– கருணாகரன் –
கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்கியவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான திரு. வீ. ஆனந்தசங்கரி. இது நடந்தது 1984 இல். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்துடனேயே கிளிநொச்சி இணைந்திருந்தது.
1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்போதே கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஆனந்தசங்கரி. அதன்படி தனிமாவட்டமாக்கினார் ஆனந்தசங்கரி. இதற்காக அவர் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுவும் அவர் அங்கத்துவம் வகித்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடனேயே போராட வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியைப் பிரித்தெடுப்பதற்குக் கூட்டணியிலிருந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக தனி மாவட்டத்துக்கான எல்லையை வகுப்பதில் பிரச்சினை – மாறுபட்ட கருத்து – ஏற்பட்டது. இதைப்போலவே அடுத்த எல்லையான முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சியை அடையாளப்படுத்தும் எல்லை பற்றியும் சர்ச்சை உண்டானது. அது விகிதாசாரத் தேர்தல் அறிமுகமாகாத – தொகுதிமுறைத் தேர்தல் காலம் என்பதால் தமக்குரிய வாக்களர்களையும் அதற்கான நிலப்பரப்பையும் ஒவ்வொருவரும் கவனத்திற் கொண்டனர்.
இது தனிமாவட்டக் கனவோடிருந்த ஆனந்தசங்கரிக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. இறுதியில் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சங்கரி. இதன்படி கிளிநொச்சியுடன் சேர்ந்திருக்க வேண்டிய வடமராட்சி கிழக்கை யாழ்ப்பாணத்துக்கு விட்டுக் கொடுத்தார். அதைப்போல கிளிநொச்சியின் கிழக்கில் தருமபுரத்துக்கு தெற்காக உள்ள பிரதேசம் தொடக்கம் விசுவமடுவையும் கிளிநொச்சிக்கு தெற்காக கனகாம்பிகைக்குளத்துக்கு அருகாக உள்ள பிரதேசம் தொடக்கம் முறிகண்டி, அக்கராயனின் தெற்கையும் முல்லைத்தீவுக்கு விட்டுக் கொடுத்தார்.
இதையெல்லாம் அறிந்த அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா கிளிநொச்சி நகரில் உள்ள றொட்றிகோ மைதானத்தில் வைத்துச் சொன்னார், தனிமாவட்டமாக்குவது பிரச்சினையில்லை. அதற்கு உங்களுடைய ஆட்கள் சம்மதிக்க வேண்டும் என.
இறுதியில் எப்படியோ கிளிநொச்சி தனிமாவட்டமாக்கப்பட்டது.
இதனால் இந்தப் பிரதேச மக்கள் தொடர்ந்தும் படுகின்ற இன்னல்கள் கொஞ்சமல்ல. கிளிநொச்சி நகரில் இருந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் கனகாம்பிகைக் குளத்துக்கு தெற்காக உள்ள செல்வபுரம், முறிகண்டி போன்ற இடங்களிலுள்ள மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நெடுந்தொலைவுக்கு அலைய வேண்டியுள்ளது. பிரதேச செயலகத்துக்காக ஒட்டுசுட்டானுக்கும் பிரதேச சபைக்காக புதுக்குடியிருப்புக்கும் கல்விப் பணிமனைக்காக துணுக்காய்க்கும் கச்சேரிக்காக முல்லைத்தீவு நகரத்துக்கும் திரிகிறார்கள்.
தூர நோக்கற்ற (இதயமும் மூளையும் இல்லாத) தமிழ்த்தலைவர்களின் தவறுகளை இந்த மக்களே தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கிறார்கள்.
இதைப்போலவே தருமபுரத்துக்குத் தெற்காக உள்ள பகுதிகள் (நெத்தலி ஆறு தொடக்கம்) விசுவடு உள்ளடங்கலாக இருக்கும் மக்கள் புதுக்குடியிருப்குக்கும் முல்லைத்தீவுக்கும் போகிறார்கள். அதற்கு மறுபக்கத்தில் மயில்வாகனபுரம், தேராவில், கொழுந்துப்புலவு போன்ற இடங்களிலுள்ள மக்கள் விசுவமடுவைக் கடந்து கிளிநொச்சிக்கு வருகிறார்கள்.
இந்த எல்லை பிரிப்பைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும், ஆழ்ந்து யோசித்தால் கடுப்பேறும். அந்தளவுக்குப் பைத்தியக்காரத்தமானது.
