ஜனா காட்டும் வழி!மட்டக்களப்பின் இன்றைய தேவை அரசியல் பக்குவம்.

ஜனா காட்டும் வழி!மட்டக்களப்பின் இன்றைய தேவை அரசியல் பக்குவம்.

    (மௌன உடைவுகள் 38)

— அழகு குணசீலன் —

(*)  ஒரு மனிதன் தனது கடந்தகால அனுபவங்களின் ஊடாக தனது எதிர்காலத்தை சாதிக்கிறான்……!

(*)  ஒருவருடைய அர்த்தம் அற்ற வார்த்தைகளுக்கு பதிலளிப்பதை விடவும் மௌனிப்பது சாலச் சிறந்தது…….!

(*) தகவல் அறிவியலாகாது, அறிவியலின் ஒரேயொரு மூலம் அனுபவம் மட்டுமே…..!

“பக்குவம்” என்ற வார்த்தை சமூகவிஞ்ஞான மற்றும் உளவியல் அணுகுமுறையில் முக்கியமானமானது. பகுத்தறிவின் அடிப்படையை வலியுறுத்துவதாகவும் உள்ளது.

மட்டக்களப்பின் சமகால கீரியும் பாம்பும் அரசியலுக்கு அரசியல் சமூகவிஞ்ஞான  உளவியலாளர்களின் இந்த கருத்துக்கள் நன்கு பொருந்திப்போகின்றன.

தமிழ்த்தேசிய உரிமை எதிர்ப்பு அரசியலிலும், அதற்கு எதிரான அபிவிருத்தி இணக்க அரசியலிலும் இன்று ஜனநாயக அரசியலுக்கு திரும்பி இருக்கின்றவர்களில் கணிசமானவர்கள் ஆயுத வன்முறை அரசியலில் இருந்து வந்தவர்கள். 

மறுபகுதியினர் பிரமுகர்களாக  தமிழ்த்தேசிய மற்றும் இணக்க அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள். சமூகத்தின் மேற்தட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாதிகள், உள்ளிட்ட  தகப்பன் வழி பரம்பரையினரும்  இதில் அடங்குகின்றனர்.

இந்த அகிம்சை – ஆயுத இடைவெளியும், சமூக தட்டு இடைவெளியும், கட்சிகளின் கொள்கை சார் இடைவெளியும் இவர்களின் அரசியல் செயற்பாட்டையும் , நலனையும் நிர்ணயிப்பவையாக உள்ளன. 

இந்த வேறுபாடுகளுக்கும், இடைவெளிகளுக்கும் அப்பால் ஒரு ஜனநாயக அரசியலின் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில்  இவர்கள் பதவிவழியில் சம உரிமையை – நாடாளுமன்ற சிறப்புரிமையைக் கொண்டவர்கள். ஒருவகையில் நாடாளுமன்றத்தில் “சமபந்தியில்” அமர்பவர்கள்.

இந்த உரிமைகளை அவர்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது அவர்களைத் தெரிவு செய்த மக்களின் விருப்பம் மட்டும் அல்ல எதிர்பார்ப்பும் ஆகும். இது மக்கள் தங்களின் எதிர்கால அரசியல் பயணத்தை தீர்மானிக்க அவர்களுக்கு உதவியாக அமையும்.

மட்டக்களப்பு மக்கள் இவர்களிடம் இருந்து ஒரு முன்மாதிரியை, வழிகாட்டும் செயற்பாட்டை,  தலைமைத்துவத்தை ,அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்கின்றனர்.

இன்னும் சொன்னால் “அரசியல் பக்குவத்தை” மக்கள் வேண்டி நிற்கின்றனர். இந்த பக்குவத்தை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்துவிடுகின்றனர். இது தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முடியாத சுய நெறிப்படுத்தலில் இருந்து அவர்களை பாதைதவற வழிவகுக்கிறது.

இந்த எதிர்பாப்புக்களுக்கு மத்தியில் ஜனா என்ற இயக்கப்பெயரைக் கொண்டவரும், ரெலோ இயக்க முன்னாள் போராளியும், இன்றைய அக்கட்சியின் செயலாளரும், மட்டக்களப்பின் மூத்த நாடாளுமன்ற அரசியல்வாதியுமான கோவிந்தன் கருணாகரனால் கீரைக்கடைக்கும் எதிர்க்கடையான இந்த அரசியலில் எவ்வாறு பொறுப்புடனும், பொறுமையுடனும், நிதானம் தவறாமலும், அவை அடக்கத்துடன் நடந்து கொள்ள முடிகிறது? என்று கேட்கிறார்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்கள்.

