(மௌன உடைவுகள் – 41)
—————————-
ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியல்…!
— அழகு குணசீலன்—
கிழக்கில் நீறுபூத்த நெருப்பாய் கிடந்த தமிழ்- முஸ்லீம் இனவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. சாம்பலைத்தட்டி தணலாக்கி எரியவைத்தவர் தமிழரசு எம்.பி.சாணக்கியன் இராசமாணிக்கம் என்று அவர் மீது முஸ்லீம்கள் பழியைப் போட்டாலும் ஒட்டுமொத்த பழி தமிழர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது.
“பிட்டும் தேங்காய்ப்பூவும்” கதை கேட்டுக் கேட்டு , எழுதி எழுதி புளித்துப்போன ஒன்றுதான். ஆனாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் அது இன்னும் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதே அதன் சமூக- அரசியல் விஞ்ஞான முக்கியத்துவம்.கிழக்கின் தனித்துவ சமூகக்கட்டமைப்பின் அடையாளம்.
மட்டக்களப்பில் கடந்த வாரம்தான் மாமாங்கம் திருவிழா முடிந்திருக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மாமாங்கம் திருவிழா குறித்து இலக்கிய படைப்பாளி எஸ்.எல்.எம். கனிபா தனது முகப்புத்தகத்தில் இட்ட பதிவு இது.
” நடுச்சாமம் தாண்டி மாமாங்கம் கோயில் வீதியில் சுடச்சுட குழல் பிட்டும் , வழுதிலங்காய் பால்கறியும் உண்டு களித்த அவரின் நினைவுகள் அவை”. வாசகர்கள் அணிந்துள்ள”கண்ணாடியை ” பொறுத்து இது என்ன பிட்டு தின்ற கதை …. என்று நினைக்கலாம்.
இது கிழக்கின் வரலாற்று ரீதியான தமிழ் – முஸ்லீம் உறவுப்பாலத்தின் அடித்தளம். தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான தனித்துவ உறவின் உச்சம். கிழக்கிற்கே உரித்தான தனித்துவ வாழ்வியல் பாணி- LIFESTYLE .இதனால்தான் எஸ்.எல்.எம் .இன் பிட்டு தின்ற கதை இன்றைய சூழலில் மறுவாசிப்பு செய்யவேண்டிய ஒன்று.
கிழக்கில் பூதாகாரமாக இருந்து வருகின்ற காணிப்பங்கீட்டு பிரச்சினை, நாவலடி விவகாரம் மூலம் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. எனினும் இன்றைய நாவலடி விவகாரம் , மட்டக்களப்பு மாவட்டத்தின் சமகால ஒட்டு மொத்த காணிப்பிரச்சினையின் ஒரு துளி மட்டுமே.
நாவலடியில் அரசகாணி முஸ்லீம் தனியாட்களால் கையகப்படுத்தப்படுகிறது என்ற செய்தி அறிந்து களவிஜயம் செய்த சாணக்கியன் பா.உ. செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கட்டிய வீடுகள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டதாக முஸ்லீம் மக்கள் கூறுகின்றனர்.அதை கண்டித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
” அரச காணி அரசுக்கு சொந்தமானது. சட்டத்திற்கு முரணாக தமிழ்பேசும் மக்கள் என்றாலும், சிங்களவர்கள் என்றாலும் காணிப்பிடிப்பில் யார் ஈடுபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பது சாணக்கியனின் வாதம். இங்கு சாணக்கியன் குறிப்பிட்டுள்ள ” தமிழ்பேசும் மக்கள்” என்ற வார்த்தை பிரயோகம் திட்ட மிட்டு தமிழர்களைத்தவிர்க்க அவர் பயன்படுத்தினாரா ? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மட்டக்களப்பின் குருக்கள் மடம், குறுமண்வெளி துறைகளைக்கடக்க கட்டணம் அறவிடப்படுவதை “நீங்கள் ஏன் அரசாங்கத்திற்கு காசு உழைத்துக்கொடுக்கிறீர்கள் என்று கேட்ட சாணக்கியன் இப்போது மட்டும் என்ன அரசாங்கத்திற்கு காணிபிடித்து கொடுக்கிறாரா? என்றும் எதிரணியினர் கேட்கிறார்கள்.
