அதிகாரப்பகிர்வு: ‘நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்….!’

அதிகாரப்பகிர்வு: ‘நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்….!’

(மௌன உடைவுகள் – 39)

          — அழகு குணசீலன் —

இலங்கை அரசியலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து பலத்த ஓசை எழுப்பப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் கூட்டிக்கழித்துப்பார்த்தால்  இருதரப்பிலும் “நாங்கள் பனங்காட்டு நரிகள், சலசலப்புக்கு அஞ்சோம்….” என்ற வாய்ச்சவால்களும், வெடிகளுமே கொழுத்தப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் அதிகாரப்பகிர்வா…?  மாகாணசபைத்தேர்தலா…? இரண்டில் ஒன்றை தீர்மானியுங்கள் என்று தமிழ்த்தரப்பைப்பார்த்து அவர் சொல்லிவிட்டார்.

பொலிஸ் அதிகாரங்கள் குறித்த தனது நிலைப்பாட்டையும் அவர் விளக்கியுள்ளார். மேலும் நாடாளுமன்றம் இது விடயத்தில் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் இன்றைய தேவை அதிகாரப்பகிர்வா….? தேர்தலா….?  அதிகாரம் அற்ற மாகாணசபையில் கதிரையை பிடித்து என்ன பயன் ?

இருதரப்பும் “நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்….” என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். பேச்சுவார்த்தை என்பது இருதரப்பும் அதிகூடிய கோரிக்கை / குறைந்த  வழங்குநிலையில்இருந்து ஏறி/ இறங்கிவந்து ஒரு சமநிலையை – இணக்கப்பட்டை எட்டுவது. இது பலம் -பலவீனம், சாத்தியம் -சாத்தியமின்மை, ஜதார்த்தம்-ஜதார்த்தமின்மை, பூகோள அரசியல் சூழல் சாதகம்- பாதகம்  என்பனவற்றை கவனத்தில் கொண்டு இருதரப்பு விட்டுக்கொடுப்புகளுடன் அடையப்படவேண்டிய இலக்கு.

 கடந்த காலங்களில் சகல தீர்வு முயற்சிகளும் தோற்றுப்போனமைக்கு இவற்றை கவனத்தில்  கொள்ளாததைத்தவிர வேறு காரணங்களைத் தேடமுடியாது. ஆனால் இருதரப்பும் கடந்த காலங்களில் இருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதாகத்  தெரியவில்லை. அதிகாரப்பகிர்வு யாருக்கு அவசியம் சிறுபான்மை தேசிய இனங்களுக்கா ? பெரும்பான்மை  சிங்கள மக்களுக்கா?

“உள்ளக சுயநிர்ணயம் இல்லை என்றால் வெளியக சுயநிர்ணயம் கோரத்தயங்கோம்….” இது சம்பந்தன் ஐயாவின் குரல். இது வெறும் வெங்காய அறிவிப்பு. இந்த அறிவிப்பில் திம்பு பேச்சுவார்த்தை முதல் இன்று வரை அவரின் வயதுக்கு ஏற்ப உள்ள “அரசியல் முதிர்ச்சி” என்ன?

ஆகக்குறைந்தது அதை எப்படி எட்டப்போகிறார் என்ற வழிமுறையையாவது சொல்வாரா?  தமிழரசுக்கட்சிக்கு இன்று இருக்கின்ற பலம்  இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதற்கு கூட போதுமானதல்ல. இந்த நிலையில் வெளியக சுயநிர்ணயம்  வாங்குவதற்கு என்ன  உலகச் சந்தையில் விற்பனைக்கு விடப்படுகிறதா?

“தமிழருக்கு தீர்வு இல்லையெனில் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்குமாறு கோரும் நிலைவரும்….”.  இது செல்வத்தின் சேட்டை.   வடக்கு கிழக்கு யாரும் வாங்குவதற்கும், விற்பதற்கும், ஆச்சிரமம் நடாத்துவதற்கும்  என்ன நித்தியானந்தாவின் கைலாஷ் என்ற நினைப்பா ?  

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தாச்சி…இனி இந்தியாவுடன் இணைப்பது ஒன்றுதான் இருக்கின்ற ஒரேயொரு குறை. “தங்க தட்டில் வைத்து யாரும் தமிழீழத்தை தரப்போவதில்லை” என்று ஆயுதப்போராட்டம் செய்தவர்கள் இப்போது மோடியிடம் “பூசைத்தட்டு” கேட்டு வாங்கும் நிலையில்…. . இது வரை ரெலோ தன்னைத்தான் விற்கிறது என்று பார்த்தால் இப்போது வடக்கு கிழக்குக்கும் விலைபேசுகிறார்கள்.

