மணம், பிணம், வெக்கை!

மணம், பிணம், வெக்கை!

— சீவகன் பூபாலரட்ணம் —

மணம் தெரியுமா? தெரியுமா, தெரியாதா?  

பிணம் தெரியுமா?  

பிணம் மணம் தெரியுமா?  

என்ன அசிங்கமா பேசுகிறேன் என்று பார்கிறீர்களா?  

இங்கு எல்லாம் அசிங்கமாத்தானே இருக்கிறது. அதுதான் நானும் அப்படிப் பேச வேண்டி இருக்கிறது. சரி சரி விசயத்துக்கு  வருவோம். பிணம் மணம் தெரியுமா? பிணம் பல மாதிரி மணக்கும். “பிணம் மணம்” என்று சொன்னால் சிலர்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். “பிண நாற்றம்” என்று சொன்னால்தான் ஒத்துக்கொள்வார்கள். சரி, பிண நாற்றம் தெரியுமா?  உங்களுக்கு சரியாக தெரியாது என்று நினைக்கிறேன். பிணம் பல மாதிரி மணக்கும். இல்லை இல்லை நாறும். ஒவ்வொரு  பிணமும் ஒவ்வொரு மாதிரி நாறும். இப்ப செத்தது, இரண்டு நாளுக்கு முதலில் செத்தது, ஆறு மாதத்துக்கு முதலில் செத்தது என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி நாறும். ஆறு மாதப் பிணத்தைப் பற்றி பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னுடைய வேலை அந்த மாதிரி. நான் ஒன்றும் டாக்டர் இல்லை. சட்ட வைத்திய அதிகாரி இல்லை. பிணவறையிலும் பணி இல்லை. புதைப்பதும் எனது வேலை இல்லை. நான் ஒரு செய்தியாளன். அதனால்தான் புதைத்ததை எல்லாம் தோண்டிப் பார்த்த அனுபவம் எனக்கு  இருக்கிறது.

கொழும்பில் இருந்த போது பெரும்பலானா நாட்கள் எனது பணி பிணம் எண்ணுவதுதான்.  இன்ன இடத்தில் நடந்த மோதலில்இவர்கள் இத்தனை பேரும், அவர்கள் அத்தனை பேரும் பலி என்ற வகையில் கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி, ஒரு சமன்பாடு  வைத்து, செய்தி எழுதின அனுபவம் எனக்கு நிறைய உண்டு. அப்பவெல்லாம் எனக்கு அது சதையும், இரத்தமும் கலந்தது  என்றோ, நாறும் என்றோ முதலில் தெரியாது. ஆனால் கொழும்பில் வெடிக்கத் தொடங்கின பிறகுதான் நாற்றம் தெரிய  ஆரம்பித்தது.  

