செவ்வி கண்டவர்– கருணாகரன்
முருகேசு சந்திரகுமார் 1980 களின் முற்பகுதியிலிருந்து இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் எனத் தொடர்ந்து 40 ஆண்டுகளாக அரசியற் பயணத்திலிருப்பவர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி எனச் செயற்பட்ட சந்திரகுமார், ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்தும் செயற்பட்ட அனுபவத்தைக் கொண்டவர். இதன்போதான இரண்டு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்றப் பிரதிக்குழுத் தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார். பல்வேறு விமர்சனங்களின் மத்தியிலும் பின்வாங்காமல் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் நிற்கும் சந்திரகுமார், 2015 இலிருந்து சமத்துவக் கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகச் செயற்படுகிறார்.
இலங்கையின் கடந்த கால, சமகால, எதிர்கால அரசியலைக் குறித்தும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நிலவரம் பற்றியும் பேசியதிலிருந்து….
1. இலங்கையின் இன்றைய நிலவரத்தைப் பற்றிய உங்கள் பார்வை, மதிப்பீடு என்ன?
இலங்கையின் துயரத்தை ஒரு கூட்டுத்துக்கமாகவே, கூட்டு அவலமாகவே உணர்கிறேன். கூட்டுத் தவறுகளால் விளைந்த கூட்டுத்துக்கமாகும். ஆனாலும் இதை இன்னும் மக்கள் உணராதிருப்பதுதான் பெருந்துயரமும் பேரவலமாகும். இதனால் இன்றைய இலங்கை மட்டுமல்ல, நாளைய இலங்கையும் அவல நிலையிலேயே இருக்கப்போகிறது.
2. மாற்றம் வேண்டும் என்று மக்கள் பல தடவை போராடியிருக்கிறார்களே! அப்படியிருக்கும்போது மக்கள் இந்த நிலையை உணரவில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்?
மாற்றம் வேண்டும் என்று மக்கள் போராடியது உண்மைதான். அல்லது போராடியவர்களுடன் ஆதரவாக நின்றது உண்மையே. ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் மக்கள் விரோதச் சக்திகளுக்கும் இனவாதிகளுக்கும்தானே வாக்களிக்கிறார்கள்! இதுதானே தொடர்ந்தும் நடக்கிறது. இவ்வளவும் நடந்து இன்று மக்கள் பெரியதொரு பொருளாதார நெருக்கடியைத் தங்களுடைய தலைகளில் சுமக்கிறார்களல்லவா. இதை இந்த ஊடகங்களும் ஆய்வறிஞர்களும் கடுமையாக விமர்சிப்பதைக் காண்கிறோமல்லவா. நாளை ஒரு தேர்தல் வரும்பொழுது பாருங்கள், நாட்டில் என்ன நடக்கிறது? யாரை இந்த மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று. காரணம், அந்தளவுக்கு எல்லாத் தரப்பிலும் அவர்களை அறிந்தோ அறியாமலே இனவாதம் முழுதாக விழுங்கியுள்ளது.
3. எல்லாவற்றையும் ஒரேயடியாக இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியுமா? அதாவது, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையையும் சிங்களத் தரப்பின் அரசியல், ஆட்சி அணுகுமுறைகளையும் ஒன்றாகப் பார்க்க முடியுமா?
இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியாதுதான். ஆனால், பேரினவாதத்தை எதிர்கொள்ளும் முறை என்ன? என்று நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் பழைய முறையில் இனவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது நம்முடைய பலவீனமாகவே இருக்கும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது அதுதான்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இனவாதத்தை முறியடிப்பதற்காகப் பல வழிகளில் தமிழர்கள் முயற்சி செய்து பார்த்தாயிற்று. போர் செய்தும் பார்த்து விட்டோம். விளைவு என்ன? தொடக்கத்தில் இருந்ததை விட இன்று நாம் மிகப் பலவீனமான நிலையில், பெரும் பாதிப்பைச் சந்தித்தவர்களாக இருக்கிறோம். யாழ்ப்பாணம் – தையிட்டி வரையில் பௌத்த விஹாரைகள் வந்து விட்டன. அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, படைப் பெருக்கம், படையினரின் நில ஆக்கிரமிப்பு, மாகாண சபைக்குட்பட்ட கல்வியில் கூட கை வைத்து விட்டார்கள். தேசிய பாடசாலைகள் என்ற பேரில் வளமான பல பாடசாலைகளை மத்திய அரசு உள்வாங்கிவிட்டது. மருத்துவத்துறையிலும் மருத்துவர் நியமனம், தாதியர் நியமனம் எல்லாமே மத்திய அரசின் பிடியில்தான் இன்னும் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் பாதிப்பைச் சந்திப்போம்.
4. இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்! உண்மையில் அதற்கான சாத்தியமுண்டா?
