(மௌன உடைவுகள் – 40)
—- அழகு குணசீலன் —-
“அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையேல் 22 வது திருத்தத்தைக்கொண்டுவந்து 13வது திருத்தத்தை இல்லாமல் செய்யுங்கள்….” ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க நாடாளுமன்றத்தில் கூறிய மிகத்துணிச்சலான வார்த்தைகள் இவை.
1983 இல் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று போர்முரசு கொட்டிய , “பயங்கரவாதத்தை அடக்க இஸ்ரேலை மட்டும் அல்ல எந்தப் பிசாசையும் அழைப்பேன்….” என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் வார்த்தைகளோடும், பின்னர் புலிகளோடு கைகோர்த்து மாகாணசபையைக் கலைத்த பிரேமதாசாவின் அரசியலோடும் ஒப்பிடவேண்டியது ரணிலின் கூற்று.
இவர்கள் மூவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் – பிரதமர்கள்- ஜனாதிபதிகள் . எனினும் ரணிலின் நீண்ட கால அரசியல் அனுபவம், அதனூடாக அவர் கற்றுக்கொண்ட பாடங்கள், இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள், பூகோள அரசியல் மாற்றங்கள், அவரும், அவரது ஐ.தே.க. யும் கடந்த பொதுத்தேர்தலில் அடைந்த வரலாறு காணாததோல்வி என்பன அவருக்கு புத்தியூட்டியிருக்க வாய்ப்புண்டு.
இத்தனைக்கும் ரணில் ஒரு “நிறைவேற்று அதிகார” ஜனாதிபதியாக இருப்பினும் ஒப்பீட்டளவில் இலங்கையின் கடந்த கால அனைத்து ஜனாதிபதிகளையும் விடவும் பாராளுமன்றத்தில் சுயபலம் குறைந்தவர். பொதுஜன பெரமுனவில் தொங்குகின்றவர். ஆனாலும் பிராந்திய, பூகோள அரசியல் சூழல் மாற்றங்களுக்கு ஏற்றதான அரசியல் ஒன்றின் தேவையை, ஜதார்த்தத்தை ரணில் உணர்ந்திருக்கிறார் என்பதன் வெளிப்பாடே இது.
சமூக,பொருளாதார, அரசியல் தீர்மானங்களை நிர்ணயிப்பதில் காலச்சூழலுக்கு ஒரு பெரும் பங்குண்டு. இந்த சாதகமான அரசியல் சூழலை – இந்த வாய்ப்பை தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது? என்பதே இன்றைய கேள்வி. தமிழ்த்தேசியம் வேட்டியா….? கோவணமா….? என்பதை தீர்மானிக்க வேண்டிய காலம்.
1987 இந்திய – இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் பிறந்த மாகாணசபைகளுக்கான 13 வது அரசியல் அமைப்பு திருத்தம் ஒரு சுகப்பிரசவம் அல்ல. அன்றைய அரசியல் சூழலில் அவசர அவசரமாக பிரசவிக்கப்பட்ட ஒரு குறைப்பிரசவம்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தானாக கனியமுன் அன்றைய அரசியல் சூழல் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி தட்டிக்கனியவைக்கப்பட்டது. அதனால் தான் 13 , காயா….? பழமா…? வெறும் வெம்பலா…..? என்ற வாதம் இன்னும் தொடர்கிறது.
13 : பிறந்த அன்றைய அரசியல் சூழல்:
———————————————————————–
(*) 13 இன் அவசர பிறப்பு அரசியல் அழுத்தத்தினால் ஏற்பட்டது. டெல்லியில் விடுதலைப்புலிகளின் தலைமையை கறுப்பு பூனைகள் காவல் காக்க, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கை ஆள்புல வான் பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து அதிர்ச்சி வைத்தியம் செய்ய இந்திய – இலங்கை உடன்பாடு எட்டப்பட்டு 13 பிறந்தது.
(*) பிராந்தியத்தில் பலம்வாய்ந்த ஒரு அரசியல் தலைமையாக இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியை இந்து சமுத்திர பிராந்தியம் பெற்றிருந்த காலம் அது.
(*) விடுதலைப்புலிகளிடம் ஜனநாயக, பன்மைத்துவ சரியான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தபோதும் இராணுவ ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு சவாலான இராணுவபலத்தை புலிகள் கொண்டிருந்தனர்.
(*) பிராந்திய பூகோள அரசியலில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உலகமயமாக்கல் பொருளாதாரப்போட்டி இன்றைய அளவுக்கு இருக்கவில்லை.
(*) இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இலங்கை, வங்காளதேசம், மாலைதீவு, நேபாளம் , பூட்டான் போன்ற சிறிய நாடுகளில் இந்தியாவின் அரசியல் தாக்கம் அதிகமாக இருந்தது.
