மௌன உடைவுகள் – 29 தப்புத்தாளங்கள்…!

மௌன உடைவுகள் – 29 தப்புத்தாளங்கள்…!

 — அழகு குணசீலன் —

(*) வடக்கு மாகாண ஆளுனராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு  : இது ஊழலுக்கு எதிரான போராட்டமாம்!

(*} சாணக்கியனின் குடும்ப உறவினர்கள் மரத்தில் – முஸ்லீம் காங்கிரஸில் தேர்தலுக்கு நின்றார்கள் என்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்று பேசுபவர்கள் இனப்படுகொலையை பேசுகிறார்கள் இல்லை என்றும் இனவாத, மதவாத நஞ்சை மறைத்து கலந்து ஊட்டுகிறார் சி.யோகேஸ்வரன்.

(*) கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக, புதிய ஆளுனர் செந்தில் தொண்டமானை சந்தித்துப் பேசினாராம் உரிமைத் தமிழ்தேசிய அரசியல்வாதி எம்.ஏ.சுமந்திரன்.

ஊழல் போர்வைக்குள் காவி…

வடக்கில் கிறிஸ்தவமதத்திற்கு எதிரான கருத்துக்களை சிவசேனை விதைத்துவருகிறது. இது தொடர்பான பல நிகழ்வுகள் அங்கு சிவசேனையின் பின்னணியில் தொடர்ந்தும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. யாழ்.மாநகரசபையில் – சிவபூமியில் கிறிஸ்த்தவரான ஆர்னோல்டா? என்று பகிரங்கமாகக் கேட்டவர்கள் ஆளுனர் விடயத்தில் பாட்டை மாற்றிப்பாடுகிறார்கள். 

வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் “ஊழல் பேர்வழி” என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் போர்த்தி நிற்கின்ற ஊழல் போர்வையை களைந்து பார்த்தால் தெரிவதெல்லாம் சிவசின்னங்கள்.

ஊழல்கார்கள் வடக்கில் இருக்கக்கூடாது என்றால் அங்கிருந்து முதல் பஸ்ஸில் ஏற்றப்படவேண்டியவர்கள்  கிறிஸ்த்தவ அரசாங்க அதிகாரிகள் அல்ல. மாற்று மத அதிகாரிகளும்  ,அரசியல்வாதிகளும் நிறையவே இருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக FAKE ID உடன் போராடும் சிவசேனை   இதுவரை  மற்றைய ஊழல்வாதிகளுக்கு, ஊழலுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடாத்தி இருக்கிறது?

பொலிஸார் போராட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரிய மனுவில் சிவசேனை, இலங்கை சைவ ஆதினம் ஆகிய இரு “ஊழல் எதிர்ப்பு” போர்வை அமைப்புக்களையே குறிப்பிட்டிருக்கிறார்கள். பொலிஸார் மனுவில் ஒரு ஊடகவியலாளரும் (?) பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிங்களவன் வேண்டவே வேண்டாம்…! ‌ முஸ்லீம்களே வெளியேறுங்கள்…! கிறிஸ்த்தவர்களே நீங்கள் மதம் மாற்றிகள்/மாறிகள், சிவபூமியில் உங்களுக்கு என்ன வேலை….? இன்னொரு பக்கத்தில் புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சாதி….! அப்ப வடக்கு என்ன? வனவிலங்கு புகலிடமா….? மேய்ச்சல் தரையா…?

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு முஸ்லீம் என்பதற்காக, பலாத்காரமாக பேராசிரியர் நுஃமான் இரவோடிரவாக சொப்பிங் பையோடு   புலிகளால் வெளியேற்றப்பட்டபோது வேடிக்கை பார்த்தது மட்டுமன்றி அதை நியாயப்படுதத்தியதும் இந்த மேட்டுக்குடி அரசியல் தான். இப்போது நந்திக்கடல் அவலத்தை கவிதையில் வடித்ததற்காக ஆயிரக்கணக்கான பாராட்டுக்களை அவருக்கு வழங்குகிறது. பேராசிரியர் நுஃமானின் இதயம் முழுவதும் நிறைந்து கிடக்கின்ற மனிதத்திற்கு முன்னால் நீங்கள் அனைவரும் மண்டியிடவேண்டும்…! வெட்கித் தலைகுனியவேண்டும்…! மன்னிப்புக் கேட்கவேண்டும்…! செய்வீர்களா….?

