முரளிதரனின் “800” : ஈழ வியாபார நடிப்பு சுதேசிகள்

முரளிதரனின் “800” : ஈழ வியாபார நடிப்பு சுதேசிகள்

— அறுமுகுட்டிபோடி —  

“800” திரைப்படத்தின் வெளியீட்டுக்கான முயற்சிகள் எதிர்ப்புகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

‘இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் என்கின்ற உலக புகழ் பெற்ற  கிரிக்கட் வீரரின் வரலாற்றை கொண்ட இத்திரைப்படத்தில் பிரதான“முரளிதரன்” பாத்திரத்தில்  “நடிகர் விஜய் சேதுபதி” நடிக்கவிருந்தார். 

ஈழத் தமிழர்களின் அரசியல் தொடர்பாக கடந்த காலங்களில் முரளிதரன் தெரிவித்திருந்த கருத்துக்களை முன்வைத்தே இத்திரைப்படம் வெளியிடப்படக்கூடாது என்கின்ற எதிர்ப்பலைகள் தமிழ் நாட்டிலிருந்து கிளம்பின.  

ஆனால் இத்திரைப்படத்தை தயாரிக்கின்ற ‘தார் மோஷன்ஸ் பிக்சர்ஸ்’ என்னும் நிறுவனமானது  ‘இது அவரது அரசியல் கருத்துக்களை முன்னிறுத்தும் திரைப்படமல்ல’. ‘முழுக்கமுழுக்க அவரது வாழ்வின் இளமைக்காலங்களையும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் புரிந்துள்ள சாதனைகளையும் அதற்காக அவர் எதிர்கொள்ள நேர்ந்த சவால்களையும் மட்டுமே பேசுகின்ற திரைப்படமாக இருக்கும்’. என்றெல்லாம் தன்னிலை விளக்கமளித்தும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்புக் குரல்கள் நிறுத்தப்படவேயில்லை.  

தமிழ் நாட்டிலிருந்து பாடலாசிரியை தாமரை, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான், கம்யூனிஸ்ட் தியாகு  என்று இவ்வெதிர்ப்பாளர்கள் பட்டியல் நீளுகின்றது. அத்தோடு ஈழத்து கவிஞரும் இந்திய நடிகருமாகிய ஜெயபாலன் என்பவரும் இத்திரைப்படம் வெளியிடப்படக்கூடாது என்று ஆர்ப்பரித்து அறிக்கைவிட்டிருந்தார்.   

 “நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாவிடினும் அதை சொல்வதற்கான உனது உரிமைக்காக நான் இறுதிவரை போராடுவேன்” என்று சூளுரைப்பான்   பிரஞ்சு நாட்டின் அறிவொளி இயக்க எழுத்தாளன் வோல்டேயர். ஆனால் நாமோ ஒரு விளையாட்டு வீரன் கொண்டுள்ள அரசியல் கருத்துகளுக்காக,  அவனது  உலகப்புகழ் பெற்ற சாதனையை திரைப்படமாக்க கூடாது என்று கொடி பிடிகின்றோம். இந்த அடாவடித்தனத்துக்கு வேறு தமிழ் தேசியகோஷத்தை துணைக்கழைத்து, ஈழவிடுதலை முலாம் பூச முனைகின்றோம். ஆனால் தனது விடுதலைக்காக போராடிய இனமொன்றின் பெயரில் இத்தகைய கருத்துச் சுதந்திர மறுப்பை நிறுவியிருப்பதானது அப்பட்டமான பாசிச மனநிலையாகும்.  

முரளிதரன் என்னும் வீரன் இந்திய வம்சாவளியினராக இலங்கையில் வாழும் இனமொன்றின் வாரிசாவார். இந்த மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள்  இலங்கையின் வேறெந்த பகுதியில் வாழும் மக்களில் பலரும் அனுபவித்திராதவை. காலத்துக்கு காலம் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கும்  முகம்கொடுத்து, தனத்திருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து இத்தகைய வீரனொருவன் சாதனை படைப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எத்தனையோ போட்டிகளும், நெருக்கடிகளும், சவால்களும், சோதனைகளும், அவமானங்களும் மிகுந்ததாகவே அவனது வெற்றிப்படிகள் உருவாகியிருக்கும். அதிலும் ஒரு தமிழனாக மட்டுமல்ல இந்திய வம்சாவளி தமிழனாக தேசிய அளவில் பரிணமிக்க அசாத்தியமான மனவலிமை வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும்.   

ஒருகாலத்தில் அவரது பந்து வீச்சு முறை கூட துடுப்பாட்ட வரன்முறைகளை தாண்டியது என்கின்ற குற்றச்சாட்டு அவரை பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கிய வரலாறுகளை நாம் மறக்கமுடியாது. அதற்காக இடம்பெற்ற பல்வேறுவிதமான பரிசோதனைகளையும் விசாரணைகளும் தாண்டி, உலகப்புகழ்பெற்ற பந்துவீச்சாளனாக முரளிதரன் என்னும் இளைஞன் எப்படி முன்னேறினான் என்பதை, எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல இத்திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அது தடுக்கப்பட்டிருக்கின்றது.  

