அருணுக்கு ஆப்பு:  பேரினவாத முகவர் விரிவாக்கம்…..! (வெளிச்சம்: 060)

அருணுக்கு ஆப்பு:  பேரினவாத முகவர் விரிவாக்கம்…..! (வெளிச்சம்: 060)

— அழகு குணசீலன்—

என்.பி.பி.அரசாங்கத்திற்குள் ஜே.வி.பி.யின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கத்தின் ஆதரவு அணியான நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புக்கள் அதிருப்தி அடைந்துள்ளன. ஜனாதிபதி அநுரவை தென்னிலங்கையில் அநுரகுமார ராஜபக்ச என்றும், ஆட்சியை நல்லாட்சி 2, கோத்தபாய 2 என்றும்  கூப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த ஏழு, எட்டு மாதங்களில் இது அநுர அரசாங்கத்திற்கு எதிர்பார்க்காத ஒன்று. இந்த அதிருப்தியின் விளைவே உள்ளூராட்சி தேர்தல் தீர்ப்பு. இது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்பார்காத ஒன்று. அவர் இப்போது  “முறைமை மாற்றம்” அல்ல ஆட்களை மாற்ற ஆரம்பித்திருக்கிறார். இதற்கு முதல் பலி அருண். அடுத்தது பிரதமர் ஹருணியா…..?

அண்மையில் கருத்து வெளியிட்ட  ஜே.வி.பி.யின் தீவிர போக்காளரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க விரைவில் அரசாங்கத்தில் பதவி மாற்றங்கள் இடம்பெறும் என்றும், அதற்கான முடிவுகள் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அப்படியொரு மாற்றமும் இடம்பெறாது என்றும் அது அவசியமற்றது என்றும் மற்றொரு அமைச்சரான சுனில் ஹேந்தநெட்டி அதை மறுத்திருந்தார். இந்த நிலையில் அரசாங்கத்திற்குள் எந்த மோதல்களும் இல்லை என்று மற்றொரு அமைச்சர் லால் ஹந்த “WORK AND FAMILY” BALANCE பண்ணியிருந்தார். வேலைப்பளுவுக்கு மத்தியிலும்  தொழிலுக்கு போகும் பெண்களும், ஆண்களும்   வேலைக்கும் – குடும்ப வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையை பேணவேண்டும் என்பதற்கு மேற்குலகில் பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் இது. இல்லையேல் குடும்ப வாழ்வு சிதைந்து விடும். இங்கு ஜே.வி.பி – பங்காளி  குடும்பத்தை சமநிலைப்படுத்த  லால் ஹெந்த முயற்சிக்கிறார். அரசாங்கத்திலும், கட்சியிலும் செல்வாக்குள்ள இந்த மூன்று அமைச்சர்களும்  முழுப் பூசணிக்காயை  பிடி சோற்றுக்குள் புதைக்க முயற்சி செய்கிறார்கள். இவர்களில் சுனில் ஹெந்த நெட்டி தான் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தவைவராக நியமிக்கப்பட இருப்பவர்.

