—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் மாகாணசபைத் தேர்தல் – 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையாக அமுலாக்கல் – இடைக்கால நிர்வாக வரைவு – புதிய அரசியல் யாப்பு ஆகியவிடயங்கள் குறித்து, 15.05.2023 அன்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தை (11,12 ஆம்திகதிகளில் நடை பெற்ற பேச்சு வார்த்தையின் தொடர்ச்சி) எந்த இணக்கமுமில்லாமல்–எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படாமல் முடிந்திருக்கிறது என்பதே தமிழ் ஊடகங்கள் அனைத்தும் தரும் செய்தி.
இது பற்றி ஒரு வாக்கியத்தில் கூறப்போனால் ‘ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்ஏறியிருக்கிறது.’
ஆனால், இந்தப் பேச்சு வார்த்தையின்போது நம்மவர்கள் நடந்து கொண்ட முறைதான் கவலையளிப்பதாகவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரை (ஆறு மாதங்கள் அல்லது ஆகக்கூடியது ஒரு வருடகாலம்) 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கு ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகார எல்லைக்குள் எடுக்கக்கூடிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும்–நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ‘ஆலோசனைச் சபை‘ ஒன்றினை அமைக்குமாறு கேட்டு அண்மையில் சில தமிழ்க் கட்சிகளினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ஆவணம் குறித்துப் பேச ஜனாதிபதி அபிப்பிராயம் கேட்டபோது அதனைச் சுமந்திரனும் (தமிழரசுக் கட்சி) சித்தார்த்தனும் (புளொட்) அத்தகைய ஆலோசனைச் சபையை ஆட்சேபித்ததால் அந்த விடயம் கைவிடப்பட்டுள்ளது. இது முதற் கோணல்; முற்றும் கோணல்.
இந்த ஆவணத்தைத் தயாரித்தவர் முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசின்முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் செயலாளராகவிருந்தவரும் இலங்கையில் உள்ள துறை சார்நிபுணர்களில் 13ஆவ து அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி அதன் அத்தனை அம்சங்களும் அத்துப்படியானவரும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் மிகப்பரிச்சயமானவருமான ‘அகில இலங்கை தமிழர் மகாசபை‘ யின் தலைவர் எந்திரி. கலாநிதிகா.விக்னேஸ்வரன் ஆவார். இது சுமந்திரனுக்கும் சித்தார்த்தனுக்கும் மட்டுமல்ல அக்கூட்டத்தில்பிரசன்னமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினருக்கும் தெரிந்தவிடயம்தான். ஜனாதிபதிக்குக் கூட இது தெரியும். அந்த யோசனையை ஜனாதிபதி சாதகமாகப்பரிசீலித்திருந்த காரணத்தாலேயே பேச்சுவார்த்தைக் கூட்ட ஆரம்பத்திலேயே அவர் “மாகாணசபைகளுக்கு இடைக்கால ஆலோசனைக் குழுவை நியமிப்பது குறித்து நீங்கள் அனுப்பியஅறிக்கை கிடைத்தது. அது பற்றிப் பேசலாமா” என்று கேட்டிருக்கிறார். ஆனால், தமிழர் தரப்பு வழமைபோல் ( இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஒரு கட்டத்தில் நிராகரித்தது போல்) தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளியிருக்கிறது.
இந்த ஆலோசனைச் சபை யோசனையை உள்ளடக்கிய அறிக்கையை –ஆவணத்தை அதில்கையெழுத்திட்ட தமிழ்க் கட்சிகளின் (அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின்) சார்பில் ஜனாதிபதியிடம் சேர்ப்பித்தவர் அதிகார பகிர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான எந்திரி. கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களே. அந்த அறிக்கையையே அன்றைய பேச்சுவார்த்தைக்கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் சி.வி. விக்னேஸ்வரன் வாசித்துக் காட்டியுள்ளார்.
ஆலோசனைச் சபை யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைக்கப்பட்டதல்ல. சிலதமிழ்க் கட்சிகளால் அவரிடம் ஏற்கெனவே கையளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளயோசனையைத்தான் அவர் தெரிவித்து அது பற்றிக் கலந்துரையாட முற்பட்டிருக்கிறார்.
ஆனால், ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்‘ என்பதற்கிணங்க மாகாணசபைத்தேர்தலை மேலும் இழுத்தடிப்பதற்கான அரசாங்கத்தின் எத்தனம் இது என எண்ணிக்கொண்டுஅல்லது எடுத்துக் கொண்டுதான் இதனைத் தமிழரசுக் கட்சியும் – புளொட்டும் – ரெலோவும் எதிர்த்துள்ளன.
