— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 45 வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரையில் அதற்கு 21 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்களது அரசியல் நலன்களுக்கு வசதியான முறையில் கொண்டுவந்த திருத்தங்களே — அடிப்படையில் ஜனநாயக விரோதமான ஏற்பாடுகளைக்கொண்ட திருத்தங்களே அவற்றில் அதிகமானவை எனலாம்.
ஆனால், அத்தகைய ஜனநாயக விரோத திருத்தங்களையும் விட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட — ஜனநாயக பரிமாணத்தைக் கொண்ட 13 வது திருத்தமே மிகவும் நீண்டகாலமாக கடுமையான அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.
1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை 29 இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் மாகாணசபைகளை அமைப்பதற்கு வசதியாக அதே வருடம் நவம்பர் 14 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த திருத்தம் தற்போது 36 வருடங்களுக்கு பிறகு முன்னென்றும் இல்லாத அளவுக்கு பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கென்று கூறிக்கொண்டு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணமாகும்.
இந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்கு முன்னதாக மாகாணசபைகளின் வரலாற்றை சுருக்கமாக நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
13வது திருத்தத்துடன் சேர்த்து மாகாணசபைகள் சட்டமும் நிறைவேற்றப்பட்டு முதன்முதலாக 1988 ஏப்ரில் 28 வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணசபைகளுக்கும் அடுத்து அதே வருடம் ஜூன் 2 மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக1988 செப்டெம்பரில் இணைக்கப்பட்டன. ஒரே இணைந்த மாகாணத்துக்கு (இந்திய அமைதி்காக்கும் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில்) 1988 நவம்பர் 19 தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தியப் படைகள் 1990 மார்ச் இறுதியில் இலங்கையில் இருந்து முற்றாக வாபஸ் பெறப்படுவதற்கு முன்னதாக இணைந்த மாகாணத்தின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ‘ஒருதலைப்பட்ச சுதந்திர பிரகடனத்தை’ செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்ற பிறகு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அந்த மாகாணசபையைக் கலைத்துவிட்டு நேரடி ஆட்சியைக் கொண்டுவந்தார். இணைந்த மாகாணம் 2008 வரை ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினாலேயே நிருவகிக்கப்பட்டுவந்தது.
இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு பிறகு இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு சமாதான உடன்படிக்கையில் இருந்தது.
அந்த வாக்கெடுப்பை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினாலோ அல்லது அவருக்கு பிறகு பதவிக்கு வந்த வேறு எந்த ஜனாதிபதியினாலுமோ நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் இணைப்பை நீடிக்கும் பிரகடனங்களை ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக பிறப்பித்துக்கொண்டே வந்தனர். தற்காலிக இணைப்பு சுமார் இருபது வருடங்கள் நீடித்தது.
ஆனால், இணைப்பை துண்டித்து இரு மாகாணங்களுக்கும் தனித்தனியான மாகாணசபைகள் அமைக்கப்படவேண்டும் என்று கோரி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) 2006 ஜூலை 14 தாக்கல்செய்த மூன்று மனுக்களை விசாரணைசெய்த உயர்நீதிமன்றம் இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு ஜனாதிபதி ஜெயவர்தன செய்த பிரகடனங்கள் செல்லுபடியற்றவை என்றும் சட்டரீதியாக வலுவற்றவை என்றும் கூறி 2006 அக்டோபர் 16 தீர்ப்பளித்தது. 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்டன. தனியான கிழக்கு மாகாணசபைக்கு 2008 மே மாதத்திலும் நீண்டகால இழுபறிக்கு பிறகு வடக்கு மாகாணசபைக்கு 2013 செப்டெம்பரிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் இரண்டாவது தடவையாக 1993 ஆம் ஆண்டிலும் மூன்றாவது தடவையாக 1999 ஆம் ஆண்டிலும் நான்காவது தடவையாக 2004 ஆம் ஆண்டிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஐந்தாவது தடவையாக 2008/09 ஆண்டுகளில் கிழக்கு மாகாணம் உட்பட எட்டு மாகாணங்களில் கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஆறாவது தடவையாகவும் 2012/14 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் ( 25 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ) உட்பட எட்டு மாகாணங்களுக்கு கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இறுதியாக தேர்தல்கள் நடந்த மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்த பிறகு தற்போது ஒன்பது மாகாணங்களும் ஐந்து வருடங்களாக — அதிகாரப்பலவலாக்க கோட்பாட்டை அவமதிக்கும் வகையில் — ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்துவருகின்றன.