இது சாணக்கியன் மீது முஸ்லீம்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதறடித்திருக்கிறது. அவரின் முஸ்லிம் ஆதரவு முகமூடியை கிழித்திருக்கிறது என்று முஸ்லீம் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இது சாணக்கியனின் ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியலை அம்பலமாக்கி இருக்கிறது .
உண்மையில் நாவலடி சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையிலான மோதல். சாணக்கியன் இது விடயத்தில் சர்வதேச சட்டங்கள் பற்றி பேசியிருக்கிறார். சம்மந்தப்பட்ட மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காது, கால அவகாசம் வழங்கப்படாது மேற்கொள்ளப்பட்ட இந்த குடியிருப்பு அழிப்பு ஜனநாயக மறுப்பும், மனித உரிமைகள் மீறலுமாகும் என்பது மனித உரிமையாளர்கள் கருத்து.
இந்த மக்கள் மற்றோரு சகோதர இனத்தின் தனியார் காணிகளை அடாத்தாகப்பிடிக்கவில்லை மாறாக குடியிருப்பு காணிப்பஞ்சம் காரணமாக அரச- மகாவலி அபிவிருத்தி ஒதுக்கீட்டுக்குரிய காணியில் குடியேறினார்கள். இவர்கள் குடியிருப்பு காணி இல்லாதவர்களா? அல்லது காணி மாபியாக்களா? என்பதை முறையாக அதிகாரிகள் ஆராய்ந்து ஒரு மாற்று நடவடிக்கையை முன் மொழிந்திருக்கமுடியும். அது நடக்கவில்லை .
இங்கு காணி நிர்வாகத்தை விடவும் அரசியல் அதிகம் விளையாடியிருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகிறார்கள். அரச காணியில் மக்கள் சட்டரீதியற்றவகையில் குடியேறுவதும் பின்னர் இருக்கின்ற ஏதாவது ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி சட்டரீதியாக்கப்படுவதும் இலங்கையில் – மட்டக்களப்பில் நடக்காத ஒன்று அல்ல.
இந்த பின்னணியில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் தொடர்ந்தும் இடப்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தத்தில் இவை யாவும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றனவாக உள்ளன.
தமிழ் -முஸ்லீம் உறவை தகர்த்த காரணிகள் எவை?
——————————————————————————–
(*) கண்டிக்கலகம் முதற்கொண்டு சேர்.பொன். இராமநாதனின் யாழ். மேலாதிக்க சிந்தனை.
(*) தனித்தமிழ் ஈழம் பிரகடனம் செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம்.
(*) முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்பட்டமை.
(*) 13வது திருத்தம் .
(*) புலிகளும், மற்றைய தமிழ் ஆயுத அமைப்புக்களும் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள். பள்ளிவாசல்கள், முஸ்லீம் கிராமங்கள் மீதான தாக்குதல்களும் சொத்து பறிப்புக்களும்.
(*) ஜிகாத், மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள்.
(*) வடக்கு முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் சொத்து அபகரிப்பும்.
(*) வடக்கு -கிழக்கு இணைப்பை முஸ்லீம்கள் எதிர்ப்பதும், கிழக்கில் தங்கள் தனித்துவத்தை கோருவதும்.
(*) கிழக்கு மாகாண ஆளுநர் , தமிழ் அரசாங்க அதிகாரிகள் மீதான முஸ்லீம் அரசியல் வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள்.
(*) தமிழர்கள் வாழும் சில பிரதேசங்களுக்கு முஸ்லீம்கள் தொழில் சார்ந்து இன்னும் சுதந்திரமாக செல்லமுடியாமை.
இந்த காரணங்கள் அண்மையில் தமிழ், முஸ்லீம் இருதரப்பினராலும்
முகப்புத்தகத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இட்ட பதிவுகளில் மௌன உடைவுகள் போட்ட தூண்டிலில் சிக்கியவை. அந்த சமூகத்தினரின் உள்ளக்கிடக்கையை பிரதிபலிப்பவை.
ஒழித்து விளையாடும் அரசியல் …..!
————————————————————–
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பாறை- திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஸாமில் கிழக்கிற்கே உரித்தான நாட்டுப்புற வார்த்தைகளில் இதை இப்படிச்சொன்னார். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் “சேலைக்கு மேலால் சொறிகிறார்”
என்பதே அது. இந்த தொப்பி கிழக்கிலங்கை அரசியலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தமானது.
