வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

வாக்குமூலம்-64 ‘ (அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

-தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்-

1949 ஆம் ஆண்டு  எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழ்த் தேசியம்-தமிழர் தாயகம்-சுய நிர்ணய உரிமை மற்றும் இறைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் முதலில் ‘சமஷ்டி’ க் கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலிருந்து பல படிமுறைகளைக் கடந்து, ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கையகப்படுத்தப் பெற்ற தமிழீழத் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இதுவரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை ஈடு செய்யும் வகையில் திருப்தியானதொரு தீர்வைப் பெற்றுத் தரவில்லை என்பது நிதர்சனமானதே.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரசாங்கப்படைகளுக்கும் இடையிலான (இறுதி) யுத்தம் முடிவுக்கு வந்த 2009 மே 18 வரைக்குமான, தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியல்-தமிழீழத் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டம் பற்றியெல்லாம் நிறையவே பொதுவெளியில் பேசப்பட்டுள்ளன.

தமிழரசுக் கட்சியும் அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியையே தாய்க்கட்சியாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் முன்னெடுத்த அறப்போராட்டங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்தே ஆரம்ப காலங்களில் அதிகம் பேசப்பட்டாலும் காலவரையில் அவை குறைந்து போய் பிரபாகரன் தலைமையிலே முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம்தான் அதன் சரிபிழைகளுக்கு அப்பால் 1987 இலிருந்து 2009 வரை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் (புலம்பெயர் தேசங்களிலும்) ஈழத் தமிழர்களை ஆட்கொண்டிருந்தன என்பதும் உண்மைதான். யுத்தம் முடிந்த பின்னரும் நிலைமை இதுதான்.

2009 மே 18 ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்-போர்க் குற்றங்கள்-அப்பாவித் தமிழர்களின் உயிர் மற்றும் உடைமை இழப்பு-இவற்றிற்குக் காரணமாயிருந்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியெல்லாம் சர்வதேச மட்டங்களில் நிறையவே பேசப்பட்டுள்ளன. பேசப்பட்டும் வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் இவை குறித்த தீர்மானங்கள் 2012 இலிருந்து அதன் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்த 2009 இலிருந்து கடந்த பதினான்கு ஆண்டுகளாக இந்தச் செயற்பாடுகள் ‘அனுமார் வால்’ போல் நீண்டு கொண்டே செல்கின்றன.

வெளிநாடுகளில் (புலம்பெயர் தேசங்களில்) நிலைமை இதுவென்றால் உள்நாட்டில் (இலங்கையில்) இறுதி யுத்தத்தை நடத்தி முடித்துவைத்த ராஜபக்சாக்கள் உட்படப் பௌத்த – சிங்களப் பேரினவாத சக்திகள் அனைத்தும் யுத்த வெற்றியைக் காட்டி அரசியல் செய்ய, அதற்குச் சம்மாந்தரமாகத் தமிழ்த் தேசிய அரசியற் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் ஊடகங்களால் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்ட ஏனைய தமிழ்க் கட்சிகளும் யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளைக் காட்டி அரசியல் செய்யும் செயற்பாடுகள்தான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவையும் ‘அனுமார் வால்’ போல் நீண்டு கொண்டே செல்கின்றன.

இன, மத நல்லுறவு-தேசிய நல்லிணக்கம்-தேசிய ஒருமைப்பாடு-இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு-யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிலை மாறுகால நீதி மற்றும் நிவாரணங்கள் எதுவுமே நடைபெறவில்லை. மாறாக இவைகளைப் புறந்தள்ளுகின்ற செயற்பாடுகளே இருதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உள்ள அதிகார வர்க்கம் பயன்பெற, இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்களே-விளிம்பு நிலை மக்களே-யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பலியாகி வருகின்றனர்.

இப்படிப் பிரச்சினைகள் (அதில் பொருளாதார நெருக்கடியும் ஒன்று) ‘அனுமார் வால்’ போல் நீண்டு கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் இடையிலே கடந்த வருடம் (2022) அதன் சரி பிழைகளுக்கு அப்பால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டுச் செல்லும் அளவுக்கு அரசியல் நெருக்கடி உருவாகி, அவரின் இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வரும் சற்றும் எதிர்பாராத ஓர் அரசியல் மாற்றம் அல்லது அரசியல் விபத்து உள்நாட்டில் (இலங்கையில்) நிகழ்கிறது.