மேலும், இந்த உத்தேச ஆலோசனைச் சபையின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் அல்லது ஆகக்கூடியது ஒரு வருடமாகதான் இருந்திருக்கும்.
இந்த ஆலோசனைச் சபையின் நோக்கமே தற்போதுள்ள 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதிலுள்ள தடைகளை நீக்கி அதனைச் சீர் செய்வதே. மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இத்தடைகள் நீக்கப்படுதல் அல்லது சீர்செய்யப்படுதல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லதுதானே. இப்படி எல்லாவற்றையும் எடுத்தெறிந்துகொண்டிருந்தால் இறுதியில் தமிழர்கள் எதனை அடையப்போகிறார்கள்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் இந்தியாவையும் தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கம் எடுத்தெறிந்ததுதானே இன்று ஈழத் தமிழர்கள் இருந்ததையும் இழந்துவிட்டு நிற்பதற்குக்காரணம்.
தமிழ் அரசியல் பொதுவெளியில் தேக்கமுற்றுக் கிடக்கின்ற அதிகாரப் பகிர்வுச் செயற்பாடுகளைஅடுத்த கட்டத்திற்கு, அடுத்த மாகாண சபைத் தேர்தல் வரைக்கும் (அது எப்போது நடைபெறும்என்று எதிர்வு கூற முடியாத நிலையில்) காத்திருக்காமல் அல்லது அதனை இழுத்தடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகாரப் பகிர்வுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்காமல், நகர்த்துவதற்குநடைமுறைச் சாத்தியமான பொறிமுறையாகவே ஆலோசனைச்சபை யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நல்லெண்ணத்துடன் தயாரிக்கப்பெற்றதுதான் இவ் ‘ஆலோசனைச் சபை‘ அறிக்கை. கட்சி அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும்அப்பாற்பட்ட சிந்தனையில்–அணுகுமுறையில் பிறந்ததே இவ்வறிக்கை.
ஏற்கெனவே இவ்ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்த தமிழ்க் கட்சிகளின் சார்பில் (அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தின் சார்பில்) 08.05.2023 அன்று எந்திரி. கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்களினால் ஜனாதிபதியிடம் சேர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த ஆவணத்தில், அகில இலங்கைதமிழர் மகா சபை –தமிழ் மக்கள் கூட்டணி – தமிழர் விடுதலைக் கூட்டணி – தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சி – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – சமத்துவக் கட்சி –ஈழவர் ஜனநாயகமுன்னணி ஆகிய ஏழு பதிவு செய்யப்பெற்ற அரசியல் கட்சிகள் கையெழுத்திட்டிருந்தன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருப்பதனால்போலும் கையெழுத்திடவில்லையாயினும் ஜனாதிபதியிடம் இவ் ஆலோசனைச் சபைக்கு தனதுஆதரவைப் பதிவு செய்திருந்தார். ஆரம்பத்தில் கையெழுத்திடச் சம்மதித்திருந்த தமிழரசுக் கட்சி– ரெலோ – புளொட் – முன்னாள் ஈ பி ஆர் எல் எவ் (தற்போதைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) கட்சிகள் இறுதி நேரத்தில் இழுத்தடித்துக் கையெழுத்துப் போட மறுத்துள்ளன. இவை எல்லாமே ஏற்கெனவே ஜனாதிபதிக்குத் தெரிந்த சங்கதிதான்.
இந்தியத் தூதரகமும் இவ் ஆலோசனைச் சபை யோசனை அமுலாக்கலுக்கு அனுசரணை வழங்கத்தயாராகவிருந்ததாகத் தகவல். அன்றைய பேச்சு வார்த்தையின் போது பிரசன்னமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அத்தனை தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இந்த அறிக்கை –ஆவணம் குறித்த ‘ரிஷி மூலம்‘-நோக்கம்–பின்னணி என்று எல்லா விவரங்களும்‘அ‘ விலிருந்து ‘ஃ‘ வரை அத்தனையும் தெரியும்.
