கூத்தே உயிராய்!
கூத்தின் உயிராய்!!
(மௌன உடைவுகள் – 32)
மட்டக்களப்பில் இப்படி ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. ஒரு விடயத்திற்காக அடம்பிடிக்கும் மற்றவர்களை பார்த்து சொல்லும் பேச்சு வழக்கு இது. ” இவ புதுனம் தான் காட்டுறா அல்லது இவரு என்ன கூத்துக்காட்டுறாரு.” என்று சாதாரணமாக கிராமிய மக்கள் பேசுகின்ற அளவுக்கு கிராமிய வாழ்வியலில் பின்னிப்பிணைந்த ஒன்றாக உள்ளது நாட்டுக்கூத்து.
யாழ்ப்பாணத்தில் உயர்குடி திருமணப்பேச்சுக்களில் பெண்ணின் தகுதியை பரதநாட்டியம், கர்நாடகசங்கீத அறிவைக் கொண்டு எடைபோட்ட காலம் ஒன்று இருந்தது. இது சாதாரண குடிகளில் சமையல், தையல் அறிவாக தராசில் வைக்கப்பட்டது. மட்டக்களப்பில் வடமோடி,தென்மோடி கூத்து அரங்கேற்றங்களைத் தொடர்ந்து கூத்தர்களை மாப்பிள்ளை கேட்டுப்போகும் வழக்கம் இருந்தது. திருமணங்கள் இடம்பெற்றன.
இந்த வரலாற்று போக்கில் பேராசிரியர் சி. மௌனகுருவின் எண்பதாவது வயதை அமுதவிழாவாக அவரின் மாணவர்கள், சக கூத்துத்துறை சார்ந்த நண்பர்கள், கிழக்குப் பல்கலைக்கழக- விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவகம், கலை இலக்கிய, பண்பாட்டு ஆர்வலர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலதரப்பினரும் இணைந்து கொண்டாடி இருக்கிறார்கள் .
இந்த அமுதவிழாவைத்தொடர்ந்து சில எதிரொலிகள் அங்காங்கே சமூக ஊடகங்களில் உலாவருகின்றன. இவற்றில் சில வெளிப்படைத் தன்மையற்ற மறைமுக மொழியில் பதிவிடப்பட்டவை. இவை பொதுவாக மூன்று விடயங்கள் குறித்தவையாக இருப்பதை காணமுடிகிறது. இந்த எதிரொலிகளில் சில “கூத்துக்காட்டுறாரு ….” பாணியையும் நினைவூட்டத்தவறவில்லை.
1. கூத்து இவர்களுக்கு மட்டுமா சொந்தம் என்ற கேள்வி எதிரொலிக்கிறது.
2. நாட்டுக்கூத்தா ….? ஈழக்கூத்தா…..? இரண்டும் கெட்டால் எப்படி அழைப்பது? என்பது இன்னொரு வினா.*
3. பேராசிரியர் சு.வித்தியானந்தன் நாட்டுக்கூத்து என்று அழைத்ததற்கு “அவரது மட்டக்களப்பு மாணவர்கள் காரணமாக இருக்கலாம்” என்றும் “அவரின் மட்டக்களப்பு மாணவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.” என்றும் கருத்துப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. *
(*) கூத்து இவர்களுக்கு மட்டுமா சொந்தம்……!
—————–
சமூக , பொருளாதார, அரசியல் தனித்துவங்கள் ஒரு நாட்டிற்கோ, பிரதேசத்திற்கோ சொந்தமானவையாக அமைகின்றன. இவை அந்த மக்களின் தனித்துவமான சமூக வாழ்வியலை நிர்ணயிக்கின்றன, பிரதிபலிக்கின்றன. மக்களின் வாழ்வியல் கண்ணாடியாக உள்ள கலை, இலக்கிய பண்பாட்டுக்கோலங்களும் இதற்கு விதி விலக்கானவை அல்ல. இவை ஒரு சமூகத்தின் முகமாக தம்மை அடையாளப்படுத்தி நிற்பவை. இவை ஒரு சமூகத்தின் பொதுச்சொத்து- பொதுவுடமை . இதற்கு ஒரு குழுவோ அல்லது தனிநபர்களோ எவ்வாறு சொந்தம் கொண்டாட முடியும்? அதைப் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை.
