தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?

தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?

  —- வீரகத்தி தனபாலசிங்கம் —-

    நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் புரிந்துகொண்டவர்களாகத்தான் எமது அரசியல்வாதிகள்  தேர்தல்களைப் பற்றி  பேசுகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. தேர்தல்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் தேர்தல்கள் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும். 

    இரு வாரங்களுக்கு முன்னர் நுவரேலியா  கிராண்ட ஹோட்டலில்  நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களில் இளைஞர்கள் உட்பட அதிகப்பெரும்பான்மையானவர்கள் தேர்தல்களில் மாத்திரமல்ல, அரசியல் கட்சி முறைமையிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

   பொருளாதார நெருக்கடி, அதன் விளைவான மக்கள் கிளர்ச்சி மற்றும் அதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப்போக்குகள் குறித்து மக்களின் மனநிலையை அறிவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருக்கக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி இடையறாது இடையூறுகளைச் செய்து,   காலவரையறையின்றி  அவற்றை தேர்தல் ஆணைக்குழு  ஒத்திவைக்கவேண்டிய  நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கிய நிலையில்,  மக்கள் தேர்தல்களை விரும்பவில்லை என்று ஜனாதிபதி எவ்வாறு கண்டறிந்துகொண்டாரோ தெரியவில்லை. 

    மக்களுக்கு தேர்தல்களில் அக்கறை இல்லை என்று ஜனாதிபதி கூறிய அந்த  மகாநாட்டில் உள்ளூராட்சி  தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்யும் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தின் நீதியரசர்களும்  கலந்துகொண்டார்கள். விக்கிரமசிங்கவைப் போன்று இவ்வாறு வேறு எந்த ஜனாதிபதியும் முன்னர்  கருத்து வெளியிட்டதாக நாம் அறியவில்லை.

   ஆனால், ஜனாதிபதி தேர்தலைப் பற்றி மாத்திரம் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளும் அடிக்கடி பேசுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலை மாத்திரம் மக்கள் விரும்பக்கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?

  கடந்த வாரம் கூட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ரூவான் விஜேவர்தன அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பல கட்சிகள் ஆதரிக்கும் என்றும் கூறியிருந்தார்.  உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த தேர்தலை நடத்துவதற்கு  ஜனாதிபதி விரும்புகிறார் என்பது ஏற்கெனவே தெரிந்ததே.

   கடந்த வருடம் ஜூலையில் பதவியில் இருந்து விலகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில்  தேர்தலை  நடத்துவதற்கு விக்கிரமசிங்கவை அரசியலமைப்பு அனுமதிக்காது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியே தனது பதவிக்காலத்தின் நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் உரிய காலத்துக்கு முன்கூட்டியே –அதுவும் அவர் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையை பெறவிரும்பும் பட்சத்தில் — தேர்தலை நடத்த முடியும். பதவி விலகிய அல்லது மரணமடைந்த ஒரு ஜனாதிபதியின்  எஞ்சிய பதவிக்காலத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும்  ஜனாதிபதிக்கு அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு வழங்கவில்லை. இது பற்றி ஏற்கெனவே பல தடவைகள் கூறப்பட்டிருக்கிறது.

  அதனால், அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தினால் தெரிவாகும் ஜனாதிபதியும் உரிய காலத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு வகை செய்வதற்கு  விக்கிரமசிங்கவுக்கு யோசனை இருப்பதாக  கூறப்பட்டது.  பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு  பெரும்பான்மை ஆதரவுக்கு  எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. 

  எதிர்க்கட்சிகள் அத்தகைய ஆதரவை தருவது குறித்து முதலில் சந்தேகங்கள்  இருந்தபோதிலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தால் எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்கக்கூடிய சாத்தியம் தற்போது  இருப்பதாக தோன்றுகிறது.

   அடுத்த வருடத்துக்கு காத்திராமல் சாத்தியமானால் இவ்வருடமே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார். கடந்த வாரம் அவரது ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தேவையானால் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வகைசெய்யக்கூடிய சட்டங்களுக்கு பிரேமதாசவினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஆதரவு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற ருவான்  விஜேவர்தனவின்  அறிவிப்பின் அர்த்தம்  அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பதாக இருக்கலாம்.  ஆனால் ஜனாதிபதியைப் பொறுத்தவரை தன்னால் வெற்றி பெறக்கூடியதாக பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கக்கூடிய  — தனக்கு வாய்ப்பான சூழலை  உறுதிசெய்யாமல் விபரீதமான அரசியல் விளையாட்டில் இறங்குவார் என்று எதிர்பார்க்கமுடியாது.

