புதிய அரசியல் அணிசேருகைகள் 

புதிய அரசியல் அணிசேருகைகள் 

  —- வீரகத்தி தனபாலசிங்கம் —-

   கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை.

  அண்மையாநாட்களாக  அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

   ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை நோக்கும்போது அவை ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரமல்ல, பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட தங்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன போன்று தெரிகிறது.

  ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அக்கறை இல்லை. வேறு தேர்தல்களைப் பற்றி அவர் முன்னிலையில் எவராவது பேசினால் அவருக்கு ஆத்திரமும்  கூட  வருகிறது. 

     வேறு எந்த தேர்தலையும் தற்போதைக்கு  நடத்துவதற்கு அவரும் அரசாங்கமும் அனுமதிக்கப் போவதுமில்லை என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களையோ அல்லது அண்மைய வாரங்களாக வலியுறுத்தும் மாகாணசபை தேர்தல்களையோ  நடத்த இறங்கிவரக்கூடியதாக அரசாங்கத்துக்கு  நெருக்குதலைக் கொடுக்க மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறக்கக்கூடிய வல்லமையும் எதிரணிக் கட்சிகளிடம் இல்லை.

  இரு மாதங்களுக்கு  முன்னர் நுவரேலியாவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க இளைஞர்கள் உட்பட நாட்டு மக்களில் அதிகப்பெரும்பான்மையானவர்களுக்கு தேர்தல்களில் மாத்திரமல்ல, அரசியல் கட்சி முறையிலும் நம்பிக்கை இல்லாமற்போய்விட்டது என்றும் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் கூறியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

   தேர்தல்களுக்கு முகங்கொடுக்கத் தயங்கும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு கூறுவதில் உள்ள பொருத்தப்பாடு குறித்து கேள்விகள் உண்டு. ஆனால், இன்றைய நிலையில் எந்த அரசியல் கட்சியுமோ அல்லது அரசியல் அணியுமோ மக்களின் அமோக செல்வாக்குடன் இல்லை என்பது உண்மையே. 

    ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் பிரதான வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை முதல் சுற்று எண்ணிக்கையில் பெறக்கூடிய சாத்தியம் குறித்தும் பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு அணியுமே அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் சாத்தியம் குறித்தும் வலுவான சந்தேகங்களை அரசியல் அவதானிகள் எழுப்புகிறார்கள். 

    சில மாதங்களுக்கு முன்னர் சில சிவில் சமூக அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளும் இதையே உணர்த்தி நின்றன.

   இத்தகைய பின்புலத்திலேயே தற்போது அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் கூட்டணி முயற்சிகளை நோக்கவேண்டியிருக்கிறது.

   உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டபோது கூட்டணி அமைப்பது குறித்து அக்கறை காட்டாத எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தற்போது எந்த தேர்தல் பற்றியும் உறுதியான அறிவிப்பு வெளிவராத நிலையில் கூட கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

   ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீனமான அணிகளாக செயற்படுபவற்றில் ஒன்றான  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை பிரேமதாச அண்மையில் நடத்தியிருந்தார். 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்த அணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்கும் தறுவாயில் இருக்கிறது என்றும் ஜனாதிபதி தேர்தலில் அந்த அணி பிரேமதாசவை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

  அதேவேளை அந்த அணி பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில் போட்டியிடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும்  அழகப்பெருமவை பிரதமர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்று அவர்கள் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

  கடந்த வருடம்  பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அழகப்பெருமவுக்கு ஆதரவாக தனது வேட்புமனுவை பிரேமதாச வாபஸ் பெற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இரு தரப்பினரும்  ராஜபக்சாக்களுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்காலத்திலும் ஒத்துழைத்துச் செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் தாராளமாக இருக்கின்றன என்று  நம்பலாம்.

  அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரோ பலரோ தங்கள் பழைய தலைவரான விக்கிரமசிங்கவிடம் சென்றுவிடக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிப்பதற்கில்லை. பிரேமதாச தனது கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் பலமான கூட்டணியொன்றை அமைத்து தன்னை வலுப்படுத்தவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கிறது.

   இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி தேர்தல் களுக்காக  பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சி தற்போது பெரமுனவில் இருந்து உறுப்பினர்களை இழுத்தெடுத்து  தன்னுடன் ஒத்துப்போகக்கூடிய வேறு கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பரந்த கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

  அடுத்துவரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களின் ஆதரவுடன் விக்கிரமசிங்க களமிறங்கக்கூடிய சாத்தியம் குறித்து பேசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அந்த நிலைமை இப்போது இல்லை. எந்த தேர்தலிலும்  ராஜபக்சாக்களை முன்னிலைப்படுத்தி களமிறங்குவது குறித்தே பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல்வாதிகள் பேசிவருகிறார்கள்.

    இலங்கை வரலாறு முன்னென்றும் காணாத மக்கள் கிளர்ச்சி தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து  விரட்டியதை மறந்தவர்களாக மக்களின் ஆதரவுடன் ‘ மீண்டெழுவது ‘ பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கடந்த கால தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு விக்கிரமசிங்கவை விடவும் பொருத்தமான அரசியல்வாதி கிடையாது என்றாலும், அவருடன் அவர்கள் பெருமளவுக்கு முரண்படக்கூடிய திசையிலேயே அரசியல் நிகழ்வுப்போக்குகள் அமைகின்றன.

   பொதுஜன பெரமுனவின் சில முக்கிய உறுப்பினர்கள் குறிப்பாக அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கான தங்கள் விருப்பத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது  கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச ‘ முதன்மையான கூட்டணி ‘ (Alliance Number One ) என்று தனது அணிக்கு பெயரிட்டு அலுவலகமொன்றையும் திறந்து பொதுஜன பெரமுனவில் இருந்து உறுப்பினர்களை ஜனாதிபதி பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

   தனது முயற்சிக்கு பொதுஜன பெரமுனவின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் மேலும் பலர் இணையவிருக்கிறார்கள் என்று உரிமைகோரும் நிமால் லான்ச ஐக்கிய தேசிய கட்சியுடனும் வேறு பல கட்சிகளுடனும் சேர்ந்து பரந்த கூட்டணியொன்றை அமைப்பதே நோக்கம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறார். இவரது செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கவேண்டாம் என்று பொதுஜன பெரமுனவின் ‘ உண்மையான ‘ தலைவரான பசில் ராஜபக்ச ஏற்கெனவே ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

   அவர் இவ்வாறு தன்னிடம் வேண்டுகோள் விடுத்தபோது ராஜபக்சாக்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் தனது கட்சியை எவ்வாறாக எல்லாம் சீர்குலைத்தார்கள் என்பதை விக்கிரமசிங்க நினைத்துப் பார்க்காமலா இருந்திருப்பார்?

   தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அடுத்து பரந்தளவிலான கூட்டணிகள் அமைக்கப்படும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியுடனான  நிமால் லான்ச அணியின்  கூட்டணியுமே எதிர்காலத் தேர்தல்களில் பலம்பொருந்திய அரசியல் அணிகளாக விளங்கக்கூடும் என்று சில அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

   ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பேரணிகளுக்கும் வீதிப் போராட்டங்களுக்கும் மக்களை அணிதிரட்டுவதில் வியக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தியாக இருக்கின்ற போதிலும் மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான சூழ்நிலைகளில் அதற்கு அதிகரித்திருப்பதாக நம்பப்படும் மக்கள் செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தேர்தல் வாய்ப்பொன்று கிடைக்கவில்லை.

   ஜே.வி.பி.யின் கூட்டங்களிலும்  ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் கலந்துகொள்கின்ற போதிலும் தேர்தல்களில் அந்த ஆதரவு வாக்குகளாக மாறுவதில்லை என்ற வழமையான வாய்ப்பாட்டை தற்போது அந்த கட்சிக்கு  அதிகரித்திருக்கும் மக்கள் ஆதரவுக்கு பிரயோகிப்பது பொருத்தமானது அல்ல என்று பரவலாக நம்பப்படுகிறது. அதை ஒரு தேர்தலில்தான் பரீட்சித்துப் பார்க்கமுடியும். 

