இனவாதத்துக்கு தூபம் போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

இனவாதத்துக்கு தூபம் போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

  • கருணாகரன் –

“இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவே முடியாது” என்பது மக்களில் பலருடைய எண்ணம். இன்னொரு சாராருடைய அபிப்பிராயம், “அரசாங்கம் அதாவது ஆளும் தரப்புகள் ஒரு போதும் தீர்வை முன்வைக்கவும் மாட்டாது. அதைக் காண விடவும் மாட்டாது” என்பதாகும். குறிப்பாகத் தமிழர்கள் அரசாங்கத்தையும் சிங்களத் தரப்பினரையும் நம்புவதில்லை. அரசியல் தீர்வு, சமாதான முயற்சி என்று சொல்லிக் கொண்டே தம்மை ஏமாற்றுவதாக அவர்கள் கருகிறார்கள்.

ஆனால், தமிழர்களும் சிங்களவர்களும் மட்டுமல்ல, முழு இலங்கைத்தீவுமே இனவாதத்தில்தான் மூழ்கிக் கிடக்கிறது. இங்கே பன்மைத்துவத்துக்கும் பல்லினத் தன்மைக்கும் இடமில்லை. சாதி, மதம், மொழி, இனம், பிரதேசம் எனப் பலவாகப் பிளவுண்ட தேசமாகக் கிடக்கிறது இலங்கைத்தீவு.

மறுவளமாகச் சொன்னால், இலங்கை அரசியல் முற்று முழுதாகவே இனத்துவ அரசியலாகியுள்ளது.

ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர, மற்ற எல்லாக் கட்சிகளுமே இனத்துவ அரசியலையே முன்னெடுக்கின்றன. இதை விட்டால் அவற்றுக்கு வேறு கதியே இல்லை. அதை விட முக்கியமானது, இனத்துவ அரசியலுக்கு கடுமையாக வேலை செய்ய வேண்டியதுமில்லை. களப்பணிகளை (மக்களுக்கான தொண்டுகளை) ஆற்றவேண்டியதுமில்லை.

மக்களின் தேவைகள், அவர்களுடைய பிரச்சினைகள், அவர்களுடைய வாழ்க்கை, எதிர்காலம் போன்ற எதைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்குப் பொறுப்புச்சொல்ல வேண்டியதுமில்லை.

பதிலாக அரசாங்கத்தை அல்லது எதிர்த்தரப்பை இனத்துவக் கண்ணோட்டத்தில் எதிர்த்துவிட்டால் போதும். அந்த எதிர்ப்பு உச்சமான வார்த்தைகளில் (கவனிக்கவும் வார்த்தைகளில் மட்டும்) வெளிப்படுத்தப்படுவது அவசியம். ஏறக்குறைய ஒரு போர்ப்பிரகடனத்தைப்போல.

அவ்வாறே அரசும், தன்னுடைய ஆட்சிக்குறைபாடுகளை மறைத்துக் கொள்வதற்காக இனவாத அடிப்படையிலான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். இனவன்முறைகள் தொடக்கம், இன்றைய புத்தர் சிலை வைப்பு வரையிலானவை இந்த அடிப்படையிலானவையே.

ஆகவே தமது இயலாமைகள், போதாமைகள், தவறுகளை மறைத்துக் கொள்வதற்கும் தமது லாபங்களைப் பெற்றுக் கொள்வதற்குமாக இனவாதத்தைத் தூக்குகிறார்கள். எந்தளவுக்கு இனவாதமாகப் பேச முடியுமோ அந்தளவுக்கு அதன் ஊக்கவிசையிருக்கும். இதை உணர்ந்தே பலரும் பேசுகிறார்கள்.

எளிய உதாரணம், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றவர்கள்.

இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவர்களோ, பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்டவர்களோ இல்லை. அதாவது,  இவர்களுடைய கட்சிகள் ஒற்றையாட்களைக் கொண்டது. கம்மன்பிலவின் கட்சியில் அவர் ஒருவர்தான் பாராளுமன்ற உறுப்பினர். அப்படித்தான் சரத் வீரசேகரவும்.

