‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-58

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-58

      — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இப் பத்தியிலே 2000 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம்.

1994 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி – அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்க சுயேச்சைக் குழு – ரெலோ, புளொட், ஈரோஸ் இணைந்த ‘வெளிச்ச வீடு’ அணி என மூன்று அணிகள் போட்டியிட்ட காரணத்தால் தமிழர்களுடைய வாக்குகள் சிதறுண்டு அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பறி போய்விட்ட கொடுமை – அவலம் மீண்டும் அந்த மண்ணில் (அம்பாறை மாவட்டத்தில்) நிகழ்ந்துவிடக் கூடாது என எண்ணிய ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம்’ அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் பொதுச் சின்னமொன்றின் கீழ் ஒன்றிணைத்து ஒரே அணியாகப் போட்டியிட வைப்பதற்கான பேச்சுவார்த்தையை அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளுடனும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் சார்பில் அப்போது அதன் மாவட்ட இணைப்பாளராகவிருந்த இப் பத்தி எழுத்தாளரின் தலைமையில் மேற்கொண்டது.

அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சு வார்த்தை சுமுகமாகவும் நம்பிக்கையோடும் நடந்து கொண்டிருக்கும் போதே – பேச்சுவார்த்தை நிறைவு பெறும் முன்னரே தமிழர் விடுதலைக்கூட்டணி தனியாகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. அதனால் ஆத்திரமுற்ற ஏனைய தமிழ்க் கட்சிகள் யாவும் தனித்தனியே தாமும் போட்டியிட முனைப்புக் கொண்டன.

இந்த இக்கட்டான கட்டத்தில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு மூலோபாயமாகப் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைய முன்வந்த தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டும் போட்டித் தவிர்ப்பை மேற்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் அதன் மாவட்ட இணைப்பாளரான இப்பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைமையில் 1994 ஆம் ஆண்டுத் தேர்தலைப் போன்றே 2000 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் ஒரு சுயேச்சைக் குழுவை தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எதிராக நிறுத்தியது. இச் சுயேச்சைக் குழுவில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் – ரெலோ – ஈ பி டி பி பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் வெளியே நின்று ஆதரவளித்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்திருந்த வேட்புமனுவில் பிழையொன்றைச் சுட்டிக்காட்டி (வேட்புமனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனின் கையொப்பம் முறையாக அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை) அதனை நிராகரிக்கும்படி சுயேச்சைக் குழுவின் தலைமை வேட்பாளரான இப் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குத் தீர்ப்பின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. அதனால், அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சார்பில் இச்சுயேச்சைக் குழு மட்டுமே போட்டியிடும் வகையில் தமிழர்களுக்குச் சாதகமான நிலை உருவானது.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியோ அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; எதிரிக்குச் (அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்திற்கு) சகுனப்பிழையாக வேண்டும் என்ற மனப்போக்குடன் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் நிறுத்திய சுயேச்சைக் குழுவைத் தோற்கடித்து 1994 ஐப் போன்று 2000 ஆம் ஆண்டிலிலும் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்வதற்குக் கங்கணம் கட்டிநின்றது. தமது வேட்புமனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமையால் எழுந்த ஆத்திரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைப் பீடத்தின் கண்ணை மறைத்தது.

நீதிமன்றத் தீர்ப்பினால் நிராகரிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் தலைமை வேட்பாளராகவிருந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தயானந்தராஜா என்பவர், தனது வீட்டில் சோடனைகளுடன் தொங்கவிடப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ பதாகையை இறக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ‘யானை’ ப் பதாகையை ஏற்றி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சேகு இஸடீன் அவர்களை (முஸ்லிம்) அழைத்துச் சென்று தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார்.

மாவை சேனாதிராசா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலிலுள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களுக்கு திரைமறைவுச் செய்திகளை அனுப்பியிருந்தார். அதேவேளை பாண்டிருப்பைச் சேர்ந்த சட்டத்தரணி முத்துக்கிருஷ்ணன் எனும் தமிழரும் ஐ.தே.க. பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதிலும் இவருக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களை மாவை சேனாதிராசா கோரவில்லையென்பதால் அவரின் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீதான அக்கறையின் சீத்துவத்தை உணரமுடிகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்களில் ஒருவரான காலஞ்சென்ற ரவி ராஜ் (பின்னாளில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) தனது பெயரிலேயே ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி அப்பாஸ் அவர்களுக்கு (முஸ்லிம்) தமிழர்களை வாக்களிக்கும்படி வீரகேசரிப் பத்திரிகையில் பகிரங்கமாக விளம்பரம் கொடுத்திருந்தார்.

இதுதான் தமிழரசுக் கட்சியும் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக்கொண்டு முன்னெடுத்து வரும் ‘அரசியல் தெப்பிராட்டித்தனங்கள்’ நிறைந்த ‘போலி’ த் தமிழ்த் தேசிய அரசியலாகும். முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் அரசியல் கொடுக்கல் வாங்கல்களைத் திரை மறைவில் வைத்துக்கொண்டு அவர்களிடம் கிழக்கு மாகாணத் தமிழர்களை அடகு வைக்கின்ற ‘ஆசாடபூதி’ அரசியல்தான் இது. 

ஆனாலும், அரசியல் விழிப்புணர்வோடு செயற்பட்ட அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தகிடுதத்தங்களையெல்லாம் கடந்து அம்பாறை மாவட்டத்தமிழர் மகா சங்கம் நிறுத்திய சுயேச்சை குழுவுக்கு (‘முயல்’ சின்னத்திற்கு) கணிசமாக வாக்களித்து வெற்றியீட்டச் செய்ததால் இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குரிய தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 1994 ஐப் போன்று பறிபோய்விடாமல் காப்பாற்றப் பெற்றது. (1994இல் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆறு பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 2000 இல் ஏழாக அதிகரிக்கப்பட்டிருந்தமையும் தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமைந்தது)

அடுத்த பத்தியிலே, (வாக்குமூலம்-59) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் இலங்கையின் அரசியல் அரங்கிலே முன்வைக்கப்பட்ட ‘தென்கிழக்கு’ முஸ்லிம் மாகாண அலகுக் கோரிக்கை பற்றிப் பிரஸ்தாபிக்கலாம்.