மாகாணசபை முறையை எதிர்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் இவ்வளவு நீண்டகாலத்துக்கு மாகாணசபைகள் ஆளுநர்களினால் நிருவகிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழவில்லையே என்று கூறுவதையும் காண்கிறோம்.
உள்ளூராட்சி சபைகளைப் போன்று மாகாண சபைகளுக்கும் கலப்பு தேர்தல் முறையை ( விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தொகுதி முறையும் ) அறிமுகம் செய்வதற்கு ‘ நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 செப்டெம்பரில் மாகாணசபை தேர்தல்கள் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எல்லை நிர்ணயக்குழு 2018 ஆகஸ்டில் சமர்ப்பித்த அறிக்கையை பாராளுமன்றம் அங்கீகரிக்க மறுத்ததை அடுத்து மீளாய்வுக்கு பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவும் சட்டத்தின் பிரகாரம் இரு மாதங்களுக்குள் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கத் தவறியது. அதனால் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன.
இத்தகையதொரு பின்புலத்திலேயே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகள் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் மீண்டும் வாதங்களை மூளவைத்திருக்கின்றன.
கடந்த வருட பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது இனப்பிரச்சினைக்கு இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு (2023 பெப்யவரி 4) முன்னதாக அரசியல் தீர்வைக் காணப்போவதாக அறிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க டிசம்பரிலும் இவ்வருடம் ஜனவரியிலும் இரு தடவைகள் பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார்.
எமது இனப்பிரச்சினை திகதி குறித்து தீர்வு காணக்கூடிய ஒரு விவகாரம் அல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல என்றபோதிலும், அவ்வாறு தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்கு ஏன் உட்படுத்தினார் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
பாராளுமன்ற கட்சிகளின் அந்த மகாநாட்டில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அதில் முன்னேற்றம் காணமுடியாமல் போய்விட்டது. அதனால் மகாநாட்டில் தொடர்ந்தும் பங்கேற்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு அந்த கட்சிகள் வந்தன.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை,விக்கிரமசிங்கவின் முயற்சிகளின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் அல்ல, அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற பழி தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மகாநாட்டில் பங்கேற்பதற்கு முன்வந்ததாக வெளிப்படையாகவே கூறத்தவறவில்லை.
இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தனது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவித்தார்.
அவரின் அந்த ‘ தைப்பொங்கல் பிரகடனத்துக்கு ‘ தென்னிலங்கையில் குறிப்பாக மகாசங்கம் மற்றும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முன்னைய ஜனாதிபதிகளில் எவருமே 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதால் விக்கிரமசிங்கவும் அவர்களைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும் என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அவருக்கு கடிதம் எழுதினர்.
அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை முன்னென்றும் காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எச்சரிக்கை செய்தனர்.
கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய ஜனாதிபதி சுதந்திர தினத்தன்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையிலும் பெப்ரவரி 8 பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து நிகழ்த்திய கொள்கைவிளக்க உரையிலும் 13 வது திருத்தத்தை பற்றி வாய்திறக்கவேயில்லை.
கொள்கைவிளக்க உரையை அவர் நிகழ்த்திக்கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு அண்மையாக கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பிக்குமார் 13 வது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டோம்.
அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று கூட்டத்தில் கூறிய விக்கிரமசிங்க, ஒன்றில் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதை இல்லாதொழிக்கவேண்டும் என்று அதை எதிர்க்கும் சிங்கள அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறினார். அந்த திருத்தத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச்சட்ட மூலத்தை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரலாம் என்று யோசனை சொல்லிக்கொடுத்தார்.
சிங்கள தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு குறிப்பாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடையாது என்பதும் அவ்வாறு அவர் செய்யவிரும்பினால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் புதிய ஆணையைப் பெறவேண்டும் என்பதுமே நிலைப்பாடாக இருக்கிறது.
