அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59

அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

1980 இல் உருவாகி 1988 இல் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ கட்சி 02.04.1995 அன்று தனது 13 வது தேசிய மகாநாட்டினைக் கொழும்பில் நடத்தியது. அம்மாநாட்டினையொட்டி வெளியிடப்பெற்ற மலரில் இலங்கை முஸ்லிம்களின் மனக்குறைகளும் அதற்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வு யோசனைகளும் பகிரங்கப்படுத்தப்பெற்றிருந்தன. தொடர்ந்து இவற்றின் அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க விஜயகுமாரணதுங்க தலைமையிலான ‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ அரசாங்கம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நியமித்திருந்த பாராளுமன்றத் தெரிவுகுழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற சொற்றொடரை நிராகரித்து ‘இலங்கை முஸ்லிம்கள்’ என்ற தனித்துவ இனக்குழுவின் கோரிக்கையாகவே தமது யோசனைகளை முன்வைத்திருந்தது.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழர்தம் அரசியல் தரப்பினால் பயன்படுத்தப்பட்டு வந்த ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற சொற்பிரயோகத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்திருந்த தென்பதையும், தமிழர்தம் அரசியல் தரப்பு அதுகாலவரை கோரிவந்த சுயாட்சியுடைய மொழிவாரி மாநிலம் என்ற கோட்பாட்டிற்கு மாறாகத் தனியான – மத ரீதியான முஸ்லிம் அதிகாரப் பகிர்வு அலகு (தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை) ஒன்றையே ‘தென்கிழக்கு’ மாகாணம் என்ற பெயரில் கோரியிருந்ததென்பதையும் அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்றுள்ள ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளும் (?) இன்றுவரை உணரவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிய தென்கிழக்கு அலகின் வடிவம் பின்வருமாறு.

‘அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதி நீங்கலாகப் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி ‘தென்கிழக்கு’ என்னும் பெயரில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தை உருவாக்கி அதன் ஆளுகையின் கீழ் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களைக் கொண்டு வருதல்’ என்பதாகும்.

இந்த யோசனையில் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தேர்தற் தொகுதிகளில் வாழும் தமிழர்களின் (அம்பாறை மாவட்டத் தமிழர்களின்) சமூக பொருளாதார அரசியல் இருப்பு அறவே கவனத்திற் கொள்ளப்படவேயில்லை.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இந்தத் ‘தென்கிழக்கு’ அலகு யோசனையை அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி நிபந்தனையின்றி ஆதரித்தது. அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் காலஞ்சென்ற மு சிவசிதம்பரம் அவர்கள் தென்கிழக்கு முஸ்லிம் மாகாண அலகைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிபந்தனையின்றி ஆதரிப்பதாகவும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அதனை ஆதரிக்க வேண்டுமென்றும் பகிரங்கமாக அறிக்கையிட்டார்.

இது எதனைக் காட்டுகிறதென்றால், வட மாகாணத்தைத் (யாழ் குடாநாட்டைத்) தளமாகக் கொண்டு அல்லது வடமாகாணத்தின் (யாழ் குடாநாட்டின்) மேலாதிக்கத்தின்கீழ் ஓர் அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையைப் பெற்றுக் கொள்வதற்காக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பலி கொடுக்கவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராகவிருந்தது என்பதைத்தான்.

தமிழரசுக் கட்சி அதன் ஆரம்பத்திலிருந்து ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக்கொண்டு முன்னெடுத்துப் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியால் தொடரப்பட்ட ‘போலி’ த் தமிழ்த் தேசிய அரசியல் இதுதான் என்பதை காலங்கடந்தாவது கிழக்கு மாகாணத் தமிழர்கள் குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் உணர வேண்டும். இன்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலைத்தான் முன்னெடுத்துவருகிறது. 

இனி 2008 ல் நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடந்தவற்றை நோக்குவோம். 

1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டு ஓர் ஒற்றை அதிகாரப் பகிர்வு அலகாக நடைமுறையிலிருந்த இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணசபை நிர்வாகம், ஜே வி பி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கொன்றின் தீர்ப்பின் மூலம் 2007 இல் தனித்தனி மாகாண நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பின் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008இல் நடந்தது.

இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபை வேட்பாளராகத் திருகோணமலை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் (அப்போதைய) தவிசாளர் பஷீர்சேவுதாவூத் தனது பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இராஜினாமாச் செய்து விட்டு மாகாணசபை வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் (அப்போதைய) பொதுச்செயலாளர் ஹசன் அலி தனது பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இராஜினாமாச் செய்து விட்டுமாகாண சபை வேட்பாளராக அம்பாறை மாவட்டத்திலும் களமிறங்கினர்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி (ரி எம் வி பி) அப்போது ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. 

