தீட்டு (கவிதை)

தீட்டு (கவிதை)

– யோ.துசாந்தினி

               கிளிநொச்சி –

பக்குவப்படா கன்னியின்

கழுத்தில் கனக்கத் துடிக்கும்

கரமேந்தும் தாலியும்

தீட்டு

மனப் படிவுகளில் செப்பனிட்ட                                                                                                                                அவள்; கனவுக் கல்வி

வாசற் படிதாண்ட விடாதோர் 

சிரமேந்தும்; கௌரவ வேலியும்

தீட்டு

கற்பினைத் தேடுபவன்

மனைவியின் உடலை உறுத்தும்

கட்டில் தீவிரவாதமும்

தீட்டு

கருத் தொட்டிலில் தவழும் சிசுவுக்கு

தனிப்பாலின ஆதிக்கப் பெயர்களின் 

விரைவுத் தேடலும்

தீட்டு

தப்பிக்க நினைப்பவர்

வாழ்வைக் கடத்தும்

தற்கொலைக் கயிறும்

தீட்டு

தாய்மை தன்மையிழந்து

தன்பிள்ளை உயிர் உரிக்கும்

தடம் மாறுபவள் 

கானல் காதலும்

தீட்டு

நிறுத்த முடியா

முத்திரையிடலை அவளுடலில் தொடரும்

அவன் கரத்து அச்சாணிகளும்

தீட்டு

நிராயுதக் குழந்தையிடம்

நீ பாய்ச்சும் காம 

விடாயுத முத்தங்களும்

தீட்டு

அருகிருந்தும்

ஓர் உயிர் காக்கா

உன் கை ஈனும்

உண்டியல் பணமும்

தீட்டு

ஆடையிட்டிருந்தாலும்

அவளை ஊடறுத்து நோக்கும்

ஆதிக்க விழிகளும்

தீட்டு

தவறவிடப்பட்ட தந்தையின்

கனவை

தன் பிள்ளை இலட்சியத்துள் திணிக்கும்

தத்துவப் பேச்சும்

தீட்டு 

இத்துணையும் இருக்கும்

பட்டியலை விடுத்து

எட்டிப்பிடித்தேன் தொங்குகிறீர்கள்

எங்கள் ஏழு நாட்களில்?

மறந்துவிட்டீரா

ஓடும் குருதியது

ஒழுகும் துவாரத்தின் 

புனிதம் கெடுப்பதில்லையென்பதனையும்

அவ்வொழுகும் வழியினூடகவே

உங்கள் ஓட்டம் தொடங்கியதென்பதையும்

யோ.துசாந்தினி

கிளிநொச்சி