போர்வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும்

போர்வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி. ) 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மே 14 ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தங்களது இயக்கத்தை வழிநடத்திய மனச்சாட்சி பற்றி நிறையவே பேசினார். வரலாறு பூராவும் தங்களது மனச்சாட்சி சரியான பாதையைக் காட்டி வந்திருப்பதாகவும் எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் கூட மனச்சாட்சி தங்களுக்கு துணிவாற்றலைக் கொடுத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். அந்த மனச்சாட்சியைப் பாதுகாப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து நாட்கள் கழித்து மே 19 ஆம் திகதி பத்தரமுல்லவில் இடம்பெற்ற 16 வது  தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்பது தொடர்பில் முன்கூட்டியே உறுதியான தீர்மானத்தை எடுப்பதில் ஜனாதிபதி திசநாயக்க தடுமாறியதற்கு அந்த மனச்சாட்சியின் உறுத்தல் தான் காரணமோ தெரியவில்லை. போர்வீரர்களை கௌரவிப்பதற்கு வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் அந்த நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கொள்கை அடிப்படையிலான ஒரு தீர்மானத்தை அவர்  எடுத்திருப்பார் என்று கூறமுடியாது.

ஆனால், ஜனாதிபதி திசநாயக்கவும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர தலைமையில் நிகழ்வு நடைபெறும் என்றும்  முதலில் அறிவித்த அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களிடம் இருந்து வந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து அந்த அறிவிப்பு தவறான தொடர்பாடலின் விளைவானது என்று பிறகு மறுதலித்ததை எத்தனை பேர் நம்பினார்களோ தெரியவில்லை.

இறுதியில் ஜனாதிபதி போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்க முடியவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு ஊக்கத்தை  கொடுத்ததை  ஜே.வி.பி. எப்போதும் பெருமையாகப் பேசிக்கொள்கிறது.  அதன்  இன்றைய தலைவர் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் முப்படைகளினதும் பிரதம தளபதியாக இருக்கும் நிலையில் போர்வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு தொடர்பில் ஒரு தடுமாற்றத்தை காட்டிய காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 

ஜே.வி.பி. போரை ஆதரித்த வேளையில் அதன் தலைவராக காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவே இருந்தார் என்ற போதிலும், போரைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் திசநாயக்க வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார் என்பதற்கு எந்தப் பதிவும் கிடையாது. அவரின் தலைமையின் கீழ்தான் தேசிய மக்கள் சக்தியில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பிரிவுகள் அமைக்கப்பட்டன.

அதேவேளை, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரான கடந்த ஆறு மாதகாலப் பகுதியில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளில் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மூன்று தசாப்தகால போரின் விளைவாக ஏனைய சமூகங்களை விடவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்பது குறித்து ஜனாதிபதி  தயக்கத்தைக் காட்டியிருக்கக்கூடும் என்று நம்புவதும் கஷ்டமாக இருக்கிறது.

எது எவ்வாறிருந்தாலும், தேசியவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய கடுமையான  விமர்சனங்களை அடுத்தே ஜனாதிபதி தனது மனதை மாற்றிக் கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் உட்பட சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசியவாத சக்திகளிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களை ஜனாதிபதி திசநாயக்க எவ்வாறு கையாளுவார் என்பதற்கு போர்வீரர்கள் நினைவு நிகழ்வு கட்டியம் கூறிநிற்கிறது எனலாம். 

உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பிறகு சிங்கள பௌத்த தேசியவாதம் போர்வெற்றிவாதத்துடன் பின்னிப்பிணைந்துவிட்ட ஒரு பின்புலத்தில், நாட்டின் ஐக்கியத்தையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்று பெரும்பான்மையின மக்கள் போற்றி வணங்கும் போர்வீரர்களின் நினைவை அவமதிப்பதாகத் தோன்றக்கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்வது ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அரசியல் ரீதியில் கட்டுப்படியாகாது. அதனால், தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்கும் விடயத்தில்  ஒரு பொருந்தாத்தன்மைக்கு ஜனாதிபதி தன்னை ஏன் உட்படுத்தினார்  என்பது பெரிய புதிராக இருக்கிறது.

