வடக்கின் சுற்றுலாத்துறை: உரிய திட்டம் இல்லை?

வடக்கின் சுற்றுலாத்துறை: உரிய திட்டம் இல்லை?

–  கருணாகரன் –

பூநகரியின் மேற்கே 18 கிலோ மீற்றர் தொலைவில் மண்ணித்தலை என்றொரு சிறிய மணற்கிராமம் உண்டு. மணலோடு சேர்த்து பனைகளையும் சொல்ல வேண்டும். ஆனால் பனைகளை விட்டு, மணற்கிராமம் என்று அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்குக் காரணம், அங்குள்ள அழகிய மணல் மேடுகளாகும்.

ஏறக்குறைய சிறிய மலைகளைப் போல அங்கே பல பெரிய மணற்குன்றுகள் உள்ளன. அத்தனையும் வெள்ளை வெளேரென்ற வெண்மையான மணல் குன்றுகள். சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடியவை. வியப்பூட்டும் எவையும் சுற்றுலாவாசிகளுக்குப் பிடித்தமானவையல்லவா.

இந்த மணல் மேடுகளில் நடக்க நடக்க மனசு விரிந்து கொண்டே போகிறது. கால்களில் மணல் விளையாடுகிறது. அபூர்வமான உளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் அனுபவம் இது.

அருகே அழகிய அமைதியான கடல். கரையெல்லாம் தாழம்பற்றைகள். சிலப்பதிகாரத்தில் வருமே தாழம்பூ! அதை நினைவூட்டும் தாழைகள்.

இந்தக் கடற்கரையிலிருந்து வடமேற்கே கூர்ந்து பார்த்தால் யாழ்ப்பாணம் தெரியும். சிறிய ரகப் படகில் ஏறி 15 நிமிடக் கடற்பயணத்தில் யாழ்ப்பாணம் சென்று விட முடியும். அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து மண்ணித்தலைக்கு வந்து விடலாம். தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் ஏதாவது கொண்டாட்டம் என்றால் அதற்கு என்ன வாங்க வேண்டுமோ அதை வாங்குவதற்கும் யாழ்ப்பாணத்துக்கே சென்று வருகிறார்கள்.

மண்ணித்தலையில் இன்னொரு சிறப்பு அங்குள்ள சோழர்காலத்துச் சிவன் கோவிலாகும். இப்பொழுது அது முற்றாக அழிவடைந்து சிதைந்து விட்டது. ஆனாலும் கோவிலின் மையமான மூலஸ்தானப்பகுதி அடையாளம் காணக்கூடியாறு உள்ளது. இதைப்பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் நிறைய எழுதியுள்ளார். பூநகரிப் பிரதேசமே சோழர்கால வரலாற்றுச் சிறப்புடையது என்பதை அங்கே சேகரிக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் புராதனச் சின்னங்களின் வழியாக நிரூபித்திருக்கிறார் புஸ்பரட்ணம். அவருடைய இரண்டு புத்தகங்களில் இதை விரிவாக அறியமுடியும்.

இந்தச் சிவன்கோவிலுக்கு முன்பாக ஒரு சிறிய தீர்த்தக் கேணி உண்டு. அதுவும் தூர்ந்து சிதைந்து விட்டது. இப்பொழுது மிஞ்சியிருப்பது சிறியதொரு நீர் நிலையே. அதற்குள் தாமரை இன்னும் பூத்துக் கொண்டேயிருக்கிறது.

அருகிலே புதிதாக பெரியதொரு சிவன்கோவிலை நிர்மாணிக்கின்றனர். அடுத்த ஆண்டுகளில் இந்த இடமே மாறி விடும்.

சிவன் கோவிலுக்கு முன்பாக கிறிஸ்தவத் தேவாலயம் ஒன்றும் உண்டு.

ஆக பூநகரியும் மண்ணித்தலையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.

இவற்றுக்கு அப்பால், மண்ணித்தலையில் சுற்றுலாப்பயணிகளைக் கவரக் கூடியவாறு அங்கே ஒரு மையத்தை உருவாக்கியுள்ளது, இலங்கை இராணுவம். மண்ணித்தலையின் தெற்கே உள்ள கடலோரத்தில் இதை இராணுவத்தினர் உருவாக்கியுள்ளனர்.

அந்த இடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கடலோரக் காடும் மணல் குன்றுகளும் அழகிய நீண்ட கடற்கரையும் கொண்ட பிரதேசம் இது.

இங்கே  இராணுவத்தினரே அந்தச் சுற்றுலாப்பகுதியையும் நிர்வாக பரிபாலனம் செய்கின்றனர்.