கடந்த மூன்று  தேர்தல் காலங்களிலும்  இருந்தே தொடர்ச்சியாக அரசியல் ஆய்வாளர்களால் அவதானிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இருக்கிறது. அதுதான்  ஜே.வி.பி.க்கும்,  நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க, மாணவ, சிவில் அமைப்புக்களின் கூட்டான தேசிய மக்கள் சக்திக்கும்  இடையே உள் முரண்பாடுகள் நிலவுவதாகும். இது ஜே.வி.பி.யின் அதிகாரம் மிக்க பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்களிலும், சில அமைச்சர்களின் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களிலும் வெளிப்பட்டு வந்தது.  அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள்,  சர்வதேச நாணயநிதியத்துடனான இணக்கம், இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் என்று அந்த பட்டியல் நீளமானது. இந்த முரண்பாடான கருத்துக்கள் சிலவற்றை அரசாங்கம் திருத்த வேண்டிய கட்டாயமும்  ஏற்பட்டது. எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் சாட்டுப்போக்கு சொல்லி சறுக்கவேண்டியும் இருந்தது. இவ்வாறான சறுக்கல்களில் – பின்னடிப்புகளில் ஒன்றுதான் தமிழ்த்தேசிய கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பை வடக்கில் ஆக்கிரமிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனம் மீளப்பெறப்பட்டதாகும். ஆனால் இந்த முடிவு குறித்து ஜனாதிபதி மீது ஜே.வி.பி.யின் தீவிர ரில்வின் சில்வா குழுவிக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒன்று. மற்றது  ஹருணி அமரசூரியாவின் பிரதமர் நியமனம். இது பற்றி பல தடவைகள்  வெளிச்சம், வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஹருணி அமரசூரிய ஜே.வி.யை  பிரதிநிதித்துவம் செயபவர் அல்ல என்.பி.பி.யின் பங்காளிகளை பிரதிநிதித்துவம் செய்பவர். தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட முடிவின்படி  அல்லது இன்னும் சொன்னால் ஜே.வி.பி. உயர்மட்ட குழுவின் முடிவின் படி  பிரதமராக ஹருணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை, பதவியும் வழங்கப்படவில்லை. அப்படியானால் நடந்தது என்ன…? என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க  அதிகளவு பெண்கள் திரண்டிருந்த   தென்னிலங்கை தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் தான் வெற்றி பெற்றால் ஒரு பெண்ணை பிரதமராக நியமிப்பேன் என்று பெயரை குறிப்பிடாமல் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதை பத்தோடு பதினொன்றாக – ஜே.வி.பி. தேர்தல் மேடைகளில் அள்ளி வீசிய, நடைமுறைப்படுத்த முடியாத, பொய்யான  மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை போன்று ரில்வின் சில்வா குழு கருதியதால்  அவர்கள் ஆரம்பத்தில் இது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  ஹருணி அமரசூரிய அதிகூடிய நான்கு இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றபோது, அளித்த வாக்குறுதியில் இருந்து மற்ற வாக்குறுதிகள் போன்று  அநுரவுக்கு  விலகி ஓட முடியவில்லை. காரணம் ஹருணிக்கு பின்னால் கொழும்பு மாவட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பொது அமைப்புக்களும் திரண்டிருந்தன.

 இதனால் மூன்று பேர் கொண்ட  இடைக்கால அமைச்சரவை என்ற அடிப்படையிலும், தேர்தல் வாக்குறுதியின் படியும். ஹருணியை பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அவரைத் தவிர்த்து ஆண்களை கொண்ட  இடைக்கால அமைச்சரவையை அமைப்பது இடதுசாரி வேஷத்தை இலகுவாக கழற்றி விடும்.  எனினும் ரில்வின் சில்வா குழுவை பொறுத்த மட்டில் அன்றிலிருந்து இன்றுவரை ஹருணியின் பிரதமர் நியமனம்  ஒரு தற்காலிக நியமனம்தான். பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜே.வி.பியின் தீவிர குழுவினர் பிமல் ரத்நாயக்கா பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தனர். இப்போது உள்ளூராட்சி தேர்தலும் முடிந்து விட்டது.  ஹருணி இன்னும் பிரதமராக இருக்கிறார். அரசாங்கத்திற்குள் நெருப்பில்லாமல் புகை வரவில்லை.  அந்த புகையின் மூச்சு திணறலாகவே  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ  அண்மைய முகப்புத்தக பதிவு அமைகிறது.  “THERE IS NO TURNING BACK ON THE STEPS TAKEN TOWARD SOCIAL PROGRESS” என்ற ஜனாதிபதியின் பதிவையும் மற்றும் அமைச்சர்களின் முரண்பாடான கருத்துக்களையும் பார்க்க வேண்டி உள்ளது. 

