—- கருணாகரன் —-
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் சமூகம் இலங்கையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள், போராட்டத்துக்கான பங்களிப்பாக, போர் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக, சுனாமி மற்றும் கொரோனா கால பேரிடர்களில் துயர் களைவதாக எனப் பல வகையில் இருந்து வருகிறது. மட்டுமல்ல, இந்தப் பாதிப்புகளுக்குட்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூக மேம்பாடு எனப் பலவற்றுக்காகவும் உதவுகிறது. கூடவே துறைசார் அறிவுப் பகிர்தலையும் இப்பொழுது ஆற்றி வருகிறது. இவற்றைப் பற்றி இந்தத் தொடர் விவாதிக்கிறது.
புலம்பெயர் சமூகம் இன்று மிகப் பெரிய சக்தியாகும். பொருளாதாரத்தில் பல்வேறு வகையான உதவித்திட்டங்களிலும் நலத்திட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பல உதவித்திட்டங்களையும் நலத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாகவும் உள்ளது. கூடவே நாட்டில் (இலங்கையில்) பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு வலுவானதாகவும் இருக்கிறது.
இதைப்போல அறிவுசார் பங்களிப்பை வழங்கக் கூடிய நிலையிலும் அரசியல் ரீதியாகத் தாக்கங்களை உண்டாக்கக் கூடிய சூழலிலும் உள்ளது. அதிலும் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினர் இதில் முன்னணியில் உள்ளனர். அந்தந்த நாடுகளில் கல்வி கற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டும் தமது அறிவை விருத்தி செய்துள்ளனர். இந்த இரண்டாம் தலைமுறையினரே அரசியல் ரீதியாகவும் செல்வாக்கைப் பெற்று வருகின்றனர். கனடாவில் ஹரி ஆனந்தசங்கரி, ராதிகா சிற்சபேசன், லோகன் கணபதி, விஜே தணிகாசலம் தொடக்கம்………. வரை பலர் உள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்தப் போக்கும் மேலும் உயரும்.
ஆனால் இதையெல்லாம் ஒழுங்கமைத்து வலுவாகத் திரட்சியடைய வைக்கக் கூடிய அரசியல் ஒருங்கிணைப்போ கட்டமைப்பாக்க உணர்வோ இல்லாமல் சிதறுண்ட நிலையிலேயே அது காணப்படுகிறது. இதுதான் மிகப் பெரிய பலவீனம். அதாவது, மிகப் பெரிய சக்தியாகக் காணப்படும் புலம்பெயர் சமூகம், தன்னுடைய சக்தியைத் திரட்டிக் கொள்ள முடியாமல் பலவீனமான நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. இது அதன் மீதான குற்றச்சாட்டல்ல. அதனுடைய மெய்நிலையைப் பற்றிய அவதானிப்பாகும். இதைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக எதிர்காலத்தில் அதனைச் சீராக்கி வலுவாக்கம் செய்ய வேண்டும், அது முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது.
இதற்கு இலங்கையிலோ அல்லது புலம்பெயர் சூழலிலோ ஆளுமையும் ஆற்றலும் நம்பிக்கையும் உள்ள தலைமை வேண்டும். அப்படியான தலைமை இல்லை என்பது மிகப் பெரிய குறைபாடே. இதனால்தான் இந்தப் பெரிய பலத்தை, அதன் பயனை பெறமுடியாமல் தமிழ்ச்சமூகம் உள்ளது.
புலம்பெயர் மக்கள் பல்வேறு தளங்களில், பல்வேறு நோக்கு நிலையில் தாயகத்துக்கான உதவிகளைச் செய்கின்றனர். சிலர், தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கில் மட்டும் தமது உதவித் திட்டங்களை மேற்கொள்கின்றனர். இவர்களில் பலர் தமிழீழக் கனவோடு செயற்பட்டவர்கள், அதற்குப் பங்களித்தவர்கள். இப்பொழுது அந்தக் கனவுக்காகத் தம்மைப் பலியிட்டோருக்கும் அந்தக் கனவினால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவுகின்றனர். கூடவே தமிழ்ப் பிரதேசங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இன்னொரு சாரார், வடக்கிற்கு மட்டும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்கிறார்கள். இதை நாம் பிரதேசவாதமாகவோ அப்படியான சிந்தனையின்பாற்பட்டதாகவோ கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் தமக்குச் சாத்தியப்பட்ட எல்லைக்குள் தம்மால் முடிந்த உதவிப் பணிகளையும் நலத்திட்டங்களையும் மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இப்படித்தான் இன்னொரு தரப்பினர் கிழக்கிற்கென உதவுகின்றனர். வேறொரு தரப்பினர் மலையகம் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கு முழுவதிலும் உதவிப் பணிகளைச் செய்கின்றனர். இன்னொரு தரப்பினர் போராட்டப்பங்களிப்பு என விடுதலைப் புலிகள் இயங்கிய போது அவர்களுக்கும் அவர்களுடைய கட்டமைப்புகளுக்கும் உதவினர். அவர்கள் இல்லாத சூழலில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கென உதவுகின்றனர். இதில் சிலர் தமக்குத் திருப்தியளிக்கக் கூடிய அரசியல் கட்சிகளுக்கும் உதவுகின்றனர். வேறு சிலர் தனிப்பட தமக்குக் கிடைக்கின்ற தொடர்புகள், அறிமுகங்களின் வழியாக உதவுகின்றனர். இப்படிப் பல வகைப்படுகிறது இந்த உதவித்திட்டங்கள்.
இதை விட ஊர் சார்ந்த உதவிகள், தாம் படித்த பாடசாலைகள், தமது விளையாட்டுக் கழகங்கள், தமக்கு இணக்கமான அமைப்புகள் மற்றும் மருத்துவ உதவிகள் என்ற வகையிலும் உதவிப் பணிகள் விரிவடைகின்றன.