ரெலோவின் வாரிசுகள் சிவாஜிலிங்கம் மற்றும் குகதாஸ் இன்னும் ஒருபடி மேலே ஏறி அது வேறு புரூடா. “சிங்களவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடுவார்கள்….”,  “அரசியலமைப்பை எரித்துவிட்டு சர்வஜன வாக்கெடுப்பு…”  “சுதந்திர தனிநாடு தான் தீர்வு…..” .  1970 களில் இருந்து அரசியலமைப்பை எரித்து, தனிநாடு கோரி, தமிழர்களை வெளிநாடுகளுக்கு ஓட்டம் காட்டிவிட்டு  இப்போது இது என்ன  வாய்க்கும் மண்டைக்கும் சம்பந்தம் இல்லாத  பழைய பல்லவி ஈழப்பிரகடனம் .

 தமிழர்தரப்பு ஆயுதப்போராட்ட  வரலாறு, திம்பு பேச்சு, தேசிய இனக்கோட்பாடு முதல் நோர்வே சமாதான சமஷ்டி ஆலோசனை வரை வாய்ப்புக்களை வழுக்கவிட்ட வரலாற்றையே எழுதியிருக்கிறது. அதேபோல் நாடாளுமன்ற கட்சி அரசியலுக்கும் 50:50 முதல் மாகாணசபைகள் வரை அதே வரலாறு தான். இந்த வாய்ப்புக்களை  அரசியல், ஆயுத பலங்கள், பூகோள அரசியல் சூழல்கள் சாதகமாக இருந்த காலங்களில் தமிழ்த்தேசியம் கோட்டைவிட்டிருக்கிறது. கடந்து வந்த இந்த அரசியல் பாதையை திரும்பிப்பார்கவேண்டிய தார்மீகப் பொறுப்பை முள்ளிவாய்க்கால் தோல்விக்க்கு பின்னரும் தமிழ்த்தேசியம் புறக்கணித்து செயற்படுவது விந்தையானது. 

ஆயுத பலத்தை  முற்றாக இழந்த நிலையில்  சுய அரசியல் பலமும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் அடையமுடியாத இலக்குகள் பற்றிய கனவாகவே தமிழ்த்தேசிய அரசியல் நகர்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் சுயத்தை இழந்து வெளியாட்களால் நிர்ணயிக்கப்படுகின்ற, வெளியாரால் வழிநடத்தப்படுகின்ற , வெளியாரை நம்பிய அரசியலாக கடந்த 15 ஆண்டுகளாக செயலற்றுக்கிடக்கிறது. வெறும் வீராப்பும், ஆர்ப்பரிப்பும் கட்சிகளின் கதிரை அரசியலே அன்றி மக்களுக்கான அரசியல் தீர்வுக்கானவை அல்ல. இந்த இயலாமையின் வெளிப்பாடே  கட்சிதலைமைகளின் அறிக்கைகளில் வெளிப்படுகின்றது. ஒரு வகையில்  இவை அனைத்தும்  சுய பலவீனத்தை மறைத்து மக்களை கட்சி அரசியல் நோக்கி  தவறாக வழிநடத்துவதற்கான தந்திரங்கள்.

இதனால்தான் இணக்க அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய தீர்வு அணுகுமுறைக்கு ஆதரவாக செயற்படுகின்றன. அந்த வகையில் அண்மைய பேச்சுவார்த்தை குழப்பநிலையில் விக்கினேஸ்வரன், மனோகணேசன் போன்றோரின் கருத்துக்கள் ஜதார்த்தத்தைப் பேசுகின்றன. “மக்கள் இல்லாத மண்ணில் சமஷ்டியால் சாதிக்கப்போவது என்ன ? இருப்பதையாவது  காப்பாற்ற வேண்டாமா? என்ற தொனியில் கேட்டிருக்கிறார் முன்னாள் முதலமைச்சரும், எம்.பி.யுமான விக்கினேஸ்வரன். 

மாகாணசபை  நிர்வாகத்தில் அனுபவம் மிக்க அதிகாரப்பகிர்வு இயக்க தலைவர் கலாநிதி விக்கினேஸ்வரனுடன் இவர் இணைந்து செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த இணக்க  அரசியல் அணுகுமுறையையே ,  ஈ.பி.டி.பி , ரி.எம்.வி.பி. என்பனவும் முஸ்லீம், மலையககட்சிகளும் கடைப்பிடித்து வருகின்றன.