சாணக்கியன், சிறிதரன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்களின் பேச்சுகளுக்கு அளிக்கப்படும் முன்னிலைகளும் இவ்வாறுதான் உள்ளன. தமிழ்த்தரப்பில் மிக நிதானமாகப் பேசுகின்றவர்களுக்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை. பதிலாக புத்திகெட்டவிதமாகப் பேசுகின்றவர்களுக்கே முதன்மையிடம் வழங்கப்படுகிறது. ஏனையோர் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள்.

இதனால், ஏனையோரும் இனவாதத்தை உச்சமாகக் கதைப்பதுபற்றியே சிந்திக்கிறார்கள். இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும்  வலியுறுத்திய இடதுசாரிகள் கூட இனவாத அரசியலுக்குச் சரிய வேண்டி வந்தது இதனாலேயே. தேர்தல் நேரத்திலும் முக்கியமான அரசியல் தீர்மானங்களிலும் இனத்துவ அடிப்படையிலேயே இந்தக் கட்சிகளின் செயற்பாடுகள் அமைகின்றன.

இனவாதப் பேச்சுகளுக்கு சிங்களப் பத்திரிகைகளும் முதன்மை இடமளிக்கும். தமிழ் ஊடகங்களும் முன்பக்கத்தை ஒதுக்கும். இதனுடைய பின்னணி, இனவாதமேயாகும். அது ஒரு ருசியாகி விட்டது ஊடகங்களுக்கும் ஊடகங்கள் பழக்கிய மக்களுக்கும். இந்த ஊடகங்களை இயக்கும் தரப்புகள் யார் என்று பார்த்தால் அவற்றின் வர்க்க நிலையும் அதன் குணாம்சமும் புலப்படும்.

இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், அரசியற் கட்சிகளுக்கு இனவாதம் எந்தளவுக்குச் சோறு போடுகிறதோ, அதை விடப் பல மடங்காக இந்த இனவாதம், ஊடகங்களுக்கு பிரியாணியைப் போடுகிறது. இந்த வளர்ச்சியானது, இப்பொழுது தமக்குத் தாமே பிரியாணியைத் தயாரித்துக் கொள்ளும் அளவுக்கு ஊடக இனவாதமாக உச்சமடைந்துள்ளது.

இதனால்தான் தமிழ் ஊடகங்களைக் கூட இனவாதத் தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களும் ஆசீர்வதிக்கின்றனர். அவற்றுக்கும் இவர்களுடைய ஆசீர்வாதம் தேவையாக உள்ளது. இது வர்க்க ஒற்றுமையின் அடையாளமாகும்.

ஆகையால் பல கட்சிகளும் பல ஊடகங்களும் இன அடையாளத்தைக் கொண்டனவாகவே உள்ளன. உண்மையில் அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் அப்படி இருக்க முடியாது. அவை பொது மக்களின் நலனைக்குறித்து ஜனநாயகத் தளத்தில் செயற்படுகின்றவையாக இருக்க வேண்டும். அவற்றின் வெற்றியும் சிறப்பும் அவை கொண்டுள்ள ஜனநாயகத் தன்மையினால்தான் கிட்டும்.

இன்று தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள், சிங்களக் கட்சிகள் என்றுதான் பேசப்படுகிறது. அந்தளவுக்கு இனத்துவ அடையாளம் மேலோங்கியுள்ளது. இனத்துவ அடையாளம் மேலோங்கியிருக்கிறது என்றால், இன உணர்வு தலைதூக்கியுள்ளது என்றே அர்த்தமாகும். இனத்துவ உணர்வு தலைதூக்கியுள்ளது என்றால், அது பாரதூரமான ஒரு நிலை.

அதற்கான அரசியல், வரலாற்றுக் காரணங்களும் பாரதூரமானவையாகவே இருக்கும். ஆனால், எந்த நிலையிலும் இது துக்கத்துக்குரியதேயாகும்.