கிழக்கின் – மட்டக்களப்பின் பொருளாதார பண்பாட்டு வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாதது வேளாண்மை. வேளாண்மை வயல் வாடிகளில் சாமானிய விவசாயிகளால் வேளாண்மை விதைப்புக்கும், வேளாண்மை வெட்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொழுது போக்குக்காக ஆடப்பட்ட நாட்டுக்கூத்தை பல்கலைக்கழக அங்கீகாரம் பெறும் வகையில் , ஆய்வுப் பொருளாக்கி கல்விச் சமூகம் வியக்கும் வகையில் மற்றைய உயர்குடி கலைகளுக்கு சமமாக உயர்த்தும் பணியை ஆரம்பித்து வைத்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன்.
அவரின் ஒரு மாணவனாக, சீடனாக, வாரிசாக தனது வாழ்நாளில் கூத்தை வரிந்து கட்டிக்கொண்டவர் பேராசிரியர் சி.மௌனகுரு. ஒரு காலத்தில் படுவான்கரையானின் – பட்டிக்காட்டானின் படிக்காத பாமரனின் கலை என்றும் இழிசனர் கலை என்றும் முத்திரை குத்தப்பட்ட கூத்துக்கலையை இன்றைய உச்சத்திற்கு கொண்டு வந்ததில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் அப்பால் பேராசிரியர் சி. மௌனகுரு முதன்மையானவர்.
வயல், குளவெளிகளில் களரியில் அரங்கேற்றப்பட்ட இந்த பாரம்பரிய கலைவடிவத்தை நவீன நாடக அரங்கிற்கு அறிமுகம் செய்ததில், புதிய யுக்திகளையும், நவீனங்களையும், வாத்தியங்கள், ஆடை அலங்காரங்களையும் மேடைக்கு ஏற்ப உள்வாங்கியதில் அமுதவிழா நாயகன், பெருங்கூத்தன் பேராசிரியர் சி.மௌனகுருவை விடவும் வேறு எவரினதும் பெயரை உச்சரிக்க முடியாது.
மரபு ரீதியான இந்த அம்சங்களில் கூத்துமீளுருவாக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பெரும்பாலும் கூத்தின் புறநிலை தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டவை. இதற்கு சமாந்தரமாக கூத்தின் அகநிலையிலும் மாற்றங்கள் தேவை. இந்த அகநிலையில் மாற்றங்கள் ஏற்படும்போதே தமிழ் இலக்கிய திறனாய்வுத்துறையில் பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் செய்த கட்டுடைப்பை கூத்துக்கலையிலும் காணமுடியும். இந்த வகையில் இந்த மீளுருவாக்கம் ஒரு புறநிலை தோற்றத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது.
மறுபக்கத்தில் பேராசிரியர் மௌனகுரு கூத்து தொடர்பாக வெறும் ஆய்வுகளையும், நூல்களையும் எழுதிக்குவிக்கவில்லை. மாறாக அண்ணாவியாராக, ஆட்டக்காரராக, கொப்பி மனேஜராக, பாட்டு- தாளக்கட்டு – பக்கவாத்தியகாரராக, கொலுப்பாடுபவராக, ஏன்? மேய்த்திரியாராக எத்தனை பாத்திரங்களை சுமந்து, இந்த பணியைச் சாதித்திருக்கிறார் என்பதை கௌரவித்து அவருக்கு எடுக்கப்பட்ட முடிசூட்டு விழா இந்த அமுதவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
கூத்தை தன் உயிராய், தன் உயிரை கூத்தாய் கொண்டு பேராசிரியர் சி.மௌனகுரு போன்று சமகாலத்தில் தாயகத்தில் பணிசெய்யும் எவரும் இல்லை. பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பின் பேராசிரியர் சி.மௌனகுரு கூத்துக்கு உயிரூட்டி வந்திருக்கிறார் -வருகிறார். சமாந்தரமாக அவரின் வாரிசுகளாக கிழக்கிலங்கை பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முன்னாள் பீடாதிபதி பால.சுகுமாரையும், விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத்தொழில்நுட்பத்துறை தலைவர் கலாநிதி சு. சிவரெட்ணத்தையும், சக விரிவுரையாளர்களையும், அவர்களின் மாணவர்களையும் அடையாளம் காண முடிகிறது.
