—- அழகு குணசீலன் —-
(*) ” ஈழத்தமிழரின் தேசிய இருப்பு இந்தியாவின் கையில் தங்கியிருக்கிறது. இந்த ஜதார்த்த உண்மையை எங்கள் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்……, இந்தியாவின் பாதுகாப்பு நலன் அவர்களுக்கு முக்கியம்…….”
(*) “அடையமுடியாத இலக்கு நோக்கிய பயணம்: சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசம் ? இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியுமா….?”
(*) “புலிகள் இயக்கத்தின் மீதும், அதன் போராளிகள் மீதும் விமர்சனங்களை வைப்பதற்கு உலகில் எந்த ஒரு நபருக்கும் தகுதி இல்லை………”
(*) “எங்களை பொறுத்தவரை தலைமை என்பது ஒன்றுதான் கூட்டுத்தலைமையை ஏற்கமாட்டோம்……”
(*) “13 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வடக்கு -கிழக்கு இணைந்த மாகாணசபை ஊடாக பலம் பெற்றபின் சுயநிர்ணய உரிமை நோக்கி நகர்வோம் ……..”
இவற்றை அன்று சொன்வர்களை துரோகிகள், இந்தியக் கைக்கூலிகள், றோ உளவாளிகள் என்று சுட்டுத்தள்ளிய சாத்தான்களின் வாய்கள் இன்று வேதம் ஓதுகின்றன. எத்தனை அரசியல் தலைமைகள்…? , எத்தனை கல்வியாளர்கள்…..? எத்தனை சமூக ஆய்வாளர்கள்…? எத்தனை விமர்சகர்கள், படைப்பாளிகள்….?, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் , மாற்றுக்கருத்தாளர்கள்… இவ்வாறு எத்தனை பேர்? எத்தனை பேர்….?
இப்போது வரலாறு உங்களை மக்கள் முன் துரோகிகளாக நிறுத்தியிருக்கிறது. இதற்கு பெயர் அரசியல் நீதி. விதைத்தற்கான விளைச்சல்.
இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது இந்தியாவை எதிர்த்து, 13 வது திருத்தத்தை, மாகாணசபைதீர்வை நிராகரித்து , “புலிகளின் தாகம் தமிழ்ஈழத்தாயகம்” என்று முப்பதாண்டு ஆயுதப்போராட்டம் நடாத்தி அனைத்து இழப்புக்களுக்கும் பங்குதாரராக உள்ள புலிகள். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு என்று தங்களை அறிமுகம் செய்கின்ற ஜனநாயகப்போராளிகள் கட்சியினர்.
ஆக, இப்போது “அடியாதது படியாது” என்று கூறுவதுபோன்று காலம் கடந்த ஞானத்தை இந்தியாவும், சர்வதேசமும் கொடுத்த அடி வழங்கியிருக்கிறது.
அவர்களே அடையமுடியாத இலக்கு என்று பேசுகிறார்கள். ஆக, ஈழத்தமிழர்களை ஏமாற்றி “விடுதலை வியாபாரம்” செய்த வியாபாரிகள் தொழில் நட்டம் அடைந்ததால் லேபலை மாற்றி ரீ சைக்கிளின் (Recyclin) பண்ணி சரக்கு அரசியல் சந்தைக்கு வருகிறது. எல்லாம் கதிரைக்குத்தான் வேறென்ன?
அண்மையில் தொலைக்காட்சி பேட்டியொன்றில் இந்த வடிகட்டிய வார்த்தைகளை பொழிந்தவர் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர்.
இவரின் கருத்துக்கள் விடுதலைப்புலிகளின் தலைமையின் கடந்த கால அரசியலை – முப்பதாண்டு கால ஆயுதப்போராட்ட இலக்கை கேள்விக்குட்படுத்துவது போலும், மறுதலிப்பது போலும் வெளிப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அது கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்த புலிகளின் சுயவிமர்சனமும் அல்ல. மாறாக நன்கு அறியப்பட்ட புலிகளின் சந்தர்ப்பவாதம். முன்னுக்குப்பின் முரணான அரசியல் செயற்பாடு.
மறுவளத்தில் கதிர் பயன்படுத்தி உள்ள சொல்லாடல்கள் “புலிக்குண” வெளிப்படுத்தல்கள். ஜனநாயகத்தை, அரசியல் பன்மைத்துவத்தை, கருத்துச்சுதந்திரத்தை , கூட்டுத்தலைமையை, கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளை நிராகரித்து, கிழக்கை வடக்கோடு கட்டிப்போடும், ஏகபோகத்தை நிலைநிறுத்தும் ” தனியுரிமை கம்பனி அரசியல்”.
இதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பின் “அரசியல்” என்றால் அது தோற்றுப்போனதற்கான காரணத்தை புலிகள் தங்கள் குகைக்குள்ளேயே தேடவேண்டுமே அன்றி வெளியில் அல்ல. மக்களுக்கு புலிகள் செய்த துரோகத்தின் அறுவடை. இன்று மக்கள் இவர்களைப்பார்த்து கோத்தபாயவின் ஆட்கள், றோவின் ஆட்கள் என்று கூறும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. உங்களுக்கு வேண்டியவர்களை கதிரையில் அமர்த்த செய்யப்பட்ட கொலைகள் …… கூறப்பட்ட துரோக புனைகதைகள் எத்தனை?.
இந்த நேர்காணலில் கூறப்பட்டுள்ள இரு கருத்துக்கள் சமகால கிழக்கு அரசியலில் முக்கியமானவை
1. ஏகபோகம்- ஏகப்பிரதிநித்துவம்.
2 . கிழக்கை புரிந்து கொள்ள மறுத்தல்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 2004 இல் பிளவு ஏற்பட்ட போது இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளர் ஜெகான் பெரேரா ” PEACE PROCESS AND THE LTTE SPLIT” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கதிரின் கருத்துக்கள் ஏகபோகத்தை வலியுறுத்துவதுடன், கிழக்கின் அபிலாஷைகளை “இணைப்பால்” நிராகரிப்பதையும் வெளிப்படுத்துகின்றன.
ஜெகான் பெரேரா கருணாவின் கிளர்ச்சி புலிகளின் இராணுவ பொறிமுறைமையை மட்டும் பலவீனப்படுத்தவில்லை மாறாக புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்தியது என்று எழுதுகிறார்.
வடக்குக்கும் -கிழக்குக்கும் இடையிலான சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வை வடக்கு தலைமைகள் கவனத்தில் கொள்ளாத போக்கு சமூக அநீதியை – ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மேலாதிக்க மனோநிலையாகும்.
வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான சமூக, பொருளாதார இடைவெளியை ஆரம்பகாலம் முதல் இருந்துவருகின்ற வேறுபாடு என்று கூறுகிறார். இந்த வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் என்ற பொது அடையாளத்தினுள் கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைய சிங்கள அரசின் அடக்குமுறை காரணமானது. ஆனால் அந்த பொது அடையாளத்தை பயன்படுத்தி ஏகபோகம் கிழக்கு மக்களின் தனித்துவங்களை நிராகரித்தது.
” …..KARUNA’S ACT OF REBELLION NOT ONLY WEAKENS THE LTTE ‘S MILITARY MACHINE BUT ALSO CALLS INTO QUESTION THE WHOLE NOTION OF A MONOLITHIC TAMILNATION OF WHICH THE LTTE IS THE SOLE REPRESENTATIVE…..”
“……THE SOCIAL AND ECONOMIC DFFERENCE BETWEEN THE NORTHERN (JAFFNA) TAMILS AND EASTERN (BATTICALOA) TAMILS, INPARTICULAR, WAS ALWAYS KNOWN AND SCIENTIFICALLY SO THROUGH ANTHROPOLOGICAL STUDIES OF EARLIER TIMES…. “
“BUT ,THE ETHNIC CONFLICT THAT PITTED THE TAMILS AGAINST SINHALESE SEEMED TO HAVE SUBORDINATETED THIS DFFERENCE, ESPECIALLY WITH IN THE MONOLITHIC STRUCTURES OF THE LTTE…..”
“….THE WAR THAT DEVASTED THE NORTH AND EAST ALIKE SERVED ALSO FORSTER A COMMON TAMIL IDENTITY THAT FINALLY APPEARED TO REACH ITS ZENITH IN THE NOTION OF THE LTTE AS THE SOLE OF REPRESENTATIVE OF THE TAMILS PEOPLE…..”
எவ்வளவுதான் சந்தர்ப்பவாத நடிப்பு அரசியலை மேற்கொண்டாலும் தங்களை அறியாமலே உள்ளக்கிடக்கை அவர்களை வெளிக்காட்டி விடுகிறது. கூட்டுத்தலைமையை ஏற்கமாட்டோம், சுழற்சி முறையிலான தலைமையை ஏற்கமாட்டோம், தலைமை என்பது எங்களுக்கு ஒன்றுதான் என்று ஜனநாயகப்போராளிகள் “ஜனநாயகம்” பேசுகிறார்கள்.
1984 இல் கலைஞர் கருணாநிதியின் முயற்சியில் அன்றைய ஐந்து பிரதான ஈழப்போராட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் எல்.ரி.ரி.ஈ. யும் புளொட்டும் கலந்து கொள்ளவில்லை. சிறிசபாரெட்ணம் (ரெலோ), பாலகுமார் (ஈரோஸ்) , பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஈழம் தேசிய விடுதலை முன்னணி (ENLF) உருவாக்கப்பட்டது.