சுற்றுலாத் தளத்தை உருவாக்கியிருப்பது, சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுத்திருப்பது, கட்டணத்தை அறவிடுவது என அனைத்தையும் இராணுவத்தினரே செய்கின்றனர். இந்த மையத்தைக் கூட இராணுவத்தினரே கண்டறிந்து இப்படி வடிவமைத்திருக்கிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

ஆனால், என்னதானிருந்தாலும் சுற்றுலாத்துறையை அவர்கள் நடத்துவது பொருத்தமானதல்ல.

ஆனால், இதையெல்லாம் பலரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இங்கே தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கடலில் குளித்து, கரையில் மகிழ்ந்து களிக்கின்றனர்.

ஆழம் குறைந்த கடல் என்பதால் சிறுவர்களும் பெண்களும் பயமில்லாமல் குளிக்கக் கூடியதாக உள்ளது. நீளமான கரை வேறு. பார்க்கவே கொள்ளை அழகு. பாசிக்குடாக் கடலைப்போல மிக வளமாக உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் கொண்டாட்டத்துக்கு ஏற்ற களம். வருவோருக்கான அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதை இன்னும் விஸ்தரிக்க வேண்டும். இன்னும் தேவையான அடிப்படைகளையும் வேண்டிய விடுதிகளையும் அமைக்கலாம். எல்லாவற்றுக்கும் அப்பால் போக்குவரத்து வசதி சீராக இருக்க வேண்டும். முக்கியமாக வீதி புனரமைப்புச்செய்யப்பட வேண்டும்.

சுற்றுலாத்துறைக்கு வசதிகள் பிரதானம் என்பார்கள். அதிலும் போக்குவரத்து வசதிகள் மிக மிக அவசியமானது. இப்பொழுதுள்ள பாதை மிகக் கொடுமையானது. குண்டும் குழியுமானது. இதை மாற்றிச் செம்மையான பாதையாக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்திழுக்கலாம். மேலும் பூநகரி மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள், பெரிய கறுப்பன் அரிசிச் சோறும் பூநகரி, பள்ளிக்குடா, மண்ணித்தலை, கௌதாரிமுனை மீனும் இறாலும் கணவாயும் பூநகரிப் பனம்பொருட்களும் இந்தச் சுற்றுலாப்பயணிகளுக்கு நல்ல தீனிகள்.

பூநகரியின் அடையாளத்தை உணவிலும் காட்சி உணர்விலும் கொண்டு வர வேண்டும்.

கேரள உதாரணம்:

————————-

கேரளாவின் சுற்றுலாத்துறை என்பது அங்குள்ள இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இயற்கை வளங்களைக் கொண்டு உருவாக்கப்படும் சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகம். ஏனென்றால் குறைந்த பட்ஜெற்றில் வருகின்றவர்கள் அதிமாக இருக்கும். தொகை கூடக் கூட வருமானம் அதிகரிக்கும். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா. சிறிய பட்ஜெட்டிலேயே பெரிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அனுபவிக்கக் கூடியது. அப்படி இந்தச் சுற்றுலாத்தளத்தையும் ஆக்க முடியும்.

இதைச் செய்வதற்கு சுற்றுலாத்துறை முன்வர வேண்டும். வடமாண சபையில் கூட இதற்கான சுற்றுலா அமைச்சு உண்டு. அதற்கான அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளனர். ஆனால், அவர்கள் இந்த மாதிரியான இலக்குகளை அடையாளம் காண்பது கூடக் குறைவு. சுற்றுலா மையங்களாக வடமாகாணசபை கண்டறிந்துள்ள இடங்கள் நகைப்பிற்குரியன. இது அந்தத்துறையைப் பற்றிய அறிவற்றவர்களின் தோல்வியாகும். அப்படி இவர்கள் அடையாளம் கண்டு உருவாக்கிய இரண்டு மையங்கள் கிளிநொச்சியிலும் உண்டு. ஒன்று கிளிநொச்சிக் குளத்துக்கு அண்மையாக உள்ளது. மற்றது வன்னேரிக்குளத்தில். இங்கெல்லாம் வௌவால்கள்தான் குடியிருக்கின்றன. செலவழிக்கப்பட்ட காசு வீணடிக்கப்பட்டுள்ளது. இதைத் திட்டமிட்ட அதிகாரிகளுக்கும் ஆதரவளித்த அரசியல்வாதிகளுக்கும் முத்துச் சிப்பியில் மோதிரம் அணிவிக்க வேண்டும்.

