இந்திய அரசு ஈழத்தமிழர்களின் தேசியக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன வகையில் எல்லாம் நடந்து வருகிறது என்பது தொடர்பாக புதிய வியாக்கியானங்கள் தமிழ் மக்களுக்கு அவசியப் படும் நிலை இன்றில்லை. இந்திய அரசு மட்டுமல்ல உலகில் இருக்கும் வலிமை வாய்ந்த அரசுகள் அனைத்தும் தமது தேசத்தின் நலன் சார்ந்துதான் வெளிவிவாகார விடயங்களை அணுக வல்லன என்பது சர்வதேச அரசியலின் முதல் அரிச்சுவடி. இந்த உண்மை, ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசின் இதுவரைகால அணுகுமுறை என்பது எமக்கு பட்டறிவாக பதிந்து கிடக்கிறது. அன்று இந்திரா காந்தி தொடக்கம் இன்று மோடி வரை தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களின் அணுகுமுறைகளைக் கடந்து அரசியல் தலைவர்களின் குணாம்சங்கள் ஈழத்தமிழரின் நல்வாழ்வைத் தீர்மானிக்க வல்லன என்னும் போலி நம்பிக்கைகள் எம்மில் சிலரிடம் இன்றுவரை நீர்த்துப் போனதாகவும் இல்லை. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், பெரும்பாலான அரசியல் தலைவர்களும் தமது சொந்த அரசியல் இலாபத்திற்காக ஈழத்தமிழர் தேசிய உரிமை விடயங்களில் அதீத அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள் என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும்.
எமது மக்களில் ஒரு பிரிவினரும் மக்கள் பிரதிநிதிகளும் ஏன் போராட்டத் தலைமைகளும் எம்ஜிஆர், கலைஞர் தொடங்கி வைகோ என்று மாறி இன்று சீமான் வரை தொப்புள் கொடி உறவு என்னும் மாயவலையில் சிக்குண்டு நிற்பதை பார்க்கிறோம். ஈழத்தமிழர்களை மாத்திரமல்ல இலங்கைத் தீவையே ஏதோ ஒரு வகையில் தமது ஆழுகைக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்னும் கடும் பிரயத்தனத்தில் இருக்கும் இந்திய அரசுடன் உரையாடலும், உறவும் ஈழத்தமிழருக்கு தவிர்க்க முடியாத ஒரு தேவை என்பதை மறுக்க முடியாது. எவ்வாறாயினும் விருப்பு வெறுப்புகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் தமிழர் தேசம் என்னும் வகையில் இது வெளியுறவு தொடர்பான பிரச்சனை. இந்தச் சமன்பாட்டிற்கு உள்ளே செல்லாத முக்கிய தமிழ் கட்சிகளோ அல்லது முக்கிய போராட்ட இயக்கங்களோ இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலைமை இப்படியிருக்க, இந்திய அரசைக் கையாளுவது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களைக் கையாளுவது என்று எமக்குள் இருந்து பல சக்திகள் புறப்பட்டிருக்கின்றன. இந்தக் கையாளுதல் என்னும் ராஜதந்திரம் என்பது புலிகள் உட்பட அனைவரும் இறுதியில் பயன்படுத்தப்பட்டதும், அழிக்கப்பட்டதும் தான் மிஞ்சியிருக்கிறது என்பது நாம் கற்றுக் கொண்ட வரலாற்று பாடம்.
வரலாற்றில் நாம் எவ்வளவு தான் பாடம் கற்றுக் கொண்டாலும், தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் இந்திய அரசுடனான உறவு விடயத்தில் ஒன்று கைத்தடிகளாக இருக்கிறார்கள் அல்லது ராஜதந்திர உறவை மேற்கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கிறார்கள். இதற்கு பதிலாக இந்தியா தொடர்பாக பேசுபவர்களையோ அல்லது 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக பேசுபவர்களை அரசியல் புனிதமற்றவர்களாக காண்பிக்கும் அரசியல் சந்தர்ப்பவாத வேலையை தமிழ் தேசியத்தின் “புனிதர்கள்” என்னும் முகாமிற்குள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் செய்து வருகின்றனர்.
இதுவரை காலமும் இந்திய அரசுடனும் இந்திய ஆளும் கட்சிகளுடனும் உறவுகளை கொண்டிருந்த அரசியல் தலைவர்கள், போராட்ட இயக்கங்கள் என்பவற்றை துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள் என்று முத்திரை குத்தி அரசியல் செய்து வந்த பிரிவினரில் சிலர் இன்று தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இந்திய அரசு சார்பு அல்லது இந்திய அரசு அடிவருடிகள் என்னும் நிலைக்கு சென்றிருக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர்கள் சிலர் அகண்ட பாரதக் கொள்கை என்பது தமிழரது அரசியலுக்கு வலுச்சேர்க்கும் என்னும் அதிமேதாவித்தனத்துடன் தாயகத்தில் ஜனநாயகப் போராளிகள் என்று அழைத்துக் கொள்ளும் பிரிவையும் அழைத்துக் கொண்டு டெல்லி செங்கோட்டையை “முற்றுகையிட்டு” இந்திய அரசின் ஆசி பெற்று வீறாப்புடன் திரும்பியிருந்தனர். சமீபத்தில் தாயகத்திற்கு பயணம் செய்த பாரதிய ஜனாதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்ற சில தமிழ் அரசியல் தலைவர்களும் சில சைவத் தொண்டர்களும் அண்ணாமலையின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு வலுச்சேர்த்து புகழாரம் சூட்டி அனுப்பி வைத்தனர்.
