(மூத்த செய்தியாளர் பி. கே. பாலச்சந்திரன் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதியவர் சீவகன் பூபாலரட்ணம்)
தமக்கு சாதகமற்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நசுக்குவதற்காக, ஜனநாயகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் சக்திகள், உலகெங்கும் வியாபிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களை இலக்கு வைக்கின்றன.
250 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த இந்திய சினிமா, வருடா வருடம் சுமார் ஆயிரம் திரைப்படங்களை வெளியிடுகின்றது. அவற்றை பல கோடிப்பேர் பார்க்கின்றார்கள்.
1975 முதல் 77 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக எழுந்த கட்டுக்கடங்காத எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடக்க அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கஸ்டப்பட்ட காலத்துக்குப் பிறகு, அந்த அளவுக்கு அரசியல் சூட்டை இப்போது இந்திய சினிமா எதிர்கொள்கிறது.
இந்திய சினிமாவின், “உலகெங்கும் வியாபித்து மக்களைச் சென்றடையும் தன்மை மற்றும் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி” ஆகியவை காரணமாக அந்தத்துறை பெரும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்கிறது.
தமக்கு சாதகமற்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை நசுக்குவதற்காக, ஜனநாயகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்றுக்கொன்று முரணான அரசியல் சக்திகள், உலகெங்கும் வியாபிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களை இலக்கு வைக்கின்றன. அவ்வப்போது அவை ஒரு திரைப்படத்தின் விதியையும் தீர்மானித்துவிடுகின்றன. அந்தத்திரைப்படம் வெளியிடப்பட வேண்டுமா, இல்லையா அல்லது அதன் தயாரிப்பாளர் விரும்பியபடி திரைப்படத்தின் கதை(அல்லது நடிகர்) இருக்கலாமா, இல்லையா என்பதைக்கூட இவர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி ஒரு தயாரிப்பாளருக்கு, தான் நினைத்த கதையை படமாக்கி வெளியிடும் உரிமை முழுமையாக மறுக்கப்படுகின்றது. அதை தயாரித்து மக்களின் கருத்துக்கு விடுவதற்கான உரிமையும் மறுக்கப்படுகின்றது. ரசிகர்களுக்கும் தாம் விரும்பிய படத்தைப் பார்க்கும் உரிமை மறுக்கப்படுகின்றது.
அரச இயந்திரமும் நீதித்துறையும் கூட இந்த அரசியல் சக்திகளின்(அல்லது கட்டற்ற கும்பலின்) உத்தரவுகளுக்கு அமைய செல்ல நேரிடுவதால், ஒரு சினிமா தயாரிப்பாளர் தனது சுயாதிக்க உரிமையையும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான அரசியலமைப்பு உரிமையையும் அனுபவிப்பது என்பது ஒரு புனைகதையாகிவிடுகின்றது.
“நான் ஒரு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்பதால், நான் ஒரு எஜமானாகவும் இருக்க மாட்டேன். இதுதான் எனது ஜனநாயகச் சிந்தனை” என்ற ஆப்ரஹாம் லிங்கொனின் சிந்தனையை எவரும் நம்புவதில்லை போலும்.
கட்டவிழ்த்துவிடப்பட்ட கும்பல்களால் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுவது குறித்துப் பேசிய விஷால் லங்தாசா என்ற பாலிவுட் திரைப்பட மாணவன், இந்த நிலவரம் குறித்து பல உதாரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
வட இந்திய அனுபவம்:
2006இல் ஃபானா என்ற இந்தித்திரைப்படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டது. அந்தத்திரைப்படத்தின் கதாநாயகன் அமீர்கான், குஜராத் மாநிலத்தில் “நர்மதா ஆற்று அணைக்கட்டு” திட்டத்துக்காக அங்கிருந்த விவசாயிகளும் பழங்குடிகளும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பேசியதற்காக, அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டது. திரைப்பட ரசிகர்களின் கதாநாயகனான அமீர்கான், வெளியேற்றப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவு, போராட்டங்களை வலுவடையச் செய்துவிடுமென்று, நர்மதா ஆற்று அணைக்கட்டுத்திட்டத்தை ஆதரித்த, குஜராத்தை ஆண்ட “பாரதீய ஜனதாக்க்கட்சி” நினைத்தது.