இப்பொழுது வடக்கிலே காங்கேசன்துறை தொடக்கம் சுண்டிக்குளம் வரையில் சில சுற்றுலா மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தனையும் படைத்துறையின் கற்பனையிலும் இனங்காணலிலும் கண்டறியப்பட்டவை. இதை மீறி, மிஞ்சி இந்தத்துறையில் வல்லுனர்கள் இந்த மாதிரி மையங்களைக் காணலாம்.

அவர்களை விட்டால் தனியார் இந்தப் பகுதியில் இந்தத்துறையில் முதலிடுவதற்கு இறங்க வேண்டும். புலம்பெயர்ந்தோருக்கு இதில் வாய்ப்புகள் அதிகமுண்டு. அவர்களுக்கான ஊக்கத்தையும் உதவியையும் சுற்றுலா அமைச்சும் வடமாகாணசபையும் வழங்கலாம்.

அப்படி அமையும்போது பல ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பிரதேசமும் வளர்ச்சியடையும். உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

இந்தத் தளத்தை இப்பொழுது நடத்தவது இராணுவம் என்பதால் அதற்கான வரையறைகள் உண்டு. அவர்கள் பல இடங்களிலும் உணவகங்களையும் சிறு கடைகளையும் தையல் நிலையங்களையும் நடத்துவதைப்போல இதையும் தமது சக்திக்குட்பட்ட அளவில் நடத்துகிறார்கள்.

உண்மையில் இதற்கான அனுமதி சுற்றுலாத்துறையினால் வழங்கப்பட்டுள்ளதா? அல்லது இதை இராணுவத்தினர்தான் செய்ய வேண்டுமா? சுற்றுலாத்துறையோ பிரதேச சபையோ இதைச் செய்ய முடியாதா? இராணுவத்தினரிடமிருந்து இதனை சுற்றுலாத்துறையோ பிரதேச சபையோ பொறுப்பேற்க முடியாதா? இதில் பெறப்படும் வருமானம் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது? அதற்கான வரிப்பணம் எப்படிச் செலுத்தப்படுகிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

இன்று நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுற்றுலாத்துறையையே பெரிதும் நம்பியிருக்கிறது. அப்படியென்றால் இந்த மாதிரியான சுற்றுலா மையங்களை இனங்கண்டு அரசாங்கம் அவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான வழிவகைகளைக் காணுதல் அவசியம்.

வடக்கிலே இப்படிப் பல சுற்றுலா மையங்களுக்கான இடங்கள் உண்டு. அவை சரியாக இனங்காணப்படவில்லை. நாகர்கோயில் களப்பு, இரணைமடு, இயக்கச்சி, வேலணை, சுண்டிக்குளம் – கட்டைக்காடு, முல்லைத்தீவு, கிளிநொச்சிக் குளத்தை அண்டிய பிரதேசம், ஆனையிறவுக் கடனீரேரி எனப் பல இடங்கள் உண்டு. அவற்றை அப்படி வடிவமைக்க வேண்டும்.

இராணுவத்தினரைப்போல வேறு சிலரும் சில சுற்றுலா மையங்களை இனங்கண்டு உருவாக்கி வருகின்றனர். அதில் ஒன்று இயக்கச்சியில் உள்ள Reechcha என்பதாகும். இன்னொன்று நாவற்குழியில் உள்ள “நெய்தல்” ஆகும். இவை தனியாரின் ஆர்வத்தினால் உருவாக்கப்பட்டவை. இன்று இவை மிகச் சக்ஸஸாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இவற்றுக்கான பாதைகளைக் கூட பிரதேச சபையோ அரசாங்கமோ அமைத்துக் கொடுக்கவில்லை. பிரதேச அபிவிருத்தி என்பது என்ன என்று புரிந்து கொள்ளக் கூடியவர்களை மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வதில்லை. பொறுப்பான பதவிகளில் இருக்கின்ற அதிகாரிகளும் புத்திபூர்வமாக பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்வதில்லை.

விவரமுள்ளவர்களைக் கூட யாரும் அரவணைத்துச் செல்வது குறைவு.

அபிவிருத்தி என்பது கட்டமைப்புகளின் விருத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்ற எண்ணமோ புரிதலோ பலருக்கும் இல்லை. குறிப்பாக அரசாங்கத்தின் மனதில் இதைப்பற்றிய தெளிவான சித்திரம் கிடையாது. இதை உருவாக்க வேண்டியது, அறிஞர்களின் கடமையாகும்.

நம்மிடம் ஆயிரம் வளங்கள் உண்டு. அவற்றை நாம்தான் கண்டறிய வேண்டும். கண்டறிந்து வளமாக்க வேண்டும். தேசம் என்பது என்ன? நாம்தானே. நம்மைக் கூட்டாகக் கட்டியெழுப்பும்போது தேசம் தலை நிமிரும்.