13 பிறந்த அன்றைய தேசிய, பிராந்திய, பூகோள அரசியல் சூழல் இன்றும் இருக்கின்றதா? என்ற கேள்வியை தமிழ்த்தேசியம் எழுப்ப வேண்டியது இன்றைய அரசியலில் முக்கியமானது. இது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் “கனவு அரசியலில்” இருந்து விடுபட உதவியாக அமையும்.
13 : கோரும் இன்றைய அரசியல் சூழல்:
————————————————————————–
(*) ராஜீவ்காந்தியினால் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தை இலங்கைக்கு / ரணிலுக்கு கொடுக்கக்கூடிய பலமான நிலையில் இன்றைய இந்தியப்பிரதமர் மோடி இல்லை. அவரால் 13 தான் தீர்வு அதற்கு மேல் எதுவும் இல்லை என்று கூட நேரடியாக இருதரப்புக்கும் சொல்ல முடியவில்லை.
அப்படிச்சொன்னால் தமிழ்நாட்டில் அண்ணாமலையின் முதலமைச்சர் கனவை அவரே கலைத்தவராவார். தனது பலவீனத்தை வெளிப்படுத்தாது தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளை கடிதம் எழுதும் தூரத்தில் வைத்து கையாளுகிறார் மோடி .
(*) தமிழ்த்தேசியத்திடம் இந்தியாவை பகைத்தால் மாற்று நட்பு அரசியல் கிடையாது. இதனால்தான் எந்த புலிகள் இயக்கம் டெல்லி ஆட்சியாளர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றதோ, சகோதர இயக்கங்களை இந்திய கைக்கூலிகள் என்றார்களோ ,அதன் முன்னாள் போராளிகள் டெல்லியில் போய் வாடி அடித்து அதைத்தான் செய்கிறார்கள்.
(*) ரணில் அரசை 13 க்காக கட்டாயப்படுத்தினால் இந்தியாவே இலங்கையை சீனாவின் பக்கம் தள்ளிவிட்டதாகிவிடும். இதனால் “அபிவிருத்தி” அரசியல் யுக்தியை இந்தியா கையில் எடுத்துள்ளது.
கடந்த சந்திப்பில் கூட 13 பற்றிய பேச்சை ரணிலை ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி பொருளாதார உடன்பாடுகள் குறித்தே அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரியவருகிறது.
(*) ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு புலிகளின் பலத்தைத் காட்டி ராஜீவால் அவரை இறங்க வைக்க முடிந்தது. இன்று தமிழ்த்தேசிய அரசியல் அந்தப்பலத்தை முற்றிலும் இழந்து நிற்கிறது. போர் ஓய்வுக்கு பின்னர் தமிழ்த்தேசிய பாராளுமன்ற கட்சி அரசியல் தீர்வு நோக்கி ஒரு துளி கூட நகரவில்லை. அதற்கான இராஜதந்திர பொறிமுறை எதுவும் அவர்களிடம் இல்லை.
(*) சீனா இலங்கை இனப்பிரச்சினையை உள்நாட்டு விவகாரம் என்று ஒன்றுக்கு பத்து தடவைகள் கூறிவிட்டது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு போதும்…. போதும்…. என்றாகிவிட்டது. ” எடுத்ததற்கெல்லாம் எங்கள் வீட்டுக்கதவைத்தட்டவேண்டாம் ” என்று சொல்லி விட்டார்.
“—- IT IS IN SRILANKA’S OWEN INTEREST THAT THE EXPECTATIONS OF THE TAMIL PEOPLE FOR EQUALITY,JUSTICE,PEACE AND DIGNITY WITH IN A UNITED SRILANKA ARE FULLFILLED……” இலங்கை விஜயத்தின் போது இதைச் சொன்னவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இலங்கையின் சமகால அரசியல் சூழல்:
————————————————————————–
ரணில் தனி மனிதனாக நாடாளுமன்றத்துள் பிரவேசித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமானது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியை அவர் வகித்தாலும் நாடாளுமன்ற சுயபலம் ரணிலுக்கு இல்லை. பொதுஜன பெரமுனவில், எதிர்த்தரப்பில் தங்கியிருக்கின்ற பலவீனமான ஜனாதிபதி அவர். இதனால் சம்பந்தர் ஐயா கூறுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உண்டு என்பது எழுத்தில் இருப்பது. நடைமுறை ஜதார்தத்தில் இல்லை.
ஜே.ஆர். க்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மைப்பலமும் , பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாடும் ரணிலிடம் இல்லை . ஜே.ஆர் . போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை ரணில் வாங்கி வைத்திருக்கவில்லை.
