மதுசிகன் : காரிருள் சூழ்ந்த இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் ஒரு விடிவெள்ளி

மதுசிகன் : காரிருள் சூழ்ந்த இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் ஒரு விடிவெள்ளி

— கருணாகரன் —

தவேந்திரன் மதுசிகன்— வயதுக்கும் ஆற்றலுக்கும் இடையில் உள்ள ஆச்சரியங்களைப் பற்றி வியந்திருக்கிறோம். நம்முடைய காலம் அப்படியிருந்தது. மிகக் குறைந்த வயதில் மிகப் பெரிய ஆற்றலை வெளிப்படுத்திய பலரை ஈழப்போராட்டம் கண்டிருந்தது. துணிச்சல், வீரம், அர்ப்பணிப்பு, சாதனை, ஆற்றல் எனப் பல வடிவங்களில் இதனை நாம் பலரிடம் கண்டிருக்கிறோம். இவை பற்றிய விமர்சனங்கள் யாருக்கும் இருக்கக் கூடும். அல்லது அவற்றில் சரி பிழைகள் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரும் வெளிப்படுத்திய சாதனைகள் பெரிது.  மிகச் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள், மிகப் பெரிய இராணுவ வல்லுனர்களாக இருந்திருக்கிறார்கள். மிகப் பரந்த அளவில் அரசியல் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மிகச் சிறந்த எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். ஈழப்போராட்ட இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் அவர்களுடைய இருபதுகளிலேயே மிகப் பிரபலம் பெற்றிருக்கிறார்கள். அந்தக் களம் அப்படியானவர்களின் ஆற்றலுக்குக் களம் அமைத்தது. அல்லது அந்தக் களத்தில் அவர்கள் உருவாகினார்கள்.

இன்று அவையெல்லாம் கனவாகிப் போயிருக்கலாம். ஆனால், வரலாறு அதையெல்லாம் கணக்கெடுத்துள்ளது என்பது மெய்.

போராட்டக் காலத்தில் இருபெரும் பிரிவுகள் இருந்தன. ஒன்று விடுதலைக்கான செயற்பாடுகள். இன்னொன்று விடுதலைக்கு எதிரான செயற்பாடுகள். இந்த இரண்டுக்குள்ளும் சிக்குண்ட தமிழ்ச்சமூகம் அடைந்த துயரமும் அவலமும் கொஞ்சமல்ல. கலக்கத்துடன்தான் அன்றைய பெற்றோர் இருந்தனர். தங்கள் பிள்ளைகளைக் குறித்த அச்சமும் துயரமும் அவர்களைப் பாடாய்ப்படுத்தியது.  அதிலும் அன்னையர் அடைந்த துயரம் மிகப் பெரிது. “பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் மகிழ்ந்திருக்கும் காலமொன்று வந்ததே” என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்படுவதையும் விட அனைவரையும் துயரமும் அவலமும் ஆட்கொண்டிருந்த காலம் – சூழல் – அது.

போராட்டம் முடிவுற்ற பின்னர், இன்றைய நாட்களில் இந்தத் துயரமும் அச்சமும் இன்னொரு விதமாகப் பெற்றோரையும் சமூகத்தையும் ஆட்டிப் படைக்கிறது. இன்றைய இளைய தலைமுறை பள்ளிப் பருவத்திலேயே வழிதவறிய மந்தைகளாக போதைப் பொருளுக்கும் சமூக வன்முறைக்கும் பலியாகியுள்ளது. இன்னொரு தரப்பு இலக்கற்று செல்போனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. மற்றொரு தரப்பு விட்டேத்திகளாகத் திரிகிறது. இதைக்குறித்த கவலைகளுக்கு மருந்தென்ன என்று யாருக்குமே தெரியவில்லை. உண்மையில் இது ஒரு கையறு நிலையே.

யுத்தத்திற்குப் பின்னர் இளைய தலைமுறையை வழிப்படுத்தக் கூடிய மாற்றுப் பொறிமுறைகளையும் வழிமுறைகளையும் செய்யத் தவறியதன் விளைவே இதுவாகும். குறிப்பாக இளையோருக்கான தொழில்வாய்ப்புகள் இல்லாத நிலை. முன்னுதாரணம் கொள்ளக் கூடிய முன்னோடிகளும் தலைவர்களும் இல்லாது போனமை. இளையோர் இணைந்து செயற்படத்தக்க அமைப்புகளும் செயற்பாட்டியக்கங்களும் இல்லை என்பது. இருப்பனவெல்லாம் உழுத்துப்போன அரசியற் கட்சிகள். அவற்றில் இணைந்து செயற்படும் இளைய தலைமுறை அர்ப்பணிப்பு – சமூகச் செயற்பாடு என்பதற்கு அப்பால் குறுகிய வழிகளில் ஆதாயம் தேடுகின்ற வழிகளைப் பற்றியே சிந்திக்கிறது.