2007இல் அதே குஜராத் மாநில அரசாங்கம் “பர்சானியா” என்ற திரைப்படத்துக்கு தடை விதித்தது. பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் குஜராத்தில் 2002இல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் காணாமல்போன “பார்சி” இன பெடியனைப் பற்றி அந்தப் படம் பேசியதுதான் அதற்குக் காரணம். தேசிய மட்டத்தில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை ஆகியவற்றுக்கான விருதுகளை அந்தப் படம் பெற்றது.
“ஆஜா நாச்லே” என்னும் திரைப்படம் உத்தரபிரதேசத்திலும் பஞ்சாப்பிலும் தடை செய்யப்பட்டது. அந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காகவே அந்தத்தடை. “செருப்புத் தைப்பவன் பொற்கொல்லனாக வரப்பார்க்கிறான்..” என்று அந்தப் பாடலில் வருகிறதாம். செருப்புத்தைக்கும் சாதியினரை அவமதிப்பதாக இது பார்க்கப்பட்டது. இந்து சமூகத்தில் பொற்கொல்லரைவிட செருப்புத்தைக்கும் சாதியினர் குறைவாக பார்க்கப்படுகின்றனர்.
“மும்பை குண்டுத்தாக்குதல்” குறித்த அநுராக் காஸ்யப்பின் “பிளக் ஃபிரைடே” திரைப்படம் 2005இல் இந்தியா முழுவது தடை செய்யப்பட்டது. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பலரது பெயர்களை குறிப்பிட்டதாக அதற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை அடுத்து, 2007இல் தடை நீக்கப்பட்டது.
2008இல் “ஜோதா அக்பர்” திரைப்படம் பல வட இந்திய மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இந்து இராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜோதா என்ற இளவரசியை, முஸ்லிம் சக்கரவர்த்தியான அக்பருக்கு மனைவியாக காண்பித்ததாக இராஜபுத்திர அல்லது சத்திரிய சமூகம் குற்றஞ்சாட்டியது. இறுதியாக உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் உத்ராகாண்ட் மாநிலங்களில் உச்ச நீதிமன்றம் தடையை நீடித்தது. உயர் நீதிமன்றத்தால் மத்திய பிரதேசத்தில் தடை நீக்கப்பட்டது. எப்படியோ, ஜோதா அக்பர் பெரும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
“தேஸ்ரோஹி(தேசத்துரோகி)” என்ற படத்துக்கு “மஹாராஸ்டிரா நவநிர்மான் சேனா”வினால் மாதிரித்தடை போடப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து, வேலை செய்யும் பணியாளர்கள், மஹாராஸ்டிராவில் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பதை அந்தப் படம் பேசியதே, அந்த தடையை விதிக்கக் காரணம்.
ஒரு காலத்தில் மதசார்பற்ற இந்தி சினிமா:
இந்தி சினிமா என்று அழைக்கப்படும் பாலிவுட் சினிமா தொழிற்துறை கடந்த காலத்தில் மதசார்பற்ற ஒரு இடமாகவே திகழ்ந்தது. பல கலாச்சாரங்களும் இணையும் ஒரு இடமாகவே அது இருந்திருக்கிறது. இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து வந்த இந்த தொழிற்துறையின் நட்சத்திரங்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியில் படம் தயாரித்தார்கள். 130 கோடி இந்தியர்களில் 40 வீதத்தினருக்கு விளங்கக்கூடிய ஒரு மொழியில்(இந்தி) திரைப்படங்களை தயாரித்தனர்.
