– தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் –
கடந்த அரசியல் பத்தியிலே இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியல் இராஜதந்திரம் அற்றது என்பதைச் சுட்டிக்காட்டி பத்தியின் முடிவிலே உள்நாட்டில் (இலங்கையில்) வடக்கு கிழக்குத் தமிழர்கள் அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் பின்னேயும் வெளிநாடுகளில் (புலம்பெயர் தேசங்களில்) வாழும் தமிழர்கள் இலங்கை நலனுக்கான உலகளாவிய தமிழர் அமைப்பின் பின்னேயும் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் உட்பட அத்தனை பகை முரண்பாடுகளையும் கடந்தும் களைந்தும் அணி திரள வேண்டுமென்று அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்த சில அரசியல் யதார்த்தங்களை -அரசியல் களநிலைகளைப் பேச வேண்டியுள்ளது. இந்த யதார்த்தங்களைப் பேசுவதால் தாம்தான் அல்லது தாம் மட்டும்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் எனவும் -பிரபாகரனின் வாரிசு தாமே எனவும் தமக்குள்ளே ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டு தம்பட்டம் அடித்துத் திரியும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் முகம் சுழிக்கக்கூடும்.
ஆனால், யதார்த்த நிலை மக்களுக்குத் தெரிய வேண்டுமென்பதால் அதனைப் பொதுவெளியில் பகிரங்கமாகப் பேசவேண்டியுள்ளது. அதனால் இவர்களுடைய முகச்சுழிப்பைப் புறக்கணிக்கவேண்டியுள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பெற்று அதன் கீழ் இலங்கை அரசியலமைப்புக்கான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து இன்று வரைக்கும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நிராகரித்தவர்களும் – 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமேயில்லை என்றவர்களும் -13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சனைக்கான திருப்தியான தீர்வாகாதென்று கூறி அதன் அமுலாக்கலிலிருந்து பட்டும் படாமல் ஓடும் புளியம்பழமும் போல ஒதுங்கி நின்றவர்களும்-இடையில் 13 ஆவது திருத்தச் சட்டம் காலாவதியாகிவிட்டது என்று கூறியவர்களும்-13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம்; புதிய அரசியலமைப்பு மூலம் ‘சமஷ்டி’ தான் வேண்டும் என்று ஆர்ப்பரித்தவர்களும் கூட இன்று 13 ஆவது திருத்தத்தின் முழுமையான – முறையான அமுலாக்கலை வேண்டி இலங்கை ஜனாதிபதியிடமும் இந்தியப் பிரதமரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்களென்றால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ‘பிச்சை வேணாம்! நாயைப் பிடி’ என்ற நிலைமைதான் இது. ஆனால், இதுதான் யதார்த்தம் என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லையெனில் பிச்சையும் கிடைக்காது; மாறாக கிடைப்பது ‘நாய்க் கடி’ யாகத்தானிருக்கும். அப்போதும் கூட ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ என்ற வீறாப்பு தமிழர்களை விட்டுப் போகாது.
இது மகிழ்ச்சிக்குரியதல்ல. ஆனால், இந்த நிலைமையை ஏற்படுத்தியதில் 1987 இலிருந்து ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்களையோ அல்லது அரசுத் தலைவர்களையோ- இந்திய அரசாங்கங்களையோ அல்லது இந்திய அரசுத் தலைவர்களையோ மட்டும் குறை கூற முடியாது. இந்த நிலைமை ஏற்படுவதற்குத் தமிழர் தரப்பும் காரணம்தான். அதை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஈழத் தமிழர் தரப்பிடம் ஓர் உளவியல் குறைபாடு உண்டு. அது என்னவெனில் தாங்கள் செய்தது/செய்வது எல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் சரி; மற்றவர்கள் (இலங்கை அரசாங்கங்கள், இந்தியா, மத்தியஸ்தம் வகிக்க வந்த நோர்வே, ஐநா, சர்வதேச நாடுகள்) செய்தது/செய்வதெல்லாம் பிழை என்று சிந்திப்பதும் செயற்படுவதுமாகும்.
தாம் சொல்லுகிறபடிதான்-எண்ணுகிறபடிதான் எல்லாம் நடைபெற வேண்டும்; தாம் சொல்கிற திசையில்தான் சூரியன் உதிக்க வேண்டும்; தாம் சொல்கிற படிதான் பூமி சுற்ற வேண்டும்; ஏன் இந்தப் பிரபஞ்சமே கூட தாம் நினைக்கிறபடிதான் இயங்கவும் வேண்டும் என்பது. இல்லையேல் இவையெல்லாமே ஈழத் தமிழினத்தின் ‘துரோகி’கள்.
முதலில் தமிழர் தரப்புக்கு இந்த உளவியல் மாறவேண்டும். அரசியலில் உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்பவே காய்களையும் நகர்த்த வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான, முறையான அமுலாக்கலென்றாலும் சரிதான் அல்லது புதிய அரசியலமைப்பின் ஊடான வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’ க் கட்டமைப்பென்றாலும் சரிதான் – இலங்கையின் எந்த அரசாங்கமும் மனம்மாறி அல்லது மனம் விரும்பி சம்மதிக்கப் போவதில்லை. அதாவது தானாகக் கனியப் போவதில்லை.
இவற்றிற்குப் புற அழுத்தம் தேவை. அத்தகையதோர் அழுத்தத்தை இந்தியாவினால் மட்டுமே தீவிரப்படுத்தவோ தீர்மானிக்கவோ முடியும். ஈழத் தமிழர்களின் கனவான ‘தமிழீழ’ த்தனிநாடு என்றாலும் சரிதான் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போல் ஐநாவோ அல்லது சர்வதேச நாடுகள் எதுவுமோ உதவ வந்தாலும் கூட அதைத் தீர்மானிக்கும் காரணியாக இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாதான் இருக்கும். இந்தியாவை மீறியோ அன்றி விலத்தியோ எதுவும் நடவாது. இதுவே பட்டவர்த்தனமான உண்மை. இந்த அரசியல் யதார்த்தத்தை ஈழத் தமிழர்கள் கடந்து செல்லவே முடியாது.
கடந்த காலங்களில் (1987 இலிருந்து இன்று வரை) ஈழத் தமிழர் தரப்பின் அரசியல் தலைமைகளும் ஆயுதப் போராட்டத்தைத் தனது ஏகபோக அதிகாரமாகக் கையிலெடுத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இழைத்த அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால், ஈழத் தமிழர்கள் மீது இந்தியா கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து போயுள்ளது அல்லது இல்லாமற் போயுள்ளது. இந்த நம்பிக்கையீனம்தான் எல்லாவற்றிற்கும் தடையாகவும் (Bottle neck) எதிர் மறைக் காரணியாகவும் (Negative factor) உள்ளது. இந்தத் தடையை அகற்றுவதாயின் ஈழத் தமிழர்களின் மீதான இந்தியாவின் நம்பகத் தன்மையை சந்தேகத்திற்கிடமின்றி மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான அரசியல் வரைபடம்தான் இன்றைய அவசரத் தேவையாகும்.
எனவே, இன்றைய அரசியற் கள யதார்த்த நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை உளப்பூர்வமாகவும் முழுமையாகவும் அனுசரித்து 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான – முறையான அமுலாக்கலுக்கு அரசியல் ரீதியாகக் களமிறங்குவதும் அதற்குப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதும்தான் புத்திசாலித்தனமான அரசியல் நகர்வு ஆகும்.