(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
– தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் –
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியற் பொதுவெளியில் பல வருடங்களாக ‘மாற்று அரசியல்’ என்ற கருத்தியல் பேசு பொருளாக மட்டுமே இருந்து வந்துள்ளது. தமிழ்த் தேசியம் பேசிய தமிழ்க் கட்சிகளெல்லாம் சிங்களப் பெருந் தேசிய வாதத்தை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைக் குறுந்தமிழ்த் தேசியவாதத்தையூட்டி மூளைச் சலவை செய்து வந்தன. தமிழ் மக்களும் அத்தகைய குறுந் தமிழ்த் தேசியவாதப் போதையிலேயே மூழ்கிக் கிடந்தனர். இதனால் ‘மாற்று அரசியல் அணி’ யொன்று தமிழ்ச் சூழலில் மேற்கிளம்புவதற்கான அகப், புறக் காரணிகள் கனிந்திருக்கவில்லை.
ஆனால், தற்போது தமிழ்ச் சூழலில் அரசியல் ரீதியாக ஒரு மாற்று அணியை அடையாளம் காண்பதற்கான வேளை கனிந்துள்ளது.
09.04.2021 அன்று அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயக கட்சி-சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவளித்திருந்தது) கொழும்பில் கூடி உருவாக்கிய ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ இந்த மாற்று அரசியல் அணிக்கான பிள்ளையார் சுழியை இட்டது.
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் சார்பில் அகில இலங்கை தமிழர் மகா சபை-தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயக கட்சி-சமத்துவக் கட்சி-தமிழ் மக்கள் கூட்டணி-ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய ஏழு கட்சிகளும் கையெழுத்திட்டு (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளித்திருந்தது) ஏற்கெனவே 08.05.2023 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுப் பின் 15.05.2023 அன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நடந்த சந்திப்பின்போது பிரஸ்தாபிக்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் முழுமையான-முறையான அமுலாக்கல் சம்பந்தமான ‘ஆலோசனைச் சபை’ முன்மொழிவு ஆவணம்-அறிக்கை இந்தப் பிள்ளையார் சுழியின் விரிவாக்கமாக விளங்குகிறது.
ஆனால், இந்த ஆலோசனைச் சபை முன்மொழிவை அதன் உள்ளடக்கத்தையும் நோக்கத்தையும் ஆராயாமலே அதன் ஆரம்பக் கட்டத்திலேயே அக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த தமிழரசுக் கட்சியும்-‘ரெலோ’ வும்-‘புளொட்’ டும் ஆட்சேபித்திருந்தன. (முன்னாள் ஈ பி ஆர் எல் எப் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இந்த ஆட்சேபனைக் குழுவுடன் இணைந்துள்ளார்) இந் நிலைமையானது வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை துரதிஷ்டமானதாகும்.
ஆனாலும், இந்த ஆலோசனைச் சபை யோசனை ஆவணத்தைத் தயாரித்த அதன் பிதாமகர் அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் எந்திரி. கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களும் இவ் ஆவணத்தை 15.05.2023 அன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அரசியல் அரங்கிலே அறிமுகப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி வி விக்னேஸ்வரன் பா. உ. அவர்களும் 08.06.2023 அன்று மேற்கொண்ட பிரதமர் தினேஷ் குனவர்த்தன அவர்களுடனான சந்திப்பு வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
அண்மையில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உருவாகியுள்ள ‘இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு’ (Well wishes of Tamils in Sri Lanka -WTSL) 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான-முறையான அமுலாக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து முனைப்புடன் உழைக்கத் தொடங்கியுள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினரிடையே முதல் தடவையாக மேற்கிளம்பியுள்ள இத்தகைய அறிவுபூர்வமான அரசியல் விழிப்புணர்வும் அதன் அடிப்படையில் அமைந்த கூட்டுச் செயற்பாடும் உள்நாட்டில் (இலங்கையில்) அதிகாரப் பகிர்வு இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாற்று அரசியலுக்கு ஊட்டமளிப்பதாகவுள்ளது.
இந்தக் கட்டத்தில், இப் பத்தியிலே பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆலோசனைச் சபை ஆவணத்தை ஆதரித்துள்ள அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி-தமிழ் மக்கள் கூட்டணி-ஈழவர் ஜனநாயக முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய எட்டுக் கட்சிகளும் ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பொதுவான அரசியல் வேலைத் திட்டமொன்றின் கீழ் ஒரு அணியாகச் செயற்படுமாயின் அந்த அணியைத் தமிழ் மக்கள் நீண்ட காலமாக அவாவி நிற்கின்ற ‘மாற்று அரசியல் அணி’ யாக மக்கள் அடையாளம் காண்பர் என்பது நிச்சயம்.
தனித்தனியாக மேற்போந்த கட்சிகள் செயற்படுவதினூடாக மாற்று அரசியல் அணியை மக்களுக்கு அடையாளம் காட்ட முடியாது. எனவே, அடுத்த கட்டமாகவும் மிக விரைவாகவும் இந்த ‘மாற்று அரசியல் அணி’ யை உருவாக்குவதற்கான பூர்வாங்கக் கலந்துரையாடலை மேற்கொள்ளுவதற்காக மேற்போந்த எட்டுக் கட்சிகளின் தலைவர்களும் அக்கட்சியின் தீர்மானம் எடுக்கும் முக்கியஸ்தர்களும் முதலில் ஓரிடத்தில் சந்திக்க வேண்டுமென்று இவ் எட்டுக் கட்சிகளினதும் தலைவர்களை இப் பத்தி வினயமாக வேண்டிக் கொள்கிறது. இது நிகழுமாயின் தமிழ் மக்களின் உளவியலிலும் நிச்சயம் நேர்மறையான மாற்றம் நிகழும்.