— அழகு குணசீலன் —
கிழக்கு மாகாணத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் மீண்டும் உரத்து பேசப்படுகிறது. கிழக்குத்தமிழர்களின் அரசியல் தனித்துவம், மாற்று அரசியல், இந்த மாற்றுக்கு இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும், சவால்களும் என்ன? என்பது இன்றைய சூழலில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இந்த “கிழக்குகருத்தியல்” ஒன்றும் புதியதல்ல. நல்லையா மாஸ்டர், கே.டபிள்யூ. தேவநாயகம் காலத்திலும், செ.இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னரும் பேசப்பட்ட ஒன்றுதான். ஆனால் அன்றைய அரசியல் சூழலும், ஆயுதங்களும் இவர்களின் கரங்களை கட்டிப்போட்டன.
ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மான் பிரிந்த பின்னர் கிழக்கில் தனித்துவ, மாற்று அரசியலுக்கான களம் முன்னெப்போதும் இல்லாதவாறு உருவாகியது. இந்த சாதகமான அரசியல் வாய்ப்புக்களை அன்றைய சூழலில் எண்ணற்ற சவால்களுக்கு மத்தியிலும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவும், அதைத்தொடர்ந்து புலிகளின் தலைமை கிழக்கு புலிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் எதிராக எடுத்த நடவடிக்கைகளும் கிழக்கின் தனித்துவ தமிழர் அரசியலுக்கு உந்து சக்தியாக இருந்தது . உடனடிக் காரணமாகவும் அமைந்தது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கருணாவும் பிள்ளையானும் கிழக்கு தமிழர்களின் அரசியல் தலைமைத்துவமாக தங்களை அடையாளப்படுத்துவதற்கான ஒரு “அசாதாரண” அரசியல் சூழல் உருவாகியது.
புலிகள் – கருணா பிளவுக்கு பின்னரான கடந்த இரண்டு தசாப்தங்களில் கிழக்கில் தனித்துவ அரசியலுக்கான அடித்தளம் ஏற்ற, இறக்கங்களுடன் அமைந்திருக்கிறது. யுத்த சூழலில் வரையறுக்கப்பட்ட ஜனநாயகத்துடன் இடம்பெற்ற உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களில் மக்களின் அங்கீகாரத்தை அதே வரையறுக்கப்பட்ட தேர்தல் ஜனநாயகத்துடன் பெறக்கூடியதாக இருந்தது. தேர்தல்களுக்கும் அப்பால் இலங்கை அரசியல் அமைப்பு/ தேர்தல் சட்டங்களின் படி அமைச்சரவை அந்தஸ்து கொண்ட ஒரு அமைச்சராக கருணா அம்மானும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக பிள்ளையானும் தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு வகையில் ஒரு கூட்டு தலைமைத்துவத்தை கிழக்கின் தனித்துவ அரசியலுக்கும், மக்களுக்கும் வழங்கினார்கள். இதை தமிழ் மக்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 2020 நாடாளுமன்ற தேர்தல் மூலமான அங்கீகாரமாகவும் வழங்கியிருந்தார்கள்.
அப்போது இது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியிலும் கிழக்கிற்கான ஒரு தனித்துவ அரசியலாக மட்டும் அன்றி மாற்று அரசியல் என்ற வடிவத்தையும் பெற்றது. அந்த மாற்றே தமிழ்த்தேசிய அரசியலுக்கு மாற்றான இணக்க -அபிவிருத்தி அரசியல். இந்த அரசியல் போக்கு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் கிழக்கு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகளை அல்லது எதிர்பார்புக்களை நிறைவேற்றுவதில் அது முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாக தவறியிருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவே கடந்த-2025 நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு அரசியலுக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.
இந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு கிழக்கு அரசியலுக்குள் தனிநபர், குழு, கட்சி முரண்பாடுகளை கடந்து பிள்ளையான், கருணா, வியாழேந்திரனை ஒரு புரிந்துணர்வுக்கு கொண்டு வருவதற்காக காலம் கட்டாய அழுத்தத்தை கொடுத்தது.
