– யோ. துஷாந்தினி
கிளிநொச்சி –
கறுப்பு நிறத்தவள்தான்
நான் ஆனால்,
அழுக்கானவள் அல்ல
அருவருக்கத்தக்கவளும் அல்ல
திறனற்றவளும் அல்ல
தீண்டத்தகாதவளும் அல்ல
கபட மனத்தவளும் அல்ல
எவர் காதலுக்கும் தகுதியற்றவளும் அல்ல
முகம் இறந்தவளும் அல்ல
முதுகெலும்பை இழந்தவளும் அல்ல
பசிக் கனவற்றவளும் அல்ல
பகிடிவதை கதாப்பாத்திரமும் அல்ல
யூகக் குற்றவாளியும் அல்ல
யுகக் குறை தன்மையவளும் அல்ல
இவள், பச்சோந்தியும் அல்ல
கடைசிக் கழிவுப் பாகங்களுக்குரியவளும் அல்ல
வெட்கத்தின் சின்னமும் அல்ல
உங்கள் வேலைகளின் எளிதாக்கியும் அல்ல
வேற்றுக்கிரகவாசியும் அல்ல
மனிதப்போலி நிரூபண சாட்சியும் அல்ல
சீதனத்தின் ஆதாரமும் அல்ல
சீர்வரிசை அட்சயமும் அல்ல
தொட்டதும் ஒட்டிவிடும் நிறத்தவளும் அல்ல
தோல்வியை நிரந்தரமாக்குபவளும் அல்ல
பரிதாபத்திற்குரியவளும் அல்ல
பக்கச்சார்பு பார்வைகளுக்காக உரிமை இழப்பவளும் அல்ல
களங்கமுடையவளும் அல்ல
கற்பனைக்கு முரணானவளும் அல்ல
நாகரீகமற்றவளும் அல்ல
நடைமுறைக்கு ஒவ்வாதவளும் அல்ல
பிரதி இருள் உருவமும் அல்ல
பீடை நீட்சிப் பொருளும் அல்ல
நாயகிக்குத் தொடர் தோழியும் அல்ல
நாயகியாய் நான் ஆடுகையில்
இப்புவியரங்கம் நாணுவதும் அல்ல
நிலத்தோடு நீறாகும்
கரும் நிறம் சூழ்ந்த என்மேனி
நிலையில்லா நீர் பாடும்
வதை கதை சூட வேண்டாமே
கற்பனைகளும் வேண்டாம்
புகழ்சிக் கட்டுகளும் வேண்டாம்
நிறமாற்ற ஒப்பனைகளும் வேண்டாம்
நீவிர் எதையும் செப்பிடவும் வேண்டாம்
குறையில்லா மெய்ப்பொருளை
சிறு பிழையாகக் காண்போரே
நிறமெனக்குச் சுமையில்லை
மனித உளம்சாரா அழகில்லை