நாட்டுக்கூத்துக்கலையில் ஈடுபாடுகொண்டிருந்த இன்னொரு கிழக்கு மண்ணின் மைந்தன் பேராசிரியர் இ. பாலசுந்தரம். கூத்துக்குடும்பத்தில் வளர்ந்த அவரது ஆர்வம் இயல்பானது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அவர் கூத்தை ஆரம்பித்திருந்த போதும் புலம்பெயர்ந்ததினால் எடுத்தபணியை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. எனினும் புலம்பெயர்ந்த சூழலில் நாட்டுப்புறவியலில் – நாட்டார் இலக்கியம், நாட்டார்கலைகளில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிறார். இவருக்கு அடுத்தவராக புலம்பெயர்ந்த சூழலில் கூத்துக்கலை வளர்ச்சி பங்களிப்பில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் பால .சுகுமார்.
போர்க்கால சூழலில் புலம்பெயர்ந்த தேசங்களில் பரதநாட்டியத்தில் ஆடல், பாடல்,உடை இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. பரதநாட்டியத்தில் நாட்டுக்கூத்தும், நாட்டுக்கூத்துக்குள் பரதநாட்டியமும் உள்வாங்கப்பட்டிருந்தன. ஆனால் துரதிஷ்டவசமாக இவை அனைத்தும் ஒரு அரசியலுக்கான பிரச்சார யுக்தியையே கொண்டிருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் காலத்தில் பேராசிரியர்கள் அ.சண்முகதாஸ், தில்லைநாதன், சதாசிவம் போன்றவர்களும் பின்னர் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரும் பேராசியர்களாக இருந்தனர். ஆனால் கூத்துப்பணியில் தன்னை அதிகமாக அடையாளப்படுத்திக் கொண்டவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மட்டுமே. மற்றையவர்கள் தம்மை வெவ்வேறு துறைகளில் அடையாளப்படுத்தினர். உதாரணமாக இன்னொரு துறையான தமிழ் இலக்கிய திறனாய்வுத் துறையில் பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். இலக்கியதிறனாய்வின் சிற்பிகள்-கட்டுடைப்பாளர்கள்.
இதுபோன்ற கட்டுடைப்பு திறனாய்வு கூத்துக்கலைக்கும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அது கூத்தின் மீளுருவாக்கத்தில் பேசப்படுகின்ற நவீன மாற்றங்களை மட்டும் பேசாது. அது பேசுகின்ற கருப்பொருளை கட்டுடைப்பு செய்யவேண்டும். புராண, இதிகாச கதைகளின் பின்னணியில் உள்ள அரசியலை, புனைவுகளை, வர்க்கநலனை, பின்நவீனத்துவ , பெண்ணிய நிலையில் இருந்து கட்டுடைப்பு செய்யவேண்டும். இதுவே கூத்து மீளுருவாக்கத்தை முழுமையாக்குவதுடன் கூத்தை ஒரு நவீனமாகவும் பிரகடனம் செய்யும். இந்தப் பொறுப்பு இன்றைய இளைய தலைமுறைக்கு உரியது.
பேராசிரியர் மௌனகுருவுக்கு பேராசிரியர் சு. வித்தியானந்தனுக்கு நிகராக மட்டுமன்றி அதற்கு மேலாகவும் அடையாளமும், அங்கீகாரமும் வழங்கவேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் ஓய்வு நிலையிலும் கூத்துக்கலையின் வளர்ச்சிக்கு ஓய்வற்று உழைக்கின்றவராக மட்டும் அன்றி, தானே ஆடியும், பாடியும் மேடையை அலங்கரிக்கின்றார். வெறுமனே பல்கலைக்கழக மட்டத்திலான கூத்துசார் விரிவுரைகளை வெறும் தொழிலாக மட்டும் செய்து விட்டு அவர் ஓய்ந்து இருக்கவில்லை. இதனால்தான் அவர் கொண்டாடப்பட வேண்டிய ஒருவராக உள்ளார். அவரைக் கொண்டாடுவது என்பது கூத்தைக்கொண்டாடுவது.
ஆக , கூத்து இவர்களுக்கு மட்டுமா சொந்தம் என்ற கேள்வியின் பின்னணி என்ன ? என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.
(*) நாட்டுக்கூத்தா……? ஈழக்கூத்தா……?
