— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தற்போது உள்நாட்டிலும் (இலங்கையிலும்) வெளிநாடுகளிலும் (புலம்பெயர் தேசங்களிலும்) இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்ய வேண்டி ஓர் ‘அருட்டுணர்வு’ ஏற்பட்டுள்ளதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. அந்த அருட்டுணர்வு விழிப்புணர்வாக வளர்ந்தும் வருகிறது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் உள்நாட்டில் ‘பழைய’மற்றும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அவ்வப்போது இது பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் கூட அவை ஒப்புக்காகச் செய்யப்பட்டனவே தவிர உண்மையான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டவையல்ல. அவை எல்லாமே சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகள்தான். ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை பிரச்சினைக்கான தீர்வை அர்ப்பணிப்புடன் நாடுவதைவிடப் ‘பிச்சைக்காரன் புண்’ போல பிரச்சினையைத் தீர்க்காமல் வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். இது அவர்களுடைய தேர்தல் அரசியலுக்கு எப்போதும் தேவையானதாகிவிட்டது.
இலங்கைத் தமிழர் தரப்பின் அரசியல் பலவீனங்கள் ஒருபுறமிருக்க, எந்த இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதோ அந்த சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கையும் இந்தியாவும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 36 வருடங்கள் கழிந்தும் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் ஏன் நிறைவேற்றி வைக்கவில்லை? என்ற கேள்வி எழுதல் தர்க்கரீதியாக நியாயமானதே.
இக்கேள்விக்கான பதிலையும் தர்க்கரீதியாக நோக்கலே தகும்.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன தானாக மனம் விரும்பி அதனைச் செய்யவில்லை. 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கூட அதன் நகலை முன்கூட்டியே இந்தியாவின் பார்வைக்கு முறையாகக் காட்டி அதில் உள்ள போதாமையையும் குறைபாடுகளையும் சீர் செய்வதற்குச் சந்தர்ப்பமும் கால அவகாசமும் வழங்குவதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டுதான் அதனை அரசியல் குள்ளத்தனத்துடன் அவசரமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். தமிழர்களின் அரசியல் தரப்பாக அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இது விடயத்தில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளத் தவறிவிட்டது.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் ஜே.ஆர். கையெழுத்திட்டதும் – 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியதும் – வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்காகவேனும் ஒத்துக்கொண்டதும் இந்தியா கொடுத்த அழுத்தத்தினாலேயாகும். அதனால் ஒப்பந்தத்தின் கீழான தனது அரசியல் கடமைப்பாட்டை முழுமனதோடல்லாமல் வேண்டா வெறுப்பாகவே நிறைவேற்றினார். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வருட காலத்திற்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்புக் குறித்த சர்வஜன வாக்கெடுப்பின்போது தான் இணைப்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் சிங்கள மக்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கூறியுமிருந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவரே ஒப்பந்தச் ஷரத்திற்கு எதிராகச் செயற்படப் போவதாகக் கூறியது ஒப்பந்தத்திற்கே முரணானதாகும்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தவாறு வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பு குறித்த சர்வ ஜன வாக்கெடுப்பு ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்றிருந்திருக்குமானால் அன்றிருந்த சூழ்நிலையில் சர்வ ஜன வாக்கெடுப்பின் பெறுபேறு தமிழர்களுக்குச் சாதகமாகவே அமைந்து ஒப்பந்தச் ஷரத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் சட்டரீதியாக நிரந்தரமாக இணைக்கப்பட்டிருந்திருக்கும். இன்றுள்ளதுபோல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனி அலகுகளாகப் பிரிக்கப்படாமல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததோர் ஒற்றை அதிகாரப் பகிர்வு அலகாக – ஒரே மாகாணமாக இருந்திருக்கும். இப்படித் தானாக வரவிருந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளியது தமிழர் தரப்புத்தானே. (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தானே)
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவேளை (29.07.1987) அதனை எதிர்த்த பிரதமர் ஆர். பிரேமதாச 1988 இன் இறுதியில் ஜனாதிபதியாக வந்தவுடன் அவரோடு கைகோர்த்துக் கொண்ட தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்) இந்திய அமைதிகாக்கும் படையுடன் ஏற்கெனவே 1987 அக்டோபரில் தாம் தொடுக்க ஆரம்பித்த யுத்தத்தைத் தீவிரப்படுத்தியதுடன் தேர்தல் மூலம் அமைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் (தற்காலிகமாக) இணைந்த அதிகாரப் பகிர்வு அலகுக் கட்டமைப்பைச் சீர்குலைக்கவும் செய்தது. அப்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த வேண்டிய தனது சமூகப் பொறுப்பிலிருந்து விலகித் தனது தேர்தல் அரசியல் தேவைகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்திய எதிர்ப்புக் குறித்தும் தவறான அரசியல் மற்றும் இராணுவப் போக்குக் குறித்தும் மௌனம் சாதித்தது.
இந்த இடத்தில் தமிழர்களின் சிந்தனைக்குப் பின் வரும் தர்க்க ரீதியான வாதத்தை இப் பத்தி முன்வைக்கின்றது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்திய வருடம் சோல்பரி அரசியலமைப்பின் கீழான இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 1947 இலிருந்து இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 வரை சுமார் நாற்பது ஆண்டு காலங்கள் இலங்கைத் தமிழர்களின் பொது எதிரியான பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் பொறுமையாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழர் தரப்பு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்காகக் கைச்சாத்திட்ட இந்தியாவுக்குக் குறைந்தபட்சம் நான்கு வருடங்களாவது அவகாசம் வழங்கிப் பார்த்திருக்க வேண்டாமா? நாற்பது வருடங்கள் ஆக்கப் பொறுத்த தமிழர் தரப்பிற்கு நான்கு ஆண்டுகள்தானும் ஆறப் பொறுக்க முடியவில்லை. 1987 ஜூலையில் இந்திய இலங்கை அமைதிகாப்புப் படை இலங்கை வந்தது. 1987 அக்டோபரில் அதாவது ஆக நான்கே நான்கு மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் மீது யுத்தம் தொடுத்தார்கள்.
இந்த நிலைமைதான் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முறையாகவோ முழுமையாகவோ அமுல் செய்ய அரசியல் விருப்பம் கொண்டிராத இலங்கை அரசாங்கங்களுக்கு அதன் அமுலாக்கலை அரை குறையாகச் செய்வதற்கும் இழுத்தடிப்பதற்கும் இன்று வரை வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதுவே இலங்கை அரசாங்கங்கத் தரப்புகளின் விவகாரம்.
இனி இந்தியத் தரப்பு விவகாரத்தை அடுத்த வாரப் பத்தியிலே பார்க்கலாம்.