இப்படியான நிலையில் அபூர்வமாகவும் அதிசயமாகவும் அங்கொன்று இங்கொன்றாக சில இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள். காரிருளின் மத்தியில் தோன்றுகின்ற ஒற்றை நட்சத்திரத்தைப் போன்ற இவர்களே நமக்குக் கிடைக்கின்ற சிறிய ஆறுதலும் மகிழ்ச்சியும் பெருமையுமாகும். அப்படியான ஒரு நம்பிக்கை நட்சத்திரமே மட்டக்களப்பைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன். க.பொ.த. உயர்தரப்பரீட்சை எழுதி விட்டுக் காத்திருக்கிறார் மதுசிகன். சரியாகச் சொன்னால் பரீட்சை எழுதிவிட்டு அவர் பெறுபேற்றுக்காகக் காத்திருக்கவில்லை. பரீட்சை முடிவு எப்படி வந்தாலென்ன? அதற்கப்பால் மதுசிகனுக்கு ஆயிரம் வாசல்கள். ஆயிரமாயிரம் பாதைகள். அவர் தேர்ந்த பாதைகளா அல்லது அவர் தானாகவே உருவாக்கிய பாதைகளா என்று தெரியாது. அல்லது இரண்டுமாக இருக்கலாம். இன்று அவர் ஒரு சாதனையாளர். வயது 21தான். இந்த வயதில் அவருடைய சாதனையும் சிந்தனையும் மிகப்பெரிதாக உள்ளது. ஆச்சரியங்களைத் தருகிறது.

இந்த வயதில் மதுசிகன், பாக்குநீரிணையை நீந்திக் கடந்திருக்கிறார். இலங்கையில் மிக இளைய வயதில் பாக்குநீரிணையைக் கடந்த நீச்சலாளர் என்ற பெயரை எடுத்திருக்கிறார்.

இது எப்படி ஏற்பட்டது?

மதுசிகனே சொல்கிறார் –

“எனக்குப் பதின்னான்கு வயதிருக்கும்போதே நீச்சலில் ஈடுபட வேணும் என்ற எண்ணம் வந்தது. அதற்குக் காரணம், நாங்கள் இருந்த மட்டக்களப்பு – கல்லடிக் கடலில் பலர் அவ்வப்போது மாண்டுபோவார்கள். நீச்சல் சரியாகத் தெரியாமல் கடலில் இறங்குவதே இதற்குக் காரணம். இதனால் நான் நீச்சல் பழக வேணும் என்று யோசித்தேன். அதற்குப் பிறகு வீட்டில் குளிப்பதை விடக் கடலில் குளிப்பதே என்னுடைய வழமையாகியது. ஆனால், இதைப்பற்றி அப்பொழுது வீட்டுக்குத் தெரியாது. நண்பர்களுடன் கடலில் விளையாடத் தொடங்கினேன். கடலுக்கும் எனக்குமான உறவு வளரத் தொடங்கியது. கடற்கரையிலேயே என்னுடைய பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன. நண்பர்கள் எனக்கு உதவியாக, ஊக்கமாக இருந்தார்கள். 17, 18 வயதில் கடலுக்கும் எனக்கும் நெருக்கம் கூடியது. அப்பொழுது நான் என்னுடைய பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் இயக்கத்திலும் இணைந்திருந்தேன். சாரணர் பயிற்சிப் பாசறையில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். அதில் திறமையாகச் செயற்பட்டதற்காக மாகாண மட்டத்தில் சாதனையாளர் விருது கிடைத்தது. கோல்ட் மெடல், சில்வர் மெடல் எல்லாவற்றையும் பெற்றேன். எனக்கு ஊக்கமாக சீனியரான சஞ்சீவன் அமலநாதன் உதவினார்.   

