வாக்குமூலம்-72

வாக்குமூலம்-72

(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

“மறைந்த நம் தோழர் பத்மநாபா அன்று இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்று தீர்க்க தரிசனமாக எடுத்த முடிவை ஏற்றிருந்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் பேரிழப்பைக்கூடத் தவிர்த்திருக்கலாம். சமஸ்டியை அடையும் தூரத்துக்குக்கூட வந்திருக்க முடியும்”.

–இவ்வாறு வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் (த.தே.கூ.) தற்போதைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான (பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈ பி ஆர் எல் எஃப்) சிவசக்தி ஆனந்தன் அந்த அமைப்பின் (ஈ பி ஆர் எல் எஃப்) 33ஆவது தியாகிகள் தினம் 25.06.2023 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவில் நடைபெற்றபோது அந்நிகழ்வில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்ததாக ‘காலைக்கதிர்’ மின்னிதழ் அதன் 26.06.2023 காலைப் பதிப்பின் தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபாவும் அவருடன் சேர்த்து சக தோழர்களும் 19.06.1990 அன்று சென்னை சூளைமேட்டில் வைத்து புலிகள் இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமாகி அவ்வமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்மநாபாவின் தளத்திலேயே அரசியலைக் கொண்டு சென்றிருந்தால் சிவசக்தி ஆனந்தனின் மேற்படி கூற்றில் அர்த்தம் இருந்திருக்கும். மேற்படி கூற்றில் உண்மை இருந்தாலும் கூட அதைச் சிவசக்தி ஆனந்தன் கூறியிருப்பது ‘சாத்தான்’ வேதம் ஓதுவதாகவே படுகிறது. 

2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கேவலம் பாராளுமன்றக் கதிரைகளுக்காகத் தோழர் பத்மநாபாவின் பாதையில் இருந்து விலகிப் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இணைந்து பத்மநாபா கடைப்பிடித்த ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாகத் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ பி ஆர் எல் எஃப் அணியில் இருந்து அத்தகைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (வன்னி மாவட்டப்) பாராளுமன்ற உறுப்பினராகவும் கடந்த காலத்தில் பதவி வகித்த சிவசக்தி ஆனந்தன் இப்போது இப்படிக் கூறியிருப்பது வெறும் ‘பொய்மை’ அரசியலாகும். சொல்லப்போனால் அரசியல் பித்தலாட்டமென்றே கூறலாம்.

தோழர் பத்மநாபாவின் மரணத்திற்குப் பின்னர் பத்மநாபாவின் பாதையிலேயே ஈ பி ஆர் எல் எஃப் பயணித்திருக்குமானால் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கான, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கும் சித்தாந்தத் தெளிவுடையதும் யதார்த்த பூர்வமானதுமான ஒரு மாற்று அரசியல் அணி உருவாகியிருந்திருக்கும். அதிகாரப் பகிர்வுக்கான செயற்பாடுகளும் தேக்க நிலை அடையாது தொடர்ந்திருக்கும். இன்று தமிழர் அரசியலில் ஒரு நேர்மறையான பரிமாணத்தையும் அதிகாரப் பகிர்வு விவகாரம் அடைந்திருக்கும். இதனைத் தவறவிட்டது சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப் அணியே. அந்தப் பாவத்திற்குத் துணை நின்ற சிவசக்தி ஆனந்தன் இப்போது இப்படிக் கூறுவது காலம் கடந்த ஞானமா? அல்லது அவர் (ஈபிஆர்எல்எஃப்) இப்போது புதிதாக இணைந்துள்ள ‘ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி’ (குத்து விளக்குச் சின்னம்) க்கான தேர்தல் முஸ்தீபா? அல்லது அவரது ‘மனச்சாட்சி’ இப்போது அவரை உறுத்துகிறதா?

எது எப்படி இருப்பினும், அவர் ஏற்கெனவே இழைத்துள்ள பாவத்திற்குப் ‘பிராயச்சித்தம்’ தேட ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு. 

தற்போதுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அதாவது பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எஃப் இன் செயலாளராகச் சிவசக்தி ஆனந்தனே விளங்குகிறார். கட்சியிலே மிகவும் அதிகாரபூர்வமான பதவி இது. 

அவர் செய்ய வேண்டியது இதுதான். அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழர் மகா சபை -தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாகவுள்ளது) 08.05.2023 இலிருந்து மேலும் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய இரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் மொத்தம் எட்டுக் கட்சிகளுடன் விரிவடைந்திருக்கும் ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ எனும் அமைப்பில் தனது கட்சியையும் இணைத்துக் கொள்ள உளப்பூர்வமாகவும் உண்மையாகவும் அரசியல் களமிறங்க வேண்டும்.

இல்லையேல், தமிழரசுக் கட்சி, தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றித் தேர்தல் அரசியல் செய்வது போல அவர் தற்போது செயலாளராக விளங்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் (பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எஃப்) தோழர் பத்மநாபாவின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்ற முனைகிறது என்றே கொள்ளப்படும்.