(மௌன உடைவுகள் 33)
– அழகு குணசீலன் –
அரசியல் தலைவர்களின் உலக சுற்றுப்பயணத்தில் தமிழ் தாண்டவம் ஆடுகிறது.
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் நெஞ்சை நிமிர்த்தி தமிழின் பெருமையை பேசியிருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “நீங்க வாங்கோ தம்பி….” என்று லண்டனில் தமிழில் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொப்புள் கொடி தமிழ் உறவை லண்டனில் நினைவு படுத்தினார்.
ஆக, இந்திய – இலங்கை டயஸ்போரா மேடைகளில் தமிழ் முழக்கம்… செய்தவர்கள் இந்திய, இலங்கை அரசதலைவர்கள்.
தமிழால் மந்திரங்கள் சொல்லுவோம்….! தமிழால் நல்ல தந்திரங்கள் செய்குவோம்…..!
வெறும் இந்துத்துவ, பௌத்த தீவிரத்தை தமிழ்த்திரைகொண்டு மூடி மறைத்து , கலாச்சார -மொழி அடையாளம் பேசி கைதட்டல் வாங்கியிருக்கிறார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை தமிழுக்குள் மறைத்து சாகசம் காட்டும் , டயஸ்போராவை பராக்குகாட்டும் அரசியல்.
அங்கே பாருங்கள் அழகுதமிழ்…… இங்கே பாருங்கள் பழம்பெருமை… என்று பேசி நெடுந்தீவு மாடும் மேடையேறி இருக்கிறது.
அதற்காக தலையை ஆட்டும், புரியாத கூட்டம் சமூக ஊடகங்களில் ஆரவாரம் செய்கிறது.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு, இலங்கையில் தமிழ் புறக்கணிப்பு. தொல்லியல் தொல்லைகள்.
பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழைப் பார்த்தால் அது என்ன புது மொழி என்று கேட்கத் தோன்றுகின்றது.
ஆனால் டயஸ்போரா மேடைகளில் இவர்களின் பேச்சைக் கேட்கும் தமிழர்கள் தமிழ்ஈழம் – அகன்ற தமிழகம் – பெரிய இந்தியா (GREAT INDIA) இவற்றில் ஒன்று அல்லது எல்லாமே ஒன்றாய்க் கிடைத்தது போல் கூலிக்கு மாரடிக்கிறார்கள்.
இலங்கை, இந்திய தமிழ் டயஸ்போரா எல்லாவற்றையும் மறந்து மோடியின் தமிழ்ப்பெருமைக்கும், அண்ணாமலையின் யாழ்ப்பாண அபிவிருத்திப் பட்டியலுக்கும் கைவலிக்க வார்த்தைக்கு வார்த்தை கைதட்டி இருக்கிறார்கள்.
இலங்கையில் அதே அபிவிருத்தியை பேசும் தமிழ்த்தேசிய மாற்று அரசியல்வாதிகளை “துரோகிகள்” என்று கூறுகிறவர்களும் இவர்கள்தான். மத, இன துரோகங்களை வளர்ப்பவர்களும் இவர்கள் தான்.
இலங்கையில் அண்மைக்காலமாக கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் இவர்களின் அரசியலுக்கும் பங்குண்டு.
எந்த வாயால் இந்தியாவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் இனப்படுகொலைக்கு பின்னணி என்று கூறினார்களோ அதே வாயால் ஆராதனை செய்கிறார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கக் கோரி அமெரிக்க அரசை அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்டயஸ்போரா கோரவில்லை.
பேரணி நடத்தவில்லை ….! உண்ணாவிரதம் இருக்கவில்லை….! அறிக்கைகள், சந்திப்புக்கள் நடந்ததாக பதிவில்லை.
அமெரிக்காவில் அரசாங்கத்தை கொண்டுள்ள நாடுகடந்த தமிழழ அரசாங்க ஆட்சியாளர்களும் அசையவில்லை.
அண்ணாமலையின் நிலாச்சோறு கதையைக் கேட்டு அரைத்தூக்கத்தில் கைதட்டிய லண்டன் டயஸ்போராவும் தீர்வைக் கேட்கவில்லை.
இத்தனைக்கும் லண்டனில் ஆளுக்கொரு டயஸ்போரா கடையை திறந்து வைத்திருக்கிறவர்கள் இவர்கள்.
இனி என்ன? வாங்கோ தம்பி …..தமிழில் கதையுங்கோ என்று சொல்லிவிட்டார் ரணில் …..!
