(நேர்காணல்)
சகவாழ்வு ஒரு வாழ்தல் முறையாக மலர்தல் வேண்டும்
சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் சமூக நீதிக் கட்சியின் தவிசாளர். அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் (2018) உறுப்பினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் (2001). பின்பு தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர். போருக்குப் பிந்திய இலங்கைச் சூழலில் மாற்று அரசியலின் தேவையினால் 2010 இல் அரசியலில் பிரவேசித்த சிராஜ் மஷ்ஹூர், கட்சி அரசியலில் பெரிதும் விருப்பற்ற களச் செயற்பாட்டாளராகவே இயங்கி வருகிறார். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் கட்சி அரசியலையும் எதிர்கொள்ள – அதில் ஈடுபட வேண்டிய தவிர்க்க முடியாத சூழலினால் மாற்று அரசியலைப் பிரதிபலிக்கும் சமூக நீதிக் கட்சியில் செயற்படுகிறார்.
நம்முடைய அரசியல் தலைவர்களின், அரசியல்வாதிகளின் மரபார்ந்த அணுகுமுறையிலிருந்து விலகித் தனித்துச் செயற்படும் சிராஜ், யதார்த்தவாதி. கவிஞர். எழுத்தாளர், சிந்தனையாளர், பதிப்பாளர். அக்கரைப்பற்றில் புத்தக் காட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். ‘வழித்தடம்’, ‘மீள்பார்வை’ இதழ்களின் ஆசிரியர். நல்லதொரு விவசாயி. இது போன்றவையே ஒரு அரசியல் செயற்பாட்டாளருக்கான அடிப்படைகள் என்ற புரிதலோடு மக்களுடனும் துறைசார் அனுபவங்களுடனும் இருப்பவர்.
இன, மத, பிரதேச, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லாச் சமூகங்களுடனும் ஊடாடும் மிகச் சில இலங்கையர்களில் ஒருவர்.
போருக்குப் பிந்திய இலங்கைச் சூழலில் பகை மறப்பு, நல்லிணக்கம், அமைதித்தீர்வு பற்றி நேர்மையாகச் சிந்தித்துச் செயற்படும் ஆளுமை.
1. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வு சாத்தியம்? அதை நடைமுறைப்படுத்துவது எப்படி?
இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதை முழு அளவில் ஏற்றுக் கொள்வதுதான் முதல் அம்சம். சிலர் இதை இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பகுதியளவில் – அரைகுறைப் புரிதலோடு உள்ளோரே இங்கு அதிகம்.
பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் மறுதலிக்கப்பட்டு வந்தன. கடைசியில் உள்நாட்டுப் போராய் வெடித்தது. பாரிய அழிவுகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டோம். இப்போது போர் முடிந்து ஒன்றரைத் தசாப்தம் அளவில் கடந்திருக்கிறது.
வெளியிலிருந்து திணிக்கும் தீர்வுகள் அவசியம் இல்லை. உள்ளூர் மட்டத்தில் வளர்த்தெடுக்கும் தீர்வே (Home-grown solution) சிறந்தது என்று கூடப் பேசப்பட்டது. பல தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பல முன்மொழிவுகள் கைவசம் உள்ளன.
ஆனால், தீர்வை வழங்குவதற்கான அரசியல் விருப்பு (Political will) இன்மையே முதன்மையான பிரச்சினை. அதுவே இத்தனை இழுத்தடிப்புக்கும் முழுமுதற் காரணம்.
கடந்த காலங்களில் சில அருமையான வாய்ப்புகள் இருந்தன. அவை வேண்டுமென்றே தவற விடப்பட்டன.
திம்புப் பேச்சுவார்த்தை, இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் அடிப்படையில் உருவான மாகாண சபை முறையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தல், சந்திரிக்கா காலத்து அரசியமைப்பு வரைவு, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கை, நாடாளுமன்ற தெரிவுக் குழு அறிக்கைகள் என்று ஏராளமான வரைவுகள் கைவசம் இருக்கின்றன.
இதற்கு மேலதிகமாக சிவில் சமூகத் தளத்திலிருந்து எண்ணற்ற தீர்வுப் பொதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ முப்பதாண்டுகள் மிகத் தீவிரமான கலந்துரையாடலுக்கு உள்ளான விடயம் இது.
இந்தக் கடந்த கால வரைவுகளையும் தீர்வுப் பொதிகளையும் விரிவாக ஆய்வுக்குட்படுத்துவது மிகவும் அவசியமான முதற்படியாக அமையும். அவற்றிலுள்ள பொருத்தமான அம்சங்களை உள்வாங்குவது இன்றியமையாத பணியாகும்.
இலங்கையின் இனப் பிரச்சினை என்பது தொடக்க காலத்தின் பண்புகளோடு இருக்கவில்லை. அது சிங்கள- தமிழ் பிரச்சினையாக குறுக்கப்பட முடியாத ஒன்று. முஸ்லிம்களதும் மலையகத் தமிழர்களதும் இங்குள்ள ஏனைய சிறு சமூகங்களதும் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படாத எந்தத் தீர்வும் முழுமையான தீர்வாக அமையாது.
பரந்துபட்ட பார்வையோடு விசாலமாக இதை அணுகும் வகையிலான தேசிய மட்டக் கலந்துரையாடல்கள், கதையாடல்கள் தவிர்க்க இயலாத தேவையாக மாறியுள்ளது.
அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்வது போலவே, மூன்றாம் அடுக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்க வேண்டும். இந்திய அரசியலைமைப்பின் 74 ஆம்,75 ஆம் திருத்தங்கள் பஞ்சாயத்து சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்துள்ளமை இதற்கு நல்ல உதாரணம்.
இலங்கையின் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்து கொண்ட தீர்வுகளே இன்றையத் தேவை.
நில அடிப்படையிலான தீர்வுகள் (Territorial Solutions) மட்டுமல்லாது, நிலத் தொடர்பற்ற தீர்வுகள் (Non-territorial Solutions) குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும். பெல்ஜியத்தில் நடைமுறையிலுள்ள சமூக நாடாளுமன்றம் (Community Parliament), சுவிற்சர்லாந்திலுள்ள கலாசார சபைகள் (Cultural Councils) போன்றவை நம் முன்னுள்ள மாதிரிகளாகும்.
வேடுவர்கள், பறங்கியர்கள், மலாயர்கள் உள்ளிட்ட சிறு சமூகங்களின் அபிலாசைகள் இதுவரை போதியளவு கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இலங்கையில் 19 இனக்குழுக்கள் உள்ளதாக மனோ கணேசன் பொறுப்பாக இருந்த தேசிச ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படியான ஒரு முழுமையான பார்வை (Holistic View) இலங்கையின் நிலைபேறான அரசியல் தீர்வுக்கு மிகமிக அவசியம்.
அரசாங்க மட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் சமூகங்களிடையேயும் இடம்பெறும் கலந்தாய்வுகள் ஊடாகவே இதைச் சாத்தியப்படுத்த முடியும். அறிவுஜீவிகளின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம். தொலைநோக்குள்ள நிரந்தரமான ஆணைக்குழுக்கள், செயலகங்கள் ஊடாகவே இதனை முன்னெடுக்க முடியும். இதற்கு அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களும் புத்திஜீவீகளும் ஆதரவும் அனுசரணையும் வழங்க வேண்டும்.
இதற்கு தென்னாபிரிக்க அரசியமைப்பு வரைவுச் செயன்முறை நல்ல முன்னுதாரணமாக உள்ளது. அது போன்ற உள்ளீர்க்கும் பண்புள்ள (Inclusive Approach) ஒரு தொடர் செயன்முறையே, இலங்கையில் நமக்கு இப்போது தேவைப்படுகிறது.
விரிவான கேள்வி இது. மிகவும் சுருக்கமாகவே பதில் சொல்லியிருக்கிறேன்.
2. வடக்குக் கிழக்கு இணைப்பை தமிழ்த்தரப்பு வலியுறுத்துகிறது. முஸ்லிம்களோ தாங்கள் தனித் தேசம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தீர்வை எட்டுவது எப்படி?
பேச்சுவார்த்தைகளூடாகவே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். பல்லின, பன்மொழிச் சூழலில் எதை வலியுறுத்துவது, எதை விட்டுக் கொடுப்பது என்பது தொடர்பான மிகவும் சிக்கலான ஓர் அம்சம்தான் இது.
வட அயர்லாந்துப் பிரச்சினையின் தீர்வில் நமக்குப் பாடங்களும் படிப்பினைகளும் உள்ளன.
கிழக்கு மாகாணம் மிக வித்தியாசமான சனத்தொகைக் கட்டமைப்பு உடையது. ஏறத்தாழ 3 பிரதான சமூகங்களும் சம எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர்.
ஒரு தரப்பின் அபிலாசையும் இன்னொரு தரப்பின் அபிலாசையும் குறுக்கிடும்போது, யார் யார், எதை எதை விட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கான இணக்கப்பாட்டு அடிப்படைகள், ஒவ்வொரு தரப்பினதும் அச்சங்கள் குறித்த காப்பீட்டுப் பொறிமுறைகளை வகுத்தே இதைக் கடக்க முடியும். மாற்றுத் தீர்வுகளோ உத்தரவாதங்களோ இல்லாத வெறும் அரசியல் கோசங்களால் இது போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களைக் (sensitive issues) கையாள முடியாது.
3. தமிழ்த்தேசியம் உள்வாங்கும் தேசியவாதமாக (Inclusive Nationalism) கட்டமைக்கப்படவில்லை. அதனால்தான் அதற்குள் மத, சாதி, பால், பிரதேச வேறுபாடுகள் இன்னும் முற்றிய நிலையில் உள்ளன என்று முன்பொரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கான காரணம் என்ன?
தேசியவாதங்கள் குறித்து மறுவாசிப்பு செய்ய வேண்டிய காலத்திலேயே நாம் இருக்கிறோம்.
தமிழ்த் தேசியவாதம் என்பது ஒற்றைத் தன்மையானது அல்ல. பல தமிழ்த் தேசியங்கள் இருந்தன. வைதீக தமிழ்த் தேசியம் தொடக்கம் முற்போக்குப் பண்புடைய தமிழ்த் தேசியம் வரை, பல வகையான தமிழ்த் தேசியங்கள் கட்டமைக்கப்பட்டன. இவற்றுள் பெருவாரியாக செல்வாக்குச் செலுத்திய தமிழ்த் தேசியம் உள்வாங்கும் தேசியமாக கட்டமைக்கப்படவில்லை என்பது ஒரு முக்கியமான வரலாற்றுத் தவறு.