ஹருணி – பிமல் விவகாரம்  சிறுபான்மை தேசிய இனங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கும் விடயம் அல்லவே. “எங்களுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கிறது ஏன் ? அவசரப்படுகிறீர்கள்….”? என்று கேட்பதற்கு.  அதிகாரப்பகிர்வு அவசியமற்றது, வடக்கில் இருப்பது பொருளாதார பிரச்சினை என்ற ரில்வின் குழு   ஜனாதிபதியை நெருக்குகிறது. இதனால்  ஹருணியின் பிரதமர் பதவி  நாட்கள் எண்ணப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் அநுரவையும் மீறி சக்தி வாய்ந்த ஒரு “மூத்த ஜே.வி.பி குழு”  காய்நகர்வுகளை மேற்கொள்கிறது. உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஹருணி அமரசூரிய வடக்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.  வடக்கில் -முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஒரு பெண்ணாக அவர் சமாளிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் வடக்கில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகள்  அமைச்சர் இராமலிங்கம் எப்படி வியாக்கியானம் செய்தாலும் ஜே.வி.பி.க்கு எதிர்பார்த்த  திருப்தியை கொடுக்கவில்லை.  பாராளுமன்றத்திற்குள் ஹருணி அக்ரீவ்வாக இல்லாமல் பஷீவ்வாக இருக்கிறார் என்று ரில்வின்-பிமல் அணி குற்றம்சாட்டுகின்றது.  மொத்தத்தில் சொன்னால் ஹருணி  ஒரு ஜே.வி.பி. அரசியல்வாதியாக மாறவேண்டும் என்று ஜே.வி.பி. உயர்மட்டம் எதிர்பார்க்கிறது. ஆனால் அதுதான்  நடக்காது என்று அவருக்கு பின்னால் உள்ள சிவில் அமைப்புக்கள் கூறுகின்றன. ஆக, முறிவு நெருங்கி விட்டது போல்தான் தெரிகிறது.

பிரதமர் ஹருணி  சுத்துமாத்து இல்லாத, நேர்மையான, பெண்ணிய, பின்நவீனத்துவ, சமகால சர்வதேச விவகாரங்களை விளங்கிக்கொண்டு செயற்படும் ஒரு புத்திஜீவி பெண் அரசியல் வாதியாக செயற்பட விரும்புகிறார். இது ஆயுத பாரம்பரியம் கொண்ட ரில்வின் சில்வா குழுவுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. ஆக, ஹருணியை அப்புறப்படுத்தி பிமல் ரத்நாயக்காவை பிரதமராக்க ஹருணி மீது குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக  கொழும்பு  ஏரிக்கரை தகவல்கள் காதில் விழுந்தன. மேலும்  பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக்கல்லாரி  மாணவி  ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான விவகாரத்தில்  கல்வி அமைச்சராக ஹருணி அமரசூரிய  அரசாங்க தரப்பு நியாயங்களை போதுமான அளவுக்கு முன்வைக்கவில்லையாம். இதனால் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் குரல்கள்  உரத்து ஒலிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு  அரசாங்க பலவீனம் வெளிப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால்  ஹருணியை இரண்டு  கதிரைகளில் இருந்தும் ஒன்றாகத் தூக்கினால் மலிவான சரக்கு சந்தைக்கு வந்துவிடும் என்று  அரசாங்கம் தயங்குவதாக தெரிகிறது. 

இதற்கு இடையில்  திருகோணமலை எம்.பி.யும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளது. இதற்கு அவரது வேலைப்பளு காரணம் என்று அரசாங்க தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதுதான் முழுமையான காரணம் என்று கூறுவதற்கில்லை. முக்கியமான காரணம்  திருகோணமலை, மட்டக்களப்பு  மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பி.க்கும் ஜனாதிபதிக்கும் அருண் மீது திருப்தியில்லை. இத்தனைக்கும் அருண் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், ஜே.வி.பி.யின் முழு நேர உறுப்பினருமாகும். அருணுக்கு நெருங்கிய மட்டக்களப்பு வட்டாரங்களின் தகவல்களின்படி படி அருண்  பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் “இராமலிங்கமாக” இல்லாமல்  ஹருணியாக இருக்கிறார் என்பதே முக்கிய குற்றச்சாட்டாகும்.

