கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

 — கருணாகரன் —

அறிமுகம்

“இரண்டு துண்டாகிக் கிடக்கிறது, கிளிநொச்சி. இந்தப் போக்குத் தொடருமாக இருந்தால் கிளிநொச்சியின் எதிர்காலம் நிச்சயமாகப் பாழாகி விடும். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டும் தெரியாததைப்போலப் பேசாமலிருக்கிறார்கள் பலரும். அதிலும் படித்தவர்களும் சிந்திக்கக் கூடியவர்களும் இதைக் கண்டும் காணாதிருப்பது பெரிய பிழை. இதிலே அணிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், தங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் இழந்துபோய் நிற்கிறார்கள். அணிகளுக்குள் சிக்காதவர்கள் எதையும் சரியாகச் செய்ய முடியாமல், திக்குமுக்காடுகிறார்கள். கிளிநொச்சியை விட்டுச் சென்றால்தான் எதையாவது உருப்படியாகச் செய்யமுடியும் என்று சிலர் யோசிக்கிறார்கள்…. அந்தளவுக்கு கிளிநொச்சியின் அரசியல் நிலவரம் உள்ளது…”

-இப்படிச் சொல்லிக் கவலைப்படுகிறார் கிளிநொச்சியைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்.

ஏறக்குறைய இதை ஒத்த நிலையில் தன்னுடைய அவதானத்தைச் சொல்கிறார் கிளிநொச்சியில் உள்ள கிறிஸ்தவ மதகுரு ஒருவர். “கிளிநொச்சியைக் கட்டியெழுப்புவதைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, இங்குள்ள ஆட்களையும் சமூகத்தையும் எப்படித் தமக்கேற்ற மாதிரித் துண்டாடலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் அறுத்துத் துண்டாடப்படுகின்றனர். இப்பொழுது கிளிநொச்சியே தனித்தனித் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கிறது. இதனால் இங்கே (கிளிநொச்சியில்) எதையும் ஒருங்கிணைந்தும் செய்ய முடியாது. உருப்படியாகவும் செய்ய முடியாது. இது நல்லதில்லை….” என்று கவலைப்படுகிறார் அவர்.

என்னுடைய அவதானமும் கவலையும் கருத்தும் இதேதான்.

இதைப்பற்றி தொடர்ச்சியாகப் பல இடங்களிலும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்; வருகிறேன். ஆனாலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவுக்கு மாற்றங்கள் நிகழக்கூடியதாக இல்லை. என்பதால் இதைக்குறித்து ஆய்வு பூர்மான சில விடயங்களை முன்வைத்து, எதிர்காலக் கிளிநொச்சியை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

இது தொடர்பான எண்ணங்களையும் கருத்துகளையும் நண்பர்கள் முன்வைக்க வேண்டும்.

முன்னீடு

அவரவர்களுக்கென்று அரசியல் சார்புகள், இலக்கிய நிலைப்பாடுகள், தனியான சமூகப்பார்வைகள் இருக்கும். இது இயல்பு. மட்டுமல்ல அது அவரவருக்கான உரிமையாகும். ஒரு ஜனநாயகச் சமூகத்தில் அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். இதை நாம் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அப்படி இருந்தால்தான் அது ஜனநாயகச் சமூகமாகும்.

இதை மறுதலிப்பது ஜனநாயக விரோதமாகும். ஜனநாயக விரோதம் என்பது நாகரீகமடையாத பழங்குடி மனோபாவத்தின் வெளிப்பாடு.

பழங்கடி மனோநிலையானது பல்வகைமையை, பன்மைத்துவத்தை இல்லாதொழிக்க முனைவது. பதிலாக அந்த இடத்தில் ஒற்றைப்படைத் தன்மையை நிறுவ முற்பட்டு, பகைமையை வளர்க்க முற்படுவது. அதற்கான நியாயங்களை அது உருவாக்கும். இதற்காகத் தன்னையும் தன்னுடைய தரப்பையுமே முன்னிலைப்படுத்தும் அல்லது அதற்கு முயற்சிக்கும். இதற்காக அது தன்னைப் புனிதமாகவும் மிகச் சரியாகவும் காண்பிக்க முற்படும். அதே அளவுக்கு மற்றவற்றையும் மற்றவர்களையும் தாழ்த்த முற்படும் அல்லது நிராகரிக்கும். அதற்கான காரணங்களை உருவாக்கும் அல்லது சோடிக்கும். இதற்காக அது எவ்வளவு தூரமும் கீழிறங்கிக் கொள்ளவும் தயங்காது. அவதூறு தொடக்கம் நியாயமற்ற வகையிலான நிராகரிப்பு வரையில் எந்தக் கூச்சமுமின்றிச் செய்யும். துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தல்களும் வகை பிரிப்புகளும் இதன் வெளிப்பாடே. செழிப்படைந்த ஜனநாயகச் சமூகத்தில் இந்தச் சொற்களுக்கு எந்த மதிப்பும்கிடையாது.

