விருப்பங்கள், விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ள மாணிக்கவாசகத்தின் நூல் 

விருப்பங்கள், விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ள மாணிக்கவாசகத்தின் நூல் 

— அ.நிக்ஸன் —

ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரத்தை இந்தியா 1987 இல் கையாண்ட முறையின் பெறுபேறுகள் பல எதிர்வினைகளுக்குக் காரண காரியமானது (Causality) என்ற தொனியை ‘நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்’ என்ற தனது செய்தி அனுபவப்பகிர்வு நூலில் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எடுத்துரைக்கிறார். 

தமிழ்ப் பத்திரிகை உலகின் புதுமைப்பித்தன் (Innovator) மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம், போர்க் காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருந்தவர். ஆனால் அவருடைய செய்தி எழுத்தின் மதியுகமும், விதியை மதியால் வெற்றி பெறக்கூடிய சாமர்த்தியமும் (Dexterity) அவரது உயிரைக் காத்தது எனலாம். 

ஆனால் நோயின் பிடியில் சிக்கியபோது, மரணத்தை எதிர்பார்த்த ஒரு நிலையில், தனது செய்தி அனுபவங்களையும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்நோக்கிய சிக்கல்கள், இந்திய – இலங்கை அரசுகளின் அணுகு முறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆதாரங்களுடன் எதிர்காலத் தமிழ்ச் சந்ததிக் குரிய வரலாற்றுப் பொக்கிசம் ஒன்றை நூலாகப் படைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத 1983 இல் ஈழநாடு பத்திரிகை மூலமாகச் செய்தித் துறைக்குள் கால்பதித்த மாணிக்கவாசகம், தகவல் தொழில்நுட்பம் அதி உச்சத்தில் வளர்ச்சியடைந்த 2023 ஏப்ரல் மாதம் பன்னிரெண்டாம் திகதி மரணிக்கும் வரை பணியாற்றிருக்கிறார். அதாவது எழுதிக் கொண்டே இருந்தார். 

வயதானவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப அறிவு இருக்காது என்பர். அல்லது வயதானவர்கள் அதனைக் கற்கவே முடியாதென்பர். ஆனால் இவருக்குப் புதிய தகவல் தொழில்நுட்பத்தின் அத்தனை செயல் முறைகளும் நன்கு பரீட்சயமாக இருந்தன.

இதன் பிரகாரம் இந் நூல், மாணிக்கவாசகத்தின் இதழியல் வகிபாகம் மற்றும் செய்தி ஒன்று எவ்வாறு கருவாகி உருவாகி மலர்கிறது என்கிற வரையறையையும், செய்தியின் தன்மைகள் (Nature of the News) பற்றியும் எடுத்துரைக்கிறது.

அதாவது செய்தியாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய சமூக வகிபாகத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் இந் நூல் புடம்போட்டுக் காண்பிக்கிறது. அறுபத்து ஆறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள அவருடைய செய்தி அனுபவம் ஒவ்வொன்றும், உறுதியான – நியாயமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

அத்துடன் செய்தி பற்றிய எல்லா விளக்கங்களையும் உள்ளடக்கித் தரும் முறையிலும் நூல் அமைந்துள்ளது. குறிப்பாகச் செய்தி ஒன்றை, ஒரு கருத்து, ஒரு நிகழ்ச்சி, சிக்கல் பற்றிய உண்மையான, சரியான, சமநிலையான குறிப்பு, நேர்மையானதாக, நிகழ்காலத்தோடு தொடர்புடையதாக, மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான விளக்கங்களாகவும் அமைந்துள்ளன.

உதாரணமாகத் ‘திசைமாறிய சமாதான முயற்சி’ ‘மோதல்களும் இருபக்க உயிர்ப் பலிகளும்’ ‘வடக்குக் கிழக்கு மாகாண சபையும். இந்திய அமைதிப் படையின் வெளியேற்றமும்’ ‘இந்தியத் தேசிய பாதுகாப்பும் இலங்கை விவகாரத் தலையீடும’ என்ற தலைப்புகளிலான கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.

‘இந்தியாவின் ஒதுங்கியிருந்து செயற்படுகின்ற போக்கு’ என்ற தலைப்பிலான கட்டுரை மற்றும் இந்தியா பற்றிய ஏனைய சில கட்டுரைகள் ஊடே இலங்கை விவகாரத்தில் இந்திய இராஜதந்திரத் தோல்வி என்ற தொனி வெளிப்பட்டுள்ளது.

