‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-57

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-57

     — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) நடந்ததைப் பார்ப்போம்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பெற்ற விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் சார்பில் ஒரேயொரு அணி போட்டியிட்டால்தான் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்களுக்குரிய (சாத்தியப்படக்கூடிய) ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த எளிய எண்கணிதம் ஒரு சாதாரண அரசியல் மாணவனுக்கும் தெரியும்.

இதை உணர்ந்த ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம்’ அம்பாறை மாவட்டத்தின் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலிருந்தும் முக்கிய ஊர்ப் பிரமுகர்களைக் (முந்நூறுக்கு மேற்பட்ட) கல்முனையில் கூட்டி கலந்துரையாடி பின்வரும் தீர்மானங்களை எடுத்தது.

ஒன்று; அம்பாறை மாவட்டத்தில் தனித்தனியாகப் போட்டியிடாமல் பொதுச் சின்னமொன்றின் கீழ் ஒரேயணியாகப் போட்டியிடும்படி அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைமைப் பீடங்களையும் வேண்டுவது.

மற்றது; அவ்வாறு ஒன்றிணைந்து போட்டியிட விரும்பாதவர்கள் ஒன்றிணைய முன்வரும் கட்சிகளுக்கு வழிவிட்டு விலகி நிற்பது. அதுவும் சாத்தியப்படாத பட்சத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டு அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சார்பில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் நிறுத்தும் சுயேச்சைக் குழுவுக்கு (சுயேச்சைக் குழுவில் இணைய விரும்பும் தமிழ்க் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்குத் தடையில்லை) வழிவிட்டு ஆதரிப்பது. இந்த வாய்ப்பாட்டின் மூலம் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்கள் பிரதிநிதியைத் தாமே தெரிவுசெய்து கொள்வதற்கு வாய்ப்பளிப்பது.

இத்தீர்மானங்களை நிறைவேற்றும் பொருட்டுப் பொதுமக்கள் சார்பில் 18 பேர் கொண்ட நடவடிக்கைக் குழு தெரிவு செய்யப்பட்டு அந்த நடவடிக்கைக் குழு இப்பத்தி எழுத்தாளரின் தலைமையில் கொழும்பு சென்று அனைத்துத் தமிழ்க் கட்சித் தலைமைப் பீடங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிடச் சம்மதித்தன. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியோ ‘இரத்தக் கறை படிந்தவர்களுடன் கரம் கோர்க்க மாட்டோம்’ (அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் கூறினார்) என்று கூறித் தாம் தனித்துப் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தது.

அப்போது, அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் பின்வரும் வேண்டுகோளை மாற்று யோசனையாக முன் வைத்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டால் ஏனைய தமிழ்க் கட்சிகளும் தனித்துப் போட்டியிடும். இப்படியொரு நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டால் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியையே ஆதரித்துச் செயற்படும். தமிழர்களுடைய வாக்குகள் பிரிந்து தற்செயலாகத் தமிழர்களுக்குரிய ஒரேயொரு பிரதிநிதித்துவமும் அம்பாறை மாவட்டத்தில் பறிபோய்விட்டால் அத்தேர்தலில் (1994) தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைக்கும் தேசிய பட்டியல் ஆசனத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்பும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு வழங்க வேண்டும். 

இந்த வேண்டுகோளையும் நிராகரித்த தமிழர் விடுதலைக் கூட்டணி அத்தேசியப் பட்டியல் ஆசனத்தைத் திரு.நீலன் திருச்செல்வத்திற்கு வழங்குவதற்கு ஏற்கெனவே தீர்மானத்திருப்பதாகவும் அதனை மாற்ற முடியாதென்றும் தெரிவித்தது. 

இந்நிலையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்க நடவடிக்கைக் குழு தமிழர் விடுதலைக் கூட்டணி அம்பாறை மாவட்டப் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) பட்டியலில் யாரைத் தலைமை வேட்பாளராக நிறுத்தவுள்ளீர்கள்? எனக் கேள்வியெழுப்பியது. 

பதில் ‘மாவை சேனாதிராசா’ என வந்தது. 

இங்கே தான் பிரச்சனையும் எழுந்தது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டு அம்பாறை மாவட்டத்தைச் சொந்த மாவட்டமாகவுடைய ஒருவரைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக நிறுத்தும்படி கேட்டோம். இந்நியாயமான கோரிக்கையை ஏற்றுச் செயற்பட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பீடம் மிகவும் மூர்க்கமாக மறுத்தது.

இது ஓர் அப்பட்டமான யாழ் மேலாதிக்கச் செயற்பாடு என்று கருதிய அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தவறான இத்தீர்மானத்தை ஜனநாயக ரீதியாக எதிர்க்கவும் – அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சுய கௌரவத்தைக் காப்பாற்றவும் -அம்பாறை மாவட்டத் தமிழர்களை அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கக்கூடிய ஆளுமைகள் அம்பாறை மாவட்டத்திலேயே (அம்மண்ணிலும்) இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவும் எனப் பல்நோக்கத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் இப் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைமையில் சுயேச்சைக் குழுவை இத்தேர்தலில் நிறுத்தியது. 

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் உம் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் டக்ளஸ்தேவானந்தா தலைமையிலான ஈ பி டி பி உம் போட்டித் தவிர்ப்பை மேற்கொண்டன. 

ஆனால், பேச்சு வார்த்தையின் போது அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டிருந்த ரெலோ- புளொட் – ஈரோஸ் இணைந்த அணி அதற்கு மாறாக ரெலோவின் ‘வெளிச்ச வீடு’ சின்னத்தில் போட்டியிட்டது (எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று எண்ணியதோ தெரியவில்லை). 

விளைவு,

அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சார்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி – அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கச் சுயேச்சைக் குழு – ரெலோ, புளொட், ஈரோஸ் இணைந்த ‘வெளிச்ச வீடு’  அணி ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்ட காரணத்தால் தமிழர்களுடைய வாக்குகள் சிதறுண்டு 1994 தேர்தலில் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கான ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பறிபோனது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழமையை விட ஒரு ஆசனம் கூடுதலாகக் கிடைத்தது.

1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பறிபோனதற்கு அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் – அதன் தலைமைக் கட்சியாக விளங்கிய தமிழரசுக் கட்சியும் – தனிப்பட்ட முறையில் மாவை சேனாதிராசாவுமே காரணமாகும்.

அத்தேர்தலில் சூழ்நிலை சரியில்லையென்று காரணம் கூறித் தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சி நிர்வாக மாவட்டமும் உள்ளடங்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவில்லை. அதனால் மாவை சேனாதிராசா போட்டியிடுவதற்கு இடம் தேடி தனது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்தைக் கைவிட்டுவிட்டு அம்பாறை மாவட்டத்திற்கு இங்குள்ளவர்கள் மடையர்கள், ‘எம்.பி.’ பதவியை பிடுங்கிக் கொள்ளலாமென்று வந்தமை அவரது கடைந்தெடுத்த சுயநலமும் அரசியல் முட்டாள்தனமுமாகும். அதேபோல் காலஞ்சென்ற மு.சிவசிதம்பரமும் வீ.ஆனந்தசங்கரியும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடாமல் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர்.  

வவுனியா நகர சபையின் முன்னாள் தலைவர் கேதீஸ்வரனுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனம் வழங்க மறுத்துத்தான் இவர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர். இதுவும் யாழ் மேலாதிக்க அரசியலின் வெளிப்பாடே.

அடுத்த பத்தியில் (வாக்குமூலம்-58) 2000ஆம் ஆண்டு தேர்தல் பற்றி நோக்குவோம்.