சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு மீதான வாக்கெடுப்பில் பௌசியை தவிர ஐக்கிய மக்கள் சக்தியின் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஆதரித்து வாக்களிக்கவில்லை.

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

 சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் மீது கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விவாதத்தின்போது ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பார்த்து “நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள்” (Walk the talk) என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி “நான் சொல்வதை செய்வேன். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஒரு பொதுப்பயணத்தில் என்னுடன் கூட வரத்தொடங்குவார்கள் என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்” என்று சொன்னார். அதை மறுத்த பிரேமதாச “ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள எவரும் உங்களுடன் கூட வரமாட்டார்கள்” என்று கூறினார். 

   எதிர்க்கட்சி தலைவருக்கும் அவரின் முன்னாள் தலைவருக்கும் இடையிலான இந்த பரிமாற்றம் அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுப்பதற்கு விக்கிரமசிங்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் தன்னை கைவிட்டுச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பிரேமதாச தன்னால் இயன்றவரை பிரயத்தனங்களை செய்து கொண்டிருப்பதையும் தெளிவாக வெளிக்காட்டியது.

   பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் விக்கிரமசிங்க முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கைகளை ஹர்ஷா டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் காசிம் போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மைக்காலமாக ஆதரித்துப் பேசிவருகிறார்கள். இவர்களும் வேறு சிலரும் அரசாங்கத்துடன் இணையக்கூடும் என்றும் ஊகங்கள் வெளியாகின. 

 புத்தாண்டுக்கு பிறகு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து சில உறுப்பினர்கள் அரசாங்கப் பக்கத்துக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு மாறுவதற்கான யோசனை சிலருக்கு இருக்கிறது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா வெளிப்படையாவே ஒத்துக்கொண்டார். ஆனால் இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

   இன்றைய பாராளுமன்ற கட்சிகளில் மிகவும் பலவீனமானதாக இருப்பது ஐக்கிய தேசிய கட்சியேயாகும். காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு பல தசாப்தங்களாக மாறிமாறி ஆட்சி செய்து வந்த பழம்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இன்று மக்கள் ஆதரவைப் பொறுத்தவரை பழைய ஆதிக்க நிலையில் இல்லை.

  அதுவும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மீட்டெடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறது. ஜனாதிபதி முன்னெடுக்கின்ற பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அவரின் ‘மதிப்பை’ ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கின்ற போதிலும், அது அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வளர்வதற்கு எந்தளவுக்கு உதவியிருக்கிறது என்பது கேள்விக்குரியது.

 அதனால் அவரது பொருளாதார மறுசீரமைப்பை ஆதரிக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணையாமல் வெளியில் இருந்து ஒத்துழைப்பை வழங்குவதற்கே பெரும்பாலும் விரும்பக்கூடும். பொருளாதார இடர்பாடுகளை ஒப்பீட்டளவில் தணித்துவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆதரிக்காவிட்டால் மக்கள் மத்தியில் தனிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ஒருபுறமும் தனது கட்சியை மீளக்கட்டியெழுப்ப இயலாமல் இருக்கும் விக்கிரமசிங்கவுடன் சென்றால்  தங்களது அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அக்கறை மறுபுறமும் அவர்களை குழப்புகிறது.

பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்தபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய அரசியல்வாதிகள் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டிருந்தார்களே தவிர பிரேமதாசா மீது பிரத்தியேகமான பிரியம் எதையும் கொண்டிருக்கவில்லை. விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தங்களால் பாராளுமன்றத்துக்கு செல்லமுடியாது என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். 

   அதை 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தல் முடிவுகள் பிரகாசமாக வெளிக்காட்டின. நாட்டின் அரசியல் கட்சிகளில் தனியொரு கட்சி என்ற வகையில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஒரு காலத்தில் விளங்கிய ஐக்கிய தேசிய கட்சி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்கீழ்த்தானும் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாமல் வரலாற்று தோல்வியை தழுவிக்கொண்டது. 

 அந்தக் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கி விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் பாராளுமன்றத்தில் எப்போதுமே கூடுதல் ஆசனங்களை கைப்பற்றக்கூடிய தனிக்கட்சியாக அதை வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் விக்கிரமசிங்கவின் மாமனார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அந்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுவதுண்டு.