கடந்த வருடம் நடைபெற்ற 15 வது தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வு அன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்தான் நடைபெற்றது. முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்ற அதேவேளை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அங்கு காணவில்லை.  ஆனால், அந்த நேரத்தில் எந்த சர்ச்சையையும் கிளப்பாத எதிர்க்கட்சிகளும் தேசியவாத சக்திகளும் ஜனாதிபதி திசநாயக்க விடயத்தில் போர்க்குரல் எழுப்பியிருக்கின்றன. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் இருந்தும் இனவாத அரசியல் சக்திகளிடம் இருந்தும் வந்த நெருக்குதல்கள் காரணமாகவே ஜனாதிபதி போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு  முதலில் தீர்மானித்தார் என்று கூட உதய கம்மன்பில போன்றவர்கள் கூறினார்கள். 

ராஜபக்சாக்கள் அதிகாரத்தில் இருந்து இறங்கிய பிறகு  முதற்தடவையாக தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போர்வீரர்கள் நினைவு நிகழ்வை கடந்த வாரம் ‘தாய்நாட்டின் உண்மையான சுதந்திரம்’ என்ற தலைப்பில்  தனியாக நடத்தினார்கள். முதலில் போரைப் பயன்படுத்தி  பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்த அவர்கள் போரின் முடிவுக்கு பிறகு போர் வெற்றிவாதத்தை பயன்படுத்தி அதே அணிதிரட்டலைச் செய்தார்கள். ஆனால்,  தவறான ஆட்சிமுறை, அதிகார துஷ்பிரோகம், குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் ஊழல் காரணமாக  ராஜபக்சாக்கள் அதிகாரத்தில் இருந்து மக்களால் விரட்டப்பட்டார்கள். மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு   பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை தவிர வேறு மார்க்கம் கிடையாது என்ற நிலையில், தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ராஜபக்சாக்கள் பயன்படுத்துவதற்கு தவறமாட்டார்கள். 

தங்களது ஆட்சிக்காலத்திலேயே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதால் சிங்கள மக்கள் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு எண்ணத்தை  ராஜபக்சாக்கள்  கொண்டிருக்கிறார்கள். போர்வெற்றிக்கு தங்களைத் தவிர வேறு எவருக்கும் ‘நியாயபூர்வமான உரிமை’ கிடையாது என்பது அவர்களின் நினைப்பு. மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்துவிட்டாலும் கூட, தேசியவாத சக்திகள் தங்களை மீள அணிதிரட்டுவதற்கு நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் சக்திகளாக  ராஜபக்சாக்கள் இன்னமும் கூட விளங்குகிறார்கள். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்க தலைவர்கள் ஓயாது கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களது அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து அவர்களை தூரவிலக்கிக்கொண்டே வருகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளை கையாளுவதில் முன்னைய அரசாங்கங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்று வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியவாத கட்சிகள் பிரசாரம் செய்து உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் மீண்டும் ஆதரவை பெறக்கூடியதாக நிலைவரம் மாறியிருக்கிறது.

ஆனால், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள இயலாமை காரணமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கின்ற அதேவேளை, சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை அந்நியப்படுத்திவிடக் கூடாது என்பதில் அது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. 

பொருளாதார நெருக்கடி உட்பட சகல சமூகங்களையும் பாதிக்கின்ற  பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்ப இயலாமல் இருக்கும் எதிரணி கட்சிகளும் தேசியவாத சக்திகளும் இனவாத அரசியலின் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான வியூகங்களை வகுப்பதில் நாட்டம் காட்டக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி மீதான கண்டனங்கள் இதற்கு ஒரு சான்று.