   பொருளாதார நிலைவரத்தில் ஏற்பட்டு வருகின்ற  மேம்பாடு காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் தனக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு வளர்ந்து வருவதாக ஜனாதிபதி நம்புகிறார். ஆனால், பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக  மாத்திரம் மக்கள் அமோகமாக வாக்களித்து அவரை அடுத்த தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக்கிவிடுவார்கள் என்று கூறமுடியாது.  தேர்தல்கள் என்று வரும்போது அதில்  பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவது வழமை. கட்சி அரசியல்,வாக்கு வங்கி ஆகியவை அந்த காரணிகளில் முக்கியமானவை.

   ஜனாதிபதியைப் பொறுத்தவரை வெறுமனே தனது ஐக்கிய தேசிய கட்சியின்  வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்குவது குறித்து நினைத்துப் பார்க்கமுடியாது. இன்று தென்னிலங்கையின் முக்கியமான அரசியல் கட்சிகளில் மிகவும் குறைந்த வாக்கு வங்கியையும்  பலவீனமான கட்சிக் கட்டமைப்புகளையும்  கொண்டது  என்றால் அது ஐக்கிய தேசிய கட்சியாகவே இருக்கமுடியும்.

  ஆனால், பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஒரேயொரு ஆசனமே இருக்கின்ற போதிலும், தங்கள் தலைவர் ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கப் பேச்சாளர்கள் போன்று நடந்துகொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை கணிசமான அளவுக்கு மீளக்கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை விக்கிரமசிங்கவுக்கு கூட இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் அவர்  ஆட்சிப்பொறுப்பை தான்  ஏற்றுக்கொண்டது வங்குரோத்து நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே தவிர, அரசியல் செய்வதற்கு அல்ல என்று அடிக்கடி கூறுகிறார். 

   அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கடந்த கால தவறுகளுக்காக தங்களை பொறுப்பக்கூற வைக்காத ஒரு அரசாங்கமே மீண்டும் பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய வியூகங்களையே அவர்கள் வகுப்பார்கள். அதற்கு இன்றைய அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவை தவிர அவர்களுக்கு பொருத்தமான வேறு தெரிவு இருக்கமுடியாது.

   ஆனால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று அவர்கள் இப்போது பேசுகிறார்கள். அந்த வேட்பாளர் ஒரு ராஜபக்சவை தவிர வேறு எவருமாக இருக்கமுடியாது. தங்களது குடும்ப அரசியல் ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் கனவில் ராஜபக்சாக்கள் இருக்கிறார்கள். மக்கள் தங்களைப் பற்றி எத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

   இது இவ்வாறிருக்க, தற்போது ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில் அரசியல் நெருக்கடி ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அவர் போகக்கூடிய சாத்தியம் இருப்பதாக குறிப்பாக பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

   ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் ஆறு மாதங்களில் திடீர்ப் பொதுத்தேர்தல் ஒன்று வரலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடந்த வாரம் கூறினார்.

  ” நாமல் ராஜபக்சவை தற்போது  முன்னரங்கத்துக்கு கொண்டுவருவதற்கு ராஜபக்ச குடும்பம் அக்கறை காட்டக்கூடும். ஆளும் தரப்பில் இருந்து எதிர்த்தரப்புக்கு அவரை மாறச்செய்து எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள். அவ்வாறு நிகழும்பட்சத்தில் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழக்கும் நிலை உருவாகும். அதனால் ஆறு மாத காலத்திற்குள் பொதுத்தேர்தலுக்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்படும் ” என்று மரிக்கார் கூறினார். தான் கூறுவது நிச்சயம் நடக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்  என்று வேறு அவர் சொன்னார். இதே கருத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த பிரதி தலைவரான லக்ஸ்மன் கிரியெல்லவும் கூறினார்.

   உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நோக்கில் போராட்டங்களை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தியும் களைத்துப்போய்விட்டது. பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை உடனடியாக ஜனாதிபதி நடத்தவேண்டும் என்று அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்க சில தினங்களுக்கு முன்னர்  கோரிக்கை விடுத்தார்.

  அதேவேளை  கடந்த வாரம் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சகிதம் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தங்களது கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் இருப்பதாகவும் அத்தகைய வேறுபாடுகள் இல்லாத விவகாரங்களில் தீர்மானங்களை எடுப்பதில் மாத்திரம்  ஜனாதிபதியுடன் இணங்கிப்போக முடியும் என்றும் கூறினார்.

