— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்கு ஏனைய காரணிகளுடன் சேர்த்துத் தவறான தகவல்களைச் செய்திகள் வடிவிலும் ஆசிரிய தலையங்கங்கள் வடிவிலும் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் வடிவிலும் வழங்கி மக்களை மூளைச் சலவை செய்த தமிழ் ஊடகங்களும் பிரதான காரணியாகும். இத்தகைய பிற்போக்குத்தனமான செயற்பாடுகளைத் தமிழ் ஊடகங்கள் இன்னும் கைவிடவில்லையென்பதற்கு ‘ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல ‘காலைக்கதிர்’ மின்னிதழின் 18.04.2023 காலைப்பதிப்பில் அதன் ஆசிரியர் எழுதியுள்ள ‘இனியும் இது இரகசியம் அல்ல’ என்ற தலைப்பின் கீழான பத்தி எழுத்து அமைந்திருக்கிறது என்பதைப் பகிரங்கப்படுத்தி தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களைக் குறித்து எச்சரிக்கையுடன் ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.
இனி ‘காலைக் கதிர்’ மின்னிதழின் மேற்குறிப்பிட்ட பத்திக்கு வருவோம்.
“தமிழர்கள் ஆயுதப் போராட்டக் களத்திற்குள் காலடி எடுத்து வைத்தபோது பல இயக்கங்கள் புற்றீசல்கள் போல உருவாகின. ஆனால் அவற்றில் சிலவற்றினாலேயே ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று அடுத்த கட்டம் நோக்கி முன்னேற முடிந்தது. பாலஸ்தீனம் லெபனான் போன்ற இடங்களில் அன்று பயிற்சி பெற்றவர்கள் அந்த பேர்களாலேயே அடையாளப்படுத்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். ஆனால் அப்படி பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது. அதற்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு இந்தியாவின் துணை வேண்டியிருந்தது. பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது இந்தியாதான்.
இந்தியா ஒரே நேரத்தில் பல இயக்கங்களுக்கும் பயிற்சி வழங்கியது. தனித்தனியாகத்தான் அவற்றை வழங்கியது. ஈழ விடுதலை என்கிற ஒரே நோக்கத்திற்காகப் புறப்பட்டு வந்த எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக தனித்தனியாக அந்தந்த இயக்கங்களுக்குத் தனித்தனியாக ஆயுதப் பயிற்சி வழங்கியது. இதன் விளைவு இயக்கங்கள் தங்களுக்குள் ஆயுதங்களைக் கொண்டு மோதிக்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியது. ஆயுதக்குழுக்களைத் தான் கையாள்வதற்கு வசதியாகவே இந்தியா அப்படி நடந்து கொண்டது” – இது காலை கதிர்.
எனது அவதானம் – 1
‘காலைக்கதிர்’ ஆசிரியர் வரலாற்று மற்றும் அரசியல் தெளிவு இல்லாமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்.
தமிழர்களிடையே ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற எல்லாப் போராளி இயக்கங்களும் தாம் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை அடிப்படையாக வரித்துக் கொண்ட போதிலும் பொதுவாகத் தமிழீழவிடுதலையை விசுவாசித்தவையாகவே மேற்கிளம்பின. அதுவே இயல்பானது. அதில் தவறேதுமில்லை.
பாலஸ்தீன விடுதலைக்காகக் களத்தில் நின்றவை பதினாறிற்கும் மேற்பட்ட வெவ்வேறு தனித்தனிக் குழுக்களாகும். ஆனால் அவை தமக்குள் ஒருபோதும் மோதிக்கொண்டதில்லை.
யார் சரி? யார் பிழை? என்பதற்கும் அப்பால் தமிழ்ப் போராளி இயக்கங்கள் தமக்குள் மோதிச் சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டமைக்கு இந்தியாவைப் பொறுப்பாக்குவது தார்மீகமில்லை.
இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து காங்கிரஸும் மகாத்மா காந்தியும் அரசியல் ரீதியாக அகிம்சை வழியில் போராடிய போது அகிம்சை வழியில் உடன்பாடு காணாத சுபாஷ் சந்திரபோஸ் ‘ஐ.என்.ஏ.’ (Indian National Army) ஐ நிறுவி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த தவறினைப் போல (அமிர்தலிங்கம் உட்படப் பல தமிழ் அரசியல் தலைவர்களும் அறிவு ஜீவிகளும் தமிழ்ப் போராளி இயக்கங்களாலேயே கொல்லப்பட்டது போல – தமிழ்ப் போராளி இயக்கங்கள் தமக்குள் நடத்திய உட்கட்சி மற்றும் சகோதரப் படுகொலைகள் போல) ‘ஐ.என்.ஏ.’ ஆனது காங்கிரஸ் தலைவர்களையோ மகாத்மா காந்தியையோ கொல்லவில்லை; கொல்ல முயன்றதுமில்லை. அந்த அளவுக்குச் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் அரசியல் தெளிவு இருந்தது.
