— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான – முறையான அமுலாக்கல் குறித்த அரசியல் பிரக்ஞை இலங்கைத் தமிழ் மக்களிடையே உள்நாட்டிலும் (இலங்கையிலும்) வெளிநாடுகளிலும் (புலம்பெயர் தேசங்களிலும்) ஏற்பட்டு அதற்கான அரசியல் முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தருணத்தில் அதனைக் குழப்பும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில தலைவர்களின் கூற்றுக்கள் உள்ளன.
இத்தகைய அரசியல் தலைவர்கள் – அரசியல்வாதிகள் தங்களை அரசியல் மேதாவிகளாக எண்ணிக் கொண்டு இந்தியாவை விமர்சிப்பவர்களாக – இந்தியாவில் சொட்டை பிடிப்பவர்களாக – இந்தியாவை எதிர்ப்பவர்களாக – இந்தியா தேவையில்லை என்பவர்களாக இப்படிப் பலதரப்பட்டவர்களாக உள்ளனர். இத்தகைய அரசியல் ‘ஆசாடபூதிகளை’ யிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும்.
உதாரணமாகத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம் ஏ சுமந்திரன் பா.உ. “தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்து, “எமது பிரச்சனைக்கான தீர்வைத் தேடி நாம் இந்தியா செல்ல வேண்டிய தேவையில்லை” என்றிருக்கிறார். (‘காலைக் கதிர்’ மின்னிதழ் 26.06.2023 மாலைப் பதிப்பு)-சுமந்திரன் வரலாறு தெரியாமலும்-தெரிந்து கொள்ள முயலாமலும் இவ்வாறு உளறுகிறார் போலும்.
இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரை அது எந்தக் கட்சி அரசாங்கமாகவிருந்தாலும் சரி 13 ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தை ஒரு ‘வேண்டாப் பொண்டாட்டி’ யாகத்தான் நோக்குகிறார்கள். 13 ஆவது திருத்தத்தை இலங்கையின் அரசியலமைப்பிலிருந்து நீக்கி ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டை எப்போது? எப்படிக்? கழற்றிவிடலாம் என்ற தருணத்தைத்தான் இலங்கையின் எல்லா அரசாங்கங்களும் காத்திருக்கின்றன. சுமந்திரன் போன்றோரின் இவ்வாறான பொறுப்பற்ற அரசியல் கூற்றுகள் இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய எண்ணங்களுக்குத் தூபமிடுவதாக உள்ளது.
என்னதான் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதில் இந்தியாவின் வகிபாகம் இன்றியமையாததும் தவிர்க்க முடியாததுமாகும் என்பதைத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது.
அன்றியும், கடலில் தத்தளிப்பவனுக்கு கையில் கிடைத்த மரத்துண்டு போல இலங்கைத் தமிழர்களுக்கு இன்றுள்ள ஒரேயொரு பற்றுக்கோடு இந்த 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்தான்.
தமிழீழம் பற்றியும் சமஸ்டி பற்றியும் புதிய அரசியல் அமைப்புப் பற்றியும் கதைக்கலாம்; கனவு காணலாம். தமிழீழத் தனிநாட்டையோ அல்லது சமஸ்டியையோ விரும்பாத தமிழர் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நடைமுறை அரசியலில் அவை உடனடிச் சாத்தியமற்றவை.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் தனக்குள்ள அரசியல் விருப்பத்தைப் பல சந்தர்ப்பங்களில் சிங்களத் தரப்பினர் சிலரின் எதிர் வினைக்கும் மத்தியிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும், இலங்கையின் அரசியல் களநிலையில் இந்தியாவின் அழுத்தம் இல்லாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் விருப்பம் பழமாகமாட்டாது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழர்கள் அதில் அக்கறையில்லாமலும் அசமந்தமாகவும் இருக்கக் கூடாது.
13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதாக இலங்கை அரசாங்கம் – ஜனாதிபதி – பிரதமர் அறிவித்தாலும் கூட அது யாருக்கு அவசரமாகத் தேவையோ அப்படித் தேவைப்படும் தமிழர்கள் போதிய அக்கறைகாட்டாவிட்டால் தற்போதைய இலங்கை அரசாங்கமும் வழமைபோல் பேசாமல் இருந்துவிடும். தமிழர்கள் அக்கறைகாட்டாவிட்டால் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அதுவும் பேச்சோடு மௌனமாகிவிடும்.
எனவே, 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை சில தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையாக மட்டுப்படாமல் வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையேயும் புலம் பெயர் தமிழ் சமூகத்தினரிடையேயும் ஒரு வெகுஜன இயக்கமாக விரிவடைய வேண்டும். இதைத்தான் இப்போது அனைத்துத் தமிழ் அமைப்புகளும் செய்ய வேண்டுமே தவிர இதனைக் குழப்பும் எதிர்மறையான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் கட்சிகளிடம் 13 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யும் விடயத்தில் தெளிவான பார்வையும் அணுகுமுறையும் கூட்டுச் செயற்பாடும் இல்லை. எனவே இவ்வாறான கட்சிகளின் வாய்ப் பேச்சின் பின் தமிழர்கள் செல்லக்கூடாது.
கட்சி அரசியலுக்கு அப்பால் – தேர்தல் அரசியலுக்கு அப்பால் அனைத்துத் தமிழர்களும் ஒரணியாகத் திரண்டு மேற்கொள்ள வேண்டிய விடயம் இது. தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்த வரை கட்சி அரசியலுக்குள்ளும் தேர்தல் அரசியலுக்குள்ளுமே மூழ்கிக் கிடக்கின்றன.
உள்நாட்டில் (இலங்கையில்) அதிகாரப் பகிர்வு இயக்கமும் வெளிநாடுகளில் (புலம்பெயர் தேசங்களில்) இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்புமே கட்சி அரசியலுக்கு அப்பால் -தேர்தல் அரசியலுக்கு அப்பால் இவ்விடயத்தை அணுகுகின்றன. எனவே தமிழ் மக்கள் இவ்விரு அமைப்புகளையும் பலப்படுத்துவது 13 ஆவது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான முயற்சிகளில் முக்கியமான பணியாகும்.