அவர் ஒரு அரசியல்வாதி. நல்ல வயது. ஆனால் பார்க்க சிறிய பையன் மாதிரித்தான் இருப்பார். தமிழ் தேசியவாதிதான். ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவு என்று கூறி, அவருக்கு ஒரு சுயீசைட் அடித்துவிட்டது. செய்தியை எனக்கு முதலில்  சொன்னது சரிநிகர் ரமேஷ். அவசரமாக ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவருடைய வீடு மற்றும் அலுவலகம் இருந்த, கொழும்பின் முக்கிய பிரமுகர்கள் வாழும் அந்தப் பகுதிக்கு ஓடினேன். போகும் போதே அந்த மனிதரின் முகம்  ஞாபகத்துக்கு வந்தது. சாந்தமான முகம். நன்றாக நட்போடு பழகுவார். என்ன சந்தேகம் என்று போன் எடுத்தாலும்  சுமூகமாகப் பேசுவார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கேள்வி கேட்டாலும், சிரித்துக்கொண்டே பதில்  சொல்வார். அவருடைய அலுவலகத்தில் இருந்து பல புத்தகங்களையும் இரவல் வாங்கி படித்திருக்கிறேன். “அவர்  கொல்லப்பட வேண்டியவரா?” என்ற கேள்வி முதலில் எழுந்தது. அத்தோடு சேர்த்து இந்த மனிதரைக் கொல்ல ஒரு  தற்கொலைத்தாக்குதலா தேவை என்பதும் மனதை மிகவும் மோசமாக நெருடியது. முக்கிய பிரமுகர்கள் வாழும் அந்த இடத்தில் சம்பவம் நடந்த இடத்துக்கு பல மீட்டர் தூரத்திலேயே எனது ஆட்டோவை நிறுத்திவிட்டார்கள். ஆட்டோவில் இருந்து இரு அடி எடுத்து வைத்திருக்கமாட்டேன்,  அதற்குள்ளாகவே, வெட்டிப்போட்ட திருக்கை மீனின் துண்டுகள் இரண்டு அங்கே கிடந்தன. கொஞ்சம் மீன் மணமும் இருந்தது. “இவ்வளவு பெரிய ஆட்கள் வாழும் இடத்திலேயே, மீனை வெட்டி வீதியில் வீசியிருக்கிறார்களே” என்று நினைத்துக்கொண்டேன். தூரத்தில் “வாகனத்தின் மீது தாக்குதல் நடந்த இடத்தில்’, ஆட்கள் கூடி நின்றார்கள். எல்லாருக்கும் அனுமதியில்லை செய்தியாளருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மாத்திரந்தான் அனுமதி. அந்த இடத்தை நோக்கிப் போகப் போக, திருக்கை மீன் துண்டுகள் வீதியில் அதிகரித்துக்கொண்டே சென்றன. “வார் வாராக” எங்கும் கிடந்தன. ஆனால் மீன் மணம் மாறி அதற்கு மேலாக வெடிமருந்தோடு கலந்தாற்போல ஒரு வகை “வெடுக்கு” மணக்கத் தொடங்கியது. இப்போது மீன் துண்டுகளை  மிதிக்காமல் என்னால் நடக்க முடியவில்லை. என்ன இது தெருவெல்லாம் மீன் துண்டுகள் என்ற கேள்வி மனதில் எழுந்தது. அடுத்த கணந்தான் நிலைமை புரிந்தது. அடக்கடவுளே, இதெல்லாம் மீன் துண்டல்ல, மனசனின் சதைத்துண்டு. அதை மிதித்துக் கொண்டா இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்? கிட்ட நெருங்க, அவருடைய கார் நொருங்கிக் கிடந்தது தெரிந்தது. அதன் மீது மோதிய தற்கொலையாளியின் மோட்டார் சைக்கிளும் அங்கே எரிந்து கிடந்தது. அவரது  உடலும் கார் ஓட்டுனரின் உடலும் காரின் உள்ளேயே கிடந்தன. தற்கொலையாளியின் உடல்தான் தெருவெங்கும் சிதறி வீசியிருக்க வேண்டும். இன்று வரை அந்த வெடிமருந்து கலந்த மனித தசையின் மணம் நெஞ்சுக்குள்லேயே நிற்கிறது.—-இது முதல் மணம்.  