எனவே, தமிழர் தரப்பில் உள்ள தவறுகளுக்கு இந்தியாவைப் பொறுப்பாக்குவது நேர்மையாகாது. தமிழர் தரப்பின் பலவீனமே இதுதான். தாம் இழைத்த தவறுகளைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்தாது எப்போதுமே மற்றவர்களில் பிழை காண்பது. இந்த உளவியலை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்ததில் தமிழ் ஊடகங்களுக்கும் பெரும்பங்குண்டு. தமிழ் ஊடகங்கள் இனியாவது தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும்.
“அதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் விலகியது. இந்தியாவால் கையாளப்பட முடியாத அமைப்பாகத் தமிழ் மக்களுக்கும் மட்டுமே விசுவாசம் கொண்ட அமைப்பாக அது தன்னை நிலைநிறுத்த முற்பட்ட போது மற்றைய இயக்கங்களை இந்தியா அதற்கெதிராக வளர்த்தெடுக்கமுற்பட்டது. குறிப்பாக ஈபிஆர்எல்எப் அமைப்பை இந்தியா தனக்குரிய அமைப்பாகஅடையாளப்படுத்தி அரவணைத்தது” -இது காலை கதிர்.
எனது அவதானம்-2
தமிழீழ விடுதலையை நோக்கிய ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்ததற்குப் பிரதான ஊக்கியாக இருந்தது இந்திய மண்ணும் மக்களுமே. இதனை எவரும் மறுக்க முடியாது. தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு இந்தியா வழங்கிய அடைக்கலம்-ஆயுதப்பயிற்சி- பணம்- ஆயுதங்கள் இவை எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அந்த மண்ணிலேயே வாழ்ந்து கொண்டு இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ்ப் போராளி இயக்கங்கள் சிலவற்றை இந்தியா கைகட்டிக் கொண்டு பார்த்திருக்குமா?
இந்தியாவால் அடைக்கலமும் ஆயுதமும் வழங்கப் பெற்ற தமிழ்ப் போராளி இயக்கங்களின் செயற்பாடுகளை இந்திய நாட்டின் உளவுத்துறை உன்னிப்பாகக் கவனிக்காமல் இருக்குமா? உலக ஒழுங்கு மற்றும் நாடுகளின் நடப்புகள் தெரிந்தவர்களிடமிருந்து இவ்வினாக்களுக்கு வெளிவரும் விடை ‘இல்லை’ என்பதே.
‘புளொட்’ இயக்கம் இந்திய அரசுக்கு எதிரான தலைமறைவு அமைப்பான ‘நக்சலைட்’ டுக்களுடன் உறவு வைத்து ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விற்பனைகளில் ஈடுபட்டனர் என்பதும்,
அதேபோல், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இந்திய மாநிலமான பஞ்சாப்பில் ‘காலிஸ்தான்’ தனிநாட்டிற்குப் போராடிக் கொண்டிருந்த ‘பிந்தரன்வாலே’ தலைமையிலான ஆயுதக்குழுக்களுடன் உறவு வைத்து அதனுடன் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் விற்பனைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதும்,
தமிழ்ப் போராளி இயக்கங்களின் சில முக்கியஸ்தர்கள் இந்திய மண்ணில் இருந்துகொண்டு அந்நாட்டுச் சட்ட ஒழுங்கை மீறுவதிலும் – வன்முறையிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்கான பல நிகழ்வுகள் நடந்தேறின என்பதும் பொது வெளியிலும் ஊடகங்களிலும் அன்று பகிரங்கமாகப் பேசப்பட்ட விடயங்களாகும்.
இந்திய உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் சும்மா இருக்குமா?
ஒரு காலகட்டத்தில் (1985) தமிழ்நாட்டில் வாசம் செய்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) மகனும் தமிழ்நாட்டில் செயற்பட்ட ‘ஒபர்’ (Oferr)- ஈழஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம்- (Organisation for Eelam Refugees Rehabilitation) மற்றும் ‘புரக்ரக்’ (Protec)- ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகம் (Protection of Tamil Eelam Organisations) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிறுவுனருமான சந்திராஹாசன் டெலோவைச் சேர்ந்த என் சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்தும் தீர்மானத்தை இந்திய அரசு எடுப்பதற்கு என்ன காரணம்?