இந்தக்கேள்வியை 2020 இல் அவருக்கு வாக்களித்த ஆதரவாளர்கள் மட்டும் கேட்கவில்லை. ஜனாவுக்கு எதிராக விருப்பு வாக்களித்தவர்களைக்கூட தமது தெரிவு சரியானதா? என்று கேட்கும் அளவுக்கு ஜனா அரசியலில் பக்குவப்பட்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

பக்குவம் என்பது அரசியல் தகுதி, அரசியல் முதிர்ச்சி, அரசியல் ஆற்றல் போன்றவற்றை குறித்து நிற்கின்றது. இந்த பக்குவம் ஜனாவுக்கு எப்படி வந்ததென்றால் அதில் பெரும் பங்கு அவரின் அனுபவத்திற்கு உண்டு. லண்டனில் சற்று அரசியல் ஓய்வு எடுத்த காலத்தில் மேற்குலக, சர்வதேச ஜனநாயக அரசியலை அவதானித்ததன்  விளைவாகவும் இது இருக்கமுடியும். அனுபவமே அரசியல்…..!

அண்மையில் “துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை” என்று அமிர்தலிங்கம்  கூறியதாக ஜனா கூறிய ஒரு செய்தி வெளியாகியது. பலரதும் கவனத்தை ஈர்த்த அந்தச் செய்திக்காக  தான் வருந்துவதாகவும் மன்னிப்புக்கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதைக் கூறியது அமிர்தலிங்கம் அல்ல வேறு ஒரு தலைவர் என்று ஜனா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழர் அரசியலில் நாம் மூவகை இறப்புக்களை பார்க்கிறோம். இயற்கை மரணம், அகால மரணம் கொலை , தற்கொலை. இந்த நிலையில் இதைக்கூறிய அந்தத் தலைவரின் கருத்தின் படி துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை என்றால் அது கொலையாக அல்லது தற்கொலையாகவே இருக்க முடியும்.

இலங்கை பாராளுமன்ற அரசியலில் ஒரு தவறான வார்த்தைப் பிரயோகத்தினை மீளப்பெறக்கோரி அல்லது மன்னிப்புக்கோரக்கோரி கல்லிலே நார் உரிக்கின்ற நாகரிகமற்ற இன்றைய அரசியலில் ஜனாவின் இந்தப்பக்குவம் பத்தோடு பதினொன்று அல்ல. மன்னிப்புக்கோரலை தமிழ் அகராதி “பக்குவம் சொல்லுதல்” என்று மொழிபெயர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் அரசியலில் வார்த்தைகளை, ஆவணங்களை திரிபுபடுத்தி,  நான் அப்படிச்சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை என்று எத்தனை சுத்துமாத்துக்கள். அதுவும் சட்டவாதிகள் என்றால் சுத்துமாத்துக்கள் ஒரு தனிரகம். குற்றவாளியை சுற்றவாளியாகவும் அல்லது அதற்குமாறாகவும் புரட்டிவிடுவார்கள். அரசியலில் உண்மை பொய்யாகவும், பொய் உண்மையாகவும் திரிக்கப்படுகிறது.

தவறுகளை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக்கோரல் ஒன்றும் குறைவானதல்ல. மேற்குலக ஜனநாயக அரசியல் நடைமுறையில் சர்வ சாதாரணமானது.  பதவியை துறப்பதுகூட  சர்வசாதாரணம்.அதற்கும் மனதில் இடம் வேண்டும்.

அரசியலில் கட்சி ரீதியான கொள்கைவேறுபாடுகள் இருப்பினும் மட்டக்களப்பின் அபிவிருத்தி முயற்சிகளை நிராகரிக்கின்ற போக்கு ஜனாவிடம் இல்லை. அந்த முயற்சியை நெறிப்படுத்துகின்ற விமர்சனங்களை அல்லது அதற்கான மாற்று ஆலோசனைகளை அவர் முன்வைக்கின்றார். இதனால் ஒப்பீட்டளவில் கட்சியைக்கடந்து  சக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பிடித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார்.

பல விடயங்களில்  ஊரைக்கூட்டி  ஊழையிடாது சிலு சிலுப்பு இல்லாமல் பலகாரம் சுடுவது ஜனாவின் பாணியாக அவதானிக்கப்படுகிறது. 1990 களில் அவரின் நாடாளுமன்ற காலத்தில் ஜனா மேற்கொண்ட ஒரு பெரும் முயற்சியின் பயனாகவே அழிக்கப்பட்ட புராதன வீரமுனையும் சூழவுள்ள தமிழ்க்கிராமங்களும் இன்று உயிரோட்டத்துடன் உள்ளன.

மட்டக்களப்பு  பற்றிய வரலாற்று நூல்கள் எவையும் வீரமுனையை தவிர்த்துச்செல்ல முடியாத அளவுக்கு அதன் வரலாற்று முக்கியத்துவம் சிறப்பு மிக்கது. மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு தமிழகம், கண்ணகி வழக்குரை, சீர்பாதகுலவரலாறு, தமிழகவன்னியரும் ஈழத்து வன்னியரும் , மட்டக்களப்பு வரலாறு போன்ற வரலாற்று நூல்கள் எவையும் வீரமுனையை பேசாது கடந்து செல்லமுடியாததே அதன் வரலாறு. 