இதை அவர் நேர்மையாகச் சொல்கிறாரா இல்லையா என்பதே கேள்வி. அப்படி விசுவாசமாகச் சொன்னாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியற் சூழல் உண்டா என்பது அடுத்த கேள்வி. ரணில் விக்கிரமசிங்கவில் பொதுஜன பெரமுனவும் (ராஜபக்ஸக்களிலும்) பொதுஜன பெரமுனவில் ரணிலும் தங்கியிருக்கும் நிலைமைதான் இப்பொழுதுள்ள சூழல். இந்த நிலையில் ஜனாதிபதி விரும்புவதைப்போல இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? இது மட்டுமல்ல, எதிரணியில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்படஎல்லாக் கட்சிகளும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிர்நிலையில்தான் உள்ளன.
இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால், அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றால் மனநிலையில் மாற்றம் வேண்டும். அப்படியான மனநிலை மாற்றம் வந்தால்தான் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேறும். அந்த மாற்றம் எங்கும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் திட்டம் கூட நிகழ மறுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொன்று எல்லோரையும் பாதிக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கே ஒருங்கிணைந்து செயற்பட முடியாதவர்கள், தமிழ், முஸ்லிம் மக்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகிறார்களா?
5. அப்படியென்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இப்போதைக்கு இல்லையா?
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தனியொருவருடைய விருப்பத்தினால் நிறைவேறக்கூடியதல்ல. அதற்குப் பல தரப்புகளும் இணைந்து நிற்க வேண்டும். அல்லது ஒருமுகப்பட்டுச் செயற்பட விளைய வேண்டும். அதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. சிங்களத் தரப்பில் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் தரப்புகளிடத்திலும் இல்லை. இது கவலைக்குரியது.
உண்மையில் போரின் முடிவுக்குப் பின்னர் அந்தச் சூழல் உருவாகியிருக்கவேண்டும். சர்வதேச சமூகமும் அதையே எதிர்பார்த்தது. அதனையே அது வலியுறுத்தியது. பகை மறப்பு, நல்லிணக்கம், நிலைமாறு காலகட்ட நீதி, சமாதானம், அமைதித் தீர்வு என்று இதைப் படிநிலைப்படுத்திச் செயற்படுத்த விளைந்தது. அதாவது போரின் அழிவுகள் உண்டாக்கிய படிப்பினைகளின் வழியாக போருக்குப் பிந்திய அரசியலை Post – War Politics ஐ. இதற்காக அரசாங்கத்தையும் பிற அரசியற் சக்திகளையும் அதுவலியுறுத்தியது. இந்த அடிப்படையிலேயே ஊடகங்களையும் சமூகச் செயற்பாட்டியக்கங்களையும் புத்திஜீவிகளையும் அரசியல் கருத்துப் பரப்புனர்களையும் அது வழிப்படுத்தியது. ஆனால், எல்லாத் தரப்புகளும் சர்வதேச சமூகத்தையே ஏமாற்றிவிட்டு தத்தமது இனவாத அரணிலேயே தொடர்ந்தும் கொதிக்கும் சுடுகலன்களோடு நிற்கிறார்கள். எந்தத் தரப்பும் போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics) முன்னெடுக்கவில்லை. இந்த நிலையில் தீர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஆனால், ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான சில விடயங்களை மேற்கொள்ள முடியும். குறிப்பாக மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக வழங்கவும் நடைமுறைப்படுத்தவும் முடியும். இது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்நிபந்தனையாக – நற்சமிக்ஞையாக அமையும். ஏன் முதற்கட்டமாகக் கூட அமையலாம்.
ஜனாதிபதி இதைச் செய்ய முயற்சிக்க வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வில் உண்மையான நாட்டம் இருந்தால் இதைப்பற்றி அவர் சிந்திக்க வேண்டும்.
6. போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics) முன்னெடுப்பதற்கு ஏன் கட்சிகள் பின்னிற்கின்றன?
போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால் புதிய முறையிலான அரசியலை ஆரம்பிப்பதாக இருக்க வேண்டும். அது ஏறக்குறைய ஒரு விசப்பரீட்சைதான். இனவாத அரசியலை ஒதுக்கிவிட்டு அதற்குப் பதிலாக இனவாதமற்ற அரசியலைக் கையிலெடுப்பது என்பது சாதாரணமானதல்ல. மக்களைப் பாவிக்கும் அரசியலைக்கைவிட்டு, மக்களுக்கான அரசியலை மேற்கொள்வதற்குத் துணிய வேண்டும். இதைச் செய்யும்போது இதுவரை அனுபவித்து வந்த உயர் சலுகைகளையெல்லாம் இழக்கவேண்டியிருக்கும். மக்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டி வரும். இதெல்லாம் இவர்களுக்குப் பிரச்சினை.
மறுவளத்தில் இனவாத அரசியலை முன்னெடுப்பது இலகுவானது. மக்களும் அதற்கே பழகியிருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், அரசியற் கருத்துரைப்பாளர்கள் என எல்லோரும் ஒரே டெம்பிளேட்டிலேயே சிந்தித்தும் செயற்பட்டும் பழகி விட்டதைக் காண்கிறோம். இதில் மாற்றம் நிகழவில்லை. அதனால்தான் புதியவை எவையும் நிகழவில்லை. ஆகவேதான் போர் முடிந்த பிறகும் போருக்கு முந்திய நிலை நீடிக்கிறது. இன்னும் போர்க்கால நிலவரமாகவே நிலைமை உள்ளது.