ஆகவே சில பிரச்சினைகள், பாதிப்புகள் இருந்தாலும் எப்படியோ அரைகுறையாகவேனும் கிளிநொச்சியைப் பிரித்தெடுத்துத் தனிமாவட்டமாக்கினார் ஆனந்தசங்கரி. அதன்பிறகு தனி மாவட்டத்துக்கான அனுகூலங்கள் பலவும் கிடைத்தன. தனிமாவட்டத்துக்குரிய ஒதுக்கீடுகளில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகின்ற மாணவர்களின் தொகை கூடியது. பிரதேச அபிவிருத்திக்கான நிதி கூடியது. கல்விப் பணிமனைகள், நிர்வாகச் செயலகங்கள், விவசாயம், கடற்றொழில் போன்ற தொழில்துறைகளை ஊக்கப்படுத்தும் திணைக்களங்கள் தனித்தனியாக வந்தன. பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, கண்டாவளை என நான்கு பிரதேச செயலர் பிரிவுகளும் கிளிநொச்சி வடக்கு, கிளிநொச்சி தெற்கு என இரண்டு கல்வி வலயங்களும் உருவாகின. கூட்டுறவுத்துறையும் செழிப்படையத் தொடங்கியது. பொதுவாகத் தனி மாவட்டத்துக்குரிய அனுகூலங்கள் பலவும் கிடைத்தது.
ஆனால், துரதிருஸ்டவசமாக தனிமாவட்டமாக்கிய ஆனந்தசங்கரியினால் தொடர்ந்தும் கிளிநொச்சியின் வளர்ச்சியில் கலந்து நிற்க முடியவில்லை. போராட்டச் சூழல் கிளிநொச்சியை வளர்ச்சியடைய விடவில்லை. அரசியலில் ஆனந்தசங்கரிக்குரிய இடத்தையும் கொடுக்கவில்லை.
இலங்கைத் தீவிலேயே மிக இளைய நகரமான கிளிநொச்சிதான் அதிக தடவை இடப்பெயர்வையும் அதிக அழிவையும் சந்தித்தது. அதே அளவுக்கு அது சர்வதேச ரீதியில் புகழடைந்தது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்கள் கிளிநொச்சியைப் படையினரிடத்திலே பறிகொடுப்பதும் மீட்டெடுப்பதுமாக இருந்தனர். இதனால் யுத்தத்தின் மையக்களமாகியது கிளிநொச்சி. யுத்தம் மையத்தில் நடந்தால் அழிவு உச்சமாக இருக்கும் அல்லவா, அப்படித்தான் கிளிநொச்சி முற்றாகவே அழிந்தது. ஆனாலும் விழ விழ எழுவோம் என்ற மாதிரி ஒவ்வொரு தடவையும் அது எழுந்தே வந்தது.
விடுலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வடக்கின் தொடர்பாடல் நகரமாகியது கிளிநொச்சி. வடக்கின் நகரம் என்பதற்கு அப்பால் கிழக்கின் மையமாகவும் கிளிநொச்சிதான் விளங்கியது.
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள இரணைமடு ஏரியில் விமானத்தில் வந்து இறங்கினார். பேச்சுவார்த்தைக்காக உலக நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கிளிநொச்சிக்கு வந்தனர். கிளிநொச்சியிலிருந்து பிற நாடுகளுக்குப் பறந்து சென்றா்கள். கிளிநொச்சியில் ஒரு விமான நிலையமும் உருவாகியது. இப்பொழுதும் அந்த விமான நிலையம் உண்டு.
ஆனால், அது இன்னமும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படவில்லை. படைத்துறை மற்றும் அரசாங்க உயர்தரப்பினருக்கான விமான நிலையமாக மட்டுமே உள்ளது. இப்பொழுது பல்கலைக்கழக பீடங்களும் கிளிநொச்சியில் இயங்குகின்றன. இதில் பொறியியற் பீடம், தொழில்நுட்ப பீடம், விவசாயபீடம் ஆகியவை உண்டு.