‘காலைக் கதிர்‘ மின்னிதழ் அதன் 18.05.2023 காலைப் பதிப்பில் ‘இனி இது இரகசியம் அல்ல‘ பத்தியில் எழுதியிருப்பது போல, பேச்சுவார்த்தை மேசையில் திடீரென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்த ஆவணத்தைத் தூக்கி வைக்கவும் இல்லை; இந்த ஆவணம் ஜனாதிபதியின் கைகளுக்கு ஏற்கெனவே கிடைக்கச் செய்யப்பட்டிருந்தமை மற்றைய அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கவும் இல்லை; அப்படி ஒரு ஆவணம் தமிழர்தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு வரும் என்று எதிர்பார்த்து அதிர்ந்து போகவும் இல்லை. அத்துடன் பிள்ளையான் தவிர இந்த ஆவணத்தை இதற்கு முன்னர் கண்களால் பார்த்த எவரும்அந்தக் கூட்டத்தில் இல்லை என்றும் ‘காலைக் கதிர்‘ எழுதியிருப்பது அரைகுறைத் தகவல்களைவைத்துக் கொண்டு கூறப்பட்டுள்ள தவறான கூற்றாகும். ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்ததுபோல‘.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) தவிர்ந்த அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் ஏற்கெனவே பரிமாறப்பட்டிருந்த ஆவணமே இது. கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த சில கட்சிகள் (தமிழரசுக்கட்சி–புளொட்–ரெலோ) கையெழுத்திட மறுத்திருந்தமை என்பது வேறு விடயம். தெரிந்துகொண்டுதான் இதனை எதிர்த்தவர்கள் தமது கடைந்தெடுத்த கட்சி அரசியல்–தேர்தல் அரசியல்சித்து விளையாட்டுகளை நடாத்தியுள்ளனர்.
அடுத்ததாகச் சுமந்திரன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஏற்கெனவே தனி நபர்சட்டத் திருத்தத்தை தான் முன்வைத்துள்ளதாகவும் அதனை நிறைவேற்றி மாகாண சபைத்தேர்தலை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது சுமந்திரன் தனது வித்துவத்தைக் காட்டவெளிப்படுத்திய வெற்று வேட்டே தவிர வேறொன்றுமில்லை.
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி–புளொட்–ரெலோ இணைந்த) நான்கு வருடங்களாக (2015-2019) முட்டுக்கொடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டின் ‘நல்லாட்சி‘ அரசாங்கமும்தான் என்பதைச் சுமந்திரன்மறந்து அல்லது மறைத்துப் பேசுகிறார் என்பது ஒரு விடயம்.
மற்றது; மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதில் தமிழர்கள் சார்பில்எவரும் எதிர்ப்பில்லை. ஆனால் 1987 இல் நிறைவேற்றப்பெற்ற மூல 13 ஆவது அரசியல்சட்டத்தின் கீழ் பகிரப் பெற்ற அதிகாரங்கள் சில ஐதாக்கப் பெற்றுள்ளன அல்லது மத்தியஅரசினால் மீளக் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைச் சீர்செய்யாமல் மாகாண சபைத் தேர்தலைநடத்துவது ‘பழைய குருடி கதவைத் திறடி‘ கதையாகத்தான் முடியும். இதைச் சீர் செய்வதற்காகவே‘ஆலோசனைச் சபை‘ யோசனை முன்வைக்கப்பட்டதே தவிர மாகாண சபைத் தேர்தலை நடத்தும்காலத்தை இழுத்தடிப்பதற்காக அல்ல என்பதைச் சுமந்திரன் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்தும் அதனை அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விரும்பவில்லைபோல் தெரிகிறது.
எது எப்படியிருப்பினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் எந்தவாக்குறுதியும் கொடுபடவில்லை.
இவற்றை அடுத்து அதிகாரப் பகிர்வு சம்பந்தமான புதிய அரசியல் அமைப்பு தொடர்பாகப்பேசப்பட்டுள்ளது.
சுமந்திரன் “ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட அரசமைப்பு வரைவு உள்ளது. அதிலிருந்து பணிகளை தொடரலாம்” என்றிருக்கிறார்.
ஏற்கெனவே கடந்த முப்பத்தாறு வருடங்களாக அரசியல் அமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை அமுல்செய்வதற்கே அக்கறைப்படாத– அரசியல் விருப்பம் காட்டாத இலங்கை அரசாங்கங்கள் (யார்அல்லது எந்தக் கட்சி ஆட்சியிலிருந்த போதிலும்) 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கும் மேலான அல்லது அதிகமான ஒன்றை (13+) நிறைவேற்றித் தந்து அதனைஅந்தரங்க சுத்தியோடு அமுல் நடத்தும் எனச் சுமந்திரன் இன்னும்தான் நம்புகிறாரா?