“எவ்வளவு ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் பேரிழப்புகளையும் தருவதாக இருந்தாலும் போரை நடத்துவது இலகுவானது. அந்தளவுக்குச் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது” என்பார்கள். போரில் கட்டளைகளே எப்போதுமுண்டு. அங்கே அதிகாரமே முழுநிலையாகத் தொழிற்படும். ஜனநாயகத்திற்கு இடமிருப்பதில்லை. சமாதானத்தில் அப்படியல்ல. சமாதானத்தின் அடித்தளமே அதிகாரத்தைப் பகிர்வதாகும். ஜனநாயகத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றே அமையும். அதற்கு எல்லோரும் தயாராக இருப்பதில்லை. அப்படித் தயாராக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். அதற்கு ஏராளம் இழுபறிகள் நிகழும். ஆளுமையுள்ள தலைமைகள் திடமுடன் செயற்பட்டால்தான் அதைச் சாதிக்க முடியும்.
ஆகவேதான் சமாதானத்தை எட்டுவது எப்பொழுதும் கடினமானதாக உள்ளது. அதற்கு போரின்போது செய்யப்படும் வேலையை விடப் பலமடங்கு வேலை செய்ய வேண்டும். பலமடங்கில் நிதியையும் காலத்தையும் செலவழிக்க வேண்டும். அதொரு நீண்ட, ஓயாத செயற்பாடாகும். அப்படிச் செயற்பட்டால்தான் வெற்றி கிட்டும். இந்த அடிப்படையில் நம்முடைய சூழலில் மெய்யாகவே சமாதானத்துக்காக தம்மை அர்ப்பணித்த ஒரு கட்சியையோ தலைமையையோ சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆனால், இலங்கையில் சமாதானத்திற்கான காலமும் சூழலும் கனிந்திருந்தது. அதைக் காயடித்து நாசமாக்கி விட்டன இந்தக் கட்சிகள். இதில் மக்களுக்கும் பொறுப்புண்டு. இனவாதத்தினால் பட்ட துயரங்கள் போதும் என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி உணராமல் இனவாத சக்திகளின் பின்னாலேயே மக்கள் தொடர்ந்தும் நிற்கிறார்கள். இது துரதிருஸ்டமான நிலையாகும்.
இன்றைய பொருளாதார நெருக்கடி இதை இன்னும் துலாம்பரமாகக் காட்டுகிறது. இனரீதியாகப் பிரிந்து பிளவுண்டு நின்றாலும் எல்லோரும் எரிபொருளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்குமாக ஒன்றாகவே தெருவில் நிற்க வேண்டிய நிலை. இரவும் பகலும் இவற்றைப் பெறுவதற்காக அலையத்தான் வேண்டும். மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கத்தான் வேண்டும். இந்த நிலையிலும் ஆளையாள் பார்க்க முடியாமல் முகங்களைத் திருப்பிக்கொள்வது என்றால் இதை விட சிறந்த படிப்பினை வேறு என்ன? இதை விட முட்டாள்தனம் வேறிருக்கிறதா?
இதெல்லாம் தவறு என்று தெரிந்து கொண்டும் எல்லோரும் இனவாத அரண்களிலேயே போர் வீரர்களைப் போல வீறாய்ப்பாய் நிற்கிறார்கள் என்றால் எப்படி போருக்குப் பிந்திய அரசியலை இவர்களால் முன்னெடுக்க முடியும்?
போருக்குப் பிந்திய அரசியல் (Post – War Politics) என்றால் சமாதானத்தில் பற்றுக்கொண்டு உறுதியாகச் செயற்படத் துணிய வேண்டும். தென்னாபிரிக்காவில் அதைத்தான் நெல்சன் மண்டேலா செய்தார். அவர் சொன்னார், “கடந்த கால அநீதியின் வரலாற்றை திருத்தியமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்கம் அல்லது பகை மறப்பாகும்” என.
அதனால்தான் அந்தப் படிப்பினையை அறிந்து கொள்வதற்கென்று இலங்கையிலிருந்து பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப் புலிகளின் அணியினரும் அரசாங்கப் பிரதிநிதிகளும் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்குப் பின்னர் இலங்கையின் அரசியற் கருத்துரைப்பாளர்களும் ஊடகத்துறையினரும் அரசியற் தரப்பினரும் அழைத்துச் செல்லப்பட்டு் அந்தப் படிப்பினைகளைக் கற்கச் செய்யப்பட்டனர். ஆனால், எந்த நல்விளைவும் கிட்டவில்லை. இது நிலைமாறு காலகட்ட அரசியலோ நீதி முறையோ முன்னெடுக்கப்படாமல், நிலைமாறா அரசியலையும் நீதி முறையையும் முன்னெடுக்கும் காலமாகவே உள்ளது.