 ஐக்கிய தேசிய கட்சியின் முன்னைய தலவைர்களில் எவருமே விக்கிரமசிங்கவை போன்று மிகவும் நீண்டகாலம் தலைமைத்துவத்தை தம்வசம் வைத்திருந்ததில்லை. அவரைப் போன்று வேறு எந்த தலைவருமே தலைமைத்துவத்துக்கு எதிரான உட்கட்சி கிளர்ச்சிக்கு முகங்கொடுத்ததுமில்லை. அவரே பாராளுமன்றத்தில் நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் மாத்திரமல்ல, பல தடவைகள் பிரதமராக இருந்த ‘பெருமைக்கும்’ உரியவர். 

   தனது சுமார் மூன்று தசாப்தகால தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியை விக்கிரமசிங்க கணக்கில் எடுக்கக்கூடிய வாக்கு வங்கி இல்லாத நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறார். அதன் வாக்கு வங்கியும் கட்சி கட்டமைப்புகளும் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சென்றுவிட்டன. 

  கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியை கலைத்துவிடுவது குறித்துக்கூட விக்கிரமசிங்க யோசித்ததாக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.

 தற்போது அவருடன் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் கோர்ப்பரேட் கம்பனிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் போன்று தோற்றமளிக்கிறார்களே தவிர, மக்கள் மத்தியில் சென்று கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு உருப்படியான வெகுஜன அரசியல் பணிகளை முன்னெடுக்கக்கூடியவர்களாக இல்லை. அவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

  ஸ்ரீகோத்தாவில் சில கூட்டங்களுக்கு தலைமைதாங்கி உரையாற்றுவதை தவிர விக்கிரமசிங்க தனது கட்சியை மீளக்கட்டியெழுப்புதற்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை. அந்த உரைகளில் கூட சில தடவைகள் அவர் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது கட்சி அரசியல் செய்வதற்கல்ல, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவே என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

  காலம் செய்த கோலம் எந்த ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் விக்கிரமசிங்கவின் அரசியல் மோசமாக வீழ்ச்சி கண்டதோ அதே ராஜபக்சாக்களே தங்களது கட்சியின் பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தி அவரை கடந்த வருடம் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தினார்கள்.

 இப்போது அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசுகிறார். ஐக்கிய தேசிய கட்சிக்கென்று குறிப்பிடத்தக்க ஒரு வாக்கு வங்கியை மீளவும் கட்டியெழுப்பாத வரையில் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிப்பதற்கு வேறு கட்சிகள் முன்வருவது சாத்தியமில்லை. பொருளாதார மீட்சிக்கு அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டு மக்கள் அணிதிரண்டு அமோகமாக வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிவிடப்போவதில்லை. அத்தகையதொரு அரசியல் கலாசாரம் எங்கும் குறிப்பாக எமது பிராந்தியத்தில் இல்லை. 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவைச் சேர்ந்த சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு விருப்பத்தை வெளிக்காட்டுகிறார்கள். ராஜபக்சாக்களுடன் தொடர்ந்தும் இருப்பதற்கு விரும்பாத பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்கும்போது ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்துவிடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 

 அவ்வாறு வேறு கட்சிகளில் இருந்து தன்னுடன் வரக்கூடியவர்களை வைத்துக்கொண்டு தனது ஆதரவை கட்டியெழுப்பும் தந்திரோபாயமாக விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார் என்று தெரிகிறது. அந்த முயற்சிகளைப் பொறுத்தவரை, அவர் தன்னைக் கைவிட்டு பிரேமதாசவுடன் சென்றவர்களுக்கு வலை வீசுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறார். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் பிரமேதாசவிடமே நேரடியாக அவர் கூறிய வார்த்தைகள் அதை தெளிவாக வெளிப்படுத்தின.

 அதேவேளை மூன்று நாள் விவாதத்தின் இறுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியைத் தவிர ஐக்கிய மக்கள் சக்தியின் வேறு எந்த உறுப்பினரும் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்துக்கு ஆதரிக்கவில்லை. இது அவர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற சிக்கலை உணர்த்துகிறது.

(ஈழநாடு)