ஆனால் மாணிக்கவாசகம் அவ்வாறு நேரடியாக எழுதவில்லை. சம்பவங்கள், இந்திய அமைப்படை வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருந்த காலச் செயற்பாடுகள் பற்றிய செய்திகள், குறிப்புகள் மூலம் இந்திய இராஜதந்திரத் தோல்வி என்பதை மாணிக்கவாசகம் நாசூக்காக உணர்த்துகிறார். தன்னுடைய விருப்பங்களை விமர்சனங்களாக அவர் முன்வைக்கவில்லை.

நியூ (New) என்றால் புதியது என்று பொருள். இதனைப் பன்மையில் கூறும்போது ‘நியூஸ்’ (News) அதாவது புதியன என்று பொருள்படுகிறது. சேம்பர்ஸ் (Chambers Dictionary) என்ற ஆங்கில அகராதி, நியூஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புதிதாகக் கேட்கப்படுகின்ற ஒன்று இப்பொழுதுதான் நடைபெற்ற, ஏதாவது ஒன்றைப் பற்றிய முதல் தகவல் என்று விளக்கம் கொடுப்பதாக ஜேர்னலிசனம் வேட்பிறஸ் (journalism.wordpress.com) என்ற செய்திப்பாடக் குறிப்பில் கூறப்படுகின்றது. 

செய்தி என்ற சொல்லுக்குப் பலர் இலக்கணம் வகுக்க முயன்றனர். ஆனால் எந்த இலக்கணமும் முழுமையானதாக அமையவில்லை. செய்திக்குத் தரும் விளக்கம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.

குறிப்பாக பிபிசி உலகச் செய்திச் சேவையின் ஆங்கிலச் செய்தியிடல் முறை வேறாக இருக்கும். ஆனால் மாணிக்கவாசகம் மேற்கத்தைய, ஐரோப்பியச் செய்தியிடல் முறைகளை அப்படியேபின் பற்றி பிபிசி உலகத் தமிழோசைக்குச் செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் வழங்கவில்லை.

மாறாகத் தனக்கென்றொரு வடிவத்தையும், அந்த வடிவம்தான் ஈழத்தமிழ்ச் செய்தியிடல் முறை (Elam Tamils News system) என்ற நம்பிக்கையுடன் உரிய தொழில் தகுதியோடு (Professionalism) மிடுக்குடன் (Valiant Man -Sparkle) வெளிப்படுத்தியிருந்தார்.

செய்தி ஒன்றுக்கு வழங்கப்படும் விளக்கததைத் தொகுத்துக் கூறலாம். ஒன்று, எதனையாவது வெளிக்காட்டுவது செய்தி.

இரண்டாவது, நடைமுறையிலிருந்து சாதாரணமானவற்றிலிருந்து மாறுபட்ட எதுவும் செய்தியாகும்.

மூன்றாவது, ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்ற, அவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும், கருத்தும் செய்தியாக உருவம் பெறுகின்றன.

ஆகவே செய்திக்குரிய இந்த விளக்கத்தின் பிரகாரம், ‘புத்தர் சிலை வடிவில் வந்த பேரின ஆக்கிரமிப்பு ‘பண்டார வன்னியன் நினைவாக’ சூசைதாசனின் சீற்றம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரைகளைக் கூறலாம்.

1982 இல் வவுனியாவில் புத்தர் நிலை வடிவில் பேரினவாத ஆகிரமிப்பு என்று ஆரம்பிக்கும் கட்டுரையில், அப்போதைய தமிழர் அரசியல் நிலை பற்றிய சம்பவங்களை ஒப்புவிக்கிறார் மாணிக்கவாசகம். 

ஜே.ஆர் ஜயவர்த்தனவின் மறைமுக இனவாதங்கள், அதற்குரிய எதிர்வினையாகத் தமிழ் மன்னன் பண்டார வன்னியனுக்குச் சிலை வைக்கும் தீர்மானங்கள் வரை கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல சம்பவங்கள், செய்திக்குரிய மூலப் பண்பை (Newsworthy Source Attribute) சுட்டி நிற்கிறது.