வடக்கில் இடம்பெற்ற/ இடம் பெறும்  அரசாங்கத்தின் பேரினவாத செயற்பாடுகள் அனைத்தையும் இராமலிங்கம் கண்களை மூடிக்கொண்டு, அரசாங்கத்தை ஆதரிப்பவராகவும், நியாயப்படுத்துபவராகவும் உள்ளார். அவரது தைரியத்தில் வடக்கு ஜே.வி.பி எம்பிக்களும்  ஏதாவது உளறுகின்றனர். வடக்கு தமிழ்தேசிய, சுயேட்சை எதிரணி எம்.பிக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு நீங்கள் இனவாதிகள் என்று பேசிக்கொண்டு இராமலிங்கம் தலைமையில் இவர்களும் பேரினவாதத்தின் பிரதிநிதிகளாகக செயற்படுகிறார்கள். அமைச்சர் இராமலிங்கம் பாராளுமன்றத்தில் மற்றும் உத்தியோகபூர்வ கூட்டங்களில்  மேற்கொள்ளும் “றாளாமி”   அரசியலில் ஜே.வி.பி.திருப்தியாக உள்ளது. அது ஹருணி, அருணிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிழக்கில் அருண் ஹேமச்சந்திரா  அந்தளவுக்கு போகவில்லை. கிழக்கில் அருண் ஒரு இராமலிங்கமாக இருக்கவேண்டும் என்று ஜே.வி.பி. உயர்மட்டம் விரும்பிய இலக்கு அடையப் படவில்லை என்பதால் அவரைத்தூக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு முக்கிய வேறுபாட்டை ஜே.வி.பி. மறந்துவிடுகிறது அமைச்சர் இராமலிங்கம் தேசிய பட்டியலில் வந்தவர் அவருக்கு கூலிக்கு மாரடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அருண் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 38,368 விருப்புவாக்குகளால் மூவின மக்களாலும் தெரிவு செய்யப்பட்டவர். இராமலிங்கத்திற்கு மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயத்தைவிடவும் அருணுக்கான கட்டாயம் அதிகமானது. 

அருணின் அபிவிருத்தி குழு தலைவர் பதவி நீக்கத்திற்கு வேலைப்பளு காரணம் அல்ல என்பதும் அவரின் விருப்புக்கு மாறாக அவர் பதவி பறிக்கப்படவுள்ளது என்பதும், ஜனாதிபதி அண்மையில் நடாத்திய மாவட்ட அபிவிருத்திக்குழு  தலைவர்களின் கூட்ட காணொளி/ படத்தில் அருணின் உடல்மொழி சொல்திறது. நம்ம ஊர் பாஷையில் வடித்தால்  “பேய் அறைந்தவன்” மாதிரி உள்ளார். மட்டக்களப்பில் மாத்திரம் அன்றி திருகோணமலயிலும் அருணின் செயற்பாடு பெரிதாக இல்லைதான். மட்டக்களப்பு வேலைப்பளு என்றால் திருகோணமலையில் செயற்பாட்டு வேகம் இருந்திருக்கவேண்டும். இது முற்றிலும் உள்ளூராட்சி தேர்தலில்  ஜே.வி.பி.யின் பின்னடைவு, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் பேரினவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தாமை, அரசாங்க உள்ளக சந்திப்புக்களில் தனக்கு உடன்பாடில்லாத விடயங்களில் கேள்வி எழுப்பியமை போன்ற பல காரணங்கள் பின்னணியில் உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பாராளுமன்றத்தில் மட்டக்களப்பின் ஐந்து எம்.பி.க்களில் ஒருவர் மட்டுமே அரசாங்க எம்.பி. அவரும் மற்றைய நான்கு பேருடன் ஒப்பிடும்போது அக்ரீவ்வானவர் அல்ல. அதனால் மற்றைய சக எம்.பி.க்களை ஆட்சேபித்து பதிலளிக்ககூடிய நிலையில் அவரும் இல்லை. பாராளுமன்ற விவாதங்களை அவதானித்தால் ஹிஸ்புல்லா, சிறிநாத், சிறிநேசன், சாணக்கியனின் கேள்விகளுக்கு அதிகம் பதில் அளிப்பவர் பிமல் ரத்நாயக்காவாகவே உள்ளார்.  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் என்ற வகையில்  அருண் இவர்களோடு மோதவேண்டும்  என்று  அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இது பிரபுவின் முள்ளந்தண்டுக்கு வலுச்சேர்க்கும் என்பது  அரசாங்க கணக்கு. இதற்காகவே அரசாங்க அதிகாரிகளை அரசியல் மயப்படுத்தவும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஒரு வழிக்கு கொண்டுவரவும் அருணின் பதவி பறிக்கப்படவுள்ளது. வடக்கின் இராமலிங்கமாக மாத்தறையில் இருந்து ஹேந்தி நெட்டி இறக்குமதி செய்யப்பட இருப்பதாக தகவல்.