வீட்டுத்திட்டம், நெடுந்தீவு பசுவின்பால், கலாச்சார மண்டபம், பலாலிவிமானநிலையம், கப்பல் போக்குவரத்து …..இவற்றால் அண்ணாமலையின் பட்டியல் நிரம்பி வழிகிறது. கொரோனா கால உதவி, பொருளாதார நெருக்கடி கால உதவி அது வேறு இன்னொரு பட்டியல்.
இந்த உலகமயமாக்க வியாபாரம் யாரின் பொருளாதார நலன் சார்ந்தது?
நாங்கள் கோருவது உரிமை – இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே அன்றி இந்த அபிவிருத்தி பட்டியல் அல்ல என்று எந்த டயஸ்போரா அமைப்பும் பொது வெளியில் பேசவில்லை.
ஆனால் அவற்றை வடக்கு -கிழக்கிலும், கொழும்பு பாராளுமன்றத்திலும் உறுமுமாறு அதற்கான நியாயமான கட்டணத்தை – FAIRE TRADE வழங்குகிறார்கள்.
இனி எதற்கு 13 வது திருத்தம்? அரசியல் தீர்வு ? . கொஞ்சம் இலங்கையையும், சீனாவையும் இந்தியா திருத்தினால் சரிதான்.
அது சரி இவர்களுக்கு ஏன் இந்த தமிழ் மோகம்…..?
தமிழால், சமயத்தால், கலாச்சாரத்தால் வளைத்துப்போடுவதே ஒரே இலக்கு.
தமிழ்நாட்டில் சனாதனதர்மத்திற்கும் , திராவிடமாடலுக்கும் இடையிலான போரில் தமிழில்பேசி, தமிழின் பெருமை பேசி, அதன் மூத்தமொழி பண்டைய வரலாற்றை பேசி சனாதனா எதிர்ப்பை தமிழால் முறியடிப்பது.
இந்த மந்திரம் -தந்திரம் தான் முள்ளை முள்ளால் எடுப்பது.
இதனால்தான் தமிழ் நாட்டு அரசியலை விடவும் மோடியின் இந்துத்துவா அரசியல் அதிகம் தமிழ்ப்பெருமை பேசுகிறது. தமிழுக்கு விழா எடுக்கிறது.
நாங்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த கலாச்சார இரட்டையர்கள் என்று சொன்னவர் பிரதமர் நரேந்திர மோடி என்று நினைவூட்டியிருக்கிறார் அண்ணாமலை.
இரட்டை குழந்தையில் ஒன்றுக்கு நடந்த அநியாயங்களுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான தீர்வு பற்றியோ அல்லது மோடி அரசாங்கம் செய்யவேண்டியது என்ன? என்பது பற்றியோ அவர் பேசவில்லை.
இரட்டை குழந்தைகள் கலாச்சாரத்தை மட்டும் காவினால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்.
ஆம்…! இந்தியாவின் பிரச்சினை தீர்ந்துவிடலாம். ஆனால் இலங்கையர் பிரச்சினை?.
இந்தியா “BIG BROTHER” இல்லை என்பதை நிரூபிக்க ” CULTURAL TWINCE” பற்றி பேசும் அவர் இரட்டை குழந்தைகளிலும் ஒரு குழந்தை எப்போதும் முந்திப்பிறக்கும் அது மூத்த குழந்தைதான் என்பதை மறந்துவிடுகிறார்.
சீனாதான் “பிக் பிறதராக ” செயற்படுகிறது என்று கூறி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு உரம் சேர்க்கிறார். தமிழுக்கான ஆராதனையின் பின்னணியில் சீன எதிர்ப்பு இருக்கிறது.
மொத்தத்தில் இந்திய நலனே இலங்கையின் நலன்….! இலங்கையின் நலனே தமிழர் நலனாக காட்சிப்படுத்தப்படுகிறது.
இதுவே. பாரதீய ஜனதா கட்சியின் இனப்பிரச்சினைக்கான தீர்வு.
தமிழ்த்தேசியம் இந்துத்துவாவுக்கு நேர்த்தி வைத்து எடுக்கின்ற எந்தக் காவடியும் இந்திய நலனுக்கானதே அன்றி ஈழத்தமிழர் நலனுக்கானதல்ல.
இந்த மந்திரத்தால் மாங்காய் பிடுங்க முடியாது…!