துறைமுகத்தைத் தவிர, ஏனையவை அநேகமாகக் கிளிநொச்சியில் உள்ளன. இலங்கை மத்திய வங்கியின் பிராந்தியப் பணிமனை, சுற்றாடல் திணைக்களத்தின் பிராந்தியப் பணிமனை, வனவிலங்குத் திணைக்களத்தின் பிராந்தியத் திணைக்களம் போன்றவையும் கிளிநொச்சியில்தான் இயங்குகின்றன. கிளிநொச்சிக்கு உள்ள இன்னொரு சிறப்பு, அது வடக்கையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான வீதியைக் கொண்டிருப்பதால் உறங்கா நகராக உள்ளது. கிளிநொச்சியில் நின்றால் எந்த நேரத்திலும் (இரவோ பகலோ) எங்கும் பயணிக்க முடியும். புகையிரதச் சேவையும் உண்டு.
இப்படியெல்லாம் தனித்துவச் சிறப்புகளையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ள கிளிநொச்சியில் ஒன்பது நீர்ப்பாசனக் குளங்கள் வேறு உண்டு. வடக்கின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் அளவுக்கு அங்கே நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை விட ஆனையிறவு உப்பளம், பளை, இயக்கச்சி, கிராஞ்சி, வட்டக்கச்சி, உருத்திரபுரம் போன்ற இடங்களில் தென்னை உற்பத்திகள் என பொருளாதார மையங்களும் உண்டு. மரமுந்திரிகைச் செய்கையும் இங்கே அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. முன்னர் கரும்புச் செய்கையும் அதைப் பதனிடும் ஆலையும் இயங்கியது. ஓட்டுத் தொழிற்சாலையும் இருந்தது. இவை இப்பொழுது செயற்படவில்லை. இவற்றை மீள் நிலைக்குக் கொண்டு வரலாம்.
இப்படியெல்லாம் அமைந்துள்ள கிளிநொச்சிதான் வறுமையான மாவட்டங்களில் முதல் நிலையில் உள்ளது. அதாவது வளர்ச்சி நிலையில் 25 ஆவது இடத்தில் – கடைசி நிலையில் உள்ளது. கல்வியிலும் மிகப் பின்தங்கியிருந்தது. இந்த ஆண்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
இது ஆனந்தசங்கரியின் 90 ஆவது பிறந்த நாள் மாதமும் ஆண்டுமாகும். கிளிநொச்சியை நேசித்த மூத்த பிரஜை ஒருவரின் கனவாக கிளிநொச்சியை ஈடேற்றுவது ஒவ்வொருடைய கடமையுமாகும். இதற்காகக் கடந்த 15.06.2023 அன்று கிளிநொச்சி நகரில் ஒரு நிகழ்வை கிளிநொச்சியிலுள்ள சிலர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். பெருமளவு மக்களும் கலந்து கொண்டார்கள்.
யாழ் போதனா மருத்துவமனைப் பணிப்பாளரும் வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளுருமான மருத்துவர் சத்தியமூர்த்தி தலைமையேற்ற விழாவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உரையாற்றினார்.
சத்தியமூர்த்தியும் றூபவதியும் சொன்ன விடயம், தனிமாவட்டத்தின் பெறுபேறாக இன்று உயர் நிலைப் ப,தவியில் தாங்கள் நிற்பதற்குக் காரணம் ஆனந்தசங்கரி அவர்கள் என்பதாகும். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மாடிக் கட்டிடங்களைக் கொண்டு வந்தது, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களையே அதிகமாக உத்தியோகங்களில் உள்ளீர்த்தது, புதிய சில பாடசாலைகளை உருவாக்கியது, நீர்ப்பங்கீட்டை விவசாயிகளுக்கு அதிகரித்தது எனப் பல சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.
இந்த நிகழ்வில் மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், முருகேசு சந்திரகுமார், கலாநிதி விக்கினேஸ்வரன், சுகு ஸ்ரீதரன், வை தவநாதன், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் சிறப்புப் பிரதிநிதி, உதயராசா, குருகுலராஜா, ப. அரியரத்தினம் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சி பேதமற்றவகையில் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று ஆனந்தசங்கரிக்கு மதிப்பளித்தனர்.
தனிமாவட்டத்தின் பெறுபேற்றினை அனுபவிக்கும் உணர்வைக் கொண்டவர்களின் மதிப்பளிப்பாக அன்றைய நிகழ்விருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் தந்தைக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக ஆனந்தசங்கரியும் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். வாழும்போதே வாழ்த்துவோம் என்று நிகழ்ந்த இந்த விழா பல முன்னுதாரணங்களைக் கொண்டது. நிறைவானது.