இந்த அரசியல் மாற்றத்தை அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது அரசியல் கோட்பாட்டு ரீதியாகவோ விமர்சனங்களுக்கு உட்படுத்துவதைத் தவிர்த்து (அது தமிழர் தரப்பிற்கு அவசியம் இல்லை) இம்மாற்றத்தைத் தமிழர் தரப்பு அரசியல் சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது அல்லது எவ்வாறு தந்திரோபாயமாகப் பயன்படுத்திக் கொண்டது (அதுதானே அரசியல்) என்பதை அறிவு பூர்வமாக-யதார்த்த பூர்வமாக ஆராய்வதும் இப் பத்தி எழுத்தின் நோக்கமாகும்.

  எவ்வளவுதான் தமிழ்க் கட்சிகள் அவ்வப்போது தனியாகவும் கூட்டாகவும் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், ஒப்பீட்டளவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘இருதேசம் ஒரு நாடு’ எனும் தனிக்காட்டுத் தர்பார் அரசியலைக் காட்டிலும்-டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் சமகாலத்தில் பேசும் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும் இணக்க அரசியலைக் காட்டிலும்-கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான ‘கிழக்கின் தனித்துவ’ அரசியலைக் காட்டிலும்-தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனின் ‘தனி வழி’ ச் சமஸ்டி அரசியலைக் காட்டிலும்-தமிழரசுக் கட்சியுடன் இதுவரையில் இருந்த உறவுகளையெல்லாம் அறுத்துக் கொண்டு தமிழரசுக் கட்சியைத் தனியே விட்டுவிட்டு ‘பழைய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ரெலோ+ புளொட்+ஈ பி ஆர் எல் எஃப் கூட்டான ‘குத்து விளக்கு’ச் சின்னத்தைக் கொண்டிருக்கும் ‘புதிய’ கூட்டமைப்பின் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ அரசியலைக் காட்டிலும், இரா சம்பந்தன் தலைமையில் (தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ‘பொம்மை’த் தலைவராக இருக்க) முன்னெடுக்கப்படும் தமிழரசுக் கட்சியின் அரசியல்தான் அவை தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காது விட்டாலும் கூட-சில வேளைகளில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தினாலும் கூட-அதன் சரி பிழைகளுக்கும் அப்பால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகம் கவனிப்புக்குள்ளாகிறது.

இந்த எடுக்கோளின் அடிப்படையில்தான் சில விடயங்களை நோக்குவோம்.

* யுத்தம் முடிந்த பின்னர் 2010ல் நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்திற்கு அரச ஆணை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அதே யுத்தத்திற்கு இராணுவத் தலைமையேற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ரணில் விக்கிரம சிங்கவுடனும் சேர்ந்து நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) ஆதரித்ததால் சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது? 

* யுத்தம் முடிந்த பின்னரும் ஜனாதிபதியாக 2010 இல் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு (13+) தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நின்று (இந்திய ராஜதந்திரிகள் இத் தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படி அறிவுறுத்தியும் கூட) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) பகிஸ்கரித்ததால்  சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது? 

* 2015 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இறுதி யுத்தத்தின் போது பதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நின்று ஆதரித்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) சாதித்தது என்ன? இதில் என்ன இராஜ தந்திரம் இருந்தது? 

* 2015 -2019 வரையிலான நான்கு ஆண்டுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன+ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டான ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு எந்த நிபந்தனைகளுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முட்டுக் கொடுத்ததால் சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது? 

* 2018 ஒக்டோபரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த போது மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியை நீதிமன்றம் வரை கூடச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) காப்பாற்றியதால் சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது? 

* 2019 இல்நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாசாவைத் (ஐக்கிய தேசியக் கட்சி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) இறுதி நேரத்தில் (அதுவரை நடுநிலை வகிக்கப் போவதாகக் கூறிவிட்டு) ஆதரித்ததால் சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது? 

* ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் காலிமுகத்திடலில் நடைபெற்ற ‘அறகலய’ப்  போராட்டத்திற்குத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும் சாணக்கியனும் ஆதரவு காட்டியதன் மூலம் சாதித்தது என்ன? இதில் என்ன இராஜதந்திரம் இருந்தது?

