— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது?’
அண்மைக் காலமாக வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பல தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியல் பத்தி எழுத்தாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் 05.08. 2020 அன்று நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் கிழக்கு மாகாணப் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி செல்கிறார்களென்றும் அவர்களை அப்படிச் செல்ல விடாது, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தம் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் எழுதி வருகிறார்கள்.
அதற்காக அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகா சபையில் போட்டியிட்ட கருணா அம்மான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகமான வாக்குகளைப் பெற்றதையும்–மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் பொது ஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட ச. வியாழேந்திரன் ஆகியோர் பெற்ற வெற்றிகளையும்–திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரும்பொட்டில் வெற்றி பெற்ற விடயத்தையுமே எடுத்துக் காட்டுகிறார்கள்.
வடக்கில் ஒரு பார்வை- கிழக்கில் ஒரு பார்வை:
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களின் மீது ஆத்மார்த்தமான அக்கறையற்றிருந்த யாழ் மேலாதிக்க சக்திகள் எல்லாம் (ஊடகங்கள் உட்பட) இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வாக்கு வங்கிச் சரிவைச் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் கிழக்குத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. கிழக்கு மாகாணத் தமிழர்கள் எப்போதும் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக இருக்க வேண்டும் என்பதே இப் பிற்போக்கு சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்ற போதும்– ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனங்களிலொன்றைத் தனக்குப் பெறும் அளவுக்குக் கணிசமான வாக்குகளைத்தான் சார்ந்த கட்சிக்கு எடுத்துக் கொடுத்த போதும்–தாமே தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறியிட்டுக் கொள்ளும் கட்சிகளின் பார்வையில் ‘தமிழ்த்தேசியத் துரோகி’யாக நோக்கப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெற்றி பெற்றபோதும் யாழ் குடாநாடு அல்லது வட மாகாணம் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகக் கண்டுகொள்ளாதவர்கள் கிழக்கிலும் அவ்வாறு நடைபெற்றால் அதை மட்டும் வேறு கண் கொண்டு பார்ப்பது ஏன்?
05.08. 2020 அன்று நடந்து முடிந்த தேர்தலில் கூட யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவின் ஐக்கியமக்கள் சக்தியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வன்னி மாவட்டத்திலும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இவற்றை வைத்துக்கொண்டு யாழ் குடாநாடு அல்லது வட மாகாணம் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகப் பார்க்காதவர்கள் கிழக்கை மட்டும் வேறு கோணத்தில் பார்க்க முற்படுவது ஏன்? இந்த விடயத்தில் கிழக்குக்கும் வடக்கிற்கும் வெவ்வேறு அளவுகோல்களா? இங்கேதான் யாழ் மேலாதிக்க அரசியல் சிந்தனை தன்னை அடையாளம் காட்டி நிற்கின்றது.
மேலும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்பதாகத்தானே உள்ளது. இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதா? இல்லையே. அது போல அகில இலங்கை தமிழர் மகாசபை வடகிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் முழுமையாக அமுல் செய்ய வேண்டுமென்ற அரசியல் விருப்பத்தைக் கொண்டுள்ளதுடன் அதனை நடைமுறையில் இடுவதற்காகப் பல வழிகளில் ஆரவாரமில்லாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கட்சி.
இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதா? இல்லையே. கருணா அம்மானும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரானவர் இல்லை. வேண்டுமானால் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அதனை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். அது வேறு விடயம். ஆனாலும் பிள்ளையான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர் என்று கூறமுடியாது. தமிழர் அரசியலில் கிழக்கின் தனித்துவத்தைப் பேண அவர் முற்படுகிறார். அது அவர் கையாளும் அரசியல் அணுகுமுறை. டக்ளஸ் தேவானந்தாவினதும்–பிள்ளையானினதும்–கருணா அம்மானினதும் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் கூட இவர்கள் மூவரும் ஒரு காலகட்டத்தில் உயிரைத் துச்சமென மதித்து பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடியவர்கள்தானே.
தமிழ் தேசியத்தை ஆதரித்த தேவானந்தா-பிள்ளையான-கருணா
கடந்த காலங்களில் உரிமைப் போராட்ட அரசியலின் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமே வெல்லுகின்ற குதிரையாகப் பார்த்துக் காசைக் கட்டுகிற அரசியல் சூதாட்ட மனோநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து வாக்குச் சேகரிப்பதற்காக உதட்டளவில் தமிழ்த்தேசியம் பேசுவதை விட, ஒரு காலகட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய டக்ளஸ் தேவானந்தாவினதும்–பிள்ளையானினதும்–கருணா அம்மானினதும் தமிழ்த் தேசிய உணர்வு பல மடங்கு மேலானது அல்லவா? இப்போது இவர்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அவ்வளவே.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்வது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்லவென்றால் டக்ளஸ் தேவானந்தாவும்—பிள்ளையானும்–கருணா அம்மானும் தத்தம் அரசியல் தளத்தில் நின்று கொண்டு ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதை மட்டும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? இரண்டும் ஒன்றுதானே. அதாவது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகிய இரண்டுமே பேரினவாதக் கட்சிகள்தானே. ‘மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமா‘?
தமிழ்த் தேசியம் என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் (தமிழரசுக் கட்சிக்கும்– வீட்டுச் சின்னம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்–சைக்கிள் சின்னம்) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் (மறு வடிவம் எடுத்துள்ள EPRLF ற்கும்–மீன் சின்னம்) மட்டுமே குத்தகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ள பண்டமா? ஏனெனில், தமிழ் ஊடகங்கள் இந்த மூன்று கட்சிகளையும்தானே தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று வர்ணித்து எழுதுகின்றன; செய்திகள் வெளியிடுகின்றன. ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லையா? ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது? அதை செய்தது யார்?
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது குறள்.
எனவே, எனது வாஞ்சைக்குரிய தமிழ் மக்களே! ஊடகங்களில் யார் யார் என்ன எழுதினாலும் பதிவிட்டாலும் எடுத்த எடுப்பிலேயே அவற்றை நம்பிவிடாமல் அவற்றில் உண்மை உள்ளனவா என்று தேடுங்கள். உண்மையைத் தேடிக் கண்டறிவதுதான் அறிவு.
கிழக்குத் தமிழர்கள் அவாவி நிற்கின்ற தனித்துவமான அடையாள அரசியலுக்கு–சமூக மாற்ற அரசியலுக்கு எதிராக தன் முனைப்பும் தன்னலமுமிக்க யாழ் மேலாதிக்கச் சக்திகள் கருத்துக்கள் கூறுவதைப் புறந்தள்ளி விடலாம். ஆனால், தங்கள் சொந்த நலன்களுக்காக யாழ் மேலாதிக்க அரசியலுக்கு வால் பிடிக்கும்–கூலிக்கு மாரடிக்கும் கிழக்கு மண்ணைச் சேர்ந்த அரசியல் பத்தி எழுத்தாளர்களையும் அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அரசியல்வாதிகளையும் எண்ணித்தான் கவலைப்பட வேண்டியுள்ளது. கிழக்கு மண்ணின் பிரபல்யமான இலக்கியவாதியும் கவிஞருமான அமரர் வீ. ஆனந்தன் எழுதிய பின்வரும் கவிதையினை இத்தகைய எழுத்து ‘விற்பன்னர்’களின் கவனத்திற்குச் சமர்ப்பித்து இப்பத்தியை நிறைவு செய்கிறேன். கவிதை இதுதான்:
என்ன செய்வான்?
என்ன செய்வான்?
மட்டக்களப்பான்
மரம் குடைந்து நீரெடுப்பான்
பாயோடொட்ட வைப்பான்
வட்டில் சோற்றுடன்
வடி தயிரும் சேர்த்தொன்றாய்
வயிறு முட்டத் தின்றே முறுவலிப்பான்
என்ற இவன்தன்
மேட்டிமைகளெல்லாம்
பாட்டிமார் கதை போல்
பழங்கதையாய் ஆனதடா
கூத்தாடி என்றோ வொருநாள்
குதூகலித்திருந்தான்
காத்தான் பாட்டும் கரகமும்
ஆடிக் களித்திருந்தான்
மாற்றான் வராது தன் மண்ணைக்
காத்திருந்தான்
இன்று தோற்றான்
வேற்றான் வந்து தன்
விளை நிலத்தில்
வேலியிடப் பார்த்திருந்தான்
வாய்க்கால் தண்ணீரை
வழி மறித்து
ஆக்கினைகள் செய்ய
அன்னியனை அனுமதித்தான்
சாக்கனாய் வெறும் சவமாய்
இன்று போக்கணம்
கெட்டுப் போனான்
வந்தாரை வாழ வைத்து
மண்ணில் பிறந்தாரைச் சாகடிக்கும்
சிங்காரமான மட்டக்களப்புச்
சீமான் வேறென்ன சிரைப்பான்?