இவர்கள் மூவரும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா செல்வாக்குப் பெறுவதை விரும்பியிருக்காத அமெரிக்க நாட்டின் உளவுத்துறையான சி ஐ ஏ – CIA (Central Intelligence Agency) இன் முகவர்கள் எனச் சந்தேகம் எழுந்தமையே இதற்குக் காரணம்.
இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொண்டால் -ஈழத் தமிழர் பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியாவின் உதவி எதிர்காலத்திலும் தேவையென்றால் இந்தியாவையும் இந்திய நலன்களையும் அனுசரித்துப் போவதுதானே அறிவு பூர்வமானது; இதுவே தர்மமும் கூட. பூகோள ரீதியாக இலங்கையின் அமைவிடமாகவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்பது சாதாரண அரசியல் மாணவனுக்கும் எளிதாகப் புரியும் விடயமாகும்.
ஆனால், தமிழர் தரப்பில் என்ன நடந்தது. இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எதிர்த்தது. இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்திருந்த அதிகாரப்பகிர்வு அலகின் நிர்வாகப் பொறிமுறையைச் சீர்குலைத்தது. ஈழத் தமிழர்களின் பொது எதிரியான பௌத்த சிங்களப் பேரினவாத அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்கென இலங்கை மண்ணில் பிரசன்னமாயிருந்த இந்திய அமைதிகாக்கும் படையுடன் போர் தொடுத்தது.
ஆனால், ஈபிஆர்எல்எப் தென்னிலங்கை – இந்து சமுத்திர மற்றும் பூகோள அரசியலைத் தெளிவாகவும் யதார்த்தமாகவும் தமிழ் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் புரிந்துகொண்டு இந்தியாவையும் இந்திய நலன்களையும் அனுசரித்துப் போவதினூடாக ஈழத்தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கும் அணுகுமுறையைக் கையாண்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போயிருந்தால் பின்னாளில் தமிழீழமோ அல்லது அதி குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைந்த ஒற்றை மொழிவாரி மாநிலமாவது கிடைத்திருக்கும் என்று இன்று தமிழ் மக்களை வரலாறு எண்ண வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவைப் பகைத்தது மகா அரசியல் தவறு என்பதற்கும் அப்பால் தமிழ் மக்களுக்கு அவ்இயக்கம் இழைத்த மன்னிக்கவே முடியாத மாபெரும் துரோகம் என்பதையும் வரலாறு எண்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அற்ற ஆயுதப் போராட்டம் ஈற்றில் தமிழ் மக்களுக்கு அழிவுகளையே அறுவடையாகத் தந்துள்ளது என்பதே அனுபவமாகும். ‘திண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுதல்’ என்று கிராமப்புறங்களிலே ஒரு சொற்றொடருண்டு. அதைத்தானே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவுக்குச் செய்தது. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ எனும் குறள் அனுபவம்தான் ஈழத் தமிழருக்கு நடந்ததேறியுள்ளது.
இந்தப் பின்புலத்தில் எப்போதும் இந்தியாவை அனுசரித்து இயங்கிய ஈபிஆர்எல்எப் ஐ இந்தியாதனக்குரிய அமைப்பாக அடையாளப்படுத்தி அரவணைத்தது இயல்பானதொன்றுதானே.
‘காலைக்கதிர்’ ஆசிரியர் இதில் என்ன தவறு காண்கிறார் என்று தெரியவில்லை.
மேலும் ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தனது பத்தி எழுத்து வரிகளில் நடுநிலை நின்று பகுப்பாய்வு செய்யாமல் ஏதோ தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு விசுவாசம் கொண்ட அமைப்பாகும் என்ற எடுகோளுடன் தனது பதிவுகளை இட்டுள்ளார். இத்தகைய ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களுக்கு வாயில் இனிப்பான மிட்டாய்களை வழங்குவதை மட்டுமே கவனத்தில் கொள்வார்களேயன்றி அவை பின்னாளில் வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.
தமிழ் ஊடகங்கள் காலம் காலமாகப் பாடிய – பாடிவரும் இவ் ஒருபக்கச்சார்பான ‘புலிப்பாட்டு’ த்தான் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்குக் காரணமாகும். மட்டுமல்லாமல், இந்தியாவினால்தான் தமிழர்களுக்குக் காரியமாக வேண்டுமென்றால் இந்தியாவில் ‘சொட்டை’ பிடிப்பதைத் தமிழ் ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.