7. அப்படியென்றால் இதை எப்படி மாற்றி அமைப்பது? அதாவது போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics) எப்படி முன்னெடுப்பது?
போர் உண்டாக்கிய அழிவு சாதாரணமானதல்ல. தமிழ்ச் சமூகம் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் எவரிடத்திலும் இதிலிருந்து எந்தப் படிப்பினையும் உண்டாகியமாதிரித் தெரியவில்லை. போர் உண்டாக்கிய அழிவிலிருந்து மீண்ட சமூகங்கள், நாடுகள் அனைத்தும் அந்தப் படிப்பினையை தமது எதிர்காலத்துக்கான முதலீடாக்கியுள்ளன. இதற்கு மக்கள் மீதான, தேசம் மீதான பற்று வேண்டும்.
தாம் முன்னெடுக்கும் அரசியலை மக்களுக்குரியதாக – சமூக சேவைக்குரியதாக உணரவேண்டும். அப்படிக் கடைப்பிடிக்கத் துணிய வேண்டும். அதன் மூலமே மாற்றங்கள் நிகழும். ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது அப்படியல்ல. இது கட்சி நலன் அரசியல். இந்த அரசியலில் கட்சிகளின் நலனும் தலைவர்களின் நலனுமே முன்னுரிமைப்படுகிறது. மக்கள் நலன் அல்ல. அதாவது அரசியலானது மக்கள் நலனுக்கானது, அவர்களுக்கான சேவை என்ற நிலையை மறுத்து, அதைக் கட்சிகளின் நலனுக்காகவும் தலைமைகளின் நலனுக்காகவும் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்வது என மாற்றப்பட்டுள்ளது. இது தொழில்முறை அரசியல். இதனால்தான் பரம்பரைத் தொழில்போல வாரிசு அரசியல் முறை தலையெடுக்கும் நிலை வந்தது. இதற்கு ஊடகங்களும் கருத்துரைப்பாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். அல்லது சேர்ந்து இயங்குகிறார்கள்.
இதனால் மக்கள்தான் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். சுதந்திர இலங்கையில் வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறா? தேய்மானம் நிகழ்ந்திருக்கிறதா என்பதை இலங்கையின் இன்றைய நிலை நிரூபிக்கிறது. நாட்டை இருளிலும் தெருவிலும் நிறுத்தியுள்ளமை இதற்குச் சான்று.
இதற்கெல்லாம் காரணம் என்ன? மாற்றமுறா அரசியல் சிந்தனையை – உழுத்துப் போனபழைய அரசியலை -அப்படியே கொண்டிழுப்பதாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பேன் என்று ஜனாதிபதி சொல்வதொன்றும் புதியதல்ல. இதைத்தான் முன்பு இருந்ததலைவர்களும் சொல்லிக் காலத்தைக் கடத்தி, தமது ஆட்சியை நடத்தினார்கள். இந்தவகையில்தான் அரசாங்கத்தை நம்ப முடியாது, ரணில் விக்கிரமசிங்கவை நம்பவியலாது என்று தமிழ்த்தரப்புச் சொல்வதும் நடக்கிறது. இதுதானே கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆகவே புதிய அரசியலை, காலப்பொருத்தமான அரசியலை, எதிர்காலத்துக்குரிய அரசியலை முன்னெடுக்கும் நவீன சிந்தனை உருவாகவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் தாங்கள் பயன்படுத்துகின்ற தொலைபேசியைப் புதிதுபுதிதாக (New Versions) மாற்றிக் கொள்கிறார்கள். ஏன் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிற வாகனங்கள் தொடக்கம் உள்ளாடைகள் வரையில் அவர்களுக்கு புதிய மாதிரிகளும் புதிய பதிப்புகளும் New models and New Versions தேவைப்படுகிறது. ஆனால், அரசியலில் மட்டும் பழசு!
காலம் கடந்த எதுவும் பயனற்றது. அவற்றைக் கழிவுக் கூடைக்குள் தள்ளி விட வேண்டும். கழிவுக் கூடைக்குள்ளிருப்பவற்றை எடுத்து நம் மேசையில் வைக்க முடியாது. அப்படிவைத்தால் அது முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்துக்கு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். அந்த விலை கொடுப்புத்தான் இப்பொழுது நடக்கிறது.
8. நீங்களும் ஒரு அரசியற் கட்சியின் தலைவர். உங்களுடைய அரசியல் எப்படியானது? உங்களுடைய பயண வழி என்ன? போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics) எப்படி முன்னெடுக்கிறீர்கள்?