ஆயுதமற்ற பொலிஷ் அதிகாரம் குறித்த மாற்று ஆலோசனை ஒன்றை முன்வைத்திருப்பதுடன், தேர்தல் இப்போதைக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன். .”நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுவதைவிடவும் மாற்று யோசனையுடன், அதிகாரப்பகிர்வு, தேர்தல் இரண்டுக்கும் இடையே மக்களுக்கான அரசியல் முன்னுரிமையின் அடிப்படையில் ஒன்றைத்தெரிவு செய்து செயற்படுவதும் பேச்சுவார்த்தையின் வெற்றியை நிர்ணயிப்பவையாக அமையும். இந்தக் கருத்துக்கள் பேச்சுவார்த்தை ஒன்றை தொடர்வதிலும், விட்டுக்கொடுப்பதிலும் முக்கியமானவை. 

 “……… பொலிஸ் அதிகாரத்தை பிரச்சினையாக்கி  மாகாணசபை அதிகார பகிர்வை நிராகரிப்பது நியாயமல்ல”  என்று இரு தரப்புக்கும் ஆலோசனை கூறுகிறார் மனோகணேசன் எம்.பி. மனோ கணேசனின் கருத்து ஜனாதிபதியின் கருத்தையும், விக்கினேஸ்வரனின் கருத்தையும் பலப்படுத்துவதாக உள்ளது. தமிழ்த்தேசிய அரசியலில் கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து அனுபவங்களை மறுவாசிப்பு செய்யவேண்டியதேவை அளவுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியில்  1995 இல் ” புதிய பிராந்தியசபைகள்” குறித்த யோசனை தயாரிக்கப்பட்டது. நீலன் திருச்செல்வம், ஜி.எல். பீரிஷ் இதில் முக்கிய சிந்தனையாளர்கள். நீலன்  சந்திரிகாவின் கையாள், அரசாங்கத்தின் முகவர் , துரோகி என்றுகூறி  புலிகள் நீலனை 29. யூலை.1999 இல் கொலை செய்தனர்.  ஆனால்  2003  மார்ச் 11 இல் , கிளிநொச்சியில் தமிழீழ வைப்பகத்தை திறப்புவிழாவில் அன்ரன் பாலசிங்கம் இப்படிப்பேசினார்.

“1995 ம் ஆண்டு நீலன் திருச்செல்வம் அரசமைப்பு திருத்த வரைபு ஒன்றை சமர்ப்பித்தார். அது சரியான வரைபு .அது ஏற்கக்கூடியது. ஆனால் பின்னர் 2000 ஆண்டு அந்த வரைபின் அடிப்படையில் சந்திரிகா ஒரு திருத்த வரைபை சமர்ப்பித்தார். அந்த வரைபு நீலன் திருச்செல்வத்தின் வரைபின் ஒரு அரைகுறையான தொகுதியாகும் ” 

இப்படித்தான்  சாதகமான அரசியல் சூழலில் அதிகூடிய அதிகாரப்பகிர்வு  தீர்வு யோசனைகளை குழப்புவதும் , பின்னர் அரசியல் சூழல்  சாதகம்- இல்லாத நிலையில் , சிங்கள கடும்போக்காளர்களை தட்டி எழுப்பி விட்டு  அதன் காரணமாக அரசாங்கம்  அதிகாரங்களை  மட்டுப்படுத்தி வழங்க முன்வரும்போது அதை நிராகரிப்பதும் புலிகளின் அரசியல் வரலாறு.

 இந்த நிலைதான்  இலங்கை – இந்திய சமாதான உடன்பாட்டின் 13வது திருத்தத்திற்கும் நடந்தது. புலிகளின் அரசியலால் கிடைத்ததையும் இழந்து தமிழ்மக்கள் இன்று உரிமையை பிச்சையாகக் கேட்கிறார்கள். இதற்கு யார், யாரின் அரசியல் பொறுப்பு.  இந்த நிலையில் தமிழ்த்தேசிய எம்.பி. சாணக்கியன்  நாங்கள் பிச்சைகேட்கவில்லை என்று கூறியிருக்கிறார். உரிமை என்பது போராடிப் பெறுவது.  போராட்டத்தால் கிடைத்தவற்றை சாணக்கியமற்று இழந்ததினால் கேட்டு வாங்க வேண்டியுள்ளது. கேட்டு வாங்கும் போது  நீங்கள் சொல்லுவதும் பொருந்தும்.

தமிழ் மக்களை “பிச்சை “எடுக்க வைத்தது சிங்கள பேரினவாத அரசு மட்டுமா…….?  இதில் தமிழ்த்தேசிய அரசியலின் பங்கு என்ன…..?

இதை வரலாறு எழுதும்…….!