புலம்பெயர் சூழலில் தமிழ் தேசியத்தின் மிக நெருங்கிய பிரிவாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு பிரிவினர் RSS இன் இந்து மதவெறி, தமிழின் மீதான ஹிந்தி சமக்கிருத மொழி ஆதிக்கம், இனங்களின் மீதான அடையாள அழிப்பு, தமிழகத்தின் தன்னாட்சி உரிமை பறிப்பு, மனு தர்மம் என்னும் சாதி ஆதிக்கம் என்னும் கோட்பாடுகளையும், அரசியலையும் தாங்கிச் செல்லும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலையை பிரித்தானியாவிற்கு வலிந்து அழைத்து சிறப்பிக்கிறார்கள்.
அண்ணாமலை இந்திய அரசின் பிரதிநிதியாக இங்கு அழைக்கப்படவில்லை; அனைவரையும் கையாளுகிறோம், ராஜதந்திரம் செய்கிறோம் என்று அரசியல் கற்றுக்குட்டித்தனம் பண்ணும் புலம்பெயர் பகடைக்காய்கள் இவர்கள்.
தமிழ்நாட்டு மக்களும், தமிழக மக்கள் அமைப்புகளுமே எமது நெருங்கிய உறவுகள். அது மட்டுமல்ல, ஈழத்தமிழருக்காக உண்மையில் பயணிப்பவர்கள். இவர்களுடன் கூடவே இந்திய மண்ணில் தமது உரிமைகளுக்காக போராடுகிற பிரிவுகளும், ஜனநாயக தளத்தில் எமது உரிமைப் போரை அக்கறையுடன் நோக்குபவர்கள் தான் ஈழத்தமிழரின் உண்மையான நண்பர்கள்.
இந்துத்துவா கொள்கையின் உறைவிடமான RSS இன் அரசியல் பிரிவான BJP ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் இந்து மதவெறியும், வட மாநிலங்களில் சாதி ஆதிக்க வெறியர்களின் ஆட்டங்களும் பெருமளவில் தாண்டவமாடுவது கண்கூடு.
மொழிவாரி மாநிலங்களாக இருக்கும் ஒன்றிய அரசு மாநில அரசு என்னும் உறவில் மொழிவாரி மாநிலங்களின் இருப்பை அழிக்கும் வகையில் அனைத்து சதி வேலைகளையும் திட்டமிட்டு செய்து வருகிறது இந்த BJP அணி. குறிப்பாக இந்துத்துவா அரசின் எதிர்ப்புக் குரலாக இருக்கும் எமது நெருங்கிய உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் இன ரீதியான உரிமைகளைப் பறிப்பதிலும், மத முரண்பாடுகளை உக்குவித்து ஒரே இனத்திற்குள் பிளவுகளையும் உருவாக்கி வருகிறது. இந்த வகை நிகழ்ச்சிநிரலை தமிழகத்தில் தலைமேல் கொண்டு பல சதி வேலைகள் மூலம் நிகழ்த்தி வருபவர் தான் இந்த அண்ணாமலை. இவரை பிரித்தானியாவிற்கு அழைத்து மரியாதைப் படுத்தும் ஈழத் தேசத்து போராளிகளாகக் கூறிக்கொள்ளும் சிலர் உண்மையில் செய்வது தான் என்ன? இராஜதந்திரம், வால்பிடிப்பது என்னும் வழிமுறைகள் மூலம் ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இவர்கள் செய்யும் அரசியல் கடும் பாதகமானது.
புலம்பெயர் சூழலில் இருந்து செய்யப்படும் சர்வேதச சமூகத்தை நோக்கிய அழுத்த வேலைகளும், தாயகத்தில் நடைபெறும் ஒடுக்குமுறைகள், அடையாள அழிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தாயக மக்களின் இருப்பையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் முகமாக செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தாயக மக்களுக்கான பயனுள்ள பணிகளாக ஒருபுறம் இருந்து வருகின்றன,
தமிழ் தேசத்திற்கான ஒரு உறுதியான மக்கள் அமைப்பும், அரசியல் தலைமையும் இல்லாத சூழலில் புலம்பெயர் வாழ்வில் இருந்து கொண்டு சிலர் தேசத்திற்கான வியூகம் வகுத்து நாடுகளையும், அரசியல் தலைவர்களையும் கையாளுவதாக நடத்தும் கற்றுக்குட்டித் தனமான அரசியல் நடவடிக்கைகள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தவை. பெளத்த-சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் எமது மக்களுக்கும்; மொழி மற்றும் மாநில உரிமைக்காக போராடும் தமிழக மக்களுக்கும் சரி எதிர் திசையில் இந்த புலம்பெயர் சருகுப் போராளிகளின் பயணம் இருக்கிறது.
தாயக, புலம்பெயர் உறவுகள் இந்தவகை குறுக்குவழி சாகசங்களில் நம்பிக்கை கொள்ளாது ஒரு உறுதியான அரசியல் சமூகமாக, ஒருங்கிணைந்த சுதந்திரமான அமைப்புகளைக் கொண்ட மக்கள் சமூகமாக கட்டமைவதை நோக்கி நகருவோம்!