போருக்குப் பிந்திய சூழலில் சில மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எனக்கும் இருந்தது. சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகள், ஆட்சியாளர்களிடத்திலும் பிற அரசியற் கட்சிகளிடத்திலும் அனுபவ ரீதியாக நிகழக் கூடிய மாற்றங்கள், மக்கள் தங்களுடைய பட்டறிவுக்கூடாகச் சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லாம் புதியதொரு அரசியல் பரிமாணத்தையும் புதிய அரசியற் பாதையையும் உருவாக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நம்பியதற்கும் எதிர்பார்த்ததற்கும் மாறாகவே நிலைமை இருக்கிறது. பழைய பாதையை விட்டு யாரும் நகர்வதற்குத் தயாராக இல்லை என்ற நிலையில், புதியதொரு அரசியலை தொடக்கவேண்டும் என்ற வேட்கையோடு சமத்துவக்கட்சியை ஆரம்பித்தேன். அதற்கு முன்பு இதைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பொது அரங்கிலும் பாராளுமன்றத்திலும் பேசி வந்திருக்கிறேன்.
பழைய அரசியலைப் பேசுவதால் பயனில்லை. அது மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும்.
சமத்துவக் கட்சியானது, தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற சாதி, பால், பிரதேச, மத வேறுபாடுகளை முற்றாகவே எதிர்க்கிறது. தேசிய அடையாளத்தின் கீழ் அணிதிரள்வது என்பது அனைவருக்கும் உரிய இடத்தை – சமநிலையை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய, உள்ளே பிரிப்புகளையும் பிளவுகளையும் வைத்திருப்பதல்ல. அது தமது மேலாதிக்க நோக்கத்துக்கு – வணிகத்துக்கு – மக்களைப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கும். அப்படிச் செயற்பட்டபடியால்தான் இன்று தமிழ்த்தேசிய அடையாளத்தைப் பூசிக்கொண்ட கட்சிகள் உடைந்து சிதற வேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையான தேசியம் என்பது உள்வாங்கும் தேசியவாதமாக (Inclusive Nationalism) ஆகக்கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்து கொண்டிருப்பதுவோ புறந்தள்ளும் தேசியவாதமாகவே (Exclusive Nationalism) உள்ளது.
ஆகவே எமது கட்சி இதற்கு மாறாக உள்வாங்கும் தேசியவாதத்தை (Inclusive Nationalism) மேற்கொள்ளக்கூடியதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பரப்பில் நிலவும் சமத்துவமற்ற நிலையையும் ஜனநாயகக் குறைபாட்டையும் மாற்ற முற்படுகிறது. முஸ்லிம்களை அவர்களுடைய தனித்துவத்துடன் சமநிலையில் அணுக வேண்டும் எனக்கருதுகிறது. மலையக மக்களையும் இந்த நோக்கில்தான் நாம் பார்க்கிறோம். வடக்கிலே உள்ள மலையக மக்கள் மத்தியில் நாம்தான் கூடுதலாக வேலை செய்கிறோம்.
அதேவேளை இனரீதியாக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையை எமது கட்சி எதிர்த்து மறுதலிக்கிறது. அரச பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறது. இப்பொழுது கூட புதிய பயங்கரவாதச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இதேவேளை நாம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான சாத்தியமான வழிமுறைகளையும் பொறிமுறைகளையும் பற்றிச் சிந்திக்கிறோம். இதற்குச் சர்வதேச சமூகத்தினாலும் உள்நாட்டுச் சக்திகளாலும் புறக்கணிக்க முடியாத அரசியலை முன்வைக்கிறது எமது கட்சி. அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடிய நியாயமான தீர்வையும் நீதியையும் முன்னெடுக்கிறது.
9. இது ஒரு கற்பனையான அரசியலாகத் தோன்றவில்லையா? ஏறக்குறைய இதைப்போன்ற கோட்பாட்டு விளக்கங்களைத்தானே இடதுசாரிகளும் சொல்லிவருகிறார்கள். ஆனால், மக்கள் இதையெல்லாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லையே?
அப்படி உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் பிழையான இடத்தில் நிற்கிறீர்கள் என்றுதான் சொல்வேன். இதை விடச் சாத்தியமான வேறு வழியொன்றைச் சொல்லுங்கள். அந்த வழியை ஏன் யாரும் பின்பற்றாமலிருக்கிறார்கள்?
மற்றது இடதுசாரிகளின் அரசியலில் பின்னடைவுகளும் தவறுகளும் உண்டு. நாம் அதைக் கடந்து சிந்திக்கிறோம். அவர்களுடைய சரிகளை யாரும் மறுக்க முடியாது.
