— படுவான் பாலகன் —
‘குடும்பச் சுமை குறைக்க மத்திய கிழக்கு சென்றவர்களால் நின்மதியிழந்த வீடுகள்’
‘கணவன், சகோதரங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பிவிட்டு, கொரோனா போன்ற நோய்கள் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளை நமது ஊர்களில் உள்ள பல வீடுகள் சிரிப்பின்றி சோககீதங்களையே பாடிக்கொண்டிருக்கின்றன’ என்கிறான் கண்ணப்பன்.
கண்ணப்பன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து, அண்மையில்தான் தனது சொந்த தேசத்திற்கு திரும்பி வந்தவன். கண்ணப்பனை காணவேண்டும், பேச வேண்டுமென்ற ஆர்வம் விமல்ராஜ்க்கு இருந்தது. இருவரும் நண்பர்கள். ஆயினும், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலினால் நீண்ட இடைவெளியின் பின்பே, இடைவெளியுடன் உன்னிச்சை குளத்தருகில் இருவரும் சந்திக்கின்றனர்.
இருவரும் சுகபலன்களை விசாரித்துக்கொண்டு, உன்னிச்சைக்குளத்தின் பயன், இங்குள்ள மக்கள் இதனை பயன்படுத்த முடியாது போராடும் நிலை பற்றி பேசிக்கொண்டிருக்கையில்தான் கண்ணப்பனின் மத்திய கிழக்கு நாட்டு பயணம் பற்றிய பேச்சு ஆரம்பிக்கின்றது.
கண்ணப்பன் 2007க்கு முன்னர் அறுவடைக் குழுவில் முதல்தர அறுவடைக்காரன் என்ற பெயரினைப் பெற்றிருந்தவன். படுவான்கரைப் பிரதேசம் விவசாய நிலத்தினையும், மாடு மேய்ப்பதற்கான காலச் சூழலையும் கொண்டிருக்கின்ற பிரதேசமாகையால் இங்கு விவசாயம், மாடு வளர்ப்பு போன்ற தொழில்களையே இங்குள்ளவர்கள் செய்கின்றனர். 2007க்கு முன்னர் விவசாயச் செய்கைக்கு மனிதவலுவே அதிகம் தேவைப்பட்டது. இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. 2007இன் பின்னர் இயந்திரங்களின் வருகை அதிகரித்தமையால் குறித்த சூழலில் தொழிலினை மேற்கொள்ள முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவர்கள் அடைந்தனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதென்றால் அதற்கும் பணம் வேண்டும். அப்பணம் அவர்களிடமும் இல்லை. அவ்வாறு இருந்தால் சுயதொழில் ஒன்றை தமது பிரதேசங்களிலேயே ஆரம்பித்துவிடுவர். இதனால், யாரிடமாவது வட்டிக்கு கடனைப் பெற்றுதான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வர். சென்று வாங்கிய பணத்தினையும், வட்டியையும் கொடுத்துவிடவே மூன்று நான்கு வருடங்கள் கடந்துவிடும். அதற்கு பிறகு உழைக்கின்ற பணம்தான் அவர்கள் குடும்பத்தின் செலவினை ஈடுசெய்யும். ஐந்து அல்லது ஆறு வருடங்களின் பின் வீடுகளுக்கு திரும்பி வருகின்றவேளை பெரிதாக எந்ததொரு மாற்றமும் தமது குடும்பத்தில் ஏற்பட்டிராது. இதே நிலைதான் கண்ணப்பனின் வீட்டிலும். துன்பதுயரங்களை அனுபவித்தவன் என்பதனால் விமல்ராஜிடம் வெறுப்புடன் தனது வாழ்க்கைப் பயணத்தை கூறுகின்றான்.
‘வாழும் வாழ்க்கை சிறிது காலம். அவ்வாழ்க்கையை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும். அதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் நாம் எங்கோ, நமது பிள்ளைகள், மனைவி, தாய், தந்தை சகோதரங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் நல்லது, கெட்டது எந்ததொரு நிகழ்விலும் பங்கெடுக்க முடியவில்லை. எமக்கோர் நோய் என்றால் எம்மை பார்ப்பதற்கு எமக்கு அருகில் எம்முறவுகள் இல்லை. தனியாளாய் அவ்விடத்தில் உறைகின்றோம். உறவுகள் தொலைபேசியிலே எம்மைப் பார்த்து துடிக்கின்றனர். இவ்வேதனைச் சம்பங்களை நேரில் அனுபவித்தவன் நான்’ என்கின்றான் கண்ணப்பன்.
‘கொரோனா தொற்று நாம் இருக்கும் நாட்டிலும் ஏற்பட்டுவிட்டது. வேலைக்கும் செல்லமுடியாது. அறைகளிலே அடங்கி இருந்தபோது அடைந்த வலியையும், உளநெருக்குதலையும் வெறும்வாயால் கூறி விளக்கிட முடியாது. வேலைக்கு சென்றபோதேல்லாம் நேரம் செல்வது தெரியாது, இதனால் உளநெருக்கடி குறைவாகவே இருந்தது. சம்பளமும் இல்லை. வெளியிலும் சென்றிட முடியாது. அருகில் உள்ளவர்களுக்கு அந்நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றபோதெல்லாம், வாழ்க்கையும் வெறுத்து, வாழவும் தேவையில்லை என்ற உணர்வு தோன்றும். வீட்டில் இருந்தால் எச்சுமை, எவ்வறுமையேற்பட்டாலும் குடும்பத்தோடு இருக்கின்ற மகிழ்ச்சியால் அவை மறைத்துவிடும். ஆனால், நாடுவிட்டு நாடு சென்று உழைக்கும் போதுதான் நரக வேதனையை அனுபவிக்கவேண்டும். அப்போதேல்லாம் நமது நாட்டில் சந்தோசமாய் வேலை செய்த விவசாய வேலைகள் ஞாபகத்திற்கு வந்து செல்லும். அதிகாலை எழும்பினாலும், பாடலும், சுவாரசிய பேச்சுக்களும் வேலைகளை களைப்பின்றி செய்திட வழிவகுக்கும். இப்போதான் அவ்வாறான வேலைகள் இல்லையே என்று சிந்திப்பதுமுண்டு. ஒரு கடனை போக்க இன்னோர் கடன்பெற்று அக்கடனை அடைக்க மேலுமொரு கடன்பெற்று கடன்காரர்களாக இருந்த சூழலில், ஆடைத்தொழில் தொழிற்சாலை மட்டக்களப்பில் ஆரம்பித்தமையால் பல பெண்கள் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதனால் இவ்வாறான கடன்பெறும் நிலை மிகவாக குறைவடைந்திருக்கின்றது. இதேபோன்றதான தொழிற்சாலைகள் ஆண்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்ற போது, படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாடத்தினையும், மத்திய கிழக்கு நாடுகளை நாடுகின்ற நிலையையும் குறைக்க முடியும். இதற்கு நம்மட அங்கத்தவர்களும் கவனமெடுக்க வேண்டும்’ எனக்கூறியவனாக கண்ணப்பனும், விமலும் மீனையும் வாங்கிக்கொண்டு வீடுகளை நோக்கி புறப்பட்டனர்.