நீங்கள் சொல்லியிருப்பது போல மத, சாதி, பால் மற்றும் பிரதேச வேறுபாடுகள் குறித்த ஆழ்ந்த கரிசனையோ கோட்பாட்டு விவாதங்களோ முன்னிலையில் இருந்த போராட்டக் குழுக்கள் மத்தியில் போதியளவு இடம்பெற்றிருக்கவில்லை. சில தரப்பினர் அதை ஆழமாக விவாதித்தாலும், ஆரம்ப கட்டத்தில் அவற்றுக்கு உரிய இடமோ முக்கியத்துவமோ கொடுக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்டோரை நபர்களாக உள்வாங்குதல் என்பது வேறு, ஒடுக்கும் கருத்தியலான சாதியத்தை எவ்வாறு அணுகுவது என்பது வேறு. முஸ்லிம்களை, பெண்களை, கிழக்குத் தமிழரை நபர்களாக உள்வாங்குவதும் அவர்கள் சார்ந்த கருத்துநிலைகளைப் புரிந்து உள்வாங்குவதும் வெவ்வேறு அம்சங்கள்.
1980 களில் தமிழ்த் தேசியம் இதைப் புரிந்து கொண்ட முறையும் 2000 களில் புரிந்து கொண்ட முறையும் ஒன்றல்ல. இதற்கிடையே எவ்வளவோ நடந்து விட்டன.
ஆழமான புரிதலின்மை, ஆயுதப் போராட்டத்தை முதன்மைப்படுத்தியது, மற்றைய விடயங்களைப் பின்னர் பார்ப்போம் என்று ஒத்திப் போடும் வகையில் அணுகியது, அரசியல் முதிர்ச்சி போதாமை, கோட்பாட்டுத் தெளிவின்மை, ஒருவிதமான இராணுவ சாகசவாதம், அரசியல் பரிமாணத்தைக் குறைத்து மதிப்பிட்டமை, சக சமூகங்கள் பற்றிய போதிய புரிதலின்மை, அகப் பன்மைத்துவத்தை ஆழ்ந்து நோக்காமை போன்றனவே இதற்கான காரணங்கள்.
அரசியல் கட்சிகள் இளைஞர்களை உசுப்பேத்தி விட்டது கூட இதற்குக் காரணம்தான். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த தளத்தில் இயங்கிய அறிவுஜீவிகளின் பங்களிப்பின் போதாமை அல்லது அவர்களது கருத்துகள் மேலெழ முடியாமல் இருந்த சூழல் கூட இதற்குப் பங்களித்திருக்கிறது.
4. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பாலான தமிழ்த்தரப்பினர் இந்தியாவைச் சார்ந்திருக்கின்றனர். அல்லது இந்தியாவின் அனுசரணை வேண்டும் என்று சொல்கின்றனர். குறிப்பாகப் 13 திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதற்கு. இதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? இந்தியாவுடன் அவர்களுடைய அணுகுமுறை எப்படி உள்ளது?
பெரிய நாடுகளின் பூகோள அரசியல் தலையீடும் செல்வாக்கும் தவிர்க்க இயலாதவை. தமிழர்கள் இந்தியாவை முழுமையாகச் சார்ந்திருந்ததால் முஸ்லிம் அரசியல் தரப்பும் சிவில் சமூகமும், இந்தியா குறித்து பெரியளவு நம்பிக்கை கொள்ளவில்லை. இந்திய- இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்கள் குறித்து எந்த அக்கறையையும் காண்பிக்கவில்லை.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவானபோது முஸ்லிம்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் 33% மாக இருந்த முஸ்லிம் சனத்தொகை, இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 17% ஆகக் குறுக்கப்பட்டது.
இது அதிகார சமநிலையில் (Balance of Power) மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப், அப்போது இதனை பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தார். முஸ்லிம் மக்கள் மத்தியில் இதுவே முதன்மையான பேசுபொருளாக இருந்தது.
தங்களோடு பேசாமல் இரவோடிரவாக தங்களது அரசியல் தலைவிதியை மாற்றி எழுத முனைந்த இந்த அரசியல் திணிப்பை முஸ்லிம்கள் – குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் ஏற்கவில்லை.
இந்தியாவின் வகிபாகம் பற்றிய சந்தேகம் இங்கிருந்துதான் தொடங்கியது.
ஆனால், கால ஓட்டத்தில் இதில் மாறுதல்கள் உருவாகின. முஸ்லிம் காங்கிரஸ் இந்திய அனுசரணையோடு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது அனைவரும் நன்கறிந்ததே.
பின்னாட்களில் பூகோள அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப், இந்தியாவுடன் நட்பு அரசியலைத் தொடரும் விதமாகவே, தனது கட்சியின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தார்.
எனினும், இந்தியா தொடர்பாக முஸ்லிம் சமூக அரசியல் தளத்தில் ஒரு மயக்கமான பார்வையே நிலவுகிறது. தங்களது அரசியல் அபிலாசைகளை அடைவதில் இந்தியா எவ்வாறான பங்கை வகிக்கும் என்ற சந்தேகப் பார்வை நிலவவே செய்கிறது.