இதைப் படிக்கும்போது உங்களுக்கு இங்கே உள்ள சூழலும் நீங்கள் பார்த்த – பார்க்கின்ற காட்சிகளும் மனதில் தோன்றும். பலருடைய முகங்கள் கூடத் தென்படும்.

ஆனால், இதெல்லாம் வளர்ச்சிக்கும் உலக நடைமுறைக்கும் எதிரானது. மனித மாண்புக்கு இழுக்குச் சேர்ப்பது. என்றாலும் இவர்கள் இதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

பிற தரப்புகளுக்கு இடமளிக்காமல், சமத்துவத்தையும் பன்மைத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் ஜனநாயக மறுப்புச் செய்வது தற்கொலைக்கு நிகரானது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதேயில்லை.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இதைத்தான் இலங்கை அரசும் சிங்கள இனவாதத் தரப்பும் செய்கின்றன. அதைக் கண்டிக்கின்ற இவர்கள், தமது சூழலில் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் பன்மைத்துவத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. இதற்கொரு எளிய உதாரணத்தைச் சொல்லலாம்.

உள்ளுராட்சி சபைகளிலும் மாகாண சபையிலும் தமக்குக் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று செயற்படுகிறார்கள். (வடமாகாணசபையும் வடக்கில் உள்ள பல பிரதேச சபைகளும் இதற்குச் செழிப்பான உதாரணங்கள்) இதனால் பல தவறுகள் நடக்கின்றன.  பொருத்தமில்லாத திட்டங்கள். அதனால் ஏற்படுகின்றதோல்வி. இதைப்பற்றி யாரும் பேச முடியாது. எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் நியாயப்படுத்துவதற்கும் தமக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பிரயோகிப்பார்கள்.

இதுதானே இலங்கைப் பாராளுமன்றத்திலும் இலங்கையின் ஆட்சியிலும் நடக்கிறது. தமக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்தக் கொண்டு அதிகாரத்தின் பேரால் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. இதைத் தவறு என்று சொல்லிக் கொண்டு அதே ணுகுமுறையை இங்கும் பிரயோகிக்கலாமா?

இதேவேளை எதிர்த்தரப்புகள் என்னதான் நியாயமான விடயங்களை முன்வைத்தாலும் அவற்றை தமது பெரும்பான்மை பலத்தின் மூலம் நிராகரித்து விடுகிறார்கள். இங்கே நியாயமோ, சரியானது எது என்பதோ, ஜனநாயக அடிப்படையில் பிற தரப்புக்குரிய இடத்தை அளிக்கவேண்டும் என்பதோ பொருட்படுத்தப்படுவதில்லை.

இவ்வளவுக்கும் இது சட்டரீதியானது. ஜனநாயக உரிமையின்பாற்பட்டது.

ஆனாலும் தமது கும்பல் மனோபாவத்தினால் காட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். இதைக்குறித்து தமிழ் ஊடகங்களில் அதிகமானவை கண்டு கொள்வதே இல்லை. தமிழ் அரசியலுக்கான வழிகாட்டிகளும் அரசியல் கருத்துரைப்பாளர்களும் கூட இவற்றைக் குறித்துக் கவனம் கொள்ளத் தயங்குகின்றனர்.

இந்தத் தவறுகளின் கூட்டு விளைவே தமிழ் அரசியலின் பின்னடைவும் தமிழ் மக்களின் கூட்டுத்தோல்வியுமாகும்.

அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகள் அனைத்திலும் இந்த ஒதுக்கல் அல்லது பாரபட்சமான – ஜனநாயக விரோதப் போக்கு உள்ளது.

இந்த வாரம் ஈழத்தில் உருவாக்கப்பட்ட மதிசுதா என்பவரின் “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படத்தை ஐரோப்பிய நாடுகளில் வெளியிடுவதற்கான எதிர்ப்பும் தடை நடவடிக்கைகளும் பற்றிய சேதிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் ஜனநாயக வெறுப்புச் சமூகத்தின் குணங்களாகும். இதனால் தமிழ்ச் சமூகத்துக்குப் பின்னடைவே நிகழும்.

இந்த அடிப்படையில்தான் கிளிநொச்சியும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எவ்வளவோ வாய்ப்புகளிருந்தும் அதன் வளர்ச்சி மட்டுப்பட்டுத் தேங்கியுள்ளது. பிற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது கிளிநொச்சி மாவட்டம் அடிப்படையான வளர்ச்சித் தகமைகளைக் கூட எட்டவில்லை.