அனைவருடைய அரசியல் அபிலாஷைகளையும் உள்ளடக்கிய தீர்வுத்திட்டம் ஒன்று இலட்சியவாதத் தன்மையையே கொண்டிருக்கும். இலட்சியங்கள்தானே பல நடைமுறைகளைத் தோற்றுவித்துள்ளன. முதலில் விட்டுக் கொடுப்புகளோடும் ஏற்றுக்கொள்ளுதல்களோடும் சிங்கள, முஸ்லிம், தமிழ்த் தரப்புகள் ஒரு பொது மேசையில் அமர்ந்து பேசும் நிலை உருவாக வேண்டும். ஏனென்றால் அடிப்படையில் இது பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையே. அதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே அதைப்புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். இது சாத்தியமா? எப்படிச் சிங்களத் தரப்பை நம்புவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். மிக மோசமான நிறவெறியிலிருந்தும் இன ஒடுக்குமுறையிலிருந்தும் தென்னாபிரிக்கா மீண்டு வந்திருக்கிறதல்லவா! அதற்கமைவான அரசியல் யாப்பு அங்கே உருவாக்கப்பட்டது. இதற்காகத்தான்மண்டேலா சொல்கிறார், “மக்கள் வெறுப்பதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். அப்படி அவர்களால் வெறுப்பதற்குக் கற்றுக் கொள்ள முடியுமென்றால், அதனை விட அன்பு செலுத்துவதற்கு நம்மால் கற்றுக் கொடுக்க முடியும். எதிர்ப்புக் காட்டுவதையும் விட அன்பு செலுத்துவதே மனித மனத்திற்கு மிக நெருக்கமானதும் இயல்பானதுமாகும்” என்று.
இதைப் புரிந்து கொண்டு செயற்படவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமடையும். இப்போது நாடு நிறுத்தப்பட்டிருப்பது கடன்பொறியின் மேலேதான். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஐ.எம்.எவ்வின் கால்களில் சரணடைந்திருக்கிறோம் அல்லவா. இது மட்டுமல்ல, சீனா, இந்தியா, அமெரிக்கா என உலக நாடுகள் அனைத்திடமும் கையேந்திக் கொண்டிருக்கிறோம். பிறரிடம் நம்மை அடகு வைக்கத் தயாராக இருக்கும் நாம் நமக்கிடையில் அமைதியையும் சமாதானத்தையும் அதிகாரத்தையும் பகிரத் தயாரில்லாமல் இருக்கிறோம். இந்த அறியாமையைப் பற்றி நான் பாராளுமன்றத்திலேயே சுட்டிக்காட்டிப் பேசியுள்ளேன்.
10. அப்படிப் பல உண்மைகளைப் பலரும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் அந்த மன்று ஏற்றதில்லையே! ஏன் நீங்கள்கூட அரசாங்கத்துடன் முன்பு இணைந்து செயற்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய கோரிக்கைகளையும் நியாயங்களையும் வெற்றிகொள்ள முடிந்ததா?
நமது அரசியல் சூழலின், ஜனநாயக முறைமையின் அவலம் இதுதான். இந்த அரசியல் அப்படித்தானிருக்கும். இனவாத அரசியலுக்குள்ளும் இனவாத ஆட்சிக்குள்ளும் அறத்தையும் நேர்மையான அரசியல் இலக்குகளையும் எட்டுவது கடினமே. ஆனாலும் இதற்குள்தான் நாம் எமக்கான வெற்றிக் கனிகளைப் பறிக்க வேண்டும். நமது சமூகத்தை கல்வி, பொருளாதாரம், தேக ஆரோக்கியம், சிந்தனை ஆரோக்கியம், தொழில்துறை போன்றவற்றில் பலப்படுத்தவேண்டும். எதிர்த்தரப்பு இதற்கு இடைஞ்சல் செய்தால் அதை நாம் புத்திசாதுரியமாக முறியடிக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்திடம் எமது நியாயங்களை எடுத்துரைக்கலாம். நீதியைக் கோரலாம். கிரிஸாந்தி கைதடியில் சிதைத்துக் கொல்லப்பட்டதை மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டு சென்றது நான். அதற்கான வரலாற்றுப் பதிவுகள் உண்டு. 15.07.1998 இல் இந்தப் பிரதியை சபாபீடத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். அதைப்போல திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைப்பற்றிப் புள்ளி விவரங்களுடன் 04.12.1998 இல் ஆதாரங்களை முன்வைத்து அதை எதிர்த்துள்ளேன். இவற்றுக்கு இன்னும் திருப்திகரமான நீதி கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும் பலவிடயங்களைத் தந்திரோபாயமாக நிறைவேற்றியுள்ளோம். அரசியல் என்பது தொடர்ந்து ஆடப்படவேண்டிய சதுரங்க விளையாட்டாகும். எதிர்த்தரப்பை தொடர்ந்து பலவகையிலும் இடையீடு செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதில் சலிப்படையவோ பின்வாங்கவோ முடியாது. உலகம் முழுவதிலும் இதுதான் நடைமுறை. எங்கேதான் திருப்தியான ஆட்சி நடந்துள்ளது? அல்லது இப்போது கூட அப்படியொரு நிறைவான ஆட்சியுண்டா? எதிர்த்தரப்பை எல்லாவற்றுக்கும் எதிர்ப்பது வெறுமனே எதிர்ப்பரசியலாக குறுகிவிடும். அதனால் யாருக்கும் நன்மைகளில்லை.
நாங்கள் எங்கள் புத்திக் கூர்மையினாலும் நிதானமான அரசியல் நடைமுறைகளாலும் நமது அரசியலை வென்றெடுப்போம்.