5. தமிழர்கள் ஒரு தேசமாக எழ வேண்டும் என்று ஒரு பக்கத்தில் தமிழ்த்தேசியவாதிகள் சொல்கின்றனர். இன்னொரு பக்கத்தில் முஸ்லிம்கள் தேசமாக நிற்க வேண்டும் என்று முஸ்லிம் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. எதிரெதிர் நிலையில் இவற்றின் சாத்தியங்கள், இவை உண்டாக்கப் போகும் விளைவுகள்?
தேசியவாதம் பெரிதும் புறந்தள்ளும் கோட்பாடாகவே இங்கு வளர்ந்திருக்கிறது. ஒரு தேசியம் இன்னொரு தேசியத்தை எதிரியாகவே பார்க்கப் பழகியிருக்கிறது. இது எதிர்கால இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது.
ஒவ்வொரு தரப்பும் தத்தமது தனித்துவங்களைப் பேண நினைப்பதில் தவறில்லை. ஆனால், இணங்கி வாழ்கிற சமுக – அரசியல் புரிதலும் தெளிலும் மிகமிக அவசியம். நேச சக்திகளாக இருக்க வேண்டியவர்கள், ஏன் பகைமுரணை வளர்க்க வேண்டும்?
இந்த ஆபத்தான கூறுகளை நாம் களைய வேண்டும். பரஸ்பரம் நல்லிணக்கமும் ஆக்கபூர்வமான ஊடாட்டமும் அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக, பின் போர்க்கால இலங்கையில் பகைமறப்பு என்பது மிகமிக இன்றியமையாதது என்பதை தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வருவது இதனால்தான்.
இதன் பாரதூரத்தை மக்கள் இப்போது புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், காலம் தாழ்த்தி இதற்காக மிகவும் வருந்துவார்கள்.
பின்காலனிய இலங்கையின் 75 வருட வரலாறு நம் கண் முன்னே சாட்சியமாக நிற்கிறது. சுதேசிகளின் கையில் இலங்கை கிடைத்த பின்னர், இங்கு பலரும் ஆடிய ஆட்டம், இலங்கையராகிய நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை நாம் இப்போது நன்கு உணர்கிறோம்.
இதேபோன்ற இன்னொரு பெருந்துயர் நமக்குத் தேவையா?
வரலாற்றின் பிரிசந்தியில் நிற்கிறோம் என்பதை பிரக்ஞைபூர்வமாக உணர வேண்டும். நமது அணுகுமுறைகள் மாற வேண்டும்.
6. தமிழ் – முஸ்லிம் உறவை வெறும் அரசியல் கட்சிகளின் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் சமூக உறவாக வளர்த்தெடுப்பது அல்லது மீள்நிலைப்படுத்துவது எப்படி?
இதுதான் இப்போது நம் முன்னே உள்ள பாரிய சவால். வரலாற்று ஓட்டத்தில் சமூகங்களிடையே முரண்பாடுகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், அவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறோம் – கையாள்கிறோம் என்பதுதான் முதன்மையான பிரச்சினை.
ஒரு பிரதேசத்தில் உருவாகும் பிரச்சினையைப் பொதுமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
அரசியல் கட்சிகள் முரண்களை ஊதிப்பெருக்கிக் காட்டுகின்றன. அதன் அளவையும் பரிமாணத்தையும் உருப்பெருக்கிக் காட்டுவதன் மூலமே தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றன.
இதை முறியடிக்க வேண்டும்.இதற்கு சமூக மட்டத்திலான உறவாடல்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட வேண்டும்.
போர்க் காலத்தில் இயங்கிய சமாதான சபைகள் மூலம் பல நல்ல விளைவுகள் கிடைத்த அனுபவங்கள் நமக்கு உள்ளன.
அதுபோல இலக்கியம் ஒரு முக்கியமான நல்லிணக்க – ஊடாட்டக் களமாக உள்ளது.
பரஸ்பரம் நலிந்த தரப்பினரைக் கைதூக்கி விடும் – அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு (Social Security) வழங்கும் செயற்பாடுகளும் இதற்குப் பெரிதும் உதவும்.
சமுக – பொருளாதார நோக்கில், பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரில் தங்கி வாழும் போக்கே இங்குள்ளது. சமூகங்களிடையிலான தங்கி வாழும் இடையீடுகள் (Inter-dependency) வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
சகவாழ்வு ஒரு வாழ்தல் முறையாக மலர்தல் வேண்டும். வெறுமனே அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்திட்டங்களாக அவை குறுகி விடுமாயின், எதிர்பர்க்கப்படும் நல்லிணக்கத்தை அடைய மிகவும் சிரமப்பட வேண்டி வரும்.
பாடசாலை மட்டத்திலிருந்தே இந்தக் கருத்து ஊக்குவிக்கப்பட வேண்டும். இலங்கையில் இன, மத ரீதியான பாடசாலை முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
பல்கலாச்சாரம் ஒரு பாடமாக, கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். கலாச்சாரப் புரிதல் (Cultural Understanding) அதிகரிக்கப்பட வேண்டும்.
7. தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் சக்திகள் (கட்சிகள்) குறைந்த பட்சம் அவசியமான வேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்து செயற்படத் தயங்குவதேன்?