உலகில் இந்த மாதிரியான அடையாளத்தைக் கொண்டு அரசியலை இனங்காணும் சூழல் அரிது. அங்கே தேசியக் கொள்கை சார்ந்த அடையாளத்தையே கட்சிகள் கொண்டிருக்கும். இங்கே இன அடையாளத்தைப் பிரதானப்படுத்தும் போக்கே காணப்படுகிறது.

இனத்துவ அரசியலில் பிளவும் முரண்களுமே அடிப்படையாக இருக்கும். பிளவுகளையும் முரண்களையும் கூர்மைப்படுத்திக் கூர்மைப்படுத்தியே இவை தம்மை வளர்த்துக் கொள்கின்றன. இந்த அரசியல் வளர வளரப் பிளவுகளும் முரண்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது மக்களை இனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிளவு படுத்தும். முரணுக்குள்ளாக்கும். அதன் விளைவுகள் சாதாரணமாக இருக்காது. மிகப் பயங்கரமானது. பின்னடைவை உண்டாக்கக் கூடியது. மட்டுமல்ல, அமைதி, சமாதானம், வளர்ச்சி, தீர்வு போன்றவற்றுக்கு எதிரானது. இதனால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாதுள்ளது. அதாவது, இனவாதத்தை வளர்த்துக் கொண்டு, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது.

ஆனால், இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இனவெறுப்பு வளர்க்கப்படுகிறது.

இன்று இலங்கையில் ஒருவரை ஒருவர் விரும்பாத, ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாத, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முற்படாத ஒரு வாழ்க்கைச் சூழலும் அரசியற் சூழலும் உருவாகியிருக்கிறது. இதனால் தமிழர்கள் ஒரு தரப்பாகவும் முஸ்லிம்கள் இன்னொரு தரப்பாகவும் மலையக மக்கள் வேறொரு தரப்பாகவும் சிங்களவர்கள் தனித் தரப்பாகவும் நிற்கின்ற நிலை உருவானது. தேசியத்தன்மை முற்றாகவே அழிந்து விட்டது. இன்னும் சரியாகச் சொன்னால், அப்படியொன்றைப் பற்றிச் சிந்தப்பதற்கான சாத்தியப்புள்ளிகளே அருகி வந்து விட்டது.

இதொரு பயங்கரமான நிலை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த அரசியற் சூழலும் சமூக நிலையும் இன்றில்லை. அது சாத்தியங்களுக்கான காலமாக இருந்தது. பிறகு அது குறையத் தொடங்கியது.  ஏன், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களும் முஸ்லிம்களும் வலு ஒற்றுமையாக இருந்தார்கள் அல்லவா!

இன்று அது முற்றாகவே அழிந்து விட்டது.  

தமிழர்களும் முஸ்லிம்களும் தேங்காய்ப்பூவும் பிட்டுமாக இருந்தனர் என்று சொன்னால், அப்படியொரு காலம் இருந்தது என்றால் இன்றைய தலைமுறையினர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மட்டுமல்ல, அப்படியொரு காலம் மீண்டும் வர வேண்டும் என்றால் அதற்கு ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.  அந்தளவுக்கு இனத்துவ அரசியல் நம்முடைய மனதைக் கட்டிப் போட்டுள்ளது.

இனவாதமே இனத்துவ அரசியலின் ஊற்றுக் கண்.

இதற்குக் காரணங்கள் சிலவுண்டு. ஒன்று, ஆட்சி அதிகாரத்திலும் அதற்கு எதிர்ப்புறத்திலும் இருந்த சிங்களக் கட்சிகளான ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமது அரசியல் லாபத்துக்காக இனவாதத்தை வளர்த்ததாகும். கூடவே இனவாத அடிப்படையில் இரண்டும் செயற்பட்டன.

கட்சி அரசியலை அப்படியே ஆட்சி அரசியலாக்கின. அதாவது அரசாங்கமே இனவாத அடிப்படையில் செயற்படத் தொடங்கியது. இதன் விளைவாக இனவன்முறைகளும் பிரிவினை எண்ணங்களும் உருவாகின.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் ஆட்சியில் இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கின்றன. ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் அரசியற் கலாச்சாரத்துக்கு இவை பெரும்பொறுப்புடையவை.