ரணில் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் கட்சி அரசியல் பலவீனம் உள்ளவர். நாடாளுமன்றத்தில் அவருக்கான ஆதரவு எப்போதும் கேள்விக்குரியது. அதனால் தான் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை என்று கூறுகிறார். இது அதிகாரப்பகிர்வை மேலும் சட்டவலுவாக்குவதற்கும் , பின் ஒரு காலத்தில் நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படவில்லை என்ற நீதித்துறையின் குற்றச்சாட்டை தவிர்க்கவும் உதவும் . அரசியல் அமைப்பு தொடர்பில் நீதிமன்றம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துடன், நாடாளுமன்ற சாதாரண பெரும்பான்மை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை போன்றவற்றையும் கோரிய பல சந்தர்ப்பங்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆனாலும் காலச்சசூழலில் இடம்பெற்ற அரசியல் விபத்து ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்கிறது . 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் இருக்கிறது. அதைத் தமிழ்த்தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரணிலைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த்தேசியம் இதைச் செய்யாது விட்டால் 13 க்கு எதிரானவர்களை, தீவிர சிங்கள தேசியவாதிகளை அது பலப்படுத்துகின்றது என்பது அர்த்தம் . மாகாணசபைக்கு அதிகாரங்களை கேட்டுக்கொண்டு 13ஐ நடைமுறைப்படுத்த தடையாக இருப்பவர்களுடன் இணைவது மக்கள் நலன் சார்ந்த அரசியல் அல்ல.
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் மட்டும் அல்ல பல விடயங்கள் பேசி இணக்கம் காணவேண்டி இருக்கிறது. இவை சாதிக்க முடியாதவை அல்ல. மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பான நிரல் ஒன்று, நிரல் இரண்டு, மற்றும் மத்திய அரசாங்க அதிகார நிரல் மூன்று இவற்றில் படிப்படியாக மாற்றம் செய்யமுடியும். ஜனாதிபதி தனது நாடாளுமன்ற உரையில் மிக முக்கியமான அதிகாரங்களை அடையாளப்படுத்தி பேசியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
இன்றைய நிலையில் தேர்தல் கோரிக்கை தென் இலங்கையில் ஆட்சியைக்கைப்பற்றுவதற்கான கோரிக்கை. கொழும்பில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதைவிடவும் மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வே வடக்கு, கிழக்கு மக்களுக்கு முக்கியமானது. அதை தவிர்த்து சஜீத்பிரேமதாசாவை அல்லது தளஸ் அழகப்பெருமாவை அல்லது வேறு ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதால் தமிழ்மக்கள் அடையப்போகின்ற நன்மை என்ன? மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நல்லாட்சியில் கண்டதென்ன?
கடந்த காலங்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன. மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் அதிகாரப்பகிர்வைக்கேட்டார்கள். அப்போது நல்லாட்சியில் அதிகாரப்பகிர்வைச் செய்யாத சிறிசேன, சஜீத் போன்றவர்கள் தேர்தலைக்கோருவது அதிகாரப்பகிர்வை பின்தள்ளி தேர்தலை முதன்மைப்படுத்தும் தந்திரோபாயம்.
வரதராஜப்பெருமாள், சந்திரகாந்தன், விக்கினேஸ்வரன், நஸீர் அகமட் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தேர்தல் இன்றியா தெரிவு செய்யப்பட்டார்கள். அதிகாரப்பகிர்வு கோரி மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றி சஜீத்தின் தந்தை பிரேமதாசா முதலான அனைத்து ஜனாதிபதிகளுக்கும் அவர்கள் அனுப்பவில்லையா? அப்போது ஏன் அதிகாரப்பகிர்வு செய்யப்படவில்லை. அதிகாரப்பகிவுக்காக மஜீத் இதுவரை செய்திருப்பது என்ன? தெரிந்திருந்தால் தமிழ்த்தேசியம் பட்டியல் இடலாம்…..
இன்றைய நிலையில் அனைத்து தென் இலங்கை கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அக்கட்சிகளின் ஆதரவை பெற்று 13 ஐ நடைமுறைப்படுத்த தமிழ்த்தரப்பு தம்பங்களிப்பை செய்ய வேண்டும். ரணில் இந்த சவால்களை எதிர்கொண்டு அதிகாரப்பகிர்வை ஆக்கபூர்வமாக்க தமிழ்த்தரப்பு ஆதரவளிக்கவேண்டும்.
புலிகள் 13 ஐ நடைமுறைப்படுத்த தடையாய் இருந்தார்கள்….. மாகாண சபை நிர்வாகத்தை தடை செய்தார்கள்……
வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாணசபையை கலைக்க பிரேமதாச அரசுக்கு துணைபோனார்கள்….
வரதராஜப்பெருமாளின் நிர்வாகம் கலைக்கப்பட்ட பின்னர் அ.அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த இந்தியா ஆலோசித்தவேளை ….. அதை அறிந்த புலிகள் அமிர்தலிங்கத்தை கொலை செய்தார்கள்.
புலிகளின் தமிழ்த்தேசிய வரலாற்றுத்தவறை தமிழ்த்தேசியக்கட்சிகள் மீண்டும் ஒரு முறை செய்யப்போகின்றனவா…..?
செய்தால்…..
இன்னொரு அதிகாரப்பகிர்வு சந்தப்பத்தை தவறவிட்ட சாபம் தமிழ்தேசியத்தை தேடும்……! சாடும்……!!