என்னுடைய நீந்தும் ஆர்வத்தைப் பற்றியும் நான் கடலில் நீந்துவதைப் பற்றியும் வீட்டாருக்குத் தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் தடுக்கவில்லை. படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உன்னுடைய நீச்சலைத் தொடர்ந்து கொள் என்று அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள். அவர்களுடைய விருப்பத்துக்காகவும் அதில் உள்ள நியாயத்துக்காகவும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எழுதும்வரை நீச்சலை மட்டுப்படுத்தி வந்தேன். ஆனாலும் கடல் என்னுடைய மனதில் நிறைந்துபோய் கிடந்தது. நித்திரையில் கூட கடலின் குளிர்மையை உணர்ந்தேன். அதனுடைய அசைவையும் ஓசையும் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

பரீட்சை முடிந்த கையோடு கொழும்புக்குச் சென்று, கல்கிசைக் கடலில் பயிற்சி பெற்றேன். இதற்கு அப்பாவும் அம்மாவும் உதவினார்கள். சஞ்சீவன் அண்ணா நல்ல தொடர்புகளை எடுத்துத் தந்துகொண்டிருந்தார். பாடசாலையும் ஊக்கப்படுத்தியது. நண்பர்கள் ஆதரவாக . கல்கிசைக் கடலில் றொஸான் அபேயசுந்தர (Roshan Abayasundara) என்ற நீச்சலாளர் எனக்குப் பயிற்சியளித்தார். அவர் இலங்கை விமானப்படையில் பணியாற்றியவர். 2021 இல் பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர். ஆறு மாதப் பயிற்சியில் எனக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டது, நானும் பாக்குநீரிணையை நீந்திக் கடப்பேன் என்று. ஆனாலும் என் நண்பர்களுக்கும் வீட்டாருக்கும் இதில் சற்று தயக்கம் உண்டென உணர்ந்தேன். என்றாலும் என்னுடைய ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அவர்கள் மதித்தனர்.

இதற்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேணும். கடலில் நான் நீந்தத் தொடங்கும்போது இந்தக் கடலுக்கு நான் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். நான் இயங்கிய சாரணர் இயக்கத்திலும் சமூகச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டிய பொறுப்பிருந்தது. அப்படிச் செயற்பட்டால்தான் ஜனாதிபதி விருதைப் பெறமுடியும். 

ஆகவே பிளாஸ்டிக் இல்லாத கடலை (plastic-free ocean) உருவாக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அதை நான் மட்டும் செய்ய முடியாது. அதைப்பற்றிய விழிப்புணர்வை மீனவர்களிடத்திலும் மக்களுக்கும் உருவாக்க முயற்சித்தேன். என்றாலும் நான் எதிர்பார்த்த அளவுக்கு அது நிறைவேறவில்லை. இந்தச் சின்னப் பையன் என்ன சொல்கிறான் என்று அவர்கள் யோசித்திருக்கக் கூடும். அப்படியென்றால் நான் சொல்வதை ஏற்கக் கூடிய அளவுக்கு நான் ஒரு சாதனையாளனாக இருக்க வேண்டும். எனக்கான தகுதியை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு அடையாளம் எனக்கு ஏற்பட்ட பிறகு சொன்னால், ஓரளவாவது கேட்பார்கள் என்று எண்ணினேன். 

இந்த எண்ணத்தோடு எனக்கு வேறு சில ஐடியாக்களும் வந்தது.

1.      பிளாஸ்டிக் இல்லாத கடலை (plastic-free ocean) உருவாக்க வேண்டும். 

2.      என்னுடைய பாடசாலையான சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது  ஆண்டுக்கு நான் ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.

3.      இன்றைய இளைஞர்கள் எதிர்கால இலக்கின்றி போதைப் பொருளுக்கு அடிமையாதல், கைத்தொலைபேசியில் தம்மைத் தொலைத்தல், குடும்பங்களிலும் வெளியிலும் ஏற்படுகின்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காகத் தற்கொலை வரை செய்தல் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, தமக்குப் பிடித்ததை, தமக்கு விருப்பமானதைத் தெரிவு செய்து சாதனை செய்யலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல் என எண்ணினேன்.