கிழக்கில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடியை சேலைக்கு மேலால் சொறிந்து தீர்க்கமுடியாது. எங்கு கடிக்கின்றதோ அந்த இடத்தில் சேலையை தூக்கி சொறியவேண்டும். அப்போதுதான் “கடிக்கு” கொஞ்சமாவது- தற்காலிகமாகவது நிவாரணம் கிடைக்கும். எங்கவோ கடிக்க எங்கவோ சொறிந்து என்ன பயன்?
இதற்கு தமிழ் -முஸ்லீம் அரசியல் சேலைக்கு மேலே சொறிகின்ற பல “கடிகளை” இங்கு பட்டியலிடலாம்.
1. தமிழ்த்தேசியம் வடக்கு- கிழக்கு இணைப்பை கோருகிறது. கிழக்கின் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் இணைப்பை நிராகரிக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்த்தேசியத்தின் வெளிப்படையான பதில் என்ன? மாற்றுத்திட்டம் என்ன?
2. மாற்று திட்டமாக இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் கோருகின்ற நிலத்தொடர்பற்ற தனி முஸ்லீம் அலகை அல்லது அம்பாறையில் கரையோர நிர்வாக மாவட்டம் ஒன்றுக்கு இணங்கிப்போக தமிழர் அரசியல் தயாரா?
3. கிழக்கு மாகாணத்தில் – குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பங்கீடு மூன்று சமூகங்களின் சுமூகவாழ்வுக்கு முக்கியமானது.
அரசியல் கட்சிகளின் காணிக்கொள்கை என்ன? நஸீர் அகமட் கோருகின்ற இனவிகிதாசாரப்பங்கீடு சாத்தியமா? இல்லையேல் தமிழ்தரப்பின் மாற்றுயோசனை என்ன?
4. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை முஸ்லீம் அரசியல் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா?
5. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் சனத்தொகையில் ஏற்படும் அதிகரிப்பு தமிழர்களின் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடும் , மற்றும் மகாவலி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் மூலம் மட்டக்களப்பின் ஒருபகுதி நிலப்பரப்பு பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.
இந்த பின்னணியில் தமிழ் -முஸ்லீம் அரசியலும் -உறவும் தொடர்ந்தும் சந்தேகங்கள் நிறைந்த “பிடிகொடாத” அரசியலுக்கு ஊடாக வாய்மை அற்ற வாக்கு அரசியலாகநகர்தப்படுகிறது. இதில் இருந்து விடுபட்டு வெளிப்படையான அரசியலுக்கு இருதரப்பும் முன்வரவேண்டும். இரு தரப்பினரும் நண்பர்கள் போன்று பாசாங்கு செய்து கொண்டு புடவைக்கு மேலால் சொறிதல் “கடிக்கு” மருந்தல்ல.
நாவலடி எதிரொலி…..!
————————-
தமிழ் மக்களின் கடந்த 75 ஆண்டுகால அகிம்சை,ஆயுத போராட்டங்களை முஸ்லீம்கள் அறியாமல் இருக்க நியாயமில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் ஒன்றாக ஓடிய அரசியல் நதிதான் இடையில் இரண்டாகப்பிரிந்தது. இந்த இரு போராட்ட வழிமுறைகளிலும் இரு தரப்புக்கும் இழப்புக்கள் உண்டு. இழப்புக்களை சந்தித்துள்ள இருதரப்பும் இணைந்து அதற்கான காரணங்களை இனம்கண்டு எதிர்காலச்சந்ததிக்கு வழிகாட்டுவதே கிழக்கின் இன்றைய அரசியல் தேவை.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமியுங்கள், கிழக்குமாகாணத்தின் தமிழ் ஆளுனரை மாற்றுங்கள், 13 வேண்டாம், தமிழ் அதிகாரிகள் -பிரதேச செயலர்கள் வேண்டாம் என்ற கோரிக்கைகள் இனவாதம் கொண்டவையும், தனி ஒரு தரப்பின் நலனுக்காக மற்றோரு தரப்பின் நலனை நிராகரிப்பவையுமாகும். இவை பேசித்தீர்க்கப்படவேண்டியவையே அன்றி மோதிக் தீர்க்கபடமுடியாதவை.