———————————
மட்டக்களப்பின் கூத்துக்கலைக் கிராமங்களுள் ஒன்றான மகிழடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு. கந்தப்பன் திருநாவுக்கரசு தனது முகப்புத்தகத்தில் இட்ட ஒரு பதிவே* இரண்டாம், மூன்றாம் அதிர்வுகளுக்கு காரணம். படுவான்கரையின் மூத்த தமிழ் அறிஞர்களில் திரு. திருநாவுக்கரசும் ஒருவர். மகிழை மகேசனைத் தொடர்ந்த அந்த மண்ணின் தமிழ் இலக்கிய ஆய்வாளர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்பு பாடநெறியாகக்கற்று முதலாம் தரத்தில் ( FIRST CLASS) சித்தியடைந்தவர். ஆனால் அவருக்கு உதவி விரிவுரையாளர் நியமனம் கூட மறுக்கப்பட்டது. அந்தப் “புறக்கணிப்பு” பற்றி பேச இந்தப்பதிவு பொருத்தமற்றது. திரு. திருநாவுக்கரசு எழுப்பியுள்ள கேள்வியை சும்மா கடந்து செல்லமுடியாது என்பதற்காகவே அவரது மொழித்தகுதி பற்றி பேசப்பட்டுள்ளது.
இது திரு. திருநாவுக்கரசு அவர்களின் முகநூல் பதிவு ….
” மட்டக்களப்பில் எமது மூதாதயரால் ஆடப்பட்டுவந்த வடமோடி, தென்மோடி கூத்தினை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் நாட்டுக்கூத்து என அழைத்தது பலரது மனதை வேதனைப்படுத்தியதை யாம் அறிவோம். விசேடமாக தொல்லியல் ஆய்வாளர் செல்வி க. தங்கேஸ்வரி அவர்கள் வன்மையாகக் கண்டித்து வந்தார். தற்போது ஈழக்கூத்து என சொல்லப்பட்டிருந்தை பார்க்க்கூடியதாக இருந்தது. இதுவும் எந்தளவு பொருத்தம் என தெரியவில்லை”. என்று பதிவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கூத்துக்கலையை எப்படி அழைப்பது நாட்டுக்கூத்து என்பதா? இல்லை ஈழக்கூத்து என்பதா? இது “நாட்டுப்புறம்” என்ற சமூக, பொருளாதார, அரசியலில் குறைவான வளர்ச்சியைக்கொண்ட கிராமிய சூழல் குறித்து எழுப்பப்படும் கேள்வியாகவே புலப்படுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் இதை ” நாட்டுப்புறவியல்” என்று குறிப்பிடுகிறார். நாட்டார் இலக்கியம், நாட்டார்பாடல்கள், நாட்டார் கலைகள் , நாட்டார் கதைகள் இந்த வரிசையில் நாட்டுக்கூத்தும் நாட்டார் கலைவடிவங்களில் ஒன்றாக அமைகின்றது.
மனித வாழ்வியலின் பூர்வீகம் நாட்டுப்புற கிராமங்களே அன்றி நகரங்கள் அல்ல. கிராமங்களில் இருந்தே நகரங்கள் தோன்றின என்றால் மனித வாழ்வின் பாரம்பரிய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ஆடல் , பாடல், கலைகள், விளையாட்டு, உணவுக்கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் நாட்டுப்புறங்களில் தோன்றியவை. ஆக, பாரம்பரிய கலைவடிவமான நாட்டுக்கூத்து மட்டக்களப்பின் வேளாண்மை பொருளாதார நாட்டுப்புற சூழலில் பிறந்தது. அதை நாட்டுக்கூத்து என்று குறிப்பிடுவதில் உள்ள தவறு என்ன?
ஈழக்கூத்து என்று பொதுப்படையாக அழைப்பது எந்த ஈழத்தை குறிக்கிறது. வரலாறு கூறும் இலங்கைத்தீவையா? அல்லது தமிழ்த்தேசியம் பேசும் பாரம்பரிய தமிழர் தாயக ஈழத்தையா? இலங்கைத்தீவு என்றால் சிங்களமக்களின் கண்டியக்கூத்தை என்ன என்பது? ஈழக்கூத்தில் அது ஒருவகையா? கண்டியநடனமும் ஈழக்கூத்தா? அல்லது தமிழ்தேசிய ஈழம் என்றால் மலையக மக்களின் கூத்துக்கலையை எந்தப்பக்கம் பங்குபோடுவது ? அது ஈழக்கூத்தா? நாட்டுக்கூத்தா? மலையகக்கூத்தா?