இந்த மதவெறி அரசியல் மிகவும் ஆபத்தான ஒன்று . அப்படியிருந்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதுவும் இந்த விடயத்தை கண்டிக்கவில்லை. கண்டும் காணாததுபோன்று…, கேட்டும் கேட்காததுபோன்று…. இந்து மேட்டுக்குடி பரம்பரை அரசியலுக்கு பக்கம் ஏற்படாதவாறு பத்திரமாக பார்த்துக்கொள்கிறன. மறுபக்கத்தில் தமிழ்த்தேசிய கொடியேந்தும் கிறிஸ்த்தவ அரசியல் வாதிகள் வாய்பொத்தி, கைகட்டி நிற்கின்றனர். வடக்கு -கிழக்கு ஆயர்கள் அமைப்பு, பல்கலைக்கழக மாணவர் பேரவை, சர்வமத அமைப்பினர் எல்லோருக்கும் இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரிந்திருந்தும்  “ஆமென்” மட்டுமே கேட்கிறது.

 எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி வரும் காலங்களில் வடக்கில் நடக்கப்போகும்   அரசியல் சூரன்போரில் மோதப்போவது   முருகனும் சூரனும் அல்ல. சிங்கமும் புலியும் அல்ல.  சிவனும் யேசுவும்தான்…!

பகவத்கீதையும் – பைபிளும் தான் …!

பானைக்குள் இல்லை என்றால்…!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியதுமுதல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வவுனியா முதல் மட்டக்களப்பு வரை விமர்சனம் செய்து வருபவர் முன்னாள் த.தே.கூ . எம்.பி. சி.யோகேஸ்வரன்.

மட்டக்களப்பின் முன்னாள் தமிழ்த்தேசிய எம்.பிக்கள் , வேட்பாளர்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சாணக்கியனை புடைசூழப் போவது போன்று இல்லாமல்…. எப்போதும் சற்று தள்ளி நிற்பவர் இவர். இது ஒருவகையில் தமிழரசின் மாமன் – மருமகன் மரியாதை (?) இடைவெளி.

ஆனால் அண்மைய தொலைபேசி உரையாடல் ஒன்றில் சாணக்கியன் மீதான வெறுப்பை அவரின் குடும்ப உறவினர்களின் பெயர்களை வம்புக்கு இழுத்து கொட்டித்தீர்த்திருக்கிறார் யோகேஸ்வரன். ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அது அவர்களின் அடிப்படை உரிமை என்பதைக்கூட அவரரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால்தான் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், சாணக்கியனின் தந்தை வழி பாட்டனாருமான எஸ்.எம்.இராசமாணிக்கத்தின் மகள், மகன் ஆகியோரின் அரசியல் செயற்பாட்டை யோகேஸ்வரன் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். 

தமிழ்த்தேசிய அரசியலில் யோகேஸ்வரனும், சாணக்கியனும் ஒரு குட்டையில் ஊறியுள்ள மட்டைகள். அந்தக் குட்டைக்குள் அரசியல் ரீதியாக சாணக்கியனும், கட்சியையும் விமர்சனம் செய்வதற்கு யோகேஸ்வரனுக்கு  “கொள்ளயா” இருக்கு. அப்படி இருந்தும் சாணக்கியனைத் தேடி தவித்தமுயலை அடிப்பது   போல் அடித்திருக்கிறார் யோகேஸ்வரன் ஐயா. காரணம் சரியான அரசியல் அற்ற தனிநபர் காழ்ப்புணர்ச்சி, இன, மத வெறி அரசியல். 

இன்னொரு வகையில் சொன்னால் சாணக்கியனின் தமிழரசு வீட்டுக்குள் கிடந்த பழைய கற்களை பொறுக்கி எடுத்து அவருக்கே எறிந்திருக்கிறார்.   இத்தனைக்கும் அந்த வீட்டில் தான் அவரும் குடியிருக்கிறார். சாணக்கியனின் மாமியும், சித்தப்பாவும் முஸ்லீம் காங்கிரஸில் வேட்பாளர்களாக நின்றவர்கள் என்பதே அந்தக்கற்கள். இதன் மூலம் இராசமாணிக்கம் குடும்பத்தினரின் கடந்தகால தமிழ்த்தேசிய அரசியலை  , தேசப்பற்றை சாடுவது போல் சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த தவறான வழியை போட்டுடைத்துள்ளார்.