இதேவேளை இனவாத அரசியலை எதிர்த்த, கடுமையாக விமர்சித்த இடதுசாரிகளை இந்தக் கட்சிகளும் மக்களும் இணைந்து தோற்கடித்ததும் வரலாறு.

இரண்டாவது, இவை இரண்டும் இனவாத அடிப்படையில் தமது அரசியலையும் தாம் மேற்கொண்ட ஆட்சியையும் நடத்தியதனால், அதை எதிர்கொள்வதற்கு எதிர்த்தரப்பிலிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளும் இனத்துவ அடையாளத்தைக் கொள்ள வேண்டியதாயிற்று. இதுதான் மலையத்திலும் நடந்தது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

விளவைாக இனத்துவக் கட்சிகளும் இனத்துவ அரசியலும் பரவலாக வளரத் தொடங்கியது.

மூன்றாவது, இவ்வாறு உருவாகிய அல்லது உருவாக்கப்பட்ட இனத்துவ அரசியல் எப்படியான விளைவுகளை  எதிர்காலத்தில் உருவாக்கும் என மதிப்பிடாமல் செயற்பட்டதன் விளைவாக அத்தனை தரப்புகளும் மக்களைக் கொலை முகத்தில் கொண்டு போய்  நிறுத்தின.

இதில் தமிழ்க் கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் தமிழ் 

ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்புண்டு.

ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டம் என்பது இனப்போராகச் சுருங்கி முடிவடைவதற்கு இந்த இனவாதச் சிந்தனையே காரணமாகும். போருக்குப் பிந்திய சூழலில் கூட போரின் படிப்பினைகளையும் கடந்த கால அரசியற் தவறுகளையும் மதிப்பிட்டுக்கொள்வதற்குத் தடையாக இருப்பதும் இந்த இனத்துவச் சிந்தனையே. அரசியற் தீர்வை எட்டுவதற்குத் தடையாக இருப்பதும் இந்த இனவாதம்தான்.

இதுவே வெற்றிபெற்றதாக ஒரு தரப்பை மமதை கொள்ள வைக்கிறது. தோற்றுப் போனதாக இன்னொரு தரப்பை உணர வைக்கிறது. அல்லது தாம் மற்றத் தரப்பைத் தோற்கடித்து விட்டோம் என்று ஒரு தரப்பு பெருமிதமாகத் தம்மைக் கருதவும், நம்மை வெற்றியடைந்து விட்டார்கள் என இன்னொரு தரப்புக் கறுவவும் கூடியதாக உள்ளது.

ஆனால், உண்மை நிலவரமோ யாரும் வெல்லவில்லை என்பதேயாகும்.

அப்படி யாருக்காவது வெற்றி கிடைத்திருந்தால், அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்பியிருக்க முடியும். சமாதானத்தையும் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்கியிருக்க முடியும். அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே. அப்படியென்றால், எவருக்கும் வெற்றி கிட்டவில்லை என்றுதானே அர்த்தம்.

இன்று பொருளாதார நெருக்கடியினால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம்.  இதற்காக உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பும்தான் கையேந்துகிறோம். இதில் எந்த வேறுபாடும் கிடையாது. அதாவது வென்றதாகக் கருதியவர்களும் தோற்றதாக உணர்ந்தவர்களும் ஒன்றாக நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம். ஒன்றாகவே பிச்சையெடுக்கிறோம்.

பிளவுகளும் முரண்களும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவாது. சமூக வளர்ச்சிக்கும் உதவாது என்பதை நம்முடைய வாழ்க்கையும் வரலாறும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. ஆம், முகத்திலடித்துச் சொல்கிறது.

ஆனாலும் நம்முடைய இனவாதப் போதையில் அது புரியவே இல்லை. இதுதான் மாபெரும் துயரமும் தோல்வியுமாகும். ஆம், நம்மை நாமே தோற்கடிக்கும் தோல்வி.