சாதனைகள் என்ற வார்த்தைப் பிரயோகம் ஒரு புறமிருக்கட்டும், யுத்தம் முடிந்த 2009 இல் இருந்து கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியைக் கைவிட்டுவிட்டு நாட்டை விட்டு அகன்ற 2022 வரை சுமார் பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ராஜபக்சாக்களை மூர்க்கமாக எதிர்த்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த ஒரு சிறு சமூக-பொருளாதார-அரசியல் நன்மையாவது உண்டா? இதைத்தானா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) இராஜதந்திரப் போராட்டம் என்று ‘தம்பட்டம்’ வேறு  அடித்துக் கொள்கிறது.

கடந்த 2009 இல் இருந்து 2022 வரை ராஜபக்சாக்களை மூர்க்கமாக எதிர்த்து எந்த ரணில் விக்கிரமசிங்கவோடும் ஐக்கிய தேசிய கட்சியோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) ‘அரசியல் தாம்பத்தியம்’ நடத்தியதோ அந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் மீண்டும் பிரதமராகிப் பின் இப்போது ஜனாதிபதியாகவும் வந்துள்ளார்.

 இப்போது என்னவென்றால், எல்லாம் தலைகீழாக மாறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) ரணில் விக்ரமசிங்கவையும் அவரது ஜனாதிபதி நியமனத்தையும் மூர்க்கமாக எதிர்க்கிறது. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு விதிகளின்படிதானே அவர் ஜனாதிபதியாகப் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும் சாணக்கியனும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியுமுள்ளனர். சாடியும் வருகின்றனர். அன்று ஐக்கிய தேசியக் கட்சியோடும் ரணில் விக்கிரமசிங்கவோடும் சேர்ந்து நின்று ‘அரசியல் தாம்பத்தியம்’ நடாத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) இப்போது ‘அரசியல் விவாகரத்து’ க் கோர முற்பட்டுள்ளது.

 அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை; சஜித் பிரேமதாசவுக்காக மட்டுமே அரசியல் செய்கிறதா?

இது என்ன விசித்திரமான அரசியல் என்று விளங்கவில்லை. இந்த அரசியலால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா?

தந்தை செல்வா காலத்துத் தமிழரசுக் கட்சி அரசியலில் இராஜதந்திரம் இல்லாவிட்டாலும் இராஜதர்மமாவது இருந்ததென்று கூறுவர். ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) அரசியலில் தர்மமும் இல்லை; தந்திரமும் இல்லை. தன்னலம்தான் உண்டு.

இப்படியாகத் தமிழர் தரப்பு அரசியலானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) அரசியல் இராஜதந்திரமுமற்று இராஜ தர்மமுமற்றுக் குழம்பிப்போய் எந்தத் ‘திசைகாட்டி’ யும்  இன்றிக் குறைந்தபட்சம் தமிழ் மக்கள் அவாவிநிற்கும் அதிகாரப் பகிர்வுக்கான செயற்பாடுகள் கூடக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்ட பாறாங்கல்லைப் போல அசைவற்றுக்கிடந்த ஒரு காலகட்டத்தில்தான், அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளும் இணைந்து (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இதற்கு ஆதரவாக இருந்தது) அதிகாரப் பகிர்வுச் செயற்பாடுகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்குடன், 09.04.2021 அன்று அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் எந்திரி. கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவான ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ தன்னுடன் புதிதாகத் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய இரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யும் முயற்சிகளை முடுக்கி விடும் எண்ணத்துடன் ‘ஆலோசனைச் சபை’ யோசனையை உள்ளடக்கிய ஆவணத்தை-அறிக்கையை 08.05.2023 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையே 15.05.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது பேசு பொருளானது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு பல சந்தர்ப்பங்களில் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் தனது அரசியல் விருப்பத்தை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் பல அரசியல் அரங்குகளிலும் பகிரங்கப்படுத்தியுள்ளார். அவரை நம்பலாமா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் தமிழர்கள் இன்றுள்ள கையறு நிலையில் அவரை நம்பத்தான் வேண்டும் அல்லது நம்புவதாக நடந்து கொள்ளவாவது வேண்டும். அதுதான் இன்றைய நிலையில் தமிழர்களுக்குச் சாத்தியமான தந்திரோபாய அரசியல்-யதார்த்த அரசியல்-அறிவுபூர்வமான அரசியல். 