பின்னர் 1985 ஏப்ரல் 10 ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் புலிகள் சார்பில் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இராசநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு ஈழம் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டது. இதன்போது ஏற்கனவே மூன்று அமைப்புக்கள் வெளியிட்டு இருந்த ஐந்து அம்ச பிரகடனத்தில் சில மாற்றங்கள் வார்த்தைகளில் செய்யப்பட்டன. குறிப்பாக அமெரிக்க முதலாளித்துவ தாராளவாதத்திற்கும் ,நவ காலனித்துவத்திற்கும் எதிராக போராடுவது என்ற தீர்மானத்தில் “அமெரிக்கா” என்ற வார்த்தை நீக்கப்பட்டு “உலகம்” என்று பிரதியீடு செய்யப்பட்டது. இது புலிகளின் நெளிவு சுளிவு அரசியல்.
சி.ஐ.ஏ. முகவர் அன்ரன் பாலசிங்கத்தின் தேசத்தின் குரல்.
இன்று அமைக்கப்பட்டுள்ள குத்துவிளக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்காலத்தை ஈழம் தேசிய விடுதலை முன்னணி நினவூட்டுவதாக அமைகிறது. ஈ.என்.எல்.எப் . ஆயுள் 1986 இல் முடிந்து ,சகோதர இயக்க படுகொலைகளுக்கு வழிவகுத்தது. கூட இருந்து குழிபறித்தல் தமிழ் தேசிய அரசியலில் ஒன்றும் புதிதல்ல.
ஜனநாயகப்போராளிகள் கட்சியின் அண்மைய கருத்துக்கள் அதையே நினைவூட்டுகின்றன. தேர்தல் அரசியல் இல்லை என்று கூறும் ஜனநாயக போராளிகள் கட்சி , நூறுவீத தேர்தல் அரசியல் கூட்டில் இணைந்தது ஏன்? கூட்டுத்தலைமை பதவி ஆசை என்றால் பதவியை பகிர்ந்து கொள்ளாத ஏகபோக ஒற்றைத் தலைமையை எப்படி அழைப்பது?
பொன்னம்பலங்கள் முதல் இன்றைய வடக்கு போராளிகள் (?) தலைமைகள் வரை கிழக்கை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மேலாண்மை அரசியல் ஊடாகவும், ஆயுத அரசியல் ஊடாகவும் கிழக்கின் குரலை நசிப்பதே அவர்களின் அரசியலாக உள்ளது. சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர்களும் “யாழ்.மனநிலையில்” தான் இருக்கிறார்கள்.
ஜெகான் பெரேரா குறிப்பிட்டுள்ள வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான சமூக , பொருளாதார ஏற்றத்தாழ்வை , கிழக்கின் வாழ்வியலை, தனித்துவத்தை புறக்கணித்து கிழக்கை வடக்கோடு இணைத்து ஏப்பம் விடும் அதிகார பேரவா இதற்கான காரணம்.
“கிழக்கு மக்களின் குரல் எங்களுக்கு கேட்கிறது. அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறோம்……… ஆனால்…….. ” என்று கூட செல்லமுடியாத அளவுக்கு உங்கள் இதயங்களில் நஞ்சு நிறைந்திருக்கிறது.
கிழக்கை இணையவேண்டுமா? இல்லையா? என்பது கிழக்கு வாழ் சகல இன மக்களினதும் முடிவு. இது வரை டக்ளஸ் தேவானந்தாவைத்தவிர வடக்கு தலைமைகள் எதுவும் இந்த கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. கிழக்கு மக்கள் வடக்கோடு இணையமாட்டோம் என்று பலமுறை ஜனநாயக அரசியல் மூலம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் . ஆனால் மேலாண்மை அரசியலுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
பாரம்பரிய தமிழ்த்தேசிய காட்சிகள் தான் இப்படி என்று பார்த்தால் , நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த மழைக்கால காளான்களும் இந்த மேலாண்மை – மேட்டுக்குடி குணாம்சத்தில் இருந்து விடுபடவில்லை. ஆகக் குறைந்த பட்சம் அதற்கான ஒரு மாற்றுத்தீர்வை – ஆலோசனையைக் கூட இதுவரை கிழக்கு மக்களுக்கு முன் வைக்கவில்லை. இது ஒரு சமூகத்தின் தனித்துவமான கோரிக்கை என்பதை புரிந்துகொள்ள முடியாத நீங்கள் ” ஜனநாயக போராளிகள்”.?
வடக்கு -கிழக்கு இணைந்த மாகாணசபை என்பது ஐம்பது வீதம் அல்ல நூறு வீதம் கிழக்கின் முடிவில் இருக்கிறது. 13 வது திருத்தம் இதையே பேசுகிறது. கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு மாறாக இதை உங்களால் செய்ய முடியுமா?
இதை இன்னும் விளங்கிக்கொள்ளாத தமிழ்த்தேசிய அரசியல் ஒரு சமூகநோய்.
சரியான வைத்தியரை அது நாடவேண்டும்.