11. தமிழ்த்தேசியக் கட்சிகளின் சிதைவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள் அவற்றுடன் இணைந்து செயற்படும் சாத்தியமுண்டா?
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தமிழ்த்தேசியக் கட்சிகளின் சிதைவுக்குப் பல காரணங்கள் உண்டு. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய அனுசரணை வேண்டும் என்ற தரப்பும் உண்டு. இந்தியா இடைஞ்சலாக நிற்கிறது என்ற தரப்பும் உண்டு. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவை. ஆனால், எல்லாமே தமிழ்த்தேசிய அரசியலையே முன்னெடுப்பதாகக் கூறுகின்றன. இந்திய அனுசரணையை ஏற்றுக்கொள்வோரிடத்திலும் பல அணிகள் – பிளவுகள் உண்டு. இதைவிடத் தலைமைத்துவப் போட்டி வேறிருக்கிறது. மேலும் அவற்றிற்குள் ஜனநாயகமின்மையும் மக்கள் மீதான கரிசனைப் போதாமையும் மக்களுக்கான களப்பணிகளை ஆற்றுவதில் உள்ள அசிரத்தையும் முக்கியமான காரணங்களாக உள்ளதென எண்ணுகிறேன். ஆயுதப்போராட்ட இயக்கக் காலத்திலிருந்தே இந்த ஜனநாயக நெருக்கடி தொடர்கிறது. மக்களின் விருப்பம் என்னவென்றால் கட்சிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுதான். என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமற்றதாகவே உள்ளது. கட்சி நலன், தலைமை நலனைக் கடந்து மக்கள் நலனை முன்னிறுத்திச் சிந்திப்போமாக இருந்தால் நாம் இடைவெளிகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்பட முடியும். அதற்குரிய அரசியல் பாதையையும் வகுத்துக் கொள்ள முடியும்.
அடுத்தது, நாம் போருக்குப் பிந்திய அரசியலைக் குறித்துச் சிந்திக்கிறோம். அதன் தாற்பரியத்தை உணர்ந்து கொள்ளும் சக்திகளுடன் கைகோர்க்கத் தயாராகவே உள்ளோம். போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுப்பதற்கு அந்தச் சக்திகள் சிந்தித்தால் மகிழ்ச்சி.
12. பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலும் அரசாங்கம் புத்தர் சிலைகளை வைத்துக் கொண்டிருக்கிறதே! இதைப் பற்றிய உங்கள் நிலைப்பாடென்ன?
இதொரு பைத்தியக்காரத்தனமான வேலை. இந்த மாதிரி முட்டாள்தனங்களால்தான் ஐ.எம்.எவ் போன்றவற்றிடம் கையேந்தவும் நம்மை அடகு வைக்கவும் உழைப்பை வட்டிக்குத் தானம் பண்ணவும் வேண்டிய நிலை வந்தது. அதற்குப் பிறகும் புத்திவரவில்லை என்றால் பௌத்தம் ஊட்டிய அன்பும் அறிவொளியும் என்ன? என்ற கேள்வி எழுகிறது. துறவிகளும் மதகுருக்களும் சமூக ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும். சமூகங்களைப் பதட்டமடைய வைக்க முடியாது. இப்பொழுது நடக்கும் கூத்துகளைப் பார்த்தால் ஐ.எம்.எவ்வின் கடனுடவியிலும் இந்தச் சிலை வைப்பு நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்கு தமிழ்த்தரப்பில் வழங்கப்படும் பதிலும் சரியானதல்ல. இந்த ஏட்டிக்குப் போட்டி நிலை நிச்சயமாக எல்லோருக்கும் பாதிப்பையே உண்டாக்கும்.
இதில் அரசாங்கம் பெருந்தவறை இழைக்கிறது. தொல்பொருட் திணைக்களம் மிக மோசமான முறையில் செயற்படுகிறது. பொருளாதார அமைச்சையும் விட இன்று பலமாக இருப்பது தொல்பொருட் திணைக்களமோ என்று எண்ணக் கூடிய அளவுக்கு அதன் செயற்பாடுகள் உள்ளன. ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிராக தொல்பொருட் திணைக்களம் இனமுரண்களை உருவாக்குகிறது. இதைக் கண்டிக்கிறோம். அரசாங்கம் உடனடியாக இந்த வேலைகளை – இந்த முட்டாளத்தனத்தை நிறுத்த வேண்டும்.
13. அனைத்துத் தரப்பின் எதிர்ப்புகளின் மத்தியிலும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறதே!
புதியதோ பழையதோ எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள சட்டத்தை அப்படியே வைத்திருப்பதற்குத்தான் அரசாங்கம் இந்தப் புதிய சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பி விட்டு அரசாங்கத்தையும் அதன்அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான பழைய சட்டத்தை அப்படியே பேணமுற்படுகிறது.
14. வடக்குக் கிழக்கில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை எப்படியுள்ளது?