பிரபலமான “கான்”கள் என்று அழைக்கப்படும் முக்கிய சினிமா நட்சத்திரங்கள் முஸ்லிம்களாக இருந்ததுடன், நாட்டின் பல திசைகளில் இருந்து வந்தவர்களும் அதில் நடித்தனர், பணியாற்றினர். ஆனால், இது “இந்து- இந்தி தேசியவாதிகளுக்கு” இப்போது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிதீஸ் நாண்டி என்பவர் “நியூயோர்க் டைம்ஸ்” க்கு எழுதிய கட்டுரை ஒன்றில், “இப்போதெல்லாம் சில இந்தி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இந்து தேசியவாத அமைப்புகளுக்கு அனுசரித்து படமெடுக்கத் தொடங்கி விட்டனர்” என்கிறார். “இந்தி சினிமாவின் சில பிரபல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் முஸ்லிம்களாவர். அது இந்து தேசியவாதிகளுக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது. ஆகவே, தேசியவாத அமைப்புக்களை சமரசம் செய்யுமுகமாக சில தயாரிப்பாளர்கள் படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மோடியின் புதிய இந்தியாவுக்கு தேவையான அளவுக்கு தேசியவாத மயப்படுத்தப்படாத, தாராளவாத குப்பைகளின் கோட்டையாகவே இன்னும் இந்தி சினிமாத்துறை பெரும்பாலும் பார்க்கப்படுகின்றது.”
இளம் பாலிவுட் நட்சத்திரமான சுஸாந்த் சிங்கின் மரணம் குறித்த சர்ச்சை பற்றி எழுதிய நாண்டி, “பாலிவுட்டின் மீதான திடீரென்ற, எதிர்பாராத தாக்குதல்கள், மாற்றுக்கருத்தையும் தாராளவாத சிந்தனையையும் துடைத்தெறிவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தின் முன்பாக திரையுலகைச் சரணடையச் செய்ய வேண்டும் என்று இந்து தேசியவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். பாலிவுட் அவர்களின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்றும், தமது பெரும்பான்மை அரசியலுக்கும், ஏனையோரை புறக்கணிக்கும் போக்குக்கும் அது உட்பட வேண்டும் என்றும் இந்து தேசியவாதிகள் எதிர்பார்க்கிறார்கள்.” என்கிறார்.
வட இந்திய பாரபட்ச இந்துத்துவவாத/ தேசியவாத பிரச்சாரம் இப்போது கங்கணா ரணவத்துக்கு எதிராக குவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இந்து-முஸ்லிம் முரண்பாட்டை தூண்டியதாக அவர் மீது “பொலிஸ் வழக்கு” போடப்பட்டுள்ளது. பீஹாரைச் சேர்ந்த சுஸாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையை பாரதீய ஜனதாவின் ஆதரவு ஊடகங்களும் சமூக ஊடக பதிவுகளும் இப்போது “கொலை” என்று திருப்பி விட்டுள்ளன. அதுமாத்திரமன்றி இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நட்சத்திரங்கள் மீது அவை “போதைப் பொருள் கடத்தல் கும்பல்” என்று குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா படுகோன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரீயா சக்கரபொர்த்தி ஆகியோர் மீது அந்த இந்து தேசியவாத ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
முரளியின் 800
ஒப்பீட்டளவில் இந்தித்துறையை (பொதுவாக வட இந்தியாவை விட) தென்னிந்திய சினிமாவில்(பொதுவாக தென்னிந்தியாவிலும் தான்) சாதி வேற்றுமை, பிராந்தியவாதம் மற்றும் இனவாதம் குறைவுதான். இடதுசாரி அமைப்புக்களுக்கும் மற்றும் மதசார்பற்ற திராவிட இயக்கங்களுக்கும் இதற்கு நன்றி கூறவேண்டும். 1950கள் முதலே சமூக மற்றும் அரசியல் ரீதியாக முற்போக்கான மற்றும் பகுத்தறிவு கருத்துக்களையே தென்னிந்தியத்துறை கையாண்டு வந்திருக்கிறது. குறிப்பாக தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் காணப்பட்ட முற்போக்கு இயக்கங்களுடன் இசைந்துபோனமை இதற்கு காரணம்.
எப்படியிருந்தபோதிலும், வடக்கில் இருந்த இனவாத செல்வாக்கு காரணமாக, தமிழ் நாட்டில் இருந்த முஸ்லிம்கள் மணிரத்தினத்தின் “றோஜா” திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டனர்.