வன்னியில் கரும்பு உற்பத்தி தொடர்பான சர்ச்சையில் கட்சி அரசியல் கருத்துமுரண்பாடுகள் எழுந்த நிலையில் “அதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என்று செல்வம் அடைக்கலநாதனுக்கு ஜனா கூறியே ஆலோசனையே செல்வத்தை அறிக்கை விடச்செய்ததாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பின் மற்றைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரே மேடையில் ஏறவும், தனது கருத்தை சொல்லவும், உள்ளூர் அரசியலில் கைகோர்த்து இணைந்து பயணிக்கவும் தான் தயார் என்பதை பல சந்தர்ப்பங்களில் ஜனா நிரூபித்துவருகிறார். அவரது வயதுக்கேற்ற நிதானமும், வார்த்தை பிரயோகமும் இதை நிரூபிக்கின்றன.

வடக்கு- கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அண்மையில் ஜானா வெளியிட்ட கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 

“வடக்கும் கிழக்குக்கும் அரசியலமைப்பின் ஊடாக சட்டரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கை முஸ்லீம்களும், தமிழர்களும் இணைந்து நிர்வகிக்கமுடியும்” என்று கூறியிருக்கிறார். 

கிழக்கின் அருகருகே வாழ்கின்ற இரு சகோதர இனங்களுக்கு இடையிலான உறவு, புரிந்துணர்வு தொடர்பாக இது முக்கியமானதும் துணிச்சலானதுமான கருத்தாகும். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை அவரது கருத்து நிராகரிக்கிறது, இணைப்பை நிராகரிக்கிறது, பிரிப்பு சட்டரீதியானது என்று கூறுகிறது. தமிழ்த்தேசியம் பேசுகின்ற ஒரு அரசியல் பொய்யை ஜனா அம்பலப்படுத்தியுள்ளார். முஸ்லீம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளார். 

தமிழரசுடன் ரெலோ கைகோர்த்து வந்த பாதை….!

———————————

தமிழ்த்தேசியகூட்டமைப்பின்  வீட்டுத்திண்ணையில் குந்தியிருந்த காலத்தை ரெலோ மீளாய்வு செய்ய வேண்டும், சுயவிமர்சனம் செய்யவேண்டும். தமிழரசின் அதிகார அழுத்தத்தை மறுதலிக்கமுடியாமல் ரெலோ கடந்த காலங்களில் ஒத்தோடி இருக்கிறது. இந்த பலவீனம் தமிழரசை வளர்த்ததே அன்றி ரெலோவை அல்ல.

முக்கியமாக மட்டக்களப்பின் அபிவிருத்திக்கும், மக்களின் நலனுக்கும் மாறாக சில பிரதேசசபைகளின் வரவு செலவுத்திட்டங்களை ரெலோ தோற்கடித்துள்ளது. இது முழுக்க முழுக்க தமிழரசின் கட்சி அரசியலினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல். தமிழ்மக்களின் ஒட்டு மொத்த அரசியல் எதிர்காலம் குறித்த தீர்மானங்கள் தொடர்பாகவும் இந்த நிலை இருந்தது. காலம் கடந்தாவது இப்போது அதைத் திரும்பிப்பார்ப்பது காலத்தின் கட்டாயம் அதை ரெலோ உணர்ந்திருக்கிறது.

மட்டக்களப்பு புதிய பொதுநூலக நிதி ஒதுக்கீட்டுக்கு  தடையாக ஒத்துழைப்பு வழங்கியதில் மாநகரசபையின் ஆட்சியில் பங்காளி என்ற வகையில் ஜனாவுக்கும், சத்தியசீலனுக்கும் பங்குண்டு. இது அப்பட்டமாக மட்டக்களப்பின் பாரிய அபிவிருத்தி ஒன்றிற்கு தமிழரசுக்கட்சி போட்ட முட்டுக்கட்டைக்கு முட்டுக்கொடுத்த செயல். இதற்கு ஜனாவும் பொறுப்பேற்க வேண்டும்.

மட்டக்களப்பின்  அபிவிருத்தி சார்ந்து கல்வியாளர்கள், புத்திஜீவிகளை பகிரங்கமாக மக்களுக்கு ஒரு செய்தியை கூறவைத்த நூலக புத்தகவெளியீட்டு நிகழ்வை குற்ற உணர்வுடன் ரோலோ நோக்கவேண்டும். எதிர்காலத்தில் அதற்கான பிராயச்சித்தத்தை செய்யவேண்டும்.

கடந்த வாரங்களில் மட்டக்களப்பின் பக்குவமற்ற அரசியல் குறித்து சில அரசியல்வாதிகள் கண்டனங்களை வெளியிட்டிருப்பது முக்கிய ஒரு மாற்றமாகும். இந்நிலை தொடர்ந்தால் அதற்கான எதிர்வினையும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது ஒரு நல்ல சகுனம். 

மட்டக்களப்பின் புத்திஜீவிகள், மற்றும் கல்விச் சமூகம் இதற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் அரசியல் வாதிகளுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முடியும்.

பங்களிப்பை செய்வார்களா…….?

செய்தியை  சொல்வார்களா……..?