இந்தக் கட்டத்தில் (தற்போதைய) அகில இலங்கை தமிழர் மகாசபை (அப்போது அகில இலங்கை தமிழர் கூட்டணி எனப் பெயர் பெற்றிருந்தது) யின் தலைவர் கலாநிதி கா விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அணுகி தமது கட்சி (அகில இலங்கை தமிழர் கூட்டணி) இத்தேர்தலில் போட்டியிட முன் வருவதாகவும் அதற்கு ஆதரவளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். இருவாரங்களின் பின் முடிவு சொல்வதாக சம்பந்தன் பதிலிறுத்தார். இரு வாரங்கள் கடந்தும் சம்பந்தனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கலாநிதி விக்னேஸ்வரன் சம்பந்தனை மீண்டும் தொடர்பு கொண்டு வினவியபோது சம்பந்தன் அளித்த பதில் விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அளித்தது.

சம்பந்தன் அளித்த பதில் இதுதான்

“தம்பி! நாங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ரவூப் ஹக்கீமை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்க முடிவெடுத்துள்ளோம்” என்பதாகும்.

“என்ன அண்ணே! இப்படிச் செய்யப் போகிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கேட்ட கேள்விக்கு இரா சம்பந்தன் ஆங்கிலத்தில் அளித்த பதில், “Hakeem is a good Muslim” (ஹக்கீம் ஒரு நல்ல முஸ்லிம்) என்பதாகும்.

கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; பிள்ளையானுக்குச் சகுனப்பிழையாக வேண்டும் என்பது மட்டுமே இரா சம்பந்தனின் இலக்காக அன்றிருந்தது.

இது விடயமாக இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தேர்தல் பிரச்சார காலத்தில் மாவை சேனாதிராசா மலையக அன்பர் ஒருவர் மூலம் மட்டக்களப்பிலுள்ள (காலஞ்சென்ற) மண்டூர் மகேந்திரன் என்பவரிடம் ஒப்படைக்கும்படி துண்டுப்பிரசுரங்கள் அனுப்பியிருந்தார். மண்டூர் மகேந்திரன் தமிழ் இளைஞர் பேரவை -தமிழரசுக்கட்சி-தமிழர் விடுதலைக் கூட்டணியில் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட ஒரு தூய்மையான தொண்டன். அத்துண்டுப் பிரசுரங்களைப் படித்துப் பார்த்தபோது மண்டூர் மகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அத்துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட பசீர் சேவுதாவுத்தை தமிழ் மக்கள் ஆதரிக்கும்படியாக இருந்தன. ஆனால், மண்டூர் மகேந்திரன் அவற்றை விநியோகம் செய்யாது வைத்துவிட்டார். இந்த விடயம் மண்டூர் மகேந்திரன் இப்பத்தி எழுத்தாளரிடம் நேரில் கூறியதாகும்.

அதாவது முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்திய பேச்சுவார்த்தையினதும் அரசியல் கொடுக்கல் வாங்கல்களினதும் வெளிப்பாடே பிரிந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தாம் போட்டியிட மாட்டோமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதன் அர்த்தமாகும்.

இவ்வாறுதான் தமிழரசுக் கட்சியும் – தமிழர் விடுதலைக் கூட்டணியும் – தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் ‘போலி’த் தமிழ்த் தேசிய அரசியலை நடாத்தி வந்துள்ளன. இன்றும் கூட அதுதான் தொடர்கிறது.

இப்படி இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும். எனினும் விரிவஞ்சி அவற்றை விடவேண்டியுள்ளது. 

ஆனால், ஒர் அரசியல் உண்மை தெளிவானது. அது என்னவென்றால், சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் அவரது சகோதரர் சேர் பொன்  அருணாசலம் காலத்திலும் சரி பின் ஜி ஜி பொன்னம்பலம் காலத்திலும் சரி பின்னர் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலும் சரி தமிழர் தரப்பு அரசியல் என்பது, 

யாழ்குடா நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மேட்டுக்குடி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாப்பதற்காக யாழ்குடா நாட்டில் சிறுபான்மையாக உள்ள விளிம்பு நிலை மக்களினதும் யாழ்குடா நாட்டிற்கு வெளியே கிளிநொச்சி மாவட்டம்,  வன்னிப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் பெரும்பான்மையாக வாழுகின்ற விவசாய மனோபாவம் கொண்ட விளிம்பு நிலை மக்களினதும் சமூக பொருளாதார அரசியல் நலன்களைப் பலி கொடுப்பதையே அடிப்படைக் குணாம்சமாகக் கொண்டுள்ளது.. 

இந்த உண்மையை உணர்ந்து தெளிந்து தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் திருத்திக்கொள்ளாதவரை – தன் செல்நெறியை மாற்றாதவரை தமிழர் தரப்பு அரசியல் தொடர்ந்தும் சாண் ஏறி முழம் சறுக்கியதாகவே இருக்கும். 

இதனைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை இன்று தமிழ் அரசியற் பொதுவெளியில் தமக்குத்தாமே தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறி சுட்டுக் கொண்டு திரியும் கட்சிகள் அனைத்தையும் வடக்கு கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதைத் தவிர வேறு வழியொன்றுமில்லை. இந்த நிராகரிப்பினூடாகவே மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட ‘மாற்று அரசியல்’ வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே மேலெழும்புவதற்கான இடைவெளியை வரலாறு தோற்றுவிப்பதற்கான சாத்தியப்பாடு நிகழும்.