— செங்கதிரோன் —
தனது காணிக்குள் தென்னங் கன்றொன்றை நட்டு, அதற்குப் பாத்தி கோலிப் பசளையிட்டு ஒழுங்காக நீர் ஊற்றி வந்தான் காணிச் சொந்தக்காரன். தென்னங்கன்றுக்கு அப்பால் சிறிது தூரத்தில் பனம் விதையொன்று தானாகவே முளைத்து வடலியாக வளர்ந்திருந்தது.
வருடங்கள் கழிந்தன.
தென்னை வளர்ந்து பாளை பிடித்துக் காய்த்துப் பலன் தரத் தொடங்கியது. தென்னை காய்க்கத் தொடங்கிச் சில வருடங்களின் பின்பு பனையும் நுங்கு தள்ளி காயாகிப் பழமாகிப் பலன் அளித்தது.
ஒரு நாள் தன்மீது வந்தமர்ந்த காகத்தைப் பார்த்து ‘காக்கையாரே! நாலு இடத்திற்கும் சுற்றிப் பறந்து திரிந்து வருபவன் நீ. உனக்குத்தான் உலக அனுபவம் அதிகம். அதனால்தான் கேட்கிறேன். காணிச் சொந்தக்காரன் என்னை நன்கு பராமரித்தான். நான் வளர்ந்து நன்றி மறக்காமல் அதற்குக் கைம்மாறாக இளநீர், தேங்காய், உட்படப் பல பொருட்களை வழங்குகிறேன். நன்றி மறவாத நான் உலகில் உயர்ந்தவன்தானே!’ என்றது தென்னை.
‘ஆம்! தென்னையே! நன்றி மறாவாமை நல்ல உயர்வான குணம்தான். ஆனால் பக்கத்தில் நிற்கும் பனைமரத்தைப் பார்த்தாயா? காணிச் சொந்தக்காரன் உனக்குச் செய்த பராமரிப்பொன்றும் பனைமரத்திற்குச் செய்யவில்லை. அது தானாகவே முளைத்து தானாகவே வளர்ந்து தானாகவே பலன் தருகிறது. அவனுக்கு அது உதவுகிறதே. அந்த உள்ளம் மிக உயர்ந்ததல்லவா?’ என்றது காகம்.
தென்னை தெளிவடைந்தது.