முஸ்லீம் -தமிழ் உறவில் உறுதியாக இருந்ததற்காக முஸ்லீம் ஊர்காவல்படையினரால் கொலை செய்யப்பட்டவர் அகமட்லெப்பை. அலிஸாகிர் மௌலானா, அசாத் மௌலானா போன்றவர்கள் புலிகள் பிளவுபட்டபோது செயற்பட்ட மனிதாபிமான அணுகுமுறையை கிழக்கு நன்றியுடன் திரும்பிப்பார்க்க வேண்டும். முஸ்லீம் காங்கிரசுக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை நிபந்தனையின்றி விட்டுக்கொடுத்ததற்காக சம்பந்தர் ஐயா மீதான அர்ச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
அஷ்ரப் முஸ்லீம் காங்கிரஸை அமைத்ததுதான் இனவாதம் என்றால், தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகள் அமைக்கப்பட்டதை என்ன என்று சொல்வது.கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்டது போன்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமைக்கப்பட்டதை என்ன என்று சொல்வது. இரண்டினதும் தோற்றறப்பாட்டில் ஒரு பொதுத்தன்மை உண்டு. ஒன்று கொழும்பு முஸ்லீம் தலைமைத்துவத்தை நிராகரிக்கிறது மற்றையது யாழ்ப்பாண தமிழ்த் தலைமைத்துவத்தை நிராகரிக்கிறது.
ஹிஸ்புல்லா ஆளுநராக இருந்த போது எத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும் அவரை நீக்கக்கோரி தமிழ்மக்கள் கேட்கவில்லை. மட்டக்களப்பு நீதிமன்ற. முஸ்லீம் நீதிபதியை, கிழக்குமாகாண முஸ்லீம் கல்விப்பணிப்பாளரை நீக்கக்கோரி கேட்கவில்லை. இவை அரசியலுக்கு அப்பால் நிர்வாகம், நீதித்துறை சார்ந்தவை ஒரு ஜனநாயகத்தில் சுயேட்சையாக செயற்படவேண்டியவை.
தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான பொருளாதார, கல்வி, தொழில், கட்சி அரசியல், ஒரு இனத்தை மற்றொரு இனம் கட்டி ஆளவேண்டும் என்ற உளவியல்சார் பொறாமை மனப்பான்மையே இவற்றிற்கான அடிப்படை. இவை ஆரோக்கியமான சமூகத்திற்கும், அரசியலுக்கும் எதிரிகள்.
அகப்பையில் அள்ளி பானையை நிறைக்க……!
——————————————————————————-
” THEY CAME FIRST FOR THE COMMUNISTS AND I DON’T SPEACK UP
BECAUSE I WASN’T A COMMUNIST.
THEN THEY CAME FOR THE JEWS AND I DIDN’T SPEACK UP
BECAUSE I WASN’T A JEW .
THEN THEY CAME FOR THE TRADEUNIST AND I DIDN’T SPEACK UP
BECAUSE I WASN’T A TRADEUNIST.
THEN THEY CAME FOR THE CATHOLICS AND I DIDN’T SPEACK UP
BECAUSE I WAS PROTESTANT.
THEN THEY CAME FOR ME AND BY THAT TIME NO ONE WAS LEFT TO SPEACK UP “
யூத இனப்படுகொலை குறித்து பாஸ்டர் மார்ட்டின் நிமொல்லர் எழுதிய கவிதை.
இந்தக் கவிதை வரிகளில் இருதந்தாவது தனித்தமிழ் ஈழவிடுதலைப்போராட்டம் எமக்கு விட்டுச்சென்ற எச்சத்தை தேடுவோம்….!
அன்று ஊமைகளாய் இருந்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், மதத்தலைவர்கள்… இப்போது சமாதானம் செய்ய புறப்பட்டிருக்கிறார்கள் என்ன யோக்கியதை…..?
இன்னொரு பகுதியினர் வாய் விழுங்குவதற்கு மட்டும் என்று நினைத்து மனிதத்தையும் சேர்த்து விழுங்கினார்கள் அல்லது எஜமானுக்காக அவருக்கு பிடித்ததை வாந்தி எடுத்தார்கள் …. இவர்களுக்கு தியாகிகளாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது……!
கடந்த கால தவறை உணர்ந்து கிழக்கின் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து சமூகநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
தட்டப்படுவது அயல்வீட்டு கதவுதானே என்று தூங்குவோமாயின்….
உங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும்போது …. உங்களுக்காக பேச எவரும் இருக்கமாட்டார்கள்….!