முரளிதரன் பிறந்து வாழ்ந்த காலங்கள் முழுக்க இனமுறுகல்களும் யுத்தங்களும் குண்டுவெடிப்புகளும், கைதுகளும், விசாரணைகளும், கடத்தல்களும் நிறைந்தவை. அவரது குடும்பம்கூட இன வன்முறைகளில் சிக்கித்தவித்து தப்பி பிழைத்ததொன்றுதான். அத்தனைக்கும் மத்தியில் ஒரு தமிழனாக வாழ்வதே சவாலாகி நின்ற இலங்கைத்தீவில் தேசிய அளவில் முரளிதரனால் நிமிர்ந்து நிற்க முடிந்ததென்றால் அவரை ஒரு தமிழனாக ஒவ்வொரும் கொண்டாடவேண்டும்.  

அந்தவகையில் இத்திரைப்படமானது ஒடுக்கப்படும் இனமொன்றுக்கு எதிர்காலத்தின்  மீதான நம்பிக்கையையும் வெற்றிக்கனவுகளையும் விதைக்கவல்லது. ஆனால் அவரது சொந்த  அரசியல் கருத்துக்களையும் உலகப்புகழ் பெற்ற  கிரிக்கட் சாதனையாளன் ஒருவனின் வெற்றி வரலாற்றையும்  வேறுபடுத்தி பார்க்கத்தெரியாத, கண்ணிருந்தும் குருடர்களாக இந்த எதிர்ப்பு கூச்சலிடும் ‘தமிழ் தேசிய’வாதிகள் இருப்பது வேதனைமிக்கது.  

நமது கருத்துடன் உடன்படாத அனைவரையும் துரோகிகளாகவும் மனிதகுல விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற சிந்தனையும் செயற்பாடுகளும் விடுதலைகோரி போராடிய தமிழ் தேசிய இனத்தின் பெயரில் ஒரு போதும் இடம்பெறமுடியாது. 

“தமிழீழ விடுதலையின் பெயரில் கருத்துச் சுதந்திர மறுப்பை  புலிகள் மேற்கொள்ளுகின்றனர்”  என்று  கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கவிஞர் ஜெயபாலன் போன்றவர்கள் கூட, இந்த தமிழ் நாட்டு சினிமாக்காரரின், ஈழவியாபார  பித்தலாட்டங்களில் இன்று  அள்ளுண்டு போய், அதே தமிழ் தேசியத்தின் பெயரில்  ஒரு படைப்பு சுதந்திரத்துக்கு  எதிராக குரல்கொடுக்கின்ற ‘பன்றியொடு சேர்ந்த கன்றும் பீ தின்னும்’  இழிநிலைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.  

கவிஞை தாமரையோ இன்னுமொருபடி மேலே  போய், பிரபாகரன் நினைத்திருந்தால் முரளியின் வரலாறே இருந்திருக்காது என்கின்றதொனியில் வெறித்தனமாக கருத்திட்டுள்ளார்.  ஈழத்துத்  தமிழ்த் தேசிய சிந்தனையும் அதன் வெளிப்பாடுகளும் தமிழகத்து ஈழ வியாபாரிகளின் குத்தகைக்கு ஆட்பட்டிருப்பதன் விளைவுதான் இந்த அடாவடித்தனமான கருத்துக்கள் ஆகும்.  

ஒரு இலங்கையனாக முரளிதரனுக்கு இல்லாத ஈழத்து அரசியல் சார்ந்த கருத்து சுதந்திரம் எப்படி இந்த இந்தியர்களுக்கு இருக்க முடியும்? ஒரு மனிதனது அரசியல் கருத்துக்களை விமர்சனம் செய்வதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் இன்று முரளிதரன் கொண்டுள்ள அரசியல் கருத்துக்காக அவரது உலக சாதனைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. அவரது திறமைகளை படைப்பாக்கும் திரைப்பட வெளியீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒவ்வொரு தமிழனும் தலைகுனியவேண்டும். 

கலைஞர்களும் எழுத்தாளர்களும்தான் உலகெங்கினும் மனித உரிமைக் குரல்களாக முன்னின்று ஒலிப்பவர்கள். ஏனெனின் கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமுமே கலைஞர்களின் அடிநாதமாகும். மேலும் மானிடகுல வரலாற்றுத் தொடர்ச்சி என்பதே சிந்தனைச் சுதந்திரத்தின் வெற்றிதான். அதனால்தான் உலகப்புகழ் வரலாற்று புகழ்பெற்ற சிந்தனையாளரான காரல் மாக்ஸ் இறந்தபோது, அவரது இரங்கல் செய்தியில் ‘காரல்மாக்ஸ் சிந்தனை செய்வதை நிறுத்திவிட்டார்’ என்று தெரிவித்தார் பெடரிக் ஏங்கல்ஸ் என்னும் பேரறிஞர்.  