அடுத்தது மகேஷ் அக்காவின் பரீச்சயத்தால் வந்தது. அவவும் இப்ப  உயிரோட இல்லை. சுட்டுக்கொலை செய்து விட்டார்கள்.  அவருடைய மனித கௌரவத்துக்கான அமைப்பு, “யாழ்ப்பாணத்தில், (கடற்படையினரால் என்று நினைக்கிறேன்)- அவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை” ஆறு ஏழு மாதங்களின் பின்னர் தோண்டி எடுத்துவிசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு வந்திருந்தது. அதனை புதைக்கச் சென்றபோது பொறளையில் நாங்களும் சென்றிருந்தோம். அந்தப் பெண்ணின் சடலத்தை இறுதியாகப் பார்ப்பதற்காக அந்தப் பெண்ணின் தகப்பனும், அவளது மகளும் வந்திருந்தார்கள். தகப்பன்அந்தப் பெண்ணின் கல்யாணச் சேலையாக இருக்க வேண்டும்- ஒரு பட்டுச் சேலையை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் மகளுக்கு ஒரு 7 வயது இருக்கும். தாயின் முகத்தை பார்க்க மிகவும் ஆவலாக வந்திருந்தது அந்தக் குழந்தை. பொறளை மயானத்துக்கு அவ்வப்போது இராணுவத்தினரின் சடலங்களும் வடக்கில் இருந்து வரும் காலம் அது என்பதால், எப்போதும் அங்கே ஒரு வகை துர்மணம் இருக்கும். அதனால் ஒரு மணம் அங்கே இருந்துகொண்டே இருந்தது. அது அந்த மயானத்தில் நின்றிருந்த மரங்களில் இருந்து விழும் பலவையான பூக்களோடு சேர்ந்து மணந்தது. அதுவும் அப்படியே இன்று வரை நெஞ்சிலேயே இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிரேதப் பெட்டியை அங்கே கொண்டு வந்துநேரடியாக புதைகுழிக்கு அருகிலேயே வைத்தனர். அதை புதைப்பதற்கு முன்னதாக அதில் அடித்திருந்த ஆணியை திறந்தார்கள். மூடியை திறக்கப் போனார்கள். நாங்கள் எல்லாம் சடலத்தைப் பார்க்க சற்று அருகே போனோம். அவளது குழந்தை மிகவும் நெருங்கி பெட்டியை எட்டிப் பார்த்தது. சடக்கென இறுதி ஆணி திறக்க, பெட்டி திறந்தது. மூடியை திறந்தார்கள். அப்போது எல்லாரும் கூடியதால் எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், பெட்டி திறந்ததும் ஒரு “வெக்கை” அப்படியே அடித்தது. அத்தோடு சேர்த்து வந்த மணம் அதனை தாங்க முடியவில்லை. எல்லாரும் விலகினார்கள். அப்போது, அங்கே உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து அந்தக் குழந்தை கீரிட்டு அலறியது. அது பயந்துவிட்டது. நான் உள்ளே எட்டிப்பார்த்தேன் அங்கே சடலம் என்று சொல்லும் படியாக எதுவும் இல்லை. கொஞ்சம் சகதி, அதில் சில எழும்புகள் தென்பட்டன. ஆனால், நாற்றம் தாங்க முடியவில்லை. இப்பவெல்லாம் ஏதாவது ஞாபகம் வந்தா, அந்த மணமும், குழந்தையின் கீரிட்ட அலறலும்  அப்படியே நெஞ்சில் கேட்கிறது. இப்படியே நிறைய பார்த்திருக்கிறேன். மணந்திருக்கிறேன். அதெல்லாம் இப்போதெல்லாம் எனக்கு நிறைய ஞாபகத்துக்கு வருகிறது. நிறைய மணக்கிறது. இல்லை நாறுகிறது.   

கொஞ்ச நாளைக்கு முன்பு இறுதிப் போர் வேளையில் தப்பி வந்த மக்களிடமும் சரியான மணமாம். புளுதி, வேர்வை, இரத்தம்  என்று எல்லாம் சேர்த்து மணந்ததாம். தாங்க முடியவில்லை என்று வவுனியாவில் இருந்தவர்கள் கூறினார்கள். அதன் பின்பு சில வீடியோக்களும் வந்தன. அதிலும் நிறையப் பிணங்கள். வீடியோவில் ஒலியும், ஒளியும் மாத்திரந்தான் என்று  கூறுவார்கள்.  ஆனால் எனக்கு அந்த வீடியோப் பிணங்களைப் பார்த்த உடனேயே மூக்கில் மணக்க ஆரம்பித்துவிட்டது.  ஆட்களைப்  பார்த்தாலே எல்லாம் மணக்குது. எல்லாரும் நாறுகிற மாதிரி இருக்கிறது. எல்லாம் அசிங்கமாக இருக்கிறது.  இந்த கட்டிலும் மணக்குது. தலையணையும் மணக்குது. இந்தா வாற அட்டண்டனின் வெள்ளைச் சட்டையும் அந்த மாதிரியே மணக்கிறது. ஒரு அட்டண்டண்ட் வாறார்….  ‘’என்ன சட்டை  நாறுதோ???….. என்ன தனியாக புலம்பிறீங்க. இந்த தனியாக கதைக்கிற விசர் எப்ப தணியப் போகுதோ தெரியல்ல’’  அங்கு வந்த அட்டண்டண்ட் இப்படி கூறுகிறார். ‘ம்ஹும்…அவருக்கு நான் விசராம். இந்த மணமெல்லாம் மனசில நிண்டா புலம்பத்தானே வேண்டும். அவருக்கு இது எங்க தெரியப்  போகுது. ’‘எல்லாம் அப்படியே மண்டைக்குள்ள நிற்கிறதே.   என்னைச் சொல்கிற அவருக்குத்தான் விசர். எல்லாருக்கும்  விசர். ‘‘எல்லாம் அப்படியே மணக்கிறது… வெக்கை அடிக்கிறது. வெடுக்கு நாறுது….’