வடக்குக் கிழக்கு மக்கள் நீண்டகாலமாக ஒடுக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருப்பவர்கள். அதிலும் கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாகரை மற்றும் படுவான்கரைப் பிரதேசங்கள் இன்னும் போர்க்காலப் பாதிப்புகளிலிருந்து மீளவில்லை. அரசியல் நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் இந்த மக்களை மேலும் பாதித்துள்ளது. இப்போதைக்கு இந்த மக்களை மீட்கக் கூடிய உதவித்திட்டங்களோ இந்தப் பிரதேசங்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களோ வர வாய்ப்பில்லை. எனவே இதை மனதிற் கொண்டு நமது புலம்பெயர் உறவுகள் தமது பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும்.
15. புலம்பெயர் உறவுகளின் அரசியல் பங்களிப்புகளும் பொருளாதாரப் பங்களிப்புகளும் எப்படி அமைய வேண்டும்?
யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்பும் புலம்பெயர் சமூகத்தினர் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்று புலம்பெயர் சமூகம் என்பது மிகப் பலமானது. அந்தளவுக்கு பல தன்மைகளைக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் தாயகம், தாயக மக்கள் என்றால் அவர்கள் ஒருங்கிணைந்து வேலை செய்யத் தயாராக உள்ளனர். போருக்குப் பின்னர் மக்களை மீள் நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு தனிப்பட்ட ரீதியிலும் அமைப்புகளாகவும் உதவிகளைச் செய்துள்ளனர். இன்னும் அப்படியான பங்களிப்புகள் தொடர்கின்றன. இதை நாம் முறைப்படுத்தினால் மிக விரைவில் எமது மக்கள் மீண்டெழக் கூடிய சாத்தியமுண்டு.
எம்முடன் இணைந்து சில அமைப்புகளும் பலரும் பலவிதமான உதவித்திட்டங்களைச் செய்கிறார்கள். செய்யப்படும் பங்களிப்புகளைக் குறித்த வெளிப்படைத்தன்மை இருக்குமாக இருந்தால் இன்னுமின்னும் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புகள் கிடைக்கும். நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் தாராளமாக உதவுவார்கள்.
அடுத்தது, புலம்பெயர் சமூகத்தினரின் அரசியல் நிலைப்பாடாகும். இதிலும் அவர்களுடைய மறுவாசிப்புகள் அவசியப்படுகின்றன. அவர்கள் தமது அனுபவம், தாம்வாழும் சூழலின் அரசியல் படிப்பினைகளின் அடிப்படையில் தமிழுக்கான நவீன – ஜனநாயக விழுமிய – அறிவுபூர்வமான அரசியலைப் பற்றிச் சிந்திப்பதை அறிமுகப்படுத்த வேண்டும்.
16. இறுதியாக நீங்கள் சொல்லக் கூடியதென்ன?
எப்பொழுதும் வாய்ப்புகளுண்டு. எதிலும் சில சாத்தியப் புள்ளிகளிருக்கும். அதைக் கண்டறிய வேண்டும். மெல்ல மெல்லத்தான் நாம் முன்னேற முடியும். சிறுகச் சிறுகத்தான் எமது நலன்களை அடைய முடியும். இதொரு நீண்ட போராட்டம். ஆனால் ஒரு புள்ளியிலும் நாம் பின்னடைய முடியாது.
17. இந்தியாவின் பங்களிப்புக் குறித்து…?
இந்தியாவுக்கு பிராந்திய ரீதியில் வலுவும் பங்களிக்க வேண்டிய கடப்பாடும் உண்டு. அதைத் தமழ்த்தரப்பும் சரியாக இனங்கண்டு செயற்பட வேண்டியுள்ளது. இன்றைய அரசியல் சீனா, அமெரிக்கா என்ற மும்முனையில் சிக்குண்டுள்ளது. இதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
18. தமிழ்ப் பிரதேசங்களில் சீனாவின் பிரசன்னம், இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி…?
இது சர்வதேச அரசியல் பொருளாதார உறவுகளிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள காலமாகும். உலகளாவிய அளவில் சீன விரிவாக்கம் அல்லது விஸ்தரிப்பு பலவகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் இன்னும் கூடுதலாக உள்ளது. இலங்கையின் தவறான அரசியல் போக்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, சீனாவுக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
இனி சீனாவின் தலையீடு என்ற யதார்த்தத்தையும் நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும
19. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் பங்களிப்பும் எப்படியிருக்கும்?
நலன்களின் அடிப்படையிலேயே அரசியல் அச்சு சுழல்கிறது என்பார்கள். ஆகவே இங்கே அறம் என்பது இரண்டாம் பட்சமாகிறது. ஆனாலும் நாம் எதையும் புறக்கணிக்க முடியாது. இருந்தாலும் எப்பொழுதும் நெருக்கமாக இருக்க வேண்டிய அயற் சமூகங்களுடனான உறவுக்குப் பின்னர்தான் பிற உறவுகளெல்லாம். சர்வதேசம் என்பது ஒரு மாயக்கண்ணாடி என்ற உலக வரலாற்று அனுபவத்தையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.