முஸ்லீம் மக்களின் அருமையான பேச்சு மொழியிலான கிழக்கின் நாட்டார் பாடல்களை ஈழத்துப் பாடல்கள் என்று அழைக்கமுடியுமாகா?அப்படி அழைப்பது எந்தளவுக்கு பொருத்தமானதுகா?
நாட்டார் பாடல்கள் என்பதில் உள்ள உயிர்த்துடிப்பு ஈழத்துப்பாடல்கள் என்று அழைப்பதில் இருக்கிறதாகா?
உலகின் எல்லா நாடுகளிலும் நாட்டுப்புறம்- COUNTRY SIDE உள்ளது. அந்தப் பிராந்தியங்களுக்கான பாரம்பரிய மக்கள் வாழ்வியலும், கலைபண்பாடுகளும் உள்ளன. இது மனித வரலாற்றின் பொதுநிலை.
COUNTRY SIDE என்று சொல்வதில் அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.
பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாக்கிறார்கள். அவர்களிடத்தில் எந்த உளவியல் தாழ்வுச்சிக்கல்களும் இருப்பதில்லை.
இந்தப் பெயர்ப் போர் சிந்து பைரவி திரைப்படப்பாடலை நினைவுபடுத்துகிறது:
“பாட்டறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டில எழுதவில்ல
எழுதிவைக்க தெரியவில்ல
எலக்கணமும் படிக்கவில்ல.
தலக்கணமும் எனக்கு இல்ல….
—————————————————–
—————————————————–
சேரிக்கும் சேர வேண்டும்
அதற்கும் பாட்டுப்பாடு
அம்மி அரைச்சவ
கும்மி அடிச்சவ
நாட்டுப்புறத்தில
சொன்னதப்பா…”
நாட்டுக்கூத்து , நாட்டார் பாடல்கள், நாட்டார் இலக்கியம் என்பது அவமானமா? உளவியல் தாழ்வுச்சிக்கலா? படுவான்கரையின் பெயரையும் எழுவான்கரை என்றோ அல்லது ,WEST COST என்றோ அமெரிக்கப் பாணியில் மாற்றினால் என்ன?
எமது மூதாதயர் எமக்கு விட்டுச் சென்ற அடையாளத்தை, முகவரியை ஈழப்போர்வைக்குள் தொலைக்கப்போகின்றோமா?
(*) சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு மாணவர்கள் பொறுப்பு
—————————————————
சொல்ல வேண்டும்……!
——————————-
இது ஒரு வேடிக்கையான குற்றச்சாட்டு. வாத்தியார் விட்ட தவறுக்காக (?) அவரின் மாணவர்களை குற்றக்கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கவேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம். மட்டக்களப்பின் நாட்டுப்புற கிராமங்களில், வயல்வாடிகளில், படுவான்கரையில் பாரம்பரியமாக ஆடப்பட்டுவந்த கூத்தை பல்கலைக்கழகத்தில் ஆடுகிறார்கள் என்பதற்காக நாட்டுக்கூத்து அல்ல ஈழக்கூத்து என்று எப்படிச் சொல்லமுடியும்? இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என்று எழுகின்ற சந்தேகம் உண்மையா?
நாட்டுப்புறக்கலையான நாட்டுக்கூத்து மட்டக்களப்பின் நாட்டுப்புறச் சொத்து. எமது மூதாதயர் எமக்கு விட்டுச் சென்ற முதுசம். இது தனிநபர்களுக்கோ, எந்த ஒரு குழுவுக்கோ சொந்தமானதல்ல. மக்களின் பொதுச்சொத்து – பொதுவுடமை.
நாட்டுக்கூத்து என்பதே அதன் வளர்ச்சி வரலாற்றை, பூர்வீகத்தை, பரிணாம வளர்ச்சி மாற்றங்களை எதிர்கால சந்ததிக்கு சான்று பகர்வதாக அமையும். யாரும் கள்ள உறுதி எழுதி பெயர்மாற்றம் செய்யவேண்டியதேவை இல்லை. அதுவும் ஈழக்கூத்து என்ற பொதுமைப்படுத்தல் எந்த வகையிலும் பொருத்தமற்றது மட்டுமன்றி ஒரு வகையான கலை அபகரிப்புமாகும்.