  இன்றுள்ள இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மாதிரியானது முதன்முதல் 1970 களில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. அரசாங்க ஆதரவு மட்டக்களப்பு எம்.பி. இராஜன் செல்வநாயகம் மாவட்ட அரசியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் இந்த பதவிப்பெயரை “மாவட்ட அமைச்சர்” என்று மாற்றியது.  அரசாங்க ஆதரவு பொத்துவில் எம்.பி. எம்.சி. கனகரெட்ணம் மட்டக்களப்பிற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த  பதவி மாவட்ட அபிவிருத்தி குழு/ மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்று மாற்றப்பட்டது. நல்லாட்சியிலும்  மட்டக்களப்பு தமிழத்தேசியகூட்டமைப்பு, முஸ்லிம்  காங்கிரஸ் எம்.பி.க்கள்  ஜனாதிபதிகாளால் நியமிக்கப்பட்டனர். இறுதியாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சி. சந்திரகாந்தன் எம்.பி. இருந்தார். இவர்களில்  எம்.சி.கனகரெட்ணம் தவிர அனைவரும்  மட்டக்களப்பு மாவட்ட பெரும்பான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். கனகரெட்ணம் போன்றே அயல் மாவட்டத்தில் இருந்து அருண் நியமிக்கப்பட்டார்.

இப்போது நடப்பது என்ன? கடந்த 50 வருடமாக  கிழக்குமாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு இருந்த உரிமையை அநுர அரசாங்கம் மறுத்திருக்கிறது. அருண் இல்லாவிட்டாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் பலர் உள்ளனர் அப்படியிருந்தும் அருணிடம் பறித்து தென்னிலங்கை ஜே.வி.பி. அமைச்சர் சுனில்  ஹெந்துன் நெத்தி நியமிக்கப்பட இருப்பதன் மர்மம் என்ன. இதுவும் “இலங்கையராதல்” திட்டத்தின் கீழ், அல்லது கிளீன் சிறிலங்காவின் கீழ் பேரினமயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியா? அரசாங்க முகவர்களாக மாகாண ஆளுநர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள், அரசாங்க அதிபர் இப்படி மத்திய அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கு நிர்வாகக் கட்டமைப்பை கட்டிப்போட அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனூடாக நேரடி ஆளும் ஜே.வி.பி.யின் கட்சி அரசியல் நிர்வாகத்துறையில் புகுத்தப்படுகிறது. அதுவும் அந்த பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் அன்றி ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகள் நியமிக்கப்பட்டு கட்சி அரசியல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 மாவட்ட அரசாங்க அதிபர்கள்  மட்டக்களப்போடு தொடர்பற்ற, மட்டக்களப்பு மக்களால் தெரிவு செய்யப்படாத  அரசியல் வாதிகளுக்கு இடையே பாக்குவெட்டியில் இடுக்கிய பாக்காக சுதந்திர செயற்பாட்டை இழக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தல் பின்னடைவுக்கு பின்னர் தென்னிலங்கையில் ஜே.வி.பி.க்கு   மக்கள் ஆதரவு குறைந்துள்ள நிலையில் அதை வடக்கு கிழக்கை கொண்டு நிரப்பவும்,  வடக்கு கிழக்கில் ஜே.வி.பி. வலிந்து பெறும் ஆதரவைக்காட்டி  மாகாணசபைகளை மழுங்கடிக்கவும் திட்டமிட்டு இந்த அரசியல் மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரப்பகிர்வக்கான மாகாணசபை முறைமையை  இல்லாமல் செய்யும் அரசியல் பயணத்தின் ஒரு பகுதி இது. வடக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் உறவும், கிழக்கில் தமிழரசு – முஸ்லீம் காங்கிரஸ் உறவும், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் இணைவும் வடக்கு கிழக்கில் ஜே.வி.பி. இந்த தந்திரோபாயங்களை முன்னெடுக்க காரணமாகும். ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளையும், மற்றைய கட்சிகளையும், முஸ்லீம் காங்கிரஸையும் இணைத்த பெருமை உண்மையில் ஜே.வி.பி.க்கே உரியது. வடக்கு கிழக்கில்  கடந்த ஏழு மாத காலத்தில்  ஜே.வி.பியின்  “இலங்கையர்கள் ” முலாம் பூசப்பட்ட  இன, மதவாத அரசியலை  சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனம் கண்டுகொண்டதன் விளைவு இது. இதனால் ஜே.வி.பி. தென்னிலங்கையில் பழைய அரசியல் எதிரியோடு, வடக்கு கிழக்கில் ஒரு புதிய அரசியல் எதிரியை தானாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.