கடந்த வாரம் கூட ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கவுமே விக்கிரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் மூலம் தெரிவுசெய்ததாக கூறியிருந்தார்.
சிங்கள பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலமாக ராஜபக்சாக்கள் கட்டியெழுப்பிய ஒரு கட்சியின் பாராளுமன்ற ஆதரவில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகளை முன்னெடுக்கத் தைரியம் கொண்டார் என்பது புரியவில்லை.
ஜெயவர்தனவும் அவருக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் வெறுமனே மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்தினார்களே தவிர 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த ஒருபோதும் முன்வந்ததில்லை. மாறாக இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதில்தான் அவர்கள் அக்கறையாக இருந்தார்கள் எனலாம்.
ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்னர், ராஜீவ் காந்தி பற்றி அவரின் நெருங்கிய சகாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அதை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இந்திய அரசாங்கத்தினால் கூட இலங்கை ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவையும் கடந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் வாயிலாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமூகத்தின் ஒரு வலியுறுத்தலாக மாறிய பின்னரும் கூட இலங்கை அரசாங்கங்கள் அவற்றின் போக்கை மாற்றவில்லை.
அதேவேளை, முன்னைய ஜனாதிபதிகளைப் போலன்றி 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கூடுதலானளவுக்கு வெளிப்படையாகப் பேசுகின்ற விக்கிரமசிங்கவினால் கூட நிலைவரத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. தனது முயற்சிகளுக்கு எதிரான சிங்கள தேசியவாத சக்திகளின் நெருக்குதல்களின் விளைவாக அவர் தனது முன்னைய நிலைப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து வியூகங்களை வகுக்கும் அவர் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பெரிய நகர்வுகளைச் செய்வது சாத்தியமில்லை என்பது தெளிவானது.
அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னதாக ஜூலை 18 தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசிய விக்கிரமசிங்க தேசிய நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்த 16 பக்கங்கள் கொண்ட திட்டத்தை சமர்ப்பித்து பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். அதை திட்டவட்டமாக நிராகரித்த தமிழ்க்கட்சிகள் ‘ அபிவிருத்திக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்குமான ‘அவரது யோசனையை’ இன்னொரு வெற்று உறுதிமொழி ‘ என்று வர்ணித்தன.
அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராயில்லையானால், 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்கும், அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கும் அதற்கு அரசியல் விருப்பமோ துணிவாற்றலோ இல்லை என்பதே உண்மையாகும் என்றும் தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. தங்களால் இனிமேலும் ஏமாறமுடியாது என்று இரா. சம்பந்தன் அவர்கள் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கூறவும் தவறவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடன் பேசவிரும்பினால் பேசலாம் அல்லது வெளியேறிச் செல்லலாம் என்று ஆவேசமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை தமிழ்க்கட்சிகளுக்கு முன்வைத்ததன் மூலம் தற்போதைய சூழ்நிலையில் தன்னால் செய்யக்கூடியதாக இருப்பதைப் பற்றிய செய்தியை தனது புதுடில்லிக்கு விஜயத்துக்கு முன்னதாக இந்திய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தினார்.
புதுடில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் எமது இனப்பிரச்சினை மற்றும் உத்தேச தீர்வு குறித்து பின்வருமாறு கூறினார் ;
” தமிழர்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்துக்கான செயன்முறையை முன்னெடுக்கும் என்றும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் கௌரவத்துடனும் கண்ணியத்துடனுமான வாழ்வை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறோம்.”
அதற்கு பதிலளித்த விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக அந்த வாரம் தன்னால் முன்வைக்கப்பட்ட பரவலாக்கம் மற்றும் வடக்கு அபிவிருத்தி திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் ஊடாக நல்லிணக்கத்தையும் அதிகாரப்பகிர்வையும் முன்னெடுப்பதற்கான யோசனைகளை இந்திய பிரதமருடன் பகிர்ந்துகொண்டதாக கூறினார்.
“இந்த முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்தொருமிப்பைக் கண்டு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு பொருத்தமான அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் ” என்றும் அவர் கூறினார். இந்த முயற்சிகளுக்கான தனது ஒருமைப்பாட்டையும் நல்லெண்ணத்தையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாக அவர் முன்னிலையில் செய்தியாளர்களுக்கு விக்கிரமசிங்க தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து விசேட செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் வினாய் குவாட்ரா தமிழ்ச் சமூகத்தின் அபிலாசைகளை, ஐக்கியப்பட்டதும் சுபிட்சமுடையதுமான இலங்கை கட்டமைப்புக்குள் சமத்துவம்,நீதி மற்றும் சுயமரியாதைக்கான அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.
“அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கமும் 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படு்த்தலும் இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறையை வசதிப்படுத்துவதற்கு அவசியமான அம்சங்கள் என்ற எமது நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாக இருந்துவருகிறது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது முன்வைக்கப்பட்டது ” என்றும் வெளியுறவு செயலாளர் கூறியிருந்தார்.
ஆனால், விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட எந்தவொரு எழுத்துமூல ஆவணத்திலும் இந்த விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இதை சுட்டிக்காட்டி ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து ‘ விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துக்களிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான முக்கியமான செய்தியாக இருக்கக்கூடும் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பிலான வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
அதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் இனப்பிரச்சினைக்கு இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத பட்சத்தில் பூரணத்துவமானதாக இருக்கப்போவதில்லை என்று கூறிவைக்கவும் ‘இந்து ‘ தவறவில்லை.
இதை வெறுமனே ஒரு பத்திரிகையின் கருத்தாக மாத்திரம் நோக்கிவிடமுடியாது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவிடம் இருந்து இனிமேலும் நெருக்குதல்களோ அல்லது நல்லெண்ண அடிப்படையிலான வேண்டுகோள்களோ வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் இனிமேல் விரும்பமாட்டார்கள் என்ற ஒரு கசப்பான புரிதல் இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஏற்படத் தொடங்கியிருப்பதன் ஒரு பிரதிபலிப்பாகவே நோக்கவேண்டியிருக்கிறது.
இலங்கை திரும்பிய கையோடு கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். தேசிய நல்லிணக்கத் திட்டத்தையும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டத்தையும் ஆராய்ந்து கருத்தொருமிப்புக்கு வருவதே மகாநாட்டின் நோக்கமாக கூறப்பட்டாலும் 13 வது திருத்தம் தொடர்பில் தற்போது தோன்றியுள்ள சர்ச்சையை கையாளுவதே அதன் உண்மையான நோக்கமாகும்.
அந்த திருத்தத்தை அதுவும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் நீங்கலாக நடைமுறைப் படுத்துவதாக இருந்தாலும் பாராளுமன்றத்தின் ஆதரவுடன்தான் தன்னால் செய்யமுடியும் என்பதே மகாநாட்டில் ஜனாதிபதி வெளிப்டுத்திய கருத்துக்களின் மூலமான செய்தியாகும்.
அதேவேளை தமிழ்க்கட்சிகள் உட்பட எதிரணிக்கட்சிகளின் தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை விரைவில்
நடத்தவேண்டும் என்று விடுத்த கோரிக்கை ஜனாதிபதிக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது.
ஒன்றில் அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி பேசவேண்டும் அல்லது மாகாணசபை தேர்தல்களைப் பற்றி பேசவேண்டும். இரண்டையும் ஒன்றாக பேசமுடியாது என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. உண்மையில் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் பற்றி அவர் சிந்திக்கத் தயாராக இல்லை.
இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, பொலிஸ் அதிகாரம் உட்பட பல அதிகாரங்கள் இல்லாமல் கூட அதை நடைமுறைப்படுத்துவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
கறுப்பு ஜூலைக்கு பிறகு 40 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்டரீதியான ஏற்பாடாக இருந்துவரும் அந்த திருத்தத்தின் இலட்சணம் இவ்வாறாக இருக்கிறது.
தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கையில் சிங்கள அரசியல் சமுதாயத்திற்குள் ( பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ) ஒரு கருத்தொருமிப்பு காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு எது தேவை என்பதை கேட்பதில் ஒருமித்து நிற்க முடியாததாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுண்டு காணப்படுகிறது. இந்தியாவினாலும் கூட எதையும் செய்ய இயலாமல் போயிருக்கும் நிலையில், மிகவும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்துக்கு இருக்கக்கூடிய மாற்று வழி என்ன என்ற கேள்வி முன்னால் வந்து அச்சுறுத்துகிறது.