    உள்ளூராட்சி தேர்தல்கள் அதற்கு சிறந்த களமாக அமையும் என்று ஜே.வி.பி. தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது சாத்தியமாகவில்லை. தேர்தல்களை நடத்தாமல் காலத்தைக் கடத்திக்கொண்டு போனால் நாளடைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் செல்வாக்கு அருகிவிடும் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் நினைக்கவும் கூடும். ஆனால் அந்த கட்சியின் பேரணிகளில் மக்கள் தொடர்ந்தும் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள்.

  பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து வெளியேறி தனியான அணியாக செயற்படும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, கெவிந்து குமாரதுங்கவின் யுத்துகம தேசிய இயக்கம், அத்துரலியே ரதன தேரரின் கட்சி போன்ற கடும்போக்கு இனவாத அரசியல் கட்சிகளும் ‘ உத்தர லங்கா சபாகய’ (Supreme Lanka Coalition) என்ற கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி  போன்ற இடதுசாரிக்கட்சிகளும் அங்கம் வகிப்பது இலங்கை அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை. 

    இந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு அவை அங்கம் வகிக்கும் கூட்டணியின் திசைமார்க்கத்தை தீர்மானிப்பதில் உருப்படியான எந்தப் பங்கும் இல்லை என்பது வெளிப்படையானது.

    வீரவன்ச, கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளுக்கு ராஜபக்சாக்களிடம் இருந்து பிரிந்த பிறகு குறிப்பாக கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான சூழ்நிலையில்,  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பதற்கு உருப்படியான  கொள்கைகளோ செயற்திட்டங்களோ இருக்கவில்லை. 

  ஆனால், திடீரென்று அரசியலமைப்புக்கான 13 திருத்தம் தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையும் வடக்கு,கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது தொடர்பிலான தகராறுகளும் அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. அவற்றை தங்களால் இயன்றவரை பயன்படுத்தி அவர்கள் தென்னிலங்கையில் மீண்டும் பேரினவாத அரசியல் அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த அரசியலும் அதுதான்.

  அவ்வாறான அணிதிரட்டல் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேசிய தேர்தலிலும் பிரசாரக் களத்தில் பேரினவாத உணர்வுகளை மேலோங்கச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 

   இது அடிப்படையில் ராஜபக்சாக்களின் அரசியலுக்கு வாய்ப்பானதே தவிர ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு உதவப்போவதில்லை. 13 வது திருத்தத்தை சரியான முறையில் கையாளத் தவறியதன் விளைவை அவரே இறுதியில் அனுபவிக்க  வேண்டியும் வரலாம்.

   ஐக்கிய தேசிய கட்சியும் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் அமைக்க முயற்சிக்கும் கூட்டணிகள் ராஜபக்சாக்களிடமிருந்து பிரிந்த அரசியல் அணிகளையும் வரும் நாட்களில் பிரிந்துவரக்கூடியவை என்று எதிர்பார்க்கப்படும்  அணிகளையும் குறி வைப்பவையாகவே இருக்கின்றன. தங்களை மேலும் பலவீனப்படுத்தக்கூடிய இந்த முயற்சிகளை  ராஜபக்சாக்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. 

  ராஜபக்சாக்களை பொறுத்தவரை பேரினவாத அணிதிரட்டல் என்பது அவர்களுக்கு  கைவந்தகலை. மீண்டெழுவதற்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறை திரும்பவும் பேரினவாத அணிதிரட்டலே. இலங்கையில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று  அவர்கள் கேட்டால் மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.

  ஆனால், தவறான ஆட்சிமுறையையும் ஊழலையும் மூடிமறைக்க இனிமேலும் பேரினவாத அணிதிரட்டலுக்கு அனுமதிக்கக்கூடாது என்பது  ராஜபக்சாக்களின் அரசியல் மூலமாக நாடும் மக்களும் அனுபவிக்க நேர்ந்த துன்பங்கள் மூலமாக  கற்றுக்கொண்ட முக்கியமான படிப்பினையாகும். இது  எந்தளவுக்கு சிங்கள மக்களின் அரசியல் சிந்தனைகளில்  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது  என்பதை அடுத்த ஒரு தேர்தல் மாத்திரமே வெளிக்காட்டும்.