இதுதான் இங்குள்ள மிக முக்கியமான பிரச்சினை. தமிழ், முஸ்லிம், மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் அரசியல் வறுமை நிலையையே (Political Poverty) இது காட்டுகிறது.
எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன எனச் சொல்கிறது உண்மைதான். ஆனால், அவை என்னென்ன, எவ்வாறானவை என்று அடையாளம் காண்பது ஆரம்ப அடிப்படை. அதிலிருந்து பிரச்சினைகளை வகைப்படுத்தி தீர்வை நோக்கிப் பயணிக்கலாம்.
எல்லோரும் குறைந்தபட்ச பொதுப் புரிதலைக் (Minimum Common Understanding) கண்டடைவது அப்போதுதான் சாத்தியம்.
இதில் ஆய்வு, தொடர் பேச்சுவார்த்தை, விட்டுக் கொடுப்பு என்பன மிகமிக அவசியம்.
ஆனால், இக்கட்சிகள் பெரும்பாலும் தொலைநோக்கோடு இயங்குவதில்லை. தாம் சார்ந்த சமூகத் தளத்தோடு மட்டும் சுருங்கி விடுகின்றன.
அதிலும் கூட, பிச்சைக்காரன் புண்ணாகவே பிரச்சினைகளைக் கையாளுகின்றன.
பெரும்பாலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவை அக்கறை கொள்வதில்லை. இன்னொரு பாஷையில் சொன்னால் அவை இந்தப் பிரச்சினைகளில்தான் வாழ்கின்றன. பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது, இவ்வாறான அரசியல் கட்சிகளின் இருப்பிற்கு சவாலானது.
சொந்த சமூகத்தின் பிரச்சினைகளையே இவை பார்க்காது இருக்கும்போது, சக சமூகங்களின் பிரச்சினையை எப்படிப் பார்க்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னும் ஒரு படி மேலே போய், சக சமூகங்களுடனான பிரச்சினைகளை ஊதிப் பெருக்கும் கட்சிகளையும் காண்கிறோம்.
தொலைநோக்கற்ற இவ்வாறான அரசியல் கட்சிகள் நமக்கு வரமாக அமையா விட்டாலூம் பரவாயில்லை, சாபமாக அமையக் கூடாது என்ற பதைபதைப்பில்தான் இலங்கையின் நடைமுறை அரசியல் களம் இயங்குகிறது.
8. பிளவுண்டிருக்கும் இலங்கைச் சமூகங்களை ஒருங்கிணைப்பது எப்படி? அதற்கான சாத்தியங்கள் உண்டா?
நிச்சயமாக உண்டு. அந்த நம்பிக்கையின் மெல்லிய ஒளிக்கீற்றும் இல்லாவிட்டால், இலங்கை இருண்ட எதிர்காலத்தில்தான் பயணிக்கும்.
காலனித்துவ காலத்தில் ஊன்றப்பட்ட விதைதான் நம்மைப் பிரித்தது, பின்காலனிய இலங்கையை சுதந்திர இலங்கையாக நம்மால் மனதார ஏற்க முடிகிறதா?
ஆழமான இனப் பிளவும் துருவமயமாதலும் (Ethnic Polorization), சுதந்திர இலங்கையைத் தின்று அழித்து விட்டன.
பின் போர்க் காலத்தையாவது சரியாகக் கையாளத் தெரிந்ததா? இப்பொழுது வங்குரோத்து நிலையை அடைந்து நடுத் தெருவில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறோம்.
இந்த நாட்டை மாறி மாறி ஆண்டோர், நம்மை இங்கேதான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர்.
பிளவுண்டு, தூரமாகித் துருவமயமாகி நிற்கும் இலங்கையிலிருந்து தப்பி ஓடுவதா தீர்வு?
இல்லை. மீண்டு எழுவதுதான் தீர்வு. எல்லோரும் நாம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பிக்கையை உருவாக்குவதுதான் வரலாற்றுக் கடமை. அதுதான் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்பு.
புதிய தலைமுறை இலங்கையர்களிடம்தான் அதை அதிகம் எதிர்பார்க்கிறேன். கடந்த காலத்தின் இருட்குகைக்குள் பயணித்தோரால் அது சாத்தியமில்லை.
ஹிரோஷிமாவிலூம் நாகசாகியிலும் அழிந்து போன ஜப்பான் மீண்டெழுந்தது போன்ற ஒரு மீள் எழுச்சி நமக்குத் தேவை.
எதுவும் சாத்தியமில்லை என்போர் வரலாற்று இயங்கியல் பற்றிய குறை அறிவுடையோர்.
அடுத்த பத்தாண்டுகள் நமக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதற்கடுத்த பத்தாண்டுகள் புதிய வாயில்களைத் திறக்கும் என்று நம்புவோம்.
போரின் பேரழிவும் இனவெறுப்பின் வஞ்சகமும் களைந்த, ஒரு புதிய தலைமுறையை உருலாக்கினால்தான் இது சாத்தியம். இது சவால்தான். கடினமான பணிதான். ஆனால், இதைவிட நமக்கு வேறு தெரிவு இல்லை.
9. சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் என்று இன்று தேசியவாத உணர்வு கூர்மையடைந்துள்ளது. இந்தச் சூழலில் தேசிய நல்லிணக்கத்தையும் பகை மறப்பையும் எட்டுவது எப்படி?
