனித் திருந்தவும் போவதில்லை. அதனைத் திருத்தவும் முடியாது. தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக ஏதாவது நன்மைகள் நடைபெறவேண்டுமாயின் தமிழர்கள் இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை முற்றாக நிராகரிக்க வேண்டும். அதேபோன்றுதான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸ்)யும் தமிழ் மக்களால் எதிர்காலத்தில் முற்றாக நிராகரிக்கப்படவேண்டிய கட்சியாகும்.
ஏனைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை அதிகாரப்பகிர்வு இயக்கத்தில் ஓர் அங்கமாகி அதனை அனுசரித்துப் போவதே அறிவுபூர்வமானதாகும். மாறாக அதற்குக் குறுக்கே நின்று குந்தகம் விளைவித்தால் அவ்வாறு செயற்படும் தமிழ்க்கட்சிகளும்கூட தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ் மக்களால் எதிர்காலத்தில் நிராகரிக்கப்பட வேண்டியவையே.
13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த மேற்படி கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமைவகித்த பேராசிரியர் சி.பத்மநாதன் கூறிய கூற்று அர்த்தமுள்ளதாகும்.