என்றாலும்,  போர்வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி திசாநாயக்க நிகழ்த்திய உரை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். அந்த நிகழ்வை ராஜபக்சாக்கள் போன்று போர் வெற்றியை நினைவுபடுத்தி மகிழ்வதற்கான ஒரு கொண்டாட்டமாக கருதக்கூடாது என்பது அவரின் சிந்தனையாக இருக்கிறதுபோன்று தெரிகிறது. ஏனென்றால், அவர் போரில் இறந்த படையினரை ‘போர்வீரர்கள்’ என்று இல்லாமல் ‘படையினர்’ என்று அழைத்ததுடன் போரின் துன்பக்கதையை பற்றி பேசினார். 

“நாட்டில் நிலைபேறான சமாதானத்தை தோற்றுவிப்பதே தங்களது உயிர்களைக் கொடுத்தவர்களுக்கு நாடு வழங்கக்கூடிய அதியுயர்ந்த வடிவிலான நீதியாகும். இந்த நினைவு நிகழ்வு வெறுமனே போரின் முடிவை நினைவுகூருவது மாத்திரமல்ல, சகல சமூகங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கும்  பிளவுகள் மீண்டும் தூண்டிவிடப்படுவதை அனுமதிக்காமல் சகோதரத்துவத்துவம் மற்றும் இணக்கப் போக்கின் அடிப்படையிலான தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கும் சூளுரைப்பதற்கான நிகழ்வுமாகும். 

“போர் ஒரு துன்பியல் நிகழ்வு. சொல்லொணா சோகத்தை அனுபவித்த ஒரு தேசம் என்ற வகையில் மீண்டும் அத்தகைய மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டியது எமது கடமையாகும். சந்தேகம்,  கோபம் மற்றும் வெறுப்புக்கு பதிலாக சமாதானம்,  ஐக்கியம், பரிவு ஆகியவற்றை தனிச்சிறப்புகளாகக் கொண்ட தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பாடுபடவேண்டும்.

“தெற்கில் மாத்திரமல்ல, வடக்கிலும் தங்களது கணவர்களினதும் பிள்ளைகளினதும் படங்களை ஏந்திய வண்ணம் வீதிகளில் மக்கள் நிற்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளைகள்  விலைமதிப்பற்றவர்களே.  அதனால், பாரிய அனர்த்தம் ஒன்றுக்கு முகங்கொடுத்த ஒரு நாடு என்ற வகையில் எமது மண்ணில் மீண்டும் போர் ஒன்று மூளுவதை தடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்” என்று ஜனாதிபதி தமதுரையில் கூறினார். 

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த படையினரை கௌரவித்து நினைவு கூர்ந்த போதிலும், போர்வெற்றி பற்றி ஜனாதிபதி கூறாமல் விட்டது இதுவரையான போர்வீரர்கள் நினைவு நிகழ்வுகளில் இருந்து கடந்த வாரத்தைய நிகழ்வை வேறுபடுத்துகிறது. சமாதானத்துக்கும் முன்னேற்றத்துக்குமான புதிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சகலரும் ஐக்கியப்பட வேண்டும் என்ற அழைப்புடன்  திசாநாயக்க தனது உரையை நிறைவு செய்தார். 

போர்வெற்றியில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்பதை உணர்த்திய அவரின் உரையை சிங்கள தேசியவாத சக்திகள் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றன.  ஆனால், தமிழ் அரசியல் சக்திகள் அவரது உரையை வரவேற்காதது துரதிர்ஷ்டவசமானது. கடந்த காலத்தில் தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வுகளை இனப்பிளவை மேலும் ஆழமாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகளை  விடவும் வேறுபட்ட முறையில் கையாளுவதற்கு முன்வந்ததன் மூலமாக ஜனாதிபதி கூறிய செய்தி சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். மே 19 போரைப் புகழ்பாடிப் போற்றுவதற்கான தினம் அல்ல.