இவ்வாறான தேசியவாதங்கள் நமக்கு எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை. கூர்மையடைந்து விலகிச் செல்கிற அளவுக்கு, அவை நெருங்கி வரவில்லை என்ற யதார்த்த நிலைதான் மிகுந்த கவலையைத் தருகிறது.
இந்தப் பின்புலத்தில் இலங்கையிலுள்ள தேசியங்களை, அரசியல் சமூகங்கள் (Polity) என்று வகைப்படுத்தி நோக்குவது சிறந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தேசிய நல்லிணக்கம் என்பது, பெரிதும் சிவில் சமுக முன்னெடுப்புகளிலேயே தங்கியிருக்கிறது. கட்சி அரசியல் இதில் பெரிதாக உதவும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை.
இங்கு தேவைப்படுவது இணைப்புப் பாலமாக செயற்படுவதுதான் (Bridge-buildiing Role). இதற்கான சூழமைவை நாம் உருவாக்க வேண்டும்.
சந்திரிக்காவின் முதலாவது பதவிக் காலத்தில் வெண்தாமரை இயக்கம், சமாதானம் என்பன பேசுபொருளாக இருந்தன. ராஜபக்ஷ ஆட்சியில் போரே பிரதான பேசுபொருளாக இருந்தது.
போருக்குப் பிந்திய இலங்கையில், பகைமறப்பும் சமூகங்களிடையிலான மீள் இணக்கமுமே பிரதான பேசுபொருளாக ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், இங்கு பெரும்பான்மைவாதமே (Majoritarianism) தூக்கலாக முன்னிறுத்தப்பட்டது. எண்ணிக்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்சம் விதைக்கப்பட்டது. புதிய எதிரிகள் கட்டமைக்கப்பட்டார்கள்.
இதனை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் நகர்த்தினார்கள். இங்குதான் பரந்துபட்ட சமூகங்களின் தலையீடு அவசியமாகிறது.
இலங்கையில் பல மொழிகள் பேசப்பட்டாலும், அடிபடையில் சிங்களமும் தமிழும்தான் பிரதான மொழிகள். இவற்றோடு ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.
சிங்களவர்கள் தமிழையும், தமிழ் பேசுவோர் சிங்களத்தையும் படிக்க முன்வர வேண்டும். ஆங்கிலம் படிப்பதில் காட்டும் அக்கறையைக் கூட இதில் காட்டுகிறார்களில்லை. இந்த மொழியறிவு பரந்துபட்ட தளத்தில் பிரயோகத்திற்கு வருமாயின், புதிய இலங்கையொன்றைக் காண முடியும்.
மொழி வேலி கடந்து, எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாற முடியாமல் இருப்பது, பகை மறப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் பாரிய தடையாக உள்ளது.
இன்னொரு பக்கம் சிங்கப்பூர் போன்ற நாடுகள் பின்பற்றும் பல்கலாச்சார – பன்மைத்துவக் கொள்கைகள் நமக்கு அவசியம். குறித்த ஒரு இடத்தின் பல் கலாசார ஒழுங்கு பாதிக்கப்படாத குடியேற்ற முறையை அந்நாடு அமுல்படுத்துகிறது. இதில் கற்றுக் கொள்ள நமக்கு நிறையப் பாடங்கள் உள்ளன.
10. போருக்குப் பிந்திய சூழலில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய, முன்னெடுக்கப்பட்ட பகை மறப்பும் நல்லிணக்கமும் தோல்வியடைந்தது ஏன்?
தொலைதரிசனமுள்ள தலைவர்கள் நமக்கு வாய்க்கவில்லை. இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தை, அரசியல் அரங்கில் மட்டுமல்ல, சிவில் சமூகத் தளத்திலும் பரவலாகக் காணலாம்.
நம் மத்தியில் இருக்கும் அரசியல் பிரித்தாளும் அரசியல்தான்; இணக்க அரசியல் அல்ல. அதுதான் முதன்மைக் காரணம்.
11. எதற்காக போருக்குப் பிந்திய அரசியலை Post – war Politics) முன்னெடுப்பதற்கு அரசியற் கட்சிகள் தயங்குகின்றன?
கட்சி அரசியலின் முகாந்திரம் மிகவும் குறுகிய பார்வை கொண்டதாகவே இருக்கிறது.
பரந்துபட்ட பார்வையுடைய, எல்லோரையும் உள்ளீர்க்கும் பண்பு கொண்ட, பன்மைத்துவ இயல்புடைய புதிய இலங்கை பற்றி, இங்குள்ள அரசியல் கட்சிகளின் பார்வைதான் என்ன?
முன்னரங்கிலுள்ள பிரதான கட்சிகள் பெரிதும் இனச் சாய்வு கொண்டதாகவே உள்ளன. பன்மைத்துவத்தை உண்மையான கொள்கையாகவும் வரித்துக் கொண்டு இயங்குவதாகத் தெரியவில்லையே.
இவர்களது பார்வைக் கோளாறுதான் எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணி. மாற்றான ஒரு அரசியல் கலாச்சாரமோ வரலாறோ இங்கு இல்லாமல் போய் விட்டது.