   எந்த தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் மீண்டும் தங்களால் ஆட்சிக்கு  வரமுடியும் என்றும் ராஜபக்சாக்கள் என்னதான் வீறாப்பு பேசினாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தேர்தல் ஒன்றுக்கு  முகங்கொடுப்பதில் தாங்கள் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை அவர்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் பேசிவருவது ராஜபக்சாக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தங்களுடன் இருப்பவர்கள் துவண்டு விடாதிருப்பதற்காக சில உஷார்ப்பேச்சுக்களை அவர்கள் பேசவேண்டியிருக்கிறது.

  இவ்வருட தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் சகலதுமே ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுமே மக்கள் ஆதரவில் முன்னிலையில் இருப்பதையும் பொதுஜன பெரமுனவினதும்  ஐக்கிய தேசிய கட்சியினதும்  செல்வாக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்ததையும் வெளிக்காட்டின. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இடையூறுகளைச் செய்ததற்கு இதுவே முக்கிய காரணம்.அதற்கு பிறகு கடந்த ஓரிரு மாதங்களில் அத்தகைய கருத்துக்கணிப்பு எதுவும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.

   உள்ளூராட்சி தேர்தல்களையோ,  மாகாணசபை தேர்தல்களையோ அல்லது பாராளுமன்ற தேர்தலையோ நடத்தினால் ஏற்படக்கூடிய பின்னடைவுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதில் உள்ள பிரச்சினையை ஜனாதிபதி நன்கு புரிந்துகொண்டுள்ளார்.  அதனால் தான் வேறு எந்த தேர்தலிலும் அக்கறை காட்டாமல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றைப் பற்றி மாத்திரமே அவர் பேசுகிறார். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேறு எந்த தேர்தலும் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், பொதுஜன பெரமுனவுடன் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் எதிர்பாராத வகையில் நிலைவரத்தை மாற்றிவிடவும் கூடும். இரு தரப்பினரும் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்ந்தவர்களாக சஞ்சலமான அரசியல் சகவாழ்வை தற்போதைக்கு தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  மாகாணசபை தேர்தல்களை முதலில் வடக்கிலும் கிழக்கிலும்   பிறகு கட்டங்கட்டமாக ஏனைய மாகாணங்களிலும் நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு திட்டம் இருப்பதாகவும் இந்தியாவிடம் இருந்து வரும் நெருக்குதல்கள் இதற்கு காரணம் என்றும்  சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால் அதைப்பற்றி இப்போது கதையைக் காணோம்.

     தேர்தல்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று விக்கிரமசிங்க கூறியபோது அவர் தேர்தல் வரைபடத்தை சுருட்டிவைக்க முயற்சிக்கிறார் என்று எதிரணி அரசியல்வாதிகள் சிலர்  கூறினார்கள். 1977 ஜூலை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த  ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தல் வரைபடத்தை சுருட்டிவைப்பது குறித்துப் பேசினார். பிறகு அவர் பொதுத்தேர்தலுக்கு பதிலாக அன்றைய பாராளுமன்றத்தின்  பதவிக்காலத்தை நீடிப்பதற்கு  1982 டிசம்பரில் முறைகேடுகள் நிறைந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார்.

   ஆனால்,  அவரின் மருமகனான  விக்கிரமசிங்கவை பொறுத்தவரை அவ்வாறு படுமோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இறங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சி அரசியல் வர்க்கத்துக்கு முறையான பாடங்களை புகட்டியிருக்கிறது. அதற்கு பின்னரான அரசியல் முன்னரைப்  போன்று இனிமேல் இருக்கப்போவதில்லை என்பது உண்மை.

    கிளர்ச்சியை படைபலத்தை பயன்படுத்தி ஜனாதிபதி அடக்கியிருந்தாலும், தங்களை உன்னிப்பாக அவதானிக்கும் மக்களின் கண்கள் முன்னாலேயே அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன்  செயற்படவேண்டியிருக்கும். இலங்கை வரலாறு காணாத பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிந்தனை மாற்றத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்கு தேர்தல் ஒன்று தான் வழி. அதற்கான வாய்ப்புக்களுக்கு இடையூறுகளைச் செய்துகொண்டு மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துவிட்டதாக எவ்வாறு ஜனாதிபதி கூறமுடியும்?

  ( ஈழநாடு )