ஆனால், தமிழரசுக் கட்சி உட்பட ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த/அங்கம் வகிக்கும்  அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதனை விடுத்து 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு உளப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்காமல் தடுமாறுகின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் 15.05.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்த போது, சில தமிழ்க் கட்சிகள் இணைந்து (அதிகாரப் பகிரவுக்கான இயக்கம்) ஜனாதிபதியிடம் 08.05.2023 அன்று சமர்ப்பித்திருந்த, மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரைக்கும் (ஆறு மாத காலம் அல்லது ஆகக் கூடியது ஒரு வருடம்) 13 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குத் தடையாய் உள்ள விடயங்களை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார எல்லைக்குள் அகற்றிச் சீர்செய்வதற்கான ‘ஆலோசனைச் சபை’ யோசனையை தமிழரசுக் கட்சி-புளொட்-ரெலோ என்பன ஆட்சேபித்தன.

உள்நாட்டில் (இலங்கையில்) நிலைமை இதுவென்றால், வெளிநாடுகளில் (புலம் பெயர் தேசங்களில்) புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஓர் அறிவுபூர்வமான உளவியல் மாற்றம் மேற்கிளம்பி உள்ளது. 

அது என்னவெனில், ‘இலங்கை நலனுக்கான உலகளாவிய தமிழர் அமைப்பு’ (Well Wishers of Tamils in Sri Lanka -WWTS) என்னும் அமைப்பு அண்மையில் உருவாகி அது தனது முதலாவது ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கை ‘புலம் பெயர் மடல்’ எனும் மகுடத்தின் கீழ் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் 21.05.2023 அன்று வெளியாகியுள்ளது. 

இந்த ஊடக அறிக்கை (புலம் பெயர் மடல்) யில் உள்ள அதிகவனத்திற்குரிய விடயங்கள் வருமாறு. 

இந்த ஆண்டு (2023) இறுதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கானதேர்தலை நடத்துவதற்கு உலகில் எந்த பகுதியிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களும்தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்முக்கிய விடயங்களை தொகுத்து இந்தமுக்கியமான பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்க புலம்பெயர் மக்களை அழைக்கவிரும்புகிறோம்

எண்ணங்களும் அணுகுமுறையும் மாற வேண்டும்கடந்த பதினான்கு ஆண்டுகளில்தமிழர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் சமூகத்தை முன்னோக்கி கொண்டுசெல்லவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்“. 

தற்போதைய அரசியல் யதார்த்தத்தின்கீழ், 13 ஆவது திருத்தச் சட்டத்தைமுழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்துவதன் மூலம் ஏற்படும் மாகாண சபையினால்மட்டுமே இதனை அடைய முடியும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள்கருதுகின்றனர்”  

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவில் வதியும் திரு. ராஜரட்ணம் சிவநாதன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஊடக அறிக்கையில் மேலும் இரு விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன. 

ஒன்று; தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் வடக்கு மற்றும்                                         கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை ஒரு திட்டவட்டமான கால எல்லைக்குள் நடத்துவதற்கும் உறுதியான அர்ப்பணிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் 2023 மே 15 அன்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மற்றது; மாகாணசபைத் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலீடுகள் மற்றும் ஈடுபாடுகளை ஈர்ப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றிய விவரங்களைப் பற்றி விவாதிக்க இலங்கை நலனுக்கான உலகளாவிய தமிழர் அமைப்பு (WWTS) இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வமாகவுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இனப் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை அறிவு பூர்வமாகவும்-யதார்த்த பூர்வமாகவும்-இராஜதந்திர ரீதியாகவும் அணுகுவதற்குப் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் புறப்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறியே இது. இந்த ‘அடி’ முன்னோக்கி எடுத்து வைக்கப்படல் அவசியம். 

ஆதலால், உள்நாட்டில் (இலங்கையில்) வடக்கு கிழக்குத் தமிழர்கள் மேற்கூறப்பெற்ற அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் பின்னேயும் வெளிநாடுகளில் (புலம்பெயர் தேசங்களில்) வாழும் தமிழர்கள் இந்த இலங்கை நலனுக்கான உலகளாவிய தமிழர் அமைப்பின் பின்னேயும் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் உட்பட அத்தனை பகை முரண்பாடுகளையும் கடந்தும் களைந்தும் அணி திரளுமாறு இப்பத்தி அர்ப்பணிப்போடு அறைகூவல் விடுக்கிறது.