12. பிரதான அரசியற் கட்சிகள் பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தயங்குவது ஏன்?
வாக்கு அரசியால்தான். அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவோர்தான் இங்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். அடுத்த தலைமுறை பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை.
நமக்கு வாய்த்தவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகளும் அரசியல் வியாதிகளும்தான். தொலைநோக்குள்ள அரசியல் தலைவர்கள் (Statesmen) இங்கு அரிதிலும் அரிது.
மக்களும் அவ்வாறானோருக்கு சந்தர்ப்பம் கொடுக்கத் தவறி விட்டனர்.
ஊழலும் குடும்ப ஆட்சியும் அதிகார துஷ்பிரயோகமும் சுயநல மோகமும்தானே நமது அரசியலின் பிரிக்க முடியாத கூறுகளாக உள்ளன.
இந்தியாவுக்கு வாய்த்த காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், அம்பபேத்கர்„ பெரியார், காயிதே மில்லத் போன்ற தூர நோக்குள்ள தலைவர்கள் இலங்கையில் நமக்கு வாய்க்கவில்லை.
ஒரு நெல்சன் மண்டேலாவை இங்கு கனவு காணத்தான் முடியும்.
இந்த அரசியல் தலைவிதியைத்தான் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் இவை சாத்தியம்.
13. மாற்றத்தை விரும்பும் விதமாக மக்கள், சிங்களப் பரப்பில் ஜே.வி.பியையும் தமிழ்ப்பரப்பில் விடுதலை இயக்கங்களையும் பின்னர் விடுதலைப் புலிகளையும் ஆதரித்துள்ளனர். அண்மையில் அரகலய போராட்டமும் மாற்றத்தை விரும்பும் மக்களின் எழுச்சியாக இருந்தது. ஆகவே மக்கள் அடிப்படையில் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதற்கு மாறாகச் செயற்படுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் நியாயம், “தேர்தலில் மக்கள் தம்மையே தெரிவு செய்கிறார்கள், தமக்கே ஆதரவளிக்கிறார்கள்” என்பது. இந்த முரண் எப்படி நிகழ்கிறது?
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது எவ்வளவு தூரத்திற்கு உண்மையோ, அதேயளவுக்கு இதே மக்கள் அரசியல்வாதிகளின் தந்திரங்களுக்கு மிக மோசமாப் பலியாகி விடுகின்றனர் என்பதும் உண்மைதான்.
ஊடகங்கள் மூலம் புனையப்படும் செய்திகளே, மக்களது பொது அபிப்பிராயத்தை வடிவமைக்கின்றன. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய்களுக்கு பலர் மிக இலகுவாகப் பலியாகி விடுகின்றனர்.
தகவல் ஒரு மிகப்பெரும் வல்லரசு (Information is the super power) என்பார்கள். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மக்கள் நம்ப முடியாத வேகத்தில் திசைதிருப்பப்படுகின்றனர்.
மக்களுள் கணிசமானோர் அரசியல்வாதிகள் போல துஷ்பிரயோகம், ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
கோப்பறேற் முதலாளிகளால் – நியோ லிபரல் சக்திகளால்- உலகெங்கும் வலதுசாரி மனநிலை தூண்டி வளர்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்குள், பொதுசன அபிப்பிராயத்தை ஒளித்து விளையாடும் கண்ணாமூச்சு விளையாட்டையும் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.
இனவாதம், ஊர்வாதம், பிரதேசவாதம், வர்க்கவாதம் போன்ற குறுகிய உணர்வுகளுக்கு தொடர்ந்தும் தீனி போடுகிறார்கள். மக்களுள் கணிசமானோர் அதற்கு வேகமாகப் பலியாகின்றனர்.
இந்தப் பேரலையில் எப்படி ஒரு சராசரி பொதுமகனால் தாக்குப் பிடிக்க முடியும்? அவனும் அதில் அள்ளுண்டு போகிறான்.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது எல்லாமே கைமீறிச் சென்று விடுகின்றன. அப்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறான். இதுதான் பெருவாரியான பொதுப் பொக்கு.
இப்படியொரு நச்சு வட்டத்தில் பெருவாரியானோர் அகப்பட்டிருப்பதுதான் பெருந்துயரம்.
14. போராட்டம், போர் போன்றனவெல்லாம் மாற்றங்களை உருவாக்கவில்லை. பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? அதை முன்னெடுப்பது எப்படி?
போரும் வன்முறையும் நமக்குத் தீர்வு தரவில்லை. பேரழிழவுகளையே விளைவாகத் தந்துள்ளன.
ஜனநாயக வழி முறையினூடாகவே நாம் நமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும்.
இதற்கு இங்குள்ள அரசிசல் முறைமை குறித்த ஆழமான பார்வை அவசியம். தேர்தல் அரசியல் கையாளும் தந்திரோபாய நுணுக்கங்கள் குறித்த ஆழ்ந்த அறிவு அவசியம்.
இதற்கான பொறிமுறைகளை வகுக்கத் தெரிந்த அறிவும் நுட்பமும் இன்றியமையாத் தேவைகள்.