செய்தியாளர் எது செய்தி என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பதைப் போல, செய்தி எங்கே கிடைக்கும் என்பதை அறிந்திருக்கவும் வேண்டும். பொதுவாக எப்பொழுதும் எங்கும் செய்திகள் கிடைக்கலாம். இருந்தாலும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றால் செய்திகளை எளிதாகவும் மிகுதியாகவும் பெற இயலும். அவ்வாறான இடங்களைச் செய்தி மூலங்கள் (News Sources) என்பர். 

வவுனியா தச்சன்குளம் விவகாரம் தொடர்பான செய்தியும் அதனுடன் தொடர்புடைய ‘அபகரித்த காணிகளைத் திருப்பித்தரலாம் தானே’ என்ற தலைப்பில் வெளியான செய்திக் கட்டுரையும் அதற்கு உதாரணமாகின்றன.

1983 யூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய நீண்ட தகவல்களும் மாணிகவாசகம் கொழும்பில் பெற்ற நேரடி அனுபவங்களும் செய்திக்குரிய நம்பகத் தன்மையுடன் கூடிய மூலமாகவே அமைந்துள்ளன.

சொல்ல வரும் சம்பவங்கள் பற்றிய சித்திரிப்புகளில் மாணிக்கவாசகம் தனது எதிர்பார்ப்புகளைப் புகுத்தவில்லை. நடந்தவற்றை ஆதாரங்களோடும் தன்னுடைய நேரடி அனுபவங்கள் ஊடாகவும் உண்மைத் தகவல்களை வெளிப்படுத்துகிறார்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தொம்சன் பவுண்டேசனின் ஆசிரியர் குழுவின் ஆய்வு மையம் (Editorial study Centre of Thomson Foundation) செய்தியாகக் கூடிய இருபது வகைகளை தொகுத்து வழங்கியுள்ளது. அந்த இருபது வகைகளில் புதுமையானது (Novelty) மனிதத் தாக்கம் (Personal Impact) உள்ளூர் நடவடிக்கைகள் (Local affairs) குற்றம் (Crime) மோதல் (Conflict) சமயம் (Religion) மனித ஆர்வமானவை (Human Interest) மர்மம் (Mystery) தேசிய இனம் (Nationality) போன்ற அம்சங்கள் முக்கியமானவை.

இந்த அம்சங்கள் மாணிக்கவாசகத்தின் நூலில் ஆழமாகத் தென்படுகின்றன. இதற்கு இவருடைய மும்மொழித் தேர்ச்சியும் வழி சமைத்திருக்கின்றன.

முழுமையான ஒரு செய்திக்குரிய அம்சங்கள் (Newsworthy Features) நூலின் ஒவ்வொரு பகுதியிலும் விபரமாகவும் சுருக்கமாகவும் பொருத்தமான இடங்களில் தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு செய்தியிலும் தலைப்பு, முகப்பு, உடல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றைச் செய்தியின் கட்டமைப்பு என்று கூறலாம். செய்தியின் மையக் கருத்து அல்லது தலைமைக் கருத்து செய்தியின் தலைப்பில் இடம்பெற வேண்டும். இது தேசியமட்டச் செய்திகளுக்கு மாத்திரமல்ல, பிராந்தியச் செய்திகளுக்கும் பொருந்தும்.

அமெரிக்காவின் மூத்த செய்தியாளர் எச்.மார்னிஸ், செய்தி என்பதை ‘அவசர அவசரமாக நடைபெறும் வரலாறு’ என்று கற்பிதம் செய்கிறார். இப்படிப்பட்ட செய்தியைச் சுமந்து வரும் செய்தித்தாளை எப்படி வாசித்தாலும் எவ்வளவு நேரம் வாசித்தாலும் செய்திகளை வாசித்துப் புரிந்துகொள்ள முடிவதற்குக் காரணம், அவற்றை எழுதும் முறைகளே எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மாணிக்கவாசகம் எழுதிய செய்திகளையும் அவருடைய செய்தி அனுபவம் குறித்த இந்த நூலையும் வாசிக்கும்போது அமெரிக்கச் செய்தியாளர் மார்னிஸ் சுட்டிக்காட்டிய விடயங்கள் பொருந்துகின்றன.

ஆகவே இந்த நூல் தற்போதைய இளம் செய்தியாளர்களுக்கும், செய்தி ஊடகத்துறைக்கும் ஒரு பாடப்பரப்பாகவும் (Newsworthy Syllabus) மற்றும் போர்க்கால ஆதாரங்களாகவும் விளங்குகின்றன.

குறிப்பாக ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தகவல்களைத் இந்த நூல் தாங்கி நிற்கின்றது