பொம்பிள பிள்ளையல்லோ நீ?

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

– யோ. துஷாந்தினி

         கிளிநொச்சி –

பொட்டு வைக்கிறதுமில்ல,

பொது இடத்தில் தலையை முடியிறதுமில்ல

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

கோலம் போடவும் தெரியேல்ல,

பூ மாலை கட்டவும் தெரியேல்ல,

சேலை கட்டவும் தெரியேல்ல,

வீட்டு வேலைகூடவும் தெரியேல்ல

பொம்பிளப் பிள்ளையல்லோ நீ?

கட்டினவன்ற ஆடையைத் துவைக்கிறேல்ல,

கச்சிதமாய் ஆக்கிப்போடவும் தெரியேல்ல,

அடக்கமாய் நடக்கவும் தெரியேல்ல,

அலங்காரமாய் இருக்கவும் தெரியேல்ல

பொம்பிளப் பிள்ளையல்லோ நீ?

சத்தமில்லாமல் பேசவும் தெரியேல்ல,

சகிச்சுப் போகவும் தெரியேல்ல,

ஆளுக்கு முதல் எழும்புற பழக்கமுமில்ல,

ஆலயம் போய்வாற ஒழுக்கமுமில்ல

பொம்பிள பிள்ளைதானே நீ?

காதலை மறைக்கவும் தெரியேல்ல,

காமத்தில் நாணமும் தெரியேல்ல,

எங்களிற்ற கேட்காமலே முடிவெடுக்கிறாய்,

என்னையிது பெடியலோடையெல்லாம் திரியுறாய்

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

கோர்ட்டு படிவாசல் மிதிக்கிறாய்,

வீட்டுப்படி தாண்டத்தானே நினைக்கிறாய்,

வெளிநாட்டு வேலையொன்றைத் தேடுறியாமே,

சுயதொழில் தொடங்கப்போறனென்று ஆடுறியாமே

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

மரத்திலெல்லாம் தொங்கிக்கொண்டு சுத்திரியாமே,

பெண்ணிய மாற்றமென்றெல்லாம் சொல்லிக்கொண்டு நிக்கிறியாமே,

அரசியல் கதைபேசி ஆக்கள் கூட்டுறியாமே,

தெருக்கூத்து ஆட்டம் நீ காட்டுறியாமே

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

தெருவில் நின்று பெருங்கதை கதைக்கிறியாமே,

சிறு பிள்ளைத்தனமாய்த்தான் நடக்கிறியாமே,

கண்டபடி முடியையெல்லாம் வெட்டுறியாமே,

கலரும் கொஞ்சமாய் அடிக்கப்போறேனென்று நிக்கிறியாமே

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

தேவாரம் பாடக்கூடத் தெரியிறேல்ல,

தெரிஞ்சவங்களோட பல்காட்டாமலும் இருக்கிறேல்ல,

எதிர்த்துப் பேசவும் தொடங்கிற்றாய்,

எங்களின்ற வரம்பை மீறவும் துணிஞ்சிட்டாய்

பொம்பிள பிள்ளையல்லோ நீ?

நீர் கூறும் கதைகளெல்லாம் நன்மைக்கென்றால்

நிலைச் சாயமில்லா வார்த்தைகளைக் கூறிடுங்கள்

ஆணும் பெண்ணும் அம்பலத்தில் ஆடயிங்கு

போலி அலங்காரத் தோரணங்கள் தேவையில்லை

ஆளுக்கொரு சட்டம் சொல்லிப் பாக்கிறியல்

அதை அமுலாக்க திட்டம்கூடத் தீட்டுறியல்

பொன்வண்டு தேனருந்தும் மலர்களல்ல

பொம்பிளைகள் வேர்களாகத் தேடலிலே தொலைபவர்கள்