குறிப்பாக போர்க்காலத்திற் கூட கிளிநொச்சி இந்தளவுக்குக் சீரழியவில்லை. இப்பொழுது அதன் இயற்கை வளங்களே சொந்த மக்களால் சிதைக்கப்படுகின்றன. அதனுடைய ஆற்று வழித்தடங்கள் மண் அகழ்வினால் கெடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மது உற்பத்தி, ஜனநாயக வெறுப்பு நடவடிக்கைகள், அதிகார துஸ்பிரயோகம், ஊழல், சமூக முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்படுவது, அரசியல் பழிதீர்த்தல்கள் என எதிர் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

மிக எளிமையாகச் சொன்னால் – யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் முடிந்து விட்டது. கிளிநொச்சியில் இன்னும் ஒரு நல்ல பொதுமண்டபம் கிடையாது. இன்னும் ஒரு முழுநிறைவான – இயங்கு நிலையில் உள்ள பொது விளையாட்டரங்கு இல்லை. இன்னும் அரச திணைக்களங்களின் பயன்பாட்டுக்கும் பொதுத் தேவைகளுக்கும் எனப் பயன்படக் கூடிய நிலங்கள் கையகப்படுத்துவது நிற்கவில்லை. (இதிலே செல்வாக்கான கைகள்தான் விளையாடுகின்றன). இன்னும் பெயர் அறியக்கூடிய – நிறைவான ஒரு செயற்பாட்டு அமைப்பு கிடையாது. நல்லதொரு நூலகம் இல்லை. இசைக் கல்லூரிகளோ, ஓவியக் கூடங்களோ, தொல்பொருள் சேகரிப்பகமோ இல்லை. நடனப்பள்ளி இல்லை. இந்தத் துறைகளில் பயில விரும்புவோருக்கு எந்த வழியும் கிடையாது. காலாற நடப்பதற்கும் நகரத்துக்கு வருவோர் ஓய்வாக அமர்ந்து பேசுவதற்குமான இடமொன்று கிடையாது. நல்லதொரு பூங்கா இல்லை. வெளியார் யாரேனும் விருந்தாளிகளாக வந்தால், அவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கக் கூடிய கிளிநொச்சிக்கான அடையாளச் சின்னங்கள் எதுவுமில்லை. ஊடகவியலாளர்களின் கட்டமைப்பு, குறிப்பிடத்தக்க கலை, இலக்கிய மன்றங்கள், அமைப்புகள் என்று எதுவுமில்லை.

இதனால் கிளிநொச்சியில் இருந்து இன்னும் பெயர் குறிப்பிடக் கூடிய ஒரு ஓவியரோ இசைஞரோ இசையாளர் அணியோ உருவாகவில்லை. ஆய்வறிஞர்கள் கிடையாது. கிளிநொச்சியில் படித்து பல்கலைக்கழகங்களில் சில விரிவுரையாளர்கள் உள்ளபோதும் பேர் சொல்லக் கூடிய இன்னும் ஒரு பேராசிரியர் நிலைபெறவில்லை. புகழுடைய சட்டவாளர்களோ, சட்டத்துறை நிபுணர்களோ, புகழ்வாய்ந்த நீதிபதிகளோ உருவாகவில்லை. நிர்வாக அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் வந்துள்ளனர் என்பது சற்று ஆறுதல். ஆனால் அவர்களும் தனித்துவமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட முடியாதிருக்கின்றனர்.

அந்தளவுக்கு அரசியல் நெருக்குவாரங்கள்.

விவசாய மாவட்டமாக உள்ள கிளிநொச்சியில் 09 பாசனக் குளங்கள் உள்ளன. வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடுவும் கிளிநொச்சியில்தான் உண்டு. வடக்கின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படுகின்ற கிளிநொச்சியில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. நெல்லை அடுத்த நிலை உணவுப் பொருட்களாக மாற்றும் வழிகளைப் பற்றிச் சிந்திப்போரில்லை. இதனால் அறுவடை செய்யப்படும் நெல் முழுவதும் வெளி மாவட்டங்களுக்கு மிகக்குறைந்த விலையில் செல்கிறது.

இதைக்குறித்துப் பேசக் கூடிய – சிந்திக்கக் கூடிய கமக்காரர் அமைப்புகள் இல்லை.

நெல்லுக்கு அப்பால், மரமுந்திரிகை, தென்னை, பழச் செய்கை, பாலுற்பத்தி, கால்நடை வளர்ப்பு போன்றவையும் கிளிநொச்சியின் வேளாண்மையில் சேர்த்தி. இவற்றை மேம்படுத்தும் முயற்சிகள் இல்லை.

