– தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் –
‘இடைக்கால நிர்வாக சபையென்பது ஒரு பொய்?’ என்ற தலைப்பில் ‘ஈழநாடு’ பத்திரிகை 10.06.2023 அன்று ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது.
‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ போன்றதொரு மனநிலையைத்தான் ‘ஈழநாடு’ பத்திரிகையின் இந்த ஆசிரிய தலையங்கம் பிரதிபலிக்கிறது.
சில தமிழ்க் கட்சிகளால் ஜனாதிபதியிடம் 08.05.2023 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ‘ஆலோசனைச் சபை’ யோசனை ஆவணம்தான் 15.05.2023 அன்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் 08.06.2023 அன்று இந்த ஆவணத்தைத் தயாரித்த எந்திரி. கலாநிதி கா. விக்னேஸ்வரனும் இந்த ஆவணத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் சி வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இப் பேச்சு வார்த்தையின் சாதகமான பெறுப்பேற்றைத்தான் சி வி விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவரும் ‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசாமல்’ இருந்திருக்கலாம்.
அவர் கையாண்ட வார்த்தைப் பிரயோகம் அல்லது ஊடகங்கள் பிரயோகித்த சொற்பிரயோகம் ‘ஆலோசனைச் சபை’ என்பதற்குப் பதிலாக ‘இடைக்கால நிர்வாக சபை’ யென்று இருந்திருக்கக் கூடும். இது ‘ஈழநாடு’ கருதுவதைப் போல ஒரு பூதாகரமான பிரச்சனையல்ல.
இந்த ஆவணத்தின் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் ஆராயாமல்-விளங்கிக் கொள்ள முயற்சிக்காமல் அவசரப்பட்டு இப்படியொரு ஆசிரிய தலையங்கத்தை ஈழநாடு தீட்டியிருப்பது தமிழ் மக்களுக்குத் தவறான ‘சமிக்ஞை’ யை வழங்குவதாகும்.
இலங்கையில் இழுபட்டுக் கொண்டிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் காலம் தாழ்த்தப்படாமல் விரைவாக நடத்தப்பட வேண்டுமென்பதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கமாட்டாது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்பில்லை என்ற அரசியல் யதார்த்தக் களநிலையில்-மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என எதிர்வு கூற முடியாத நிலையில் அது நடைபெறுவதற்கு முன்னர் தற்போதுள்ள 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர் செய்யும் நோக்கத்துடன்தான் இவ் ஆலோசனைச் சபை யோசனை முன் வைக்கப்பட்டு அதனை அரசாங்கமும் சாதகமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனைக் குழப்பும் வகையிலேயே ‘ஈழநாடு’ பத்திரிகையின் இவ் ஆசிரிய தலையங்கம் உள்ளது.
இந்த உத்தேச ‘ஆலோசனைச் சபை’ யின் ஆயுட்காலம் ஆறு மாதம் அல்லது ஆகக் கூடியது ஒரு வருடமாகத்தான் இருக்கும். அது இந்த ஆவணத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலோசனைச் சபை நியமிக்கப்படுதல் மாகாண சபைத் தேர்தல்களைக் கால வரையறையின்றி ஒத்தி வைப்பதற்கான வாய்ப்பை அரசாங்கத்திற்கு வழங்கும் நோக்கமுடையதல்ல. அரசாங்கமும் அவ்வாறு செய்ய முடியாது.
மூல 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சில மீளவும் மத்திய அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில அதிகாரங்கள் ஐதாக்கப்பட்டுள்ளன. சில அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. அத்துடன் அதற்கான நியதிச் சட்டங்களே உருவாக்கப்படவுமில்லை. இவற்றையெல்லாம் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சீர் செய்வதுதான் இவ் ஆலோசனைச் சபையின் நோக்கமே தவிர மாகாண சபைத் தேர்தலை மேலும் இழுத்தடிப்பதல்ல. இவ் ஆலோசனைச் சபை நியமனம் தமிழ் மக்களுக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக நன்மைகளைத்தான் தரும்.
தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, 1987 இல் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும்-அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினூடாக உருவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த வடகிழக்கு மாகாண அரசு நிர்வாகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்ததற்கும் இப்போது ‘ஈழநாடு’ பத்திரிகை இவ் ஆலோசனைச் சபையை (இடைக்கால நிர்வாகத்தை) எதிர்ப்பதற்கும் மனப்போக்கில் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழவேண்டிய தமிழ் ஊடகங்கள் எதிர் காலம் குறித்த தீட்சண்யமான பார்வையின்றி இவ்வாறாகப் பகற் குருடாகவும் இராச் செவிடாகவும் திகழ்ந்தால் தமிழர்களின் கதி என்னாவது?
இலங்கைத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்குப் பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமல்ல, குறுந் தமிழ்த் தேசியவாதத்துள் மூழ்கிப்போன தமிழ் அரசியல்வாதிகளும்-தமிழ்ப் ‘புத்திஜீவி’ களும்-இவர்களுக்குச் சாமரம் வீசிய தமிழ் ஊடகங்களும் சேர்ந்துதான் கூட்டுக் காரணங்களாகும். இப் பத்தித் தொடரில் முன்பும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய (?) அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன தேவையென்று எண்ணாமல் தங்கள் தேர்தல் தேவைகளுக்கு ஏற்ற மாதிரியே செயற்பட்டனர். தமிழ்ப் ‘புத்திஜீவி’ கள் மக்களுக்குச் சரியானதை எடுத்துச் சொல்லாமல் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ அந்தப் பக்கம் நின்று தங்கள் வாசிக்குக் கருத்துக் கூறித் தங்கள் ‘புத்திஜீவி’ த்தனத்தை வெளிப்படுத்தினர். தமிழ் ஊடகங்களோ மாற்றுச் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் களம் கொடாது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தன. சமூகப் பொறுப்பற்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ‘புத்திஜீவி’ களுக்குமே இடம் கொடுத்தன. இந்த நிலைமையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லையென்பதைத்தான் ‘ஈழநாடு’ பத்திரிகையின் இவ் ஆசிரிய தலையங்கம் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல தமிழ் ஊடகங்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், “ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன் வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக் குழுவொன்றை அமைக்கும் ஏற்பாடானது ஏற்கெனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது” என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளமை (ஈழநாடு 11.06.2023) அபத்தமானது.
சுரேந்திரன் குருசாமி முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடப் பார்க்கின்றார். இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் அரசியல் ரீதியாகச் சமாந்தரமாகக் கொண்டு செல்லப்படக்கூடியவைகளாகும். ‘ஆலோசனைச் சபை’ க்கும் மாகாண சபைத் தேர்தல் தினத்தைத் தீர்மானிப்பதற்குமிடையில் சம்பந்தமேயில்லை. இரண்டும் வெவ்வேறு விடயங்கள்.
முதலில், இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தாமும் செய்யாது-மற்றவர்களையும் செய்ய விடாத ‘வைக்கோல் பட்டறை நாய்’ மனப்பான்மையைக் கைவிட வேண்டும்.