எப்படியோ இந்த உதவிகள் அனைத்தும் இங்கே தாய் மண்ணிற்கே – தாய்நாட்டில் வாழும் மக்களுக்கே – கிடைக்கின்றன.
அப்படியென்றால் இந்த உதவிகளின் மூலமாக இந்த மக்களும் இந்த மண்ணும் வளம் பெற்றிருக்க வேண்டுமே! இந்த உதவிகள் பல வகைப்பட்டனவாக இருப்பதால் அந்தந்த அடிப்படையில் முன்னேற்றமோ மாற்றமோ ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா!
உச்சபட்சமான மாற்றமோ வளர்ச்சியோ ஏற்படவில்லை என்றாலும் குறைந்த பட்சமாகவேனும் வளர்ச்சியும் மாற்றமும் தென்பட்டிருக்க வேண்டும் அல்லவா! அப்படி ஏதும் நிகழ்ந்துள்ளதா? அப்படி நிகழவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? அல்லது அதற்குக் காரணம் என்ன? அந்தக் காரணத்தை கண்டறிவதற்கான முயற்சிகள் ஏதேனும் நடந்துள்ளதா? இப்பொழுது கூட இதை உணர்ந்து இதைச் சீர்செய்யக் கூடிய முயற்சிகள் ஏதும் நடக்கிறதா? அல்லது அப்படியான ஒரு முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று சிந்திக்கப்படுகிறதா?
நானறிந்த வகையில் அப்படி எதுவும் நடப்பதாகவோ நடக்கக் கூடியதாகவோ தெரியவில்லை. இது துயரமளிக்கக் கூடிய நிலையே!
வளமும் வாய்ப்பும் உள்ள ஒரு பெரிய சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைக்க முடியாமல் அதைச் சிதற விடுவதென்பது பெரிய இழப்பு மட்டுமல்ல, பொறுப்பற்ற தனத்தின் வெளிப்பாடுமாகும். அதுவும் நீண்டகாலமாகவே இனவொடுக்குமுறைக்கும் அந்த ஒடுக்குமுறையினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடை, போர் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வளத்தையும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கத் தவறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழ் அரசியற் கட்சிகள் பலவுண்டு. 2009 க்குப் பின்னர் மேலும் பல கட்சிகள் முளைத்துள்ளன. ஏற்கனவே விடுதலைப் போராட்ட அரசியல் வழிமுறைக்கூடாக வந்த கட்சிகளும் தலைவர்களும் உள்ளனர். ஐம்பது, அறுபது, எழுபது ஆண்டுப் பாரம்பரியத்தை உடைய கட்சிகளும் மூத்த தலைவர்களும் இருக்கின்றனர். இப்படியெல்லாம் (இவர்கள் எல்லாம்) இருந்தும் என்ன பயன்? இவர்களாலும் இந்தக் கட்சிகளாலும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பை உருவாக்க முடிந்ததா? போர் முடிந்த பிறகு இவர்களுக்குத்தானே மக்கள் வாக்களித்தார்கள்? தமது ஆதரவை வழங்கினார்கள்? எதற்காக? இவர்கள் மீதான நம்பிக்கையினால்! ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரிப் பொறுப்புடன் இவர்களும் இந்தக் கட்சிகளும் நடக்கவில்லை.
2009 இல் போரின் முடிவில் தமிழ்ச் சமூகம் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விட மிக மோசமான நிர்க்கதி நிலையை இன்று அடைந்துள்ளது. இப்பொழுது பல துண்டுகளாக உடைந்து சிதறிப் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலைக்குக் கொண்டு வந்ததில் இந்தத் தலைவர்களுக்கும் இந்தக் கட்சிகளுக்கும் பொறுப்புண்டு. அதைப்போலப் புலம்பெயர் நாடுகளில் உள்ள தன்முனைப்பாளர்களுக்கும் இந்தத் தவறில் பொறுப்புண்டு.
உண்மையில் புலம்பெயர் சமூகத்தின் பொருளாதார, அறிவியல், அரசியல் பலத்தை ஒழுங்கமைத்துக் கட்டமைத்திருக்க முடியும். அதைத் திரட்சியாக்கியிருக்கலாம். இதைக்குறித்து நிலாந்தன் போன்ற ஒரு சிலர் மட்டுமே பேசியுள்ளனர். அல்லது சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனைய அறிவாளர்கள் இதைக் கண்டும் காணாததைப்போலவே கடந்து செல்கின்றனர்.
பல்கலைக்கழகங்களும் அவற்றிலுள்ள துறைசார் அறிவாளர்களும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் இந்த விசயத்தில் அக்கறை கொள்ளவில்லை. விவசாயம், பொருளியல், கடற்றொழில், சமூகவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ளோர் இதைக்குறித்துச் சிந்தித்திருக்கவும் செயற்பட்டிருக்கவும் வேண்டும்.
போர் முடிந்த கையோடு, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் முதலீடுகளைச் செய்வதற்கான அகப்புற நிலைகளைக் குறித்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து ஒரு அணி வந்து கலந்துரையாடலை மேற்கொண்டது. அது ஒரு நல்ல தொடக்கம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அடுத்த கட்டத்துக்கு நகரவேயில்லை. இதில் அரச ஆதரவுச் சக்திகளும் அக்கறை காட்டவில்லை. அரச எதிர்ப்புச் சக்திகளும் அக்கறை கொள்ளவில்லை. ஆக மொத்தத்தில் அனைத்துத் தரப்பும் மக்களின் மேம்பாட்டைக் குறித்துச் சிந்திக்க மறுப்பதில் ஒரே விதமாகவே உள்ளன.
(தொடரும்)