ஏனெனில் சிந்தனை என்பதுதான் மனிதன் உயிரோடு இருப்பதன் அர்த்தமாகும். சிந்தனை இல்லாவிடின் மனிதன் ஒரு ஜடம். ஆனால் தமிழ்நாட்டு கலைஞர்களோ ‘800’ திரைப்படத்தை தடை செய்திருப்பதனுடாக உயிரினும் மேலான அந்த சினிமாவுக்கான படைப்புச் சுதந்திரத்தை காலடியில் போட்டு மிதித்துள்ளனர்.   

சாந்தி:  

2006ஆம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை பெற்ற “சாந்தி” என்னும் தமிழக வீராங்கனையின் பாலினம் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக அவரது வெற்றிப்பதக்கம் மீளப்பெறப்பட்டது. அவருக்காக குரல்கொடுக்கவோ, போராடவோ இன்று ஈழத் தேசிய வியாபாரம் பண்ணும் கூட்டத்தினரில் எத்தனைபேர் முன்வந்தார்கள்? அப்போதெல்லாம் இவர்களது ஈழ அரசியல் சார்ந்த நெஞ்சுரமும் நேர்மைத்திறனும் எங்கே போனது?    

 “சாந்தி” என்னும் அந்த விளையாட்டு வீராங்கனையின் சாதனை மிகுந்த வாழ்க்கை எவ்வித ஆதரவும் இன்றி முடங்கிப்போனது. ஆனால் இதுபோன்ற பல விளையாட்டு வீரர்கள் பாலின சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது புதியதொன்றல்ல. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல விளையாட்டு வீராங்கனைகள் இத்தகைய சங்கடங்களையும் சவால்களையும் தாண்டி மீளெழுந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுக்கு பரவலாக கிடைக்கின்ற சமூக ஆதரவுத்தளமேயாகும். ஆனால் எமது சாந்திக்கோ அத்தகைய ஆதரவை யாரும் வழங்க முன்வரவில்லை. அவரை பாலின சர்ச்சையிலிருந்து காப்பாற்ற எந்த தமிழ் தேசிய பற்றாளர்களாலும் முடியவில்லை. அதனால் ஒரு சர்வதேச புகழ் பெற்ற தமிழ் வீராங்கனையின் வாழ்வு தீராத தாகத்தோடு வறண்டுபோனது.  

ஒருவேளை, அவரது பெற்றோர்கள்  இலங்கையில்  இருந்திருந்தால் இன்னுமொரு சர்வதேச புகழ் மிக்க விளையாட்டு வீராங்கனையை இலங்கை  மண் உருவாக்கியிருக்கக் கூடும்.   

அதேபோல சீமான் தரவளிகள் சொல்லுகின்ற  ‘பச்சைத்தமிழனாக’  இருந்தமைக்காகவே ரோஹித் தாமோதரன் போன்ற எத்தனையோ தமிழ் வீரர்கள் இந்திய கிரிக்கட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கட் வாரியத்தில் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக தமிழுணர்வை பொங்கவிட்டு போராட  முடியாதவர்கள்தான் இன்று முரளிதரனுக்கு எதிராக தமிழுணர்வின் பெயரில் கேவலமான கட்டைப் பஞ்சாயத்தை செய்து முடித்திருக்கின்றார்கள்.  

இலங்கை:  

 ஒரு முறை  1999ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான  போட்டியொன்றில் முரளிதரனின் பந்து வீச்சை நடுவர்கள் “முறையற்றது” என அறிவித்தபோது, இலங்கை அணித்தலைவர்  அர்ச்சுனா ரணதுங்க  முழு அணியையும் முரளிதரனுக்காக குரல்கொடுக்க வைத்து, போட்டியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். அன்று அவர் எடுத்த தோழமைமிக்க முடிவே மீண்டும் முரளிதரனை அதே போட்டியில் மீண்டும் விளையாட அனுமதித்தது. அதேபோல இலங்கை அரசியலில் ஆயிரம் இனவாதம் இருந்தபோதும் இலங்கை கிரிக்கட் அணியிலிருந்த சகவீரர்களின் உறுதுணையே தொடர்ந்து வந்த காலங்களில் முரளிதரனின் ‘800’ வரையான  விக்கட் சாதனைகளுக்கும் பலம் சேர்த்தது.    

ஆனால் இன்று முரளிதரன் கிரிக்கட் வரலாற்றைப் பேசும் ‘800’ சினிமாவுக்கு எதிராக  ஈழவியாபாரத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்த  நடிப்பு  சுதேசிகளிடம் இருப்பது ஈழ அக்கறை அல்ல. இருப்பதெல்லாம் பிழைப்புவாதத்தைத்தவிர யாதொன்றுமில்லை.  

இறுதியாக இலங்கை தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து எமது மக்களை மீட்கின்றார்களோ இல்லையோ இந்த தமிழ் நாட்டு ஈழவியாபாரிகளிடம் இருந்து முதலில் தமிழ் தேசியத்தை மீட்கவேண்டும்.