எனவே ஆறுமாதக் கடுமையான பயிற்சியின் பிறகு பாக்குநீரிணைக் கடலை நீந்திக் கடக்கும் முடிவுக்கு வந்தேன். இதற்கான ஏற்பாட்டை நண்பர்களும் என்னுடைய பெற்றோரும் செய்தனர். இதைப்பற்றி இந்தியாவுக்கும் அறிவிக்கப்பட்டது. 2023 மே 28 அன்று பாக்குநீரிணையை நீந்திக்கடந்தேன். இதற்கு எனக்கு 12.53 நிமிடங்கள் தேவைப்பட்டது. அன்று கடற்காற்று – எதிர்காற்றுச் சற்றுக் கூடுதலாக இருந்தது. ஆனாலும் இதை நான் மறுபடியும் நீந்திக் கடப்பேன். இதை விடக்குறைந்த நேரத்தில் நீந்திக் கடக்க வேண்டும். அதை விட இரு வழியாக பாக்குநீரிணையில் நீந்திப்போய் திரும்பி நீந்தி வரவேண்டும். அப்போதுதான் எனக்கு முன்னர் செய்யப்பட்ட சாதனையை முறியடிக்கலாம். அப்படி முறியடிப்பேன் என்று நம்புகிறேன்.

ஏற்கனவே என்னுடைய பயிற்சி ஆசிரியரான றொஸான் அபேயசுந்தர இதே பாக்குநீரிணையில் இருவழி நீச்சலை 28 மணித்தியாலயங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இதனை நான் முறியடிக்க வேண்டும். அதற்கு முன்பு, ஆழிக்குமரன் ஆனந்தன் 1971 இல் பாக்குநீரிணையை இருவழி நீச்சலில் 51 மணித்தியாலங்கள் எடுத்துச் சாதனை செய்திருந்தார். அந்தச் சாதனை கடந்த 50 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. அதை றொஸான் முறியடித்தார். ஆரம்பத்தில் மு. நவரத்தினசாமி என்பவர் 1954 மார்ச் 26 இல் பாக்குநீரிணையை நீந்திக் கடந்திருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 44. அவர் நீச்சலுக்கு எடுத்துக் கொண்ட நேரம், 27 மணித்தியாலங்கள்.

இப்படியே இந்தச் சாதனைப் பட்டியல் உள்ளது. நான் இவர்கள் எல்லோரையும் விட வயதில் சிறியவன். நான் நீந்தி வந்தபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் திரு. ஸ்ரான்லி டிமெல் லம்பேர்ட், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ள்ஸ் நிமிலநாதன், வினோநோகராதலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) எனப் பலர் வரவேற்றனர்.

என்னுடைய இந்தச் சாதனையை அறிந்த என்னுடைய பாடசாலைச் சமூகம் பெரிய மகிழ்ச்சியை அடைந்தது. அவர்கள் பெரிய வரவேற்பைத் தந்தனர். மாவட்ட மக்களும் அப்படித்தான், ஆதரவளித்தனர். உறவினர்கள், ஊடகங்கள் எல்லாம் என்னைப் பெருமைப்படுத்தினார்கள். இப்பொழுது நான் மாசற்ற கடலைப்பற்றி அதிகமாகச் சிந்திக்கிறேன். அதைப்போல நீச்சலில் பலசாதனைகளைச் செய்ய வேண்டும். ஆங்கிலக் கால்வாயையும் நீந்திக் கடக்க வேண்டும்.

தொடர்ந்து கடல் சம்மந்தமாகவே படிக்க விரும்புகிறேன். நான் படித்தது கணிதத்துறைதான். என்றாலும் கடலில் பல விடயங்களைப் படிக்கலாம் என எண்ணுகிறேன். கடலில் பல சாதனைகள் செய்யலாம். இந்தப் பூமியில் கடல்தான் அதிகம் வியப்பூட்டுவது. பூமியின் பெரும்பகுதியும் கடலாகத்தானே உள்ளது. நீங்கள் கடற்கரையொன்றுக்குச் சென்றாலே கடல் உங்கள் மனதில் நிரம்பியிருப்பதை உணர்வீர்கள். Marine Service எனக்கு மிகப்பிடித்த துறையாக உள்ளது…. காலம் என் முன்னே விரிந்து கிடக்கிறது, கடலைப்போல…… ” என்கிறார் மதுசிகன்.

மதுசிகனுடன் உரையாடியபோது அவர் ஏற்படுத்திய ஆச்சரியங்கள் ஏராளம். மிகப் பெரிய தன்னம்பிக்கையுடனிருப்பதை உணர்ந்தேன். எல்லாவற்றுக்கும் அப்பால் அவரிடமுள்ள துணிச்சலும் விரிந்த பார்வையும் அபூர்வமானது. 

மதுசிகனின் பெற்றோருடன் பேசினேன். அவர்கள் கொண்டிருக்கின்ற பெருமையும் மகிழ்ச்சியும் மதுசிகனின் கடலைப்போல மிகப் பரந்தது. வானம் தொடுமளவுக்கானது.