அறிவார்ந்ந அரசியல் செயற்பாட்டை, அறம் பிழைக்காமல் முன்னெடுக்கும் ஆற்றல் அவசியம். பொருளாதார பலமில்லாமல் இந்த அரசியல் ஆடுகளத்தில் காய்களை நகர்த்துவது கடினம். அதைவிட மக்கள் ஆதரவு என்பதுதான் ஆகப் பெரிய பலம். அதைக் கொண்டுதான் தாவீதுகள் கோலியாத்களை வெல்ல முடியும்.
இதற்கு வாய்பாடுகள் தீர்வு சொல்வது கடினம். அத்தோடு இவை எளிதில் தீர்க்க முடியுமான கணிதப் பிரசினங்களும் அல்ல.
அரசியல் போராட்டமும் ஜனநாயக வெளியும்தான் தீர்வுகள். அதற்கான வழிமுறைகளை நாம்தான் கண்டடைய வேண்டும். நம் கண் முன்னே எண்ணற்ற உலக அனுபவங்கள் விரிந்து கிடக்கின்றன.
15. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வென்ன? ஐ.எம். எவ்வின் கடனுதவியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொருளாதாரத்தை முறையாக முகாமை செய்யாததன் பாரதூர விளைவுகளே இவை. முறையான நிதி முகாமைத்துவம் மிகமிக அவசியம்.
இலங்கை ஊழலின் ஆழமான பிடிக்குள் உள்ளது. முழு முறைமையிலும் அதன் கறை படிந்துள்ளது. அரசியல்வாதிகள் தொடக்கம் அதிகார வர்க்கம் வரை ஊழலில் தோய்ந்து போயிருக்கிறார்கள். அதைப் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இந்த நாட்டுக்கு தேசியத் திட்டமோ (National Plan), ஐந்தாண்டுத் திட்டமோ, திட்ட ஆணைக்குழுவோ (Planning Commission) கிடையாது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போதுதான், நாட்டின் திட்டங்களை அறிய முடிகிறது. இது எவ்வளவு பேரவலம்?
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் ஒரு பண்பாடு இங்கு வளரவில்லை.
நிலையான திட்டங்கள் இல்லை. அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால், எல்லாத் துறையிலும் தளம்பலும் ஒருவகையான நிச்சயமின்மையுமே தொடர்கிறது. இது பெரிய குறைபாடு.
சிறிய, நடுத்தர முயற்சியாளர்களை (SME sector) ஊக்குவிக்கும் போக்கில் பெரும் குறைபாடு நிலவுகிறது.
விவசாயத் துறையை பெருமளவு கைவிட்டு விட்டோம். இதில் ஊக்குவிப்பு மிகவும் மந்த கதியிலேயே உள்ளது.
கைத்தொழில் மயமாக்கலின் சவால்களை சரியாக ஆராய்ந்து, நடைமுறைச் சாத்தியமான மாற்றுத் தீர்வுகள் கண்டடையப்பட வேண்டும்.
இலங்கைக்கே உரித்தான விவசாயக் கொள்கையோ கைத்தொழில் கொள்கையோ முறையாக வகுக்கப்படாமல், நாம் எப்படி பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்?
கட்டுப்பாடற்ற இறக்குமதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, உள்ளூர் உற்பத்தியையும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
வெளிநாட்டு வாழ் இலங்கையரால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் (Foreign Remittance) இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான வருமான மூலமாக உள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் உபாயங்கள் கண்டடையப்பட வேண்டும்.
சுற்றுலாத் துறை, அதனோடு இணைந்த துறைகள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்
நாடு எதிர்நோக்கும் இன்னொரு பெரிய சவால்தான் மூளை ஏற்றுமதி (Brain Drain). இதைக் கட்டுப்படுத்தா விட்டால், இலங்கையின் மூளை வளமும் மனித வளமும் மிகவும் நலிவடைந்து விடும்.
இதுபோன்ற விடயங்களில் கவனத்தைக் குவிக்காமல், கடன்களைப் பெறுவதில் மட்டுமே குறியாக இருப்பது தீர்வாகாது.
ஏற்கனவே கண்முடித் தனமாகக் கடன்பட்டிருக்கிறோம். அதனை மீளச் செலுத்தும் வழியில்லாமல் தவிக்கிறோம். மிக மோசமான கடன் முகாமைத்துவ வரலாறு நமக்கு இருக்கிறது. கடன் பொறிக்குள் அகப்பட்டிருக்கிறோம்.
இந்த நிலையில் ஐ.எம்.எப்.பிடம் மேலும் கடன் பெறுவது தீர்வு அல்ல. அவர்களின் நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்பதும் பொருத்தமில்லை.
ஆனால், நாம் விரும்பாமலோ நமது அரசாங்கம் ஐ.எம்.எப். கடனுக்குள் அகப்பட்டு விட்டது. அதை ஒரு தற்காலிகத் தீர்வாகக் கருதி, கூடிய விரைவில் அதிலிருந்து வெளியேறியாக வேண்டும்.
இலங்கைக்கு உதவியளிக்கும் நாடுகளிடமிருந்து – நியாயமான நிபந்தனைகளுடன் கடன்பெறுவது அவசர அவசியத் தேவையாக இருக்கலாம்.
இவை எல்லாவற்றையும் விட, உள்ளூர்ப் பொருளாதாரத்தை, நீண்டகால நோக்கில் கட்டியெழுப்புவதே நிலைபேறான நிரந்தரத் தீர்வாக அமையும்.