இவ்வாறு   சுய அரசியல் இலாபம் தேடுவதற்காக தனிபர், இன, மத காழ்ப்புணர்ச்சிகளை கக்குவதை விடுத்து தனது உள்வீட்டுக்குள் உள்ள அரசியலை நேர்மையாக விமர்சனம் செய்யவேண்டும். அதைத்தவிர்த்து சாணக்கியனின் ” மலிவான வாயாடி” அரசியலுக்கு அதேபாணியில் மலிவாக பதிலளித்திருக்கிறார் அவர். அரசியலில் விதைத்ததைத்தான் அறுவடை செய்யமுடியும் என்பதை வீட்டுக்கார்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள்….?

நாய்வாலை நிமிர்த்த முடியுமா….?

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கிழக்கின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்திருக்கிறார். கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் பேசியிருக்கிறாராம். இது சுமந்திரனின் தனித்து ஓடும் அரசியல்பாணி. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் அரசியல் சந்திப்புக்களை செய்வார் ஆனால் கூட்டாளிகள் கட்சிகளின் எம்.பிக்களை கூட்டாமல் கழித்துச்செல்வார். ஊடகவாயிலாகத்தான் அவர்களுக்கும் தெரியவரும். இதை ஆண்டுக்கணக்காக. கூட்டாளிக் கட்சிகள் சொல்லியும் சுமந்திரன் திருந்தியபாடில்லை.   முதலில் சிலர் சைக்கிளில் தள்ளிக்கொண்டு வீட்டைவிட்டுவெளியேறினர். பின்னர் மற்றவர்கள் குத்துவிளக்கை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போது கிழக்கின் சொந்த வீட்டுக்காரருக்கே தெரியாமல் தொண்டமானை சந்தித்து இருக்கிறார். வடக்கின் எல்லா முடிவுகளுக்கும் ஆமா போடும் கிழக்கு தமிழரசார் மௌனம் சாதிக்கிறார்கள்.

கிழக்கு மக்களின் அபிலாஷை கிழக்கின் அரசியல் முடிவுகளை அவர்களே சுயமாக எடுக்கவேண்டும் என்பதே. இதற்கு இடமளிக்காமல் வடக்கு அதிகாரம் செலுத்தியதினால்தான் அமிர்தலிங்கம் – இராசதுரை – காசி.ஆனந்தன், பிரபாகரன் -கருணா அரசியல் வரலாறுகள் தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு கறையாக பதிவு செய்யப்பட்டன. இந்த உண்மையையும், மற்றொரு சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தும் தவறான மேலாதிக்க அரசியலையும் வடக்கு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கும் வரை இந்த விவகாரம் அவர்கள் நிறந்தீட்டுவது போன்று பிரதேசவாதம் அல்ல. மாறாக தனித்துவ அடையாளங்களைக்கொண்ட ஒரு பிரதேசத்தின் – கிழக்கின் வாழ்வியல் உரிமைக்குரல்.

வடக்கு மாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் அவர்களை அம்பாறை மாவட்ட கலையரசன் எம்.பி. சந்தித்து வடக்கு மாகாண அபிவிருத்தி பற்றி பேசினார் என்ற ஒரு செய்தி எப்படி அரசியலில் நகைப்புக்கிடமானதோ? அதுபோன்று தான் சுமந்திரனின் செய்தியையும் அரசியல் ஆய்வாளர்கள் நோக்க வேண்டியுள்ளது. இதற்குப் பெயர் அரசியல் கோமாளித்தனம். இதில் சுமந்திரன் எதையும் பேசிவிட்டு போகலாம் ஆனால் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கான சட்டரீதியான அதிகாரமும், உரிமையும், தார்மீகப் பொறுப்பும் சுமந்திரனுக்கு இல்லை. கிழக்கு மக்கள் சுமந்திரனுக்கு அந்த அதிகாரத்தை வழங்கவில்லை. யாரோ ஒரு சட்டத்தரணி ஆஜராகி உண்மையைப் பொய் என்றும் பொய்யை உண்மை என்றும் பேசிவிட்டு வெளியே வந்து ஊடகச் சந்திப்பு நடத்துவதற்கு, கிழக்கு மாகாணசபை என்றும் இலங்கை நீதிமன்றங்களில் ஒன்றல்ல.

இது சுமந்திரனுக்கு தெரியாததல்ல. அவரின் படம் காட்டும் அரசியலில் இப்படித்தான் தமிழ்த்தேசிய அரசியலையும் சிதைத்து , தமிழரசு அரசியலையும் சிதைத்து, ஒட்டு மொத்த தமிழர் அரசியலையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தமிழ்த்தேசிய இனம் அவருக்கு அதைத்திருப்பிக் கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறது.

நாய் தனது வாலை சுயமாக நிமிர்த்தாது….!