உடனே சித்தார்த்தன் “அரசமைப்பு திருத்தம் நீண்ட காலம் இழுபடும். தீர்வு கிடைக்காது” என்றுதனது பிரதிபலிப்பைச் சுமந்திரனின் மேற்படி கூற்றுக்கு எதிராகக் காட்டியுள்ளார்.
இந்தக் கட்டத்தில் அப்படியானால் என்ன செய்யலாம்” என்று ஜனாதிபதி கேட்டுள்ளார்.
அதற்குத் தமிழர் தரப்பிலிருந்து மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று முன்மொழியப்பட்டது. இதனைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுதான் இப் பேச்சுவார்த்தையின் இறுதி விளைவு என்றால் எல்லாத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் போயிருந்து கொண்டு தமது உள்வீட்டுப் பலவீனங்களைப் பகிரங்கப்படுத்தாமல் காலக்கெடு விதித்து மாகாணசபைத் தேர்தலை வைக்கும்படியான கோரிக்கையை மட்டும்ஒற்றைக் கோரிக்கையாகவும்–ஒருமித்த கோரிக்கையாகவும் முன் வைத்திருக்கலாம்தானே? நடைமுறைச் சாத்தியமில்லாத மற்றைய விடயங்களை அலம்பியிருக்கத் தேவையில்லையே.
அத்துடன், மத்திய அரசாங்கம் காலத்துக்குக் காலம் சட்டத் திருத்தங்கள் மூலம் மீளப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்பட்டு முழுமையான அதிகாரங்கள் கொண்டதாக 13 ஆம் திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுமுள்ளனர் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்காகத்தானே ஆலோசனைச் சபை யோசனை முன்வைக்கப்பட்டது. அதனை ஆரம்பத்திலே ஆட்சேபித்துவிட்டுக் கூட்ட இறுதியில் இவ்வாறு வலியுறுத்தியிருப்பது முன்னுக்குப் பின்முரணானது அல்லவா.
மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் மீண்டும் மாகாண சபைகளுக்குவழங்கப்பட வேண்டுமென்பதும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதும்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்க் கட்சிகளின்–தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின்கூட்டு வலியுறுத்து என்றால் வேறு விடயங்களில் வாயைச் சப்பாமல்ஒரேயடியாகவும்–நேரடியாகவும்–கூட்டாகவும்–ஒருமித்து நின்றும் இக்கோரிக்கையை மட்டுமேஒற்றைக் கோரிக்கையாகக் காலக்கெடு நிபந்தனையுடன் முன் வைத்திருக்கலாமே?
பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தமிழர் தரப்பு வழமை போல வெறுங்கையோடுதான் வெளியேவந்திருக்கிறது. ஆமாம்! ‘மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது‘. ஜனாதிபதிதமிழர் தரப்பின் பலவீனத்தை மீண்டுமொருமுறை நாடி பிடித்து அறிந்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று குறிசுட்டுக் கொண்டுசெயற்படுகின்ற கட்சிகள் யாவும் தனித்தனியாகவும்–கூட்டாகவும் மேற்கொள்ளுகின்ற அத்தனைசெயற்பாடுகளும் அன்றிலிருந்து இன்று வரை ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகத்தான்இருந்துவருகின்றன. இவர்களின் இவ்வாறான ‘அரசியல் அற்ற அரசியல்‘ இனியும் இப்படித்தான்இருக்கவும் போகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘அரசியல் அற்ற ஆயுதப் போராட்டம்‘ ஈற்றில் தமிழ் மக்களுக்குப்பேரழிவுகளை ஏற்படுத்தியது போல இத்தமிழ் தேசியக் கட்சிகளின் ‘அரசியல் அற்ற அரசியல்‘ தமிழ் மக்களுக்கு மேலும் பின்னடைவுகளையே கொண்டு வரும் என்பதைத் தமிழ் மக்கள்உணர்ந்து தெளிவடைய வேண்டும்.
தமிழ் மக்கள் இத்தமிழ்த் தேசியக் கட்சிகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மாற்று அரசியல்சக்தி ஒன்றினை அடையாளம் காணும் வரை அல்லது மாற்று அரசியல் சக்தி ஒன்றினை விரைவில்அடையாளம் கண்டு விட்டு இத்தமிழ்த் தேசியக் கட்சிகளையெல்லாம் தூக்கி எறியும் வரைஇலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் எதிர்காலம் என்று ஒன்று இல்லை.