அரசாங்கத்தினாலும் யப்பான், இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளினாலும் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கென வழங்கப்பட்ட உதவித்திட்டங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கமநலசேவை நிலையங்களிலும் 20, 30 என புதிய உழவு இயந்திரங்கள் பழுதாக்கப்பட்டுக்கிடக்கின்றன. இவை இந்தியாவினால் வழங்கப்பட்டு இன்னும் பத்து ஆண்டுகள் முழுதடையவில்லை. அதற்குள் இந்த நிலை.

இதைக்குறித்து யாரும் பேசுவாருமில்லை.

இப்படித்தான் கூட்டுறவுத்துறையிலும்  பெரும் முடக்கம் நிகழ்ந்துள்ளது.

மாவட்டத்தின் நலனைப் பற்றிச் சிந்திக்கும் அரசியல் தலைமை கிடையாது.

இதுதான் இங்கே உள்ள நிலைமை. இதையெல்லாம் ஏதோ குறைகாண் நோக்கில் சொல்லவில்லை. இந்தக் குறைகளை நீக்கி எழ வேண்டும் என்ற விருப்பிலேயே சொல்கிறேன்.

கிளிநொச்சியின் உருவாக்கம் ஏறக்குறைய 100 ஆண்டுகள்தானே. அதற்குள் எப்படி மிகப் பெரிய அளவில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்று யாரும் கேட்கக் கூடும். கரைச்சிப் பிரதேசத்தைத் தவிர்ந்தவை பாரம்பரியமானவை.

இதைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் நிலைமை என்னவோ “கெடுகுடி சொற்கேளாது” என்ற மாதிரித்தான் உள்ளது. படித்தவர்கள் கூட இதை, இந்த நாகரீகக் கேட்டையும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் கிளிநொச்சி வரவரப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கிளிநொச்சிச் சமூகம் என்பது தனித்தனிக் கூறுகளாளப் பிளவுண்டு கொண்டே செல்கிறது…

அபிவிருத்தியைப் பற்றிப் பேசினால், அது ஏதோ ஒரு குறிப்பிட்ட தரப்பு மட்டும் உரித்தானது. அதைத் திட்டமிடக்கூடியவர்கள் தாங்கள் மட்டுமே என்று அதிகார நிலைப்பட்டுச் செயற்படுகின்றனர்.

ஒரு புத்தக வெளியீடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அரசியற் தரப்பினர் மட்டும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தமக்குக் கிடைக்கின்ற மேடையை தமது அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏனையோரைத் தாக்கிப் பேசி, வசை பாடி ஓரம்கட்டவும் முற்படுகின்றனர். பாடசாலை நிகழ்வுகள் தொடக்கம் அதிபர், ஆசிரியர் நியமனங்கள் வரையில் அரசியல் ரீதியாகவே அனைத்து நடவடிக்கைகளும் உள்ளன.

இந்தப் போக்குப் பகைமைக் கூறுகளை உள்ளடக்கியதால் ஒருவரை ஒருவர் முகம் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பகைமை செழித்துள்ளது.

அரசியல் என்பது சமூகத்தை ஈடேற்றுவதற்கு வழிவகையைச் செய்ய வேண்டுமே தவிர, சமூக வளர்ச்சியைப் பாதிப்பதாக அமையக்கூடாது. சமூகத்தைத் தன்னுடைய நலனுக்காகப் பிரித்து நாசமாக்க முடியாது.

ஆனால், அதுதான் நடக்கிறது.

சமூகத்தில் நிலவும் பல்சிந்தனைக்கு இடமளித்துச் செயற்பட வேண்டும். மறு சிந்தனைகளை நிராகரிக்க முற்பட்டால் வளர்ச்சி தடைப்படும். முரண்கள்தான் வளர்ச்சிக்கான அடிப்படையைப் புரிந்து கொள்ளாததன் விளைவே இது. எதிர்த்தரப்பை அல்லது மறுதரப்பை அதற்குரிய ஜனநாயக அடிப்படை உரிமைகளோடு மதிப்பதற்குப் பதிலாக, அந்தத் தரப்புக்குரிய நியாயத்தையும் அதற்கான இடத்தையும் மறுதலிப்பது நிகழ்கிறது.

வடக்குக் கிழக்கிலே உள்ள பிற மாவட்டங்களில்  இல்லாத ஒரு சீரழிந்த அரசியற் கலாச்சாரம் கிளிநொச்சியில்தானுண்டு. ஆட்களுக்குக் குறிசுடும் வியாதி இது. இது அவதூறுக் கலாச்சாரமாக வளர்ந்து இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளது.

குறுகிய வழியில் அரசியல் ஆதாயத்தைத் தேடுக் கொள்வதற்காக செய்த உத்திகள் இன்று சமூகத்தைப் பிளவு படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சியையே பாழடித்துள்ளது.

(தொடரும்)