விளைவு: கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு என்ற புரிந்துணர்வு ஒப்பந்த அறிவிப்பு 15.03.2025 இல் வெளியானது. ஆனால் மறுபக்கத்தில் இந்த பெயர் கிழக்கு தனித்துவ அரசியலுக்குள் மற்றொரு மோதலை ஏற்படுத்தியுள்ளது. இப்போது கற்றுக்கொண்ட தேர்தல் தோல்வி பாடங்களுக்கு அப்பால் கிழக்கு அரசியல் ஒரு “தார்மீக அரசியல் நேர்மையையும்” “பொறுப்புக்கூறலுக்கான உண்மையையும்” கூடவே வேண்டி நிற்கின்றது.
“கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது 2018 ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஷ்ணன், சட்டத்தரணி த.சிவபாலன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்ப்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவு என்று அறிய வருகிறது. அத்துடன் 2019 இல் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காகவும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரமும் பேராசிரியர் சு.சிவரெத்தினத்தின் அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்களுக்கு பின்னால் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றியம், அதன் அரசியல் பிரிவான கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பனவற்றின் முக்கியஸ்தரும், செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அரங்கத்தில் தனது “சொல்லித்தான் ஆகவேண்டும்”பத்தியில் கிழக்கு தமிழ் மக்களுக்கான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் வெளிச்சத்திற்கு ஏற்பட்ட ஈர்ப்ப்பு விசையை கொடுத்தது.
“எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கிழக்கு மாகாணத்தமிழர்களே. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சி உட்பட வடக்கை தளமாகக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளைகளையும் முற்றாக நிராகரித்து கிழக்கை தளமாகக் கொண்ட மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் காணவேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத முன்னுரிமையோடு இப்போது கிழக்கு தமிழர்களை எதிர்நோக்கியுள்ளது. கிழக்கு தமிழர்கள் இப்போதிருந்தே தம்மைத் தனித்துவமான அரசியல் கட்டமைப்பாகத் தகவமைத்துக்கொள்ளுதல் அவசியம்.கண்கெட்ட பின் சூரியநமஷ்காரம் பண்ணுவதில் பயனில்லை”
என்று கிழக்கின் எதிர்காலம் குறித்து எச்சரித்துள்ளார். 2008 முதல் 2015 வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தமிழர்களுக்கு சம்பந்தன் தலைமையில் இழைத்த அநீதிகளை சுட்டிகாட்டவும், பட்டியலிடவும் அவர் தவறவில்லை.
இந்தச் சூழலில் கிழக்குத்தமிழர் அரசியல் கடந்த காலங்கள் போன்று தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய புதிய பாடங்கள் நிறைய உண்டு. இது கிழக்கு தனித்துவ அரசியல் குறித்து இங்கு பேசப்படும் இருதரப்புக்கும் பொதுவானது.
1. தமிழ்த்தேசிய கட்சிகள் உள்ளூராட்சி தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்டு கூட்டாக ஆட்சி அமைப்பது என்ற சுமந்திரனின் பொறிமுறையில் வடக்கில் தொடரும் “திருகுதாளங்கள்” இந்த பொறிமுறையின் தோல்வி.
2. வடக்கில் ஈ.பி.டி.பி. உடன் பேசிய சி.வி.கே. சிவஞானம் கூறும் விளக்கம் இப்படி இருக்கிறது. ” ………. கேட்டுப் போனேன் கல்யாணம் கட்ட அல்ல சின்ன வீடாக ….” இந்த அரசியல் அநாகரிகம் கிழக்குக்கும் பரவாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
3. கிழக்கில் முஸ்லீம் கட்சிகளில், சுயேட்சைகளில் பொறுக்கி எடுக்க முடியாது என்றால் சுமந்திரன் அநுரவுடன் பேசினாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் வடக்கு விவகாரத்தில் தலையிட்டுள்ள அநுர அரசின் முக்கிய அமைச்சர் சுமந்திரனின் “பெரும்பான்மை” கோட்பாட்டை நியாயப்படுத்த வேண்டிய தேவை என்ன? ஜனநாயகத்தில் சிறிய கட்சிகளின் பங்கு என்ன? இது இடதுசாரிகளின் “பல்தேசிய கம்பனி” அரசியல்.
4. வடக்கில் ஈ.பி.டி.பி. யோடு பேசிய, பேச திகதி குறித்த தமிழ்த்தேசியம் கிழக்கில் ரி.எம்.வி.பி.யுடன் பேசத்தயாரில்லை. “துரோகி” என்றாலும் “நாங்கள் வடக்கார்” என்ற பிரதேசவாத மேலாண்மை அரசியல் அதிகார திமிர் நியாயம். வடக்கில் “தமிழ்க்கட்சிகளோடு” / “தமிழ்பேசும் கட்சிகளோடு ” பேச முடிவெடுக்கப்பட்டதாம். ஆக, கிழக்கில் தமிழ்க் கட்சிகளும் இல்லை. தமிழ்பேசுபவர்களும் இல்லை. இதற்கு பெயர் “புரட்டு அப்புக்காத்துதனம்”.
5. தமிழ்த்தேசிய கட்சிகளின் இந்த அரசியல் சின்னத்தனம் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கில் இலங்கையர் என்ற போர்வையில் பேரினவாத அரசியல் செய்ய வழியைத் திறந்து விட்டுள்ளது.
6. இந்த தமிழ்த்தேசிய அரசியல் தவறுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜே.வி.பி. தனது பேரினவாத அரசியலை விரிவாக்கம் செய்ய இலகுவாக ஏதுவாகும்.
இந்த அடிப்படையில் கிழக்கில் எதிர்கால அரசியல் நகர்வுகள் எப்படி அமையும் என்பது ஊகிக்க முடியாத ஒன்றல்ல. தமிழ்த்தேசிய கட்சிகளின் இன்றைய இக்கட்டான நிலையை பாடமாகக்கொண்டு கிழக்கு தனித்துவ அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் அடிப்படை “கிழக்கு தனித்துவ அரசியல்” கோட்பாடிற்கு எதிராக ஆளுக்காள் சுட்டுவிரலை நீட்டி கிழக்கு அரசியலிலும் “சுமந்திரன்” “கஜேந்திரகுமார்” உருவாகுவது காலத்தின் கொடுமையாக அமையும்.
மூத்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பும், இளைய படகு கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் கடந்த கால சரி, பிழைகளை மனம்விட்டு, கபடத்தனங்களை கடந்து பேசி கிழக்கு அரசியல் தலைமைத்துவம் ஒன்றை இணைந்து வழங்கவேண்டும். நிலவும் இடைவெளியை குறைக்க முதலில் கிழக்கு தனித்துவ அரசியலில் இணங்கி, அடுத்து மாற்று அரசியலுக்காக செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி பேசலாம்.
இல்லையேல் இது ஓட்டுநர் யார் என்றும், இருக்கை வசதிகளுக்காகவும் போட்டிக்கு பஸ் ஓட்டி கிழக்கு மக்களுக்கான கடைசி பஸ்ஸையும் தவறவிட்டு நீங்களே எல்லோரும் சேர்ந்து ஜே.வி.பி. பஸ்ஸில் மக்களை ஏற்றிவிட்ட கதையாக முடியும். வேறுவழியின்றி மக்களும் தமிழ்த்தேசிய அதிருப்தியையும் சேர்த்து தானாகவும் ஏறவேண்டியிருக்கும்.
இப்பத்தியில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரின் பின்னணி பற்றி நீதிமன்ற குறுக்கு விசாரணை ஒன்றை செய்ய வெளிச்சம் விரும்பவில்லை. இன்றைய சூழலில் அதுபற்றி பேசுவதற்கான பொருத்தமான இடம் இதுவாகத்தெரியவில்லை. இது இரு தரப்புக்கும் உரிய விவகாரம். பொது வெளியில் அது பற்றி ஒரு வரையறைக்கு அப்பால் பேசுவது கிழக்கு அரசியலுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
சிந்திப்பீர்களா……..?
இலைகள் இலக்கல்ல…!
இலைகள் மறைத்தாலும் கிளியே இலக்கு…!!