கிரிக்கெட் பிரபலமான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில்(“800”) ஏற்பட்ட சர்ச்சைக்கும் இன/சமூக ரீதியிலான அரசியல் மயமாக்கல் காரணமாக கொள்ளப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களால் “இனப்படுகொலை” என்ற கூறப்படும் இலங்கை இராணுவ நடவடிக்கை விடயத்தில் சக இலங்கைத் தமிழ் மக்களின் ஆதரவு நிலைப்பாட்டை முரளிதரன் எடுக்கவில்லை என்பதற்காக, அவர், ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
“இலங்கையில் போர் முடிவுக்கு வந்த நாளை தனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள்” என்று விபரித்ததற்காக, ஊடகங்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவு முக்கியஸ்தர்களான சீமான், வைகோ, பாரதிராஜா மற்றும் கவிஞர் தாமரை ஆகியோரும் முரளியை கடுமையாக விமர்சித்தனர்.
காணாமல் போன தமது உறவுகளை தேடியலையும் உறவுகள், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரென்னின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் செய்ததை அவர் போலி என்று கூறியதாகவும் விமர்சிக்கப்பட்டது.
சிங்கள பேரினவாத மஹிந்த ராஜபக்ஷ தரப்போடு முரளி சேர்ந்து செயற்படுவதாக இந்திய அரசியல்வாதியான வைகோவும், இலங்கை அரசியல்வாதி மனோ கணேசனும் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பில் சிங்கள பேரினவாத அரசியல்வாதியான விமல் வீரவன்ஸவுக்கு ஆதரவாக முரளிதரன் பிரச்சாரம் செய்ததாகவும், நுவரெலிய மாவட்டத்தில் முரளிதரன் தனது தம்பியை தேர்தலில் நிறுத்தியதால், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு ஆசனம் இல்லாமல் போய்விட்டது என்றும் மனோ கணேசன் கூறுகிறார்.
“800” திரைப்படம் முரளியின் கிரிக்கெட் சாதனைகளை மட்டும் அல்லாமல் சிங்கள பௌத்த சிறிலங்காவில் தடைகளைத் தாண்டி வருவதற்கு தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் காண்பிப்பதாக அமைய வேண்டும் என்று முரளியை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மிகவும் முக்கியமாக அந்தப் படத்தின் இறுதியில் “இனப்படுகொலை”யை காண்பிக்க வேண்டும் என்றும் அத்துடன் போர் குறித்து உணர்வற்ற வகையில் முரளிதரன் கூறிய சிங்கள ஆதரவு கருத்துகளும் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஹிந்தியை மீண்டும் திணிக்க முயல்வதாகவும், மாநிலங்களின் தன்னாதிக்கத்தில் கைவைப்பதாகவும் மோடியின் இந்து தேசியவாத அரசு மீது குற்றஞ்சாட்டும் திராவிட/தமிழ் தேசிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன.
“போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் தமிழ் பிள்ளைகளின் கல்விக்கு உதவுவதாகவும், அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்குவதாகவும்” கூறும் முரளியின் கருத்து அவற்றிடம் எடுபடவில்லை.
முரளியின் பாத்திரத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி என்ற நடிகரும் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் அவர் மீதான விமர்சனங்கள் எல்லையை மீறி, துஸ்பிரயோகமாகவும் அமைந்தன. அவரது திரையுலக பயணத்துக்கும் அது ஆபத்தாக அமையலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. ஆகவே, அவரை அவரது நலனை முன்னிட்டு, அந்தப் படத்தில் இருந்து விலகுமாறு முரளிதரன் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக ‘நன்றி. வணக்கம்’ என்று விஜய் சேதுபதி பதில் தந்தார்.
“800” திரைப்படத்தின் தயாரிப்பாளரின் கருத்து வெளிப்பாட்டுக்கான அரசியலமைப்பு உரிமை, தனது கதையை தான் விரும்பியவாறு சொல்வதற்கான முரளிதரனின் உரிமை, வரக்கூடிய ஒரு திரைப்படத்தை தாம் பார்ப்பதா, இல்லையா என்று முடிவு செய்வதற்கான ரசிகர்களின் உரிமை ஆகியன அரசியல் திட்டங்களை மனதில் கொண்ட சக்திகளால் மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ் திரையுலகின் இருப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு தேவையான சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஒரு நல்